இந்த வெங்காயம் நறுக்கும் இயந்திரம் அவன் எதிர்பார்த்த அளவு லாபத்தை வழங்காதிருக்க, மீனாட்சியிடம் அதைப் பற்றி உரைத்திருந்தான். லாபம் இல்லாவிடினும் நஷ்டமாகாமல் இருந்ததே போதும் என்று நிம்மதி அடைந்து கொண்டான்.
அடுத்தப் புதிய பொருளுக்கான தயாரிப்புப் பற்றி மீனாட்சி, அகல்யா மற்றும் கல்யாணியிடம் ஆலோசித்தான். அதுவும் இதுப்போல் பெரிய இயந்திரமாய் இருக்க,
“ஏங்க நீங்க தான் ஒரு தடவை பெரிய வியாபாரத்தை விட, சின்னச் சின்னதா சில்லறை வியாபாரம் நிறையச் செய்யும் போது கிடைக்கிற லாபம் அதிகம்னு சொல்லிருக்கீங்க! அப்புறம் ஏன் உடனே பெரிய மெஷினா பிளான் செய்றீங்க! ஏதாவது நூறுலருந்து இருநூறு ரூபாய்க்குள்ள சாதாரண வீட்டு உபயோக பொருட்கள் அல்லது பாத்திரங்கள் பிளான் செய்யலாம்ல” எனக் கேட்டாள்.
“ஆமாடா ஈஸ்வரா! மீனு சொல்றது சரி தான்” என அங்கீகரித்தார் அகல்யாவும்.
அடுத்த ஒரு வாரம் எந்த மாதிரியான வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கலாம் என மீனாட்சியின் குடும்பம் உட்பட மொத்த குடும்பமுமே சிந்தித்துப் பல்வேறு விதமான யோசனைகளைக் கூற, அதில் மீனாட்சியின் யோசனை அவனுக்கு வெகுவாகப் பிடித்துப் போக அதையே தயாரிக்கலாம் என முடிவு செய்தான்.
அடுத்த ஒரு மாதத்தில் அந்தப் பொருளைத் தயாரித்தவன், காணொளி நேரலையில் மறுநாள் தங்களது புதிய தயாரிப்பை தனது மனைவி வெளியிடுவாள் என உரைத்த பின்னே நிறைவு செய்தான்.
இதை எதிர்பாராத மீனாட்சி, “என்னது நாளைக்கு நான் லான்ச் செய்யனுமா! முடியவே முடியாது” என உடனே மறுப்பு தெரிவித்தாள்.
அன்று அவ்வாறு திடீரென அவளைப் பேச வைத்தப்பின் மீனாட்சியை அவன் காணொளியில் பேச வைக்கவில்லை.
“என்ன மீனு! இது உன்னோட ஐடியா தானே! நீ லான்ச் செஞ்சி டெமோ காண்பிச்சு விரிவா உன்னோட டெஸ்ட்டிங் அனுபவத்தையும் சொல்லும் போது செம்ம லைவ்லியா இருக்கும் தெரியுமா” என்றான் ஈஸ்வரன்.
இந்தப் புதிய தயாரிப்பை வீட்டில் ஒரு வாரம் உபயோகப்படுத்தி அருமையான தயாரிப்பு என ஈஸ்வரனைப் புகழ்ந்து தள்ளிவிட்டாள் மீனாட்சி.
“என்ன பிராடக்ட் தயாரிக்கலாம்னு நான் ஐடியா தான் கொடுத்தேன். ஆனா அதை எப்படிச் செய்யலாம்னு அலசி ஆராய்ஞ்சி பிளான் செஞ்சி தயாரிச்சது நீங்க தான்” என அவள் கூற,
“எப்படியோ நீ தான் நாளைக்கு அதைப் பத்தி சொல்ல போற! ரெடியா இருந்துக்கோ” என்று உரைத்து விட்டு அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான்.
இரவு வீட்டிற்குள் நுழையும் போதே மீனாட்சியின் முகம் வாடியிருக்க, “என்னம்மா மீனு! உடம்பு சரியில்லையா? முகம் வாடி கெடக்கே” எனக் கேட்டார் அகல்யா.
மீனாட்சி சுந்தரேஸ்வரன் உரைத்ததைக் கூற, “ஏன்டா அவளுக்குப் பிடிக்கலைனா விட வேண்டியது தானே! எதுக்கு அவளை வற்புறுத்துற” என மகனைத் திட்டினார்.
“ம்ம்மா, வாய்ப்புகள் தேடி வரும் போது உபயோகப்படுத்திக்கிறவன் தான் புத்திசாலி! நம்மளோட கம்ஃபோர்ட் ஜோன்லயே இருந்தா எதையும் சாதிக்க முடியாது. நீங்க அவளுக்குச் சப்போர்ட் செய்யாதீங்க” என்றவாறு உணவை உண்டு விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
மீனாட்சிக்கு மறுநாளை எண்ணி மனம் இன்றே பயங்கொள்ளத் தொடங்க, உணவு கூட உள்ளே இறங்கவில்லை. பெயரளவிற்கு இரண்டு வாய் உண்டவள் அறைக்குச் சென்று விட்டாள்.
அங்கு ஈஸ்வரன் உறங்கி கொண்டிருந்ததைப் பார்த்தவளுக்குக் கண்கள் கலங்கியது. ‘அப்படி என்ன பிடிவாதம் இவருக்கு’ என மனதோடு அவனை வறுத்தெடுத்தவளாய் படுக்கையில் சரிந்தாள்.
“நாளைக்கு இப்படிப் பேசலாமா! அப்படிப் பேசலாமா! என்ன பாயிண்ட்ஸ்லாம் சொல்லலாம்” எனப் பலவித எண்ணங்கள் மூளையை விழிப்பாய் வைத்திருக்க, உறக்கம் வராமல் படுக்கையில் உருண்டுக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
அதில் அவன் உறக்கம் கலைய, “ம்ப்ச் மீனு! தூங்காம என்னடி உருண்டுட்டு இருக்க” என்றவாறு மீண்டுமாய் அவன் உறக்கத்திற்குள் போக,
அவன் இடையோடு கையிட்டு அவனை நெருங்கி அணைத்தவாறு ஒட்டிப் படுத்துக் கொண்டாள்.
அதில் அவனின் உறக்கம் முழுதாய் கலைய, “என்னடா பச்சக்கிளி” என அவள் புறம் திரும்பினான்.
“ஒரு மாதிரி மனசு அலைக்கழிப்பா இருக்குப்பா” என்று அவன் முகம் நோக்கிக் கூறியவள், தனது விழியைத் தாழ்த்தியவாறு, “என்னைச் சொக்க வச்சி தூங்க வைக்கிறீங்களா?” என அவன் நெஞ்சோடு ஒட்டியவாறு உள்ளே போன குரலில் நாணத்துடன் அவள் கேட்க, இதழ் விரிய சிரித்தான்.
அவளுள் மூழ்கி அவளைச் சிலிர்க்க செய்து, அவளின் சிந்தனை யாவும் தன்னில் மட்டுமே இருக்குமாறு அவளை ஆட்கொண்டிருந்தான் மீனாளின் சொக்கன்.
மறுநாள் மாலை அந்நேரலை தொடங்கப் போகும் வரையுமே நீங்காத பதட்டத்துடனேயே வலம் வந்தவளை, தனதறைக்கு அழைத்துச் சென்று அணைத்து விடுவித்தவன், “நான் தான் பக்கத்துலேயே இருக்கேனே! எதுக்கு இவ்வளோ பதட்டம்! ஜஸ்ட் ரிலாக்ஸ்” என்று ஆற்றுப்படுத்தினான்.
நேரலை தொடங்கியதும் அவளை அழைத்துப் பேச வைத்தான்.
“பார்க்க நீளமான சின்ன டப்பா மாதிரி இருக்க இந்தப் பிராடக்ட் தாங்க இன்னிக்கு எங்க மீனாட்சி சுந்தரேஸ்வரரின் புதிய தயாரிப்பு! இது என்ன டிபன் பாக்ஸ் மாதிரியும் இல்லாம லஞ்ச் பாக்ஸ் மாதிரியும் இல்லாம நீளமான மூடில அங்கங்க ஓட்டையோட டப்பா மாதிரி இருக்குனு யோசிக்கிறீங்களா! இது நம்ம வீட்டுல நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் ஒரு பொருளுக்காகத் தயாரிக்கப்பட்டது. என்னனு கெஸ் செய்ய முடியுதா?
“சரி நான் நேரடியாகவே சொல்லிடுறேன்ங்க! நம்ம உணவு முறைல கறிவேப்பிலை கொத்தமல்லி இல்லாம சமையலே இருக்காது தானே! அந்தக் கறிவேப்பிலையைக் காயாமலும் கொத்தமல்லியை அழுகி போகாமலும் பாதுகாத்து வைக்கிறது பெரிய போராட்டமாவே இருக்குல. இனி அந்தப் போராட்டம் உங்களுக்குத் தேவையே இல்லை. இந்த டப்பால கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு ஃபிரிட்ஜ்ல வைக்கும் போது மினிமம் இரண்டு வாரத்துக்குக் கெட்டு போகாம இருக்கும்ங்க. நான் பர்சனலா எங்க வீட்டுல வச்சி டெஸ்ட் செஞ்சிட்டு தான் உங்ககிட்ட சொல்றேன்” எனத் தொடர்ந்து இடைவிடாது பேசி கொண்டிருந்தவளை ஆச்சரியமும் பெருமையும் பொங்கப் பார்த்திருந்தான் ஈஸ்வரன்.
மகள் இன்று பேச போகிறாள் என முந்தைய தினம் ஈஸ்வரன் கூறியிருந்ததை ஆச்சி மூலம் அறிந்து கொண்ட ருத்ரன், நேரலையை நேரடியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.
முதல் முறை அவள் நேரலையில் தயங்கி தயங்கி பேசியதற்கும் இன்று இத்தனை தைரியமாய்த் திடமாய்ப் பேசியதற்கும் எவ்வளவு வித்தியாசம் என ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் ருத்ரன்.
நேரலை முடிந்த மறுநொடி கையைப் பற்றியவளின் நடுக்கத்தையும் சில்லிப்பையும் ஈஸ்வரனால் நன்றாக உணர முடிந்தது.
‘இத்தனையும் அடக்கிட்டு முகத்துல எதையும் காண்பிக்காம தைரியமா பேசிருக்காளே’ அவளின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்தவாறு அவளைப் பெருமிதத்தோடு அவன் நோக்க,
“பாடி ஸ்ட்ராங்! பேஸ்மெண்ட் வீக்” எனக் கண்களைச் சுருக்கி சிரித்தாள் மீனாட்சி.
“ப்ரவுடு ஆஃப் யூ டா பச்சக்கிளி (proud of you da)” என அவள் தோளில் தட்டிக் கொடுத்தான் ஈஸ்வரன்.
மீனாட்சிக்கு எதையோ சாதித்த உணர்வு! அதன் பின்பு வாரத்திற்கு ஒரு நாளேனும் அவளையும் காணொளியில் பங்குபெறச் செய்தான்.
இந்தக் காணொளிகளின் மூலம் ஈஸ்வரனைப் போன்று மீனாட்சியும் மதுரையில் பலருக்கும் பரிட்சயமானவளாய் மாறிப் போனாள்.
மீனாட்சி எண்ணியவாறு இந்தப் பொருளின் விற்பனை அமோகமாக இருக்க, இவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை வாரி வழங்கியது. தயாரித்தவை எல்லாம் விற்று தீர்ந்து மேலும் தயாரிக்கக் கேட்டு ஆர்டர் வந்த வண்ணம் இருந்தன. இவர்களின் தயாரிப்பு அத்தனை தரமானதாகவும் இருந்தது.
*****
மீனாட்சி சுந்தரேஸ்வரனுக்குத் திருமணமாகி ஒரு வருடம் கடந்திருக்க, கல்யாணியின் நிச்சயத்தில் பங்கு கொள்ள வந்திருந்தான் சுந்தரராஜன்.
கல்யாணி முதுகலை படிப்பை முடித்ததும், ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். ராஜன் தான் கல்யாணிக்கான வரனைப் பார்த்து தேர்ந்தெடுத்தான்.
அந்த வரன் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்க, திருமணத்திற்குப் பின் கல்யாணி பெங்களூருக்கு மாறுதலாகி போவாள் என முடிவு செய்யப்பட்டது.
காலையில் கோவிலில் வைத்தே நிச்சயம் முடிந்திருக்க, மீனாட்சியின் பிறந்த குடும்பத்தினர் கோவிலிற்கு வந்து விட்டு நிச்சயம் முடிந்ததும் கிளம்பியிருந்தனர்.
வீட்டிற்கு வந்த மற்ற அனைவரும் உறங்கி எழுந்து மாலை தேநீர் அருந்தியவாறு அரட்டை அடித்துக் கொண்டிருக்க, தீரனும் இவர்களுடன் இணைந்து கொண்டான்.
“அடுத்தக் கல்யாணம் நம்ம ராஜாண்ணாக்கு தான்” என்ற கல்யாணி, “ராஜா அண்ணாக்கு நான் தான் பொண்ணு பார்ப்பேன்” என்றாள் ஆசையாய்.
“என்னது நீ பார்ப்பியா! உங்க அண்ணன் ஏற்கனவே பொண்ணுலாம் பார்த்து வச்சிட்டாங்க” என அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான் தீரன்.
“அப்படியா சுந்தர்!”
“நிஜமாவா அண்ணா?”
என மீனாட்சியும் கல்யாணியும் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் அவனைக் கேட்க,
ஈஸ்வரன் ராஜனின் முகத்தைப் பார்த்திருந்தான். இருவரும் இன்னமும் நேரடியாகப் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் விலகி செல்லவும் இல்லை. அப்படியே அவர்களின் பாசமான உறவு தொடர்ந்து கொண்டிருந்தது.
“பொய் சொல்றீங்களாமே! உங்க அண்ணன் சொல்றாங்க” என மீனாட்சி நேரடியாகவே கேட்க,
“பொய் சொல்றியா! அப்ப நிஜமாவே லவ் பண்றியா அண்ணா! யாருண்ணா அந்தப் பொண்ணு” ராஜனின் அருகில் அமர்ந்தவாறு ஆர்வமுடன் கேட்டாள் கல்யாணி.
“எங்கேம்மா சொல்றான்! நானும் ரொம்ப நாளாக இதைக் கேட்டுட்டு இருக்கேன். இந்த ஊருல ஏதோ ஒரு உளவாளி பொண்ணு இருக்குனு சொன்னான். அந்தப் பொண்ணைத் தான் காதலிக்கிறானானு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான்” எனத் தீரன் புலம்ப,
அனைவரும் சொல்லுங்க சொல்லுங்க என ராஜனைச் சுற்றி நின்று நச்சரிக்கத் தொடங்கினர்.
“இப்போதைக்கு நான் ஒன்னே ஒன்னு தான் சொல்ல முடியும்! அந்தப் பொண்ணுக்கு என்னைத் தெரியும்! ஆனா நான் அந்தப் பொண்ணை லவ் பண்றது அந்தப் பொண்ணுக்கே தெரியாது” எனக் கூறிச் சிரித்தான்.
“அடேய் நீ 90ஸ் கிட் தான்டா நம்புறேன்! அதுக்குனு இப்படி மொக்கை போடாத” எனத் தீரன் கேலிச் செய்ய அனைவரும் சிரித்திருந்தனர்.
கல்யாணிக்கு அவளின் வருங்காலக் கணவனிடத்தில் இருந்து அழைப்பு வர அவள் உள்ளே சென்று விட்டாள்.
இது தான் தப்பிக்கும் நேரம் என, “வாடா கிளம்புவோம்” எனத் தீரனை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் ராஜன்.
கல்யாணிக்கு வேங்கடத்தையும் செல்வாம்பிகையையும் தனது நிச்சயத்திற்கு அழைக்கத் துளியும் விருப்பமில்லை என்பதால் ஈஸ்வரனும் அவர்களை அழைக்கவில்லை. அகல்யாவும் மீனாட்சியும் தான் பெயருக்காவது அழைப்பு விடுப்போம் எனக் கூறிக் கொண்டிருந்தார்கள். ராஜனே அவர்களை அழைக்க வேண்டாமெனக் கூறிவிட்டான்.
“எதுக்கு! வந்து வாழ போற பொண்ணுக்குச் சாபம் விடுறதுக்கா! அவங்கலாம் என்னிக்கும் திருந்தவே மாட்டாங்க! மகனா அவங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செஞ்சிட்டு இருக்கேன். நீங்க அவங்களை உறவா மதிக்கனும்னு எந்த அவசியமும் இல்லை” என ராஜனே அகல்யாவையும் மீனாட்சியையும் சமாதானம் செய்தான்.
மீனாட்சிக்கு தான் ராஜனின் இந்நிலை எண்ணி மனம் கலங்கிப் போனது.
“அவரோட நல்ல மனசுக்கு ஏத்த மாதிரி நல்லா பொண்ணா கட்டி வச்சிடு ஆண்டவா” என அவனுக்காக வேண்டியும் கொண்டாள்.
******
மீனாட்சியின் தந்தை ருத்ரன் மதுரை வரும் சமயங்களில் எல்லாம் மீனாட்சி தனது மாமாவின் இல்லத்திற்குச் சென்று தங்கிடுவாள்.
ஈஸ்வரனும் அந்நாட்களில் எல்லாம் மீனாட்சியுடன் அந்த இல்லத்திலேயே தங்கிக் கொள்வான்.
அவள் சென்னை செல்லும் நேரங்களிலும் அவளுடனே இவனும் பயணித்து விட்டு இரண்டு நாட்கள் தங்கி விட்டு வருவான்.
இன்று தந்தையைக் காண மாமாவின் இல்லம் சென்றவள் இரவு வரை குடும்பத்தினருடன் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
வீட்டிலுள்ள அந்த மர ஏணி படிக்கட்டின் மூலமாகவே மணம் வீசும் அறைக்குச் சென்றாள் மீனாட்சி.
அவளின் பின்னேயே அந்த அறைக்குள் நுழைந்த அன்னம், “பாரு நீ இல்லனா கூட உன் ரூமை எவ்ளோ அழகா நான் மெயின்டெய்ன் செஞ்சிட்டு இருக்கேன் பாரு” என்றாள்.
அந்த ஜன்னலின் அருகே நின்று மலரின் வாசத்தை ஸ்வாசித்து உள்ளிழுத்துக் கொண்ட மீனாட்சி, “உனக்கும் கல்யாணமாகி இங்க வரும் போது இந்த ரூம் கேட்டுச் சண்டை போட மாட்டியே” எனக் குறும்பாய் கேட்க,
“ஹான் ஆசையைப் பாரு! நீங்க மட்டும் புருஷன் பொண்டாட்டியா வரும் போது நாங்க ரூமை விட்டுக் கொடுக்கனுமாம்! ஆனா நாங்க வரும் போது கொடுக்க மாட்டாங்களாம்” என அன்னம் ஒழுங்கு காண்பித்தவாறு கூற, சிரித்திருந்தாள் மீனாட்சி.
“சரி அதுக்குத் தான் இன்னும் பல வருஷம் இருக்கே” என்று மீனாட்சி கூற,
“என்னது பல வருஷமா” என நெஞ்சில் கை வைத்துக் கொண்ட அன்னம், “எதே அவங்களே எனக்குக் கல்யாணம் செஞ்சி வைக்கலாம்னு சொன்னா கூட நீ செஞ்சி வைக்க மாட்ட போலயே” என்றாள்.
“பின்னே இப்ப தானடி ப்ளஸ் டூ முடிச்சிருக்க! இன்னும் காலேஜ் முடிச்சி வேலைக்குப் போகனும். அதுக்கு நாலஞ்சு வருஷம் ஆகும்ல” என மீனாட்சி கூற,
“ஓஹோ நீங்க மட்டும் வேலை செய்ய மாட்டேன்னு எங்கே போனாலும் உன் பின்னாடியே சுத்தி வர மாதிரியான மனுஷனை புருஷனாக்கி ஹேப்பியா வாழுவீங்களாம்! நாங்க மட்டும் வேலை பார்த்துக் கஷ்டப்பட்டுக் கிடக்கனுமா?” எனக் கிண்டலாய் ஏட்டிக்கு போட்டியாய் பேசிய அன்னம்,
“ஆமா அப்படி என்ன தான் சொக்குபொடி போட்ட உன்னோட ஈசுப்பாக்கு! பொண்டாட்டி எங்கே போனாலும் பின்னாடியே வந்துடுறாரு” என ரகசியம் போல் மீனாட்சியின் அருகே அமர்ந்து கிசுகிசுப்பாய் அன்னம் பேச, அறையினுள் நுழைந்திருந்தான் ஈஸ்வரன்.
“அய்யய்யோ அண்ணா கேட்டிருப்பாங்களா தங்கம்” என மீனாட்சியின் காதினில் உரைத்தவளாய், “வரேன் அண்ணா” எனப் பதறியடித்து வெளியே சென்றிருந்தாள்.
ஈஸ்வரனின் வதனத்தில் இருந்த சிரிப்பை கண்ணுற்றவளாய், “அவ பேசியதைலாம் கேட்டீங்களா?” எனக் கேட்டாள்.
ஆமெனத் தலையசைத்து அவன் சிரிக்க, “சும்மா விளையாட்டா பேசிட்டு இருந்தா! ப்ளஸ் டூல தொண்ணூறு பர்சன்ட் வரும்னு சொல்லிருக்கா! இஞ்சினியரிங் தான் படிக்கப் போறா” என்று அவள் கூறியதை கேட்டவன், குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
குளித்து விட்டு வந்தவன் மெத்தையில் அமர்ந்திருந்த மீனாட்சியின் வயிற்றில் முகத்தைப் புதைத்தவாறு, “எப்ப குழந்தையோட அசைவெல்லாம் தெரியும்?” எனக் கேட்டான்.
“இப்ப தானேங்க அஞ்சு மாசம் ஆகுது! அதுக்கு இன்னும் கொஞ்சம் மாசம் ஆகும்! சரி வாங்க உங்களுக்கு டிபன் எடுத்து வைக்கிறேன்” என அவனுடன் அந்த மர படிக்கட்டில் அவள் இறங்க,
“இதுல இறங்க உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லையே” என அவன் கேட்க, இல்லையென மென்னகையுடன் தலையசைத்தாள்.
“இருந்தாலும் குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ அந்த வெளி படிக்கட்டையே யூஸ் செய்யேன்! எனக்காக” எனக் கண்ணைச் சுருக்கி அவன் கூற,
உணவினை உண்டு விட்டு மீண்டுமாய் அந்த மணம் கமழும் அறைக்குள் இருவரும் பிரவேசித்ததும் காற்றின் சுகந்தத்தில் லயித்தவாறு நின்றிருக்க,
“சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தான்டி” எனப் பாடல் வெளியிலிருந்து ஒலிக்கவும் இருவருமே சிரித்து விட்டனர்.
“நான் எங்க சொக்குப் பொடி போட்டேன்! நீங்க தான் சொக்க வச்சி சொக்க வச்சி இதோ இப்படி ஆக்கிருக்கீங்க” என வெட்கத்துடன் தனது வயிற்றைக் காண்பித்தவாறு மெத்தையில் அமர்ந்தாள்.
அவளின் நாணச்சிரிப்பை ரசித்தவனாய், “சொக்க வைக்கிறேன்னு சொல்லி சொல்லி நிஜமாவே நான் தான் உன்கிட்ட சொக்கிப் போய் இருக்கேன் பச்சக்கிளி! சொக்கி போனதுக்கான பரிசு தான் இது” என வயிற்றில் இருந்த அவளின் கையின் மீது கை வைத்து சிரித்தவாறு உரைத்தான் மீனாளின் சொக்கன்.
சொக்கனின் மீனாளாகவும், மீனாளின் சொக்கனாகவும் இருவரும் ஒருவருள் ஒருவர் என்றும் என்றென்றும் இப்படியே இணைப்பிரியாக் காதலுடன் வாழட்டும் என வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்.