“இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டு உறவும் இல்ல. கோர்ட்ல சந்திப்போம்” என்று கூறி அவர்கள் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தான் ஈஸ்வரன்.
வேங்கடமும் செல்வாம்பிகையும் அவனைத் தடுக்கவில்லை. அந்த நாளிற்குப் பிறகு வேங்கடம் ஈஸ்வரனிடம் பேசவே இல்லை. அவரின் குற்றவுணர்வு அவரைப் பேச விடவில்லை.
திருமணத்திற்கு முன் தங்கையின்/அக்காளின்/அண்ணனின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாய் பாவித்து அன்பு செலுத்தி வளர்க்கும் மாமனுக்கோ/சித்தப்பனுக்கோ சுயநலமான மனைவி அமையும் போது, அவர்களும் அப்படியே மனைவியின் பேச்சைக் கேட்டு, முன்பு தனது குழந்தையாய் எண்ணி வளர்த்தவர்களைத் திருமணத்திற்குப் பின் கண்டும் காணாமல் ஒதுங்கிப் போவார்கள் அல்லவா! அத்தகைய சுயநலமனிதராய் தான் மாறியிருந்தார் வேங்கடம்.
கல்யாணியும் அகல்யாவும் தங்களது உடைமைகளைப் பெட்டியில் அடுக்கி கொண்டிருக்க, தனது தந்தையின் தோழர்கள் மூலம் ஒரு சிறிய வாடகை வீட்டைத் தேடிப் பிடித்தவன், தாயையும் தங்கையையும் அங்கே அழைத்துச் சென்றான்.
நல்லவர்களுக்கு உதவ நான்கு நல்லவர்கள் இருப்பார்கள் என்பதற்கேற்ப அந்நிலையில் அவர்களுக்குப் பெரும் உதவியாய் இருந்தவர் அவர்களது தந்தையின் ஆருயிர் நண்பர் தேவநாதன்.
வீட்டைப் பார்த்து முன் பணம் கொடுத்து, அந்த வீட்டிற்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்தார்.
ஈஸ்வரனுக்கு ஏற்கனவே தங்களது கடையில் பணி செய்த அனுபவம் இருந்ததால், தங்களது கடைக்குச் சரக்கு வழங்குபவர்களைப் பிடித்து அவர்கள் மூலம் கடை பார்த்து, கடனுக்காகப் பேசி பாத்திரங்கள் வாங்கி வியாபாரத்தைத் தொடங்கினான். மாலை வேளைகளில் மட்டும் பணிபுரியும் வகையில் பிபிஓ வேலைக்குச் சென்றான். அவ்வேளையில் தாயைக் கடையைப் பார்த்துக் கொள்ள வைத்தான்.
இந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு அடுத்த இரண்டு நாட்களில் மதுரை வந்து சேர்ந்தான் ராஜன்.
தீரன் மூலமாக ஈஸ்வரன் தற்சமயம் தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்றான். இரவு நேரம் என்பதால் மூவருமே வீட்டினில் தான் இருந்தனர்.
ராஜனைக் கண்டதும், “ராஜாண்ணே” என அவன் தோளில் சாய்ந்து அழுதாள் கல்யாணி.
“என்னடா ஆணிமா! எதுக்கு இந்த அழுகை? அதான் அண்ணே வந்துட்டேன்ல” எனக் கண்களைத் துடைத்து ஆறுதல் கூறியவனை,
“யாருக்கு யாருடா அண்ணன்? இன்னும் என்கிட்ட இருந்து என்ன பறிக்கச் சொல்லி உன்னோட ஆத்தாவும் அப்பனும் அனுப்பி வச்சாங்க?” எனச் சுந்தரேஸ்வரன் அவன் சட்டையைப் பிடித்துக் கேட்டதில் அதிர்ந்து அப்படியே சிலையாய் சமைந்து விட்டான் ராஜன்.
மனம் முழுக்க ராஜன் மீதான பாசம் வியாபித்திருந்தாலும், வேங்கடமும் செல்வாம்பிகையும் செய்த துரோகம், ஈஸ்வரனை ராஜனிடம் இவ்வாறு பேச வைத்திருந்தது.
ஈஸ்வரனின் ஒரு மனம் இவன் இவ்வாறு செய்திருக்க மாட்டான், அவனைத் துன்புறுத்தாதே எனக் கதற, மறு மனமோ இவனும் அவர்களுடன் சேர்ந்து தான் தன்னை ஏமாற்றினான் என ஆழமாய் நம்பி அவனைத் துரத்த துடித்தது.
கலவையான குழப்பமான இந்த உணர்வுகளின் போராட்டத்தில் அவனை வதைப்பதாய் எண்ணி தன்னைத் தானே வதைத்துக் கொண்டிருந்தான் ஈஸ்வரன்.
“அண்ணே! அம்மா அப்பா எனக்கும் நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டாங்கண்ணே” என அவனின் தோள் சாய்ந்து அழுதான் ராஜன். அவனையும் மீறி ஈஸ்வரனின் கைகள் ராஜனின் முதுகை வருடியது, கண்களும் கலங்கியது.
“அவன் அழுதா எனக்குத் தாங்காது மீனு! ஆனாலும் மனசை கல்லாக்கிட்டு நீயும் தான்டா நம்பிக்கை துரோகினு சொல்லி திட்டிட்டேன்” என அன்றைய நாளின் நினைவுகளின் தாக்கத்தில் கலங்கி அழுதவன் கண்களைத் துடைத்தாள் மீனாட்சி.
ஈஸ்வரனின் நம்பிக்கை துரோகி பட்டத்தைக் கேட்டு வெகுவாய் காயப்பட்டுப் போன ராஜன், “என்னை நம்பாம போய்ட்டல! உன் தம்பியை நம்பாம போய்ட்டல! என்னை நம்பாத என் அண்ணன் எனக்கும் தேவையில்லை! இனி நீ யாரோ நான் யாரோ! உன் வாழ்க்கைல ராஜானு ஒருத்தன் இல்லவே இல்லை” என்று உரைத்தவன் அழுதுக் கொண்டே அங்கிருந்து செல்ல, அப்படியே தளர்ந்து அமர்ந்து விட்டான் ஈஸ்வரன்.
“ஏன்டா அவனை இப்படிப் பேசின! ராஜா அப்படிச் செய்ற ஆளா சொல்லு! அவன் அம்மா அப்பாவே அவனை ஏமாத்திட்டாங்கனு தெரிஞ்சு எவ்ளோ மனசு கஷ்டத்தோட நம்ம ஆறுதல் தேடி வந்திருப்பான். அவனைத் துரத்தி அனுப்பிட்டியேடா” என அகல்யா ஈஸ்வரனை திட்டி விட்டு அழுதபடியே அமர்ந்து விட்டார்.
கல்யாணியும், “போண்ணே! என்கிட்ட இனி பேசாத” என ஈஸ்வரனிடம் கூறியவள் தாயின் மடியினில் புதைந்து அழுதாள்.
“இல்லம்மா! அவன் நம்ம கூடச் சேர்ந்துட்டா ஆயுளுக்கும் சித்தி சித்தப்பா கூடச் சேர மாட்டான். அவங்க பையனை நாம ஏமாத்தி பொய் சொல்லி நம்ம கூட வச்சிக்கிட்டோம்னு தான் பேசுவாங்க. போதும்மா அந்தக் குடும்பத்தோட இருந்த உறவு போதும். எப்போ இருந்தாலும் அவன் அவனோட அம்மா அப்பா கூடத் தான் இருக்கனும்” என்று அழுதவாறு கூறிய ஈஸ்வரன் தன்னைச் சமன்படுத்தியவனாய்,
“இனி நான் எடுத்து வைக்கப் போற ஒவ்வொரு அடியும் சித்தி சித்தப்பாக்கு பெரிய அடியா இருக்கும்மா. அவங்களைத் தாங்குறதுக்கு மகனா அவன் கூட இருக்கனும்ல அதுக்கும் தான்” இறுக்கமான முகத்துடன் உரைத்தவன்,
“இனி நீ நான் கல்யாணி இவ்வளோ தான் நம்ம குடும்பம்!” என்று உரைத்து விட்டு அறைக்குள் சென்று விட்டான்.
“ராஜா அன்னிக்கு அவன் வீட்டுக்குப் போகாம சென்னைக்குப் போய்ட்டு அடுத்தச் சில நாட்கள்ல ஆன்சைட் போய்ட்டான். மூனு வருஷமா இங்க வரவே இல்லை. அவங்க அப்பா மேல அவனுக்கு எப்பவுமே பயம் கலந்த மரியாதை உண்டு. அவர் முன்னாடி நின்னு பேசவே அவ்ளோ தயங்குவான். எங்களை விட அவங்க அம்மா அப்பானால அதிகமா பாதிக்கப்பட்டது அவன் தான். மூனு வருஷமா அவங்க அப்பா அம்மாகிட்டயும் அவன் பேசவே இல்லை! அனாதை மாதிரி ஆன்சைட்லயே இருந்துட்டான். அவன் தனியா கஷ்டபடுவானேனு அவனுக்காக இஞ்சினியரிங் காலேஜ் சேர்ந்தவன் நானு மீனு. இங்க யார்க்கிட்டயும் பேசாம அவன் ஆன்சைட்ல அனாதை மாதிரி இருக்கானேனு நினைச்சு எத்தனை நாள் அழுதிருக்கேன் தெரியுமா!”
முகம் வாடி அழுத விழிகளுடன் பேசும் கணவனின் வேதனையில் இவளின் கண்களும் கலங்க, ஈஸ்வரனைத் தனது மடியில் தாங்கிக் கொண்டாள் மீனாட்சி. அவனின் தலை கோதி இவள் ஆற்றுப்படுத்த,
அவளின் கண்களைத் துடைத்தவாறு எழுந்து அமர்ந்தவன் மேலும் தொடர்ந்தான்.
“அப்பாவுடைய வக்கீல் நண்பர் ஒருத்தரை வச்சி, என்னை ஏமாத்தி சொத்து பத்திரத்துல கையெழுத்தி வாங்கிட்டதா சித்தி சித்தப்பா மேல கேஸ் போட்டேன். இரண்டு வருஷம் கழிச்சி கேஸ் நமக்குச் சாதகமாகத் தீர்ப்பாச்சு. அந்த இரண்டு வருஷம் நாங்க பட்ட கஷ்டமும் வேதனையும் சொல்லி மாளாது. கல்யாணி எங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாதுனு ப்ளஸ் டூ முடிச்சிட்டுப் படிக்கப் போக மாட்டேன்னு இருந்துட்டா! ஒன்றரை வருஷம் கழிச்சி தான் காலேஜ் சேர்ந்தா! அவளுக்குனு நகை சேர்க்கனும், படிக்க வைக்கனும், மாப்பிள்ளை பார்க்கனும்னு நிறையக் கடமைகள் இருக்க, அன்றாட வாழ்க்கைக்கும் கடனுக்குமே வாங்குற சம்பளமும் வியாபார பணமும் சரியாப் போகுதேனு அப்ப நான் வருந்தாத நாளில்லை மீனு! ஏமாத்தினவங்க முன்னாடி நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்து காண்பிக்கனும். எப்படியாவது வாழ்க்கைல முன்னேறிடனும்ன்ற வைராக்கியம் ரொம்பவே இருந்துச்சு மீனு.
தீர்ப்பு வந்த பிறகு அந்தக் கடை இனி எனக்குத் தான் சொந்தம்னு சித்தப்பா சித்தியை அந்தக் கடையை விட்டு துரத்திட்டேன். சொத்தை மூனு பாகமா பிரிச்சு ராஜாவோட சொத்தை தீரன் மூலமாக அவன்கிட்டயே சேர்த்துட்டேன். அந்த வீட்டை அவங்களுக்கே கொடுத்துட்டேன்”
கணவனின் மன வைராக்கியத்தையும், குடும்பத்துடனான பிணைப்பையும், கல்யாணி மற்றும் அகல்யாவின் அன்பான ஆதரவையும் மன உறுதியையும் எண்ணி வியந்து தான் போனாள் மீனாட்சி.
“ஓ அப்ப உங்க பரம்பரை கடையைத் தான் டெவலப் செஞ்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஹோம் அப்ளையன்ஸஸ்னு பெயர் மாத்தி வச்சிருக்கீங்களா! அப்ப அந்தச் சின்னக் கடை என்னாச்சு?” எனக் கேட்டாள்.
“அந்தச் சின்னக் கடையை எக்ஸ்டெண்ட் செஞ்சி ஃபேக்டரி ஆக்கிட்டேன்! முன்னாடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாத்திர கடை மட்டுமா இருந்ததை, மிக்ஸி, ஃப்ரிட்ஜ், கேஸ் அடுப்புனு ஹோம் அப்ளையன்ஸஸ்ஸூம் சேர்த்து விக்கிற கடையா மாத்தி இந்தப் பெயரை வச்சேன்”
“ஓ நம்ம கடை பக்கத்துல இரண்டு மூனு கடை தள்ளி இருக்க அந்தக் குட்டி ஃபேக்டரி அது தானா!” எனக் கேட்டாள்.
ஆமெனத் தலையசைத்தான்.
“இதெல்லாம் நடந்து ஆறேழு வருஷம் இருக்கும்ல! நீங்க அதுக்கப்புறம் சுந்தர்கிட்ட பேச முயற்சி செய்யலையா? அப்புறம் ஏன் இன்னும் சுந்தரை அவரோட அப்பா பேச்சுக் கேட்டு உங்களுக்குப் பிரச்சனை செய்றாருனு சொல்லி திட்டுறீங்க?” எனக் கேட்டாள் மீனாட்சி.
“அப்படியாவது கோபப்பட்டு என்கிட்ட பேசிட மாட்டானானு ஆதங்கம் தான் மீனு! இன்னொன்னு இதெல்லாம் இங்க நடக்கிறதைப் பத்தி அவனுக்கு நான் சொல்ற குறிப்பு மாதிரி! உங்கப்பா இப்படிச் செய்றாங்கனு அவனுக்குச் சொல்லிட்டா அவங்க சைட்ல இருக்கப் பிரச்சனையைக் கண்டுபிடிச்சி சரி செய்ய வசதியாக இருக்கும்ல. அப்பப்ப கல்யாணிக்கிட்ட கூட அவனைத் திட்டி விடுவேன். அவ அப்படியே போய் அவன்கிட்ட சொல்லுவானு தெரிஞ்சி தான் திட்டி விடுவேன். நம்ம கல்யாணத்தை அவனுக்குச் சொல்ல கூடாதுனு சொன்னது சித்தப்பாக்கு தெரிஞ்சு பிரச்சனை ஆகிட கூடாதுனு தான். ஆனாலும் இந்தக் கல்லு பொண்ணு அவனுக்கு நம்ம கல்யாணத்தை லைவ் டெலிகேஸ்ட் செஞ்சா தெரியுமா?” எனக் கூறி சிரித்தான்.
அப்படியா என விழி விரிய கேட்டிருந்தாள் மீனாட்சி.
“ஆனா இன்னிக்கு தான் தெரிஞ்சது! நம்ம கல்யாணத்தை ஒட்டி வந்த எல்லாப் பிரச்சனைக்குமான காரணம் சித்தப்பா இல்லைனு தெரிஞ்சிது! அதுவும் நம்ம கல்யாணத்தை நிறுத்த செஞ்ச பிரச்சனை இல்லை அதெல்லாம், என் வியாபார வளர்ச்சியைத் தடுக்கச் செஞ்ச பிரச்சனைனு தெரிஞ்சிது” என்று அமைதியானவனை,
“சித்தப்பா இல்லைனா வேற யாரு?” எனக் கேட்டு உலுக்கினாள்.
“ஹ்ம்ம் அது நாளைக்குத் தெரிஞ்சிடும்” என்றவன்,
“யாருக்கும் தெரியாத சீக்ரெட் ஒன்னு சொல்லவா!” எனப் பீடிகையுடன் கேட்டான்.
“என்ன சீக்ரெட்?” என ஆர்வத்துடன் கேட்டாள்.
“இரண்டு வருஷம் முன்னாடி சென்னைக்கு ஒரு வேலை விஷயமா போனேன். அப்ப ராஜா தங்கியிருந்த அபார்ட்மெண்ட் வீட்டுக்கே போய் அவனை நேர்ல பார்க்க போனேன். இவங்க யாருனே எனக்குத் தெரியாது. இனி இவங்க வந்தா வீட்டுக்குள்ள விடாதீங்கனு செக்யூரிட்டிக்கிட்ட சொல்லி அனுப்பிட்டான். சார் என் மேல் இன்னும் அவ்ளோ கோபமா இருக்காரு! ஆனா கல்லு பொண்ணுக்கிட்ட மட்டும் என்னை விட்டு கொடுக்காத மாதிரியே அவகிட்ட பேசிக்குவான். நானும் எவ்ளோ நாள் தான் இப்படி நடிச்சிட்டு திரியுறான்னு பார்ப்போம்னு நானும் வெளில திட்டுற மாதிரி நடிச்சிட்டு இருக்கேன்”
“அடப்பாவிங்களா இரண்டு பேரும் மனசுக்குள்ள இவ்ளோ பாசத்தை வச்சிக்கிட்டு வெளில என்னா ஆக்டிங்கு” என மனதினுள் எண்ணியவாறு சிரித்துக் கொண்டாள்.
“ஹ்ம்ம் அப்ப இவங்க இரண்டு பேரை சேர்த்து வைக்க நான் சுந்தரை தான் சமாதானம் செய்யனுமா!” என யோசனையுடன் அமர்ந்திருந்தவளை படுக்கையில் தள்ளியவன்,
“என்ன பெரிய யோசனை?” எனக் கேட்டான்.
“உங்ககிட்டயே சமாதானம் ஆகாத சுந்தர் எப்படி அவங்க அப்பா அம்மாவோட சமாதானம் ஆனாங்க” எனக் கேட்டாள்.
“அவன் மூனு வருஷம் கழிச்சி ஆன்சைட்ல இருந்து வந்ததும் அவங்க அம்மா சூசைட் அடெம்ப்ட் செஞ்சிட்டாங்க. எந்தப் பையனுக்காக அவங்க இதெல்லாம் செஞ்சாங்களோ அந்தப் பையனே அவங்களை எதிரியா பார்த்தது, அவங்ககிட்ட பேசாம தனியாளாக விட்டது, இது எல்லாமே அவங்களை ரொம்ப டிப்ரஸ் ஆக்க, இப்படிச் செஞ்சிட்டாங்க. அவங்களுக்கு அப்ப கடை வேற இல்லை. சித்தி சித்தப்பா இரண்டு பேருக்குமே ராஜா மாசா மாசம் பணம் அனுப்புறதை நிறுத்தலை. நான் நம்ம கடையைக் கேஸ் போட்டு வாங்கின பிறகு ராஜா அனுப்புற காசுல தான் அவங்க ஜீவனம் நடந்துச்சு. சோ வேலையும் இல்லை கடையும் இல்லை. பையனும் பேசுறது இல்லைனு எல்லாமே சேர்ந்து இப்படி முடிவு எடுத்துட்டாங்க. அப்ப தான் மதுரைக்கு வந்தான். அதுக்குப் பிறகு தான் அவங்ககிட்ட இயல்பா பேச ஆரம்பிச்சான். ஆனா அவங்களோட இந்தக் கஷ்டத்துக்குலாம் காரணம் நான் தான்னு அந்தம்மாக்கு என் மேல கோபம்.
இப்ப நீ சொல்லி தான் அவனோட அப்பாகிட்ட சத்தியம் வாங்கின பிறகு தான் ராஜா பேச ஆரம்பிச்சிருக்கான்னு தெரிஞ்சிது” என்றான் ஈஸ்வரன்.
சகலத்தையும் மனைவியிடம் ஒப்புவித்ததில் மனம் சமநிலை அடைய அவளை அணைத்தவாறு ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றான் ஈஸ்வரன்.
அவனின் கண்களை வருடியவாறு அருகில் சாய்ந்திருந்தவளின் எண்ணமோ, இந்த அண்ணன் தம்பிகளை எப்படி இணைப்பது என்பதிலேயே உழன்று கொண்டிருந்தது.
விடியற்காலை ஐந்து மணியளவில் மீனாட்சியின் விழிப்பூட்டி ஒலித்து ஈஸ்வரனின் உறக்கத்தைக் கலைத்திருந்தது.
அவளின் கைபேசி எடுத்து விழிப்பூட்டியின் ஒலியை அணைத்தவன் கண்களில் கைபேசியில் இருந்த முகப்புப் படம் தெரிய, முற்றிலுமாய் உறக்கம் கலைந்து இதழ்கள் புன்னகையில் விரிந்தன.
அவனின் மார்பில் நாணத்துடன் அவள் முகம் புதைத்திருக்கும் அந்தப் புகைப்படத்தின் மேலே ‘சொக்கனின் மீனாள்’ என ஒளிரச் செய்திருந்தாள்.
இதைக் கண்டவனுக்குத் தன்னுடைய பெயரை இவள் எப்பெயரில் சேமித்து வைத்திருப்பாள் என்று அறிந்து கொள்ளும் ஆவல் மேலிட, அவனது அழைப்பு எண்ணைத் தட்டச்சுச் செய்து பார்க்க, இரு பக்கமும் இதயக்குறியுடன் சொக்கன் எனச் சேமித்து வைத்திருந்தாள்.
இதனைக் கண்டதும் அவனின் கண்கள் மின்ன உடல் சிலிர்த்தது. ஏதோ இனம்புரியா உணர்வு ஆட்டுவிக்க, தன்னருகே உறங்கி கொண்டிருந்தவளின் கன்னத்தில் இதழ் பதித்தவன், “பச்சக்கிளி” என அணைத்துக் கொண்டான்.
ஹ்ம்ம் என உடலை முறுக்கியவாறு அசைந்தவள், மேலும் உறக்கத்திற்குள் செல்ல, அவன் அவளின் நெற்றியில் இதழ் பதிக்க, “ம்ப்ச் தூங்க விடுங்கப்பா” அவன் மார்போடு ஒண்டியவாறு உறங்கிப் போனாள்.
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
தூரமாய் எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தப் பாடலின் ஒலி இவனது செவியினைத் தீண்ட,
என் வலியை போக்க வந்த நிவாரணி தான்டி நீ என்றவாறு இதழை இதழால் வருடியவன் அவளின் தலை மீது கன்னத்தை வைத்தவாறு ரம்மியமான அந்தக் காலை பொழுதை ரசிக்கலானான்.
*****
காலை ஒன்பது மணியளவில் கடையில் தனது அறையில் அமர்ந்திருந்தான் ஈஸ்வரன்.
“சொல்லுங்க முரளி! என்னைக் கொல்றதுக்குப் பிளான் போட்டு கொடுக்க எவ்ளோ காசு வாங்குனீங்க?” எனத் தனது காரியதரிசியிடம் அழுத்தமான பார்வையுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
பதறி போனவராய், “அய்யோ சார்! நான் ஒன்னுமே செய்யலை சார்! அப்படிலாம் உங்களைக் கொல்ற அளவுக்குலாம் நான் எதுவும் சொல்லலை சார்” என உடல் நடுங்க உரைத்தார்.
“ஹ்ம்ம் கொல்ல பிளான் போட்டு கொடுக்கலை. ஜஸ்ட் இங்க போறேன், அங்க வரேன், இந்தப் பிராடக்ட்டை தயாரிக்கிறேன், இன்னிக்கு இதை லான்ச் செய்றேன்னு எதிரி கம்பெனிக்கு ஒற்றர் ஆளா இருந்து இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்கீங்க சரியா! ஏம் ஐ ரைட் மிஸ்டர் முரளி” என மேஜையைத் தட்டியவாறு கர்ஜித்திருந்தான் ஈஸ்வரன்.