சூரியன் துயில் கலைந்து நிற்கும் குழந்தை போல தனது கதிர்களைக் கைகளாகக் கொண்டு மேகம் என்னும் போர்வையை விலக்கி மயக்கும் புன்னகை கொண்டு பார்க்கும் குழந்தை போல மெல்ல மெல்ல தனது முகம் காட்டி பளீர் புன்னகை வீச இனிதே தொடங்கியது விடியல்.
வழமை போலக் குடும்பப் பெண்கள் காலை வேளையில் பரபரப்பாக இருக்க அவர்களுடன் ஒன்றி போனார்கள் அக்காள் தங்கை இருவரும்.
என்னதான் உறவு என்றாலும் ஓர் நாள் பொழுது கூட மாசி கருப்பன் குடிலில் வந்து தங்கி சென்றதில்லை.நல்ல நாள், பெரிய நாள், ஊர் திருவிழா என்றால் ஓர் நாள் கூடி கொள்வதோடு சரி.
அதனாலோ என்னவோ அவர்களது பழக்கம் வழக்கம் எல்லாம் இருவருக்கும் பிடிபடாமல் சற்று திணறி தான் போயினர் அரிவை பெண்கள். திருமணமாகி சில வாரங்கள் கடந்த நிலையில் இதோ சில வழமைகள் பதிந்துப் போக அவற்றைச் செய்து கொண்டு இருந்தனர் இருவரும்.
இன்றும் வழமை போல் இருவரும் தண்ணீர் குழாயில் நின்றனர்.வீட்டை சுற்றி பெரிய வேலி இருக்க நுழைவாயில் அருகிலே கிணறு அதற்கு எதிர் புறம் தண்ணீர் குழாய் இருந்தது.
அமுது அடிக்க அருளு அதனை குடத்தில் பிடித்துக் கொண்டு இருந்தாள். மதி,முத்து, சொக்கன் மூவரும் திண்ணையில் அமர்ந்து தேநீர் பருகி கொண்டு இருந்தனர்.
“சின்னு அண்ணா ஏன் அண்ணி என்னிடம் கதைக்க மாட்டேங்கீறார்கள் என்னை முறைத்துக் கொண்டே சுத்திவாறார்கள் தானே ஏன்” சிறு சோகம் இழையோட பதுமை பெண்.
“நீ போயி பேசுனியா என்ன?” முத்து கேள்வி போல்.
“ஓம் (ஆம்)”
“அதிசயந்தேன்போ”கிண்டல் குரலில் முத்து சொல்ல.
“ஏன் அண்ணா?”சிறு சிணுக்கம் பதுமையிடம்.
“பின்ன என்ன புள்ள உம்ம சொட்டு புள்ளைங்க தானே எல்லாம் பேசி பழகாம நாலு சுவத்தைப் பார்த்துகிட்டே கிடந்தா ஆச்சா?” சிறு கோபமாக முத்து கேட்டு வைத்தான்.
பதுமை மௌனம் கொண்டு தனது கையில் உள்ள காப்பி லோட்டாவை வருடி கொண்டே “பேசி தான் நினைக்கிறன்,ஆனா முடியலை அண்ணா என்னால இயல்பா இருக்க முடியலை” என்றவள் கண்ணில் இருந்து குருதி பெருக மதிக்கு எதிரில் அமர்ந்திருந்த சொக்கன் வேகமாக எழுந்து அவள் அருகில் அமர்ந்து தலையைத் தோளில் சாய்த்துக் கொண்டான்.
“அழுதா தோத்து புடுவ மதி பலவீனம் படுத்திக்காத . நீ சாதிக்க வேண்டியது எம்புட்டு இருக்குத் தெரியுமா .பொம்பள புள்ளைங்களுக்கு இருக்குற உறுதி ஆருக்கும் வாராது வைராக்கியம் வையி மதி” சொக்கன் ஆதரவாகத் தலையை வருடியவாரே சொல்ல முத்துவும் தலையை ஆட்டி சொக்கனது பேச்சை ஆமோதித்தான்.
“மதி உமக்கு நடந்தது கெட்ட கானாவா எண்ணி மறந்து புடு மெல்ல மெல்ல ஆளுங்க கூடப் பழகப் பாரு உமக்கு வேண்டிய தனிமை, நேரம் கொடுத்தாச்சு,
இனி என்னானு ஓசனை பண்ணு புள்ள. உன்ன நம்பி வேற அண்ணே பல வேலை பண்ணிவச்சுருக்கு” முத்து அக்கறையாகச் சொல்ல மீண்டும் மௌனம் கொண்டது பதுமை.
அண்ணனும் தம்பியும் மாறி மாறி மதியை தேற்ற இதனை பார்த்து கொண்டு இருந்த பெண்களில் அமுது “என்னக்கா விடியல காட்டிலும் சிவாசி (சிவாஜி) சாவித்திரி பாசமலர் படம் ஓடுது. பாசம் வேறு பொங்கி வழிஞ்சு கண், காது, மூக்குன்னு ஓடும் போலையே”ஏக நக்கலில் அமுது.
“நீயும் செத்த சும்மான்னு தான் இருறேண்டி காதுல கேட்டுச்சு இரண்டும் வம்பு பண்ணி வைக்குங்க பொறவு பஞ்சாயம் வைக்காத சொல்லிப்புட்டேன்”
“நீ இப்படி பயந்துகிட்டா இன்னும் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஏறி போகும் பார்த்துகிடு”
“வேற என்னத்தடி பேச சொல்லற ராவுக்கு அந்த மனுஷன் எம்ம போட்டு பாடா படுத்தி வைக்குது. எதுக்கு பேசி சண்டை கட்டுத்துனே தெரியல எதாவது பேசி எம்ம வாய புடுங்கி அதுல இருந்து தொடங்கிடும். சில நேரம் அம்புட்டு கோபமா வருது” ஒருவித எரிச்சலில் அருளு.
அவளும் என்னதான் செய்வாள் பேசி தீர்க்க, கேட்க, உணர்ந்து கொள்ள பல விடயங்கள் வரிசை கட்டி நிற்க.அதையெல்லாம் விட்டு விட்டு ஆகாத பேச்சை பேசி அதிலிருந்து சண்டையை உருவாக்கி பேசி பேசியே வம்பு செய்யும் முத்துவை சமாளிக்கவே முடியவில்லை அருள்செல்வியால்.
“உம்ம பாடு தேவல எம்ம பாடு ரொம்ப மோசம் மாமா பேசவே பேசாது. நேத்து ராவுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கேன். அந்தச் சாப்பாட்ட மதி புள்ளைக்கு வச்சுப்புட்டு அதுவே போட்டு திங்குது. எது செஞ்சாலும் அதுக்கு ஏட்டிக்கு போட்டி பண்ணி வைக்குது.
கேளு கூத்த அது துணிய கை வலிக்க வெள்ளாவி வச்சு ஏழு மணி நேரம் காயப்போட்டு மடிச்சுக்கிட்டு இருக்கேன். அறைக்குள்ள வந்த மனுசேன் கையில இருந்த துணிய வெடுக்குனு புடுங்கி திரும்பத் தண்ணிக்குள்ள முக்குதுங்குறேன்…… என்னா வம்புங்குற?
நான் தெக்காலப் போனா அது வடக்காலத்தேன் போகும் நான் என்னானு குடும்பம் பண்ணி குப்பை கொட்ட போறேன்னு விளங்கள”அருள் நிலை தேவலாம் போலும் அதற்கு மேல் புலம்பினாள் அமுது.
“நம்பக் கதை இப்படியா நேத்து ராவுக்குக் வேலிய மூட வந்தேன் புள்ள அங்கன கந்தன் மாமா, சங்கிலி , குடக்கோவன், முருகு, நாலும் என்கிட்டே மல்லுக்கு நிக்குதுங்க.
“அவீங்களுக்கு என்னவாம்” சிறு கடுப்புடன் அமுது கேட்க நேற்று சொக்கன், முத்து செய்த கலாட்டாவை சொல்ல.
“அவீங்க அண்ணங்காராய்ங்க பண்ணதுக்கு நீயும் நானும் போனையா?…..அதேன் முருகு முறைச்சுகிட்டே திரியிறானா?”நேற்று வீடு வந்ததில் இருந்து பார்க்கும் இடமெல்லாம் முறைத்து கொண்டே இருந்தான் முருகு.
“ஆமா அமுது ஒரு மணி நேரமா கால் கடுக்க நிக்க வச்சு வஞ்சானுங்க வய்யுறதையும் வஞ்சுபுட்டு சொல்லிப் புடாதான்னு காலுல விழுந்து வைக்கிதுங்க”
“அட கிரகமே விளங்கும் இவீங்க வீரத்துல தீய வைக்க” பல்லை கடித்துக் கொண்ட அமுது
“அக்கா இதுங்கள வுடு அப்பாரா போயி பாக்கணும் என்ன செய்யுதோ தெரியல.அதுக்குச் சங்கதி புரியாம தவிச்சு கிடக்கும் சரியா சோறு பொங்க மாட்டேங்குதாம் வா நம்பப் போயி ஒரு எட்டு பார்த்துப்புட்டு வருவோம்” அமுது கவலையாகச் சொல்ல அருளுக்கும் அதே எண்ணம் தான்.
“சொன்னாலும் விடாதுங்க வம்பு பண்ணி வைக்கும் சொல்லாம போனாலும் சரி வராதே” அமுது கவலையாகச் சொல்ல.
“மாமா ஐயித்த கிட்ட சொல்லி வழி கேப்போம்”
“ஹ்ம்ம்!…அதுவும் சிரித்தேன் என்றவர்கள் வேலையை முடித்து குடத்தை தூக்கி கொண்டு வீட்டை நோக்கி செல்ல திண்ணையில் எதிர் எதிரே அமர்ந்திருந்த சொக்கனும் முத்துவும்.
பெண்கள் இருவரும் குடத்தைத் தூக்கி கொண்டு உள்ள செல்லும் தரணும் எதிர்பாரா நேரம் கையைத் தீடீரென நீட்டி “புடி!..” என்று கத்தினார் அண்ணனும் தம்பியும்.
அதில் சொக்கன் வேறு யாரும் அறியா வண்ணம் நொடி பொழுதில் அமுதின் இடுப்பை கிள்ளி வைக்க பெண்கள் இருவரும் ஒரு சேர பதறி குடத்தைக் கொட்டி கவிழ்த்தனர்.இவர்கள் சேட்டையில் மதி அதிர்ந்து விழிக்க அண்ணனுக்கும் தம்பிக்கும் அப்படி ஓர் சிரிப்பு.
குடத்தைத் தவற விட்ட பதட்டத்தில் இருவரும் திருத் திருவென முழித்து நின்றனர்.
டமாரனே குடம் விழுந்த சத்தத்தில் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர் சாரதாவும் சிவசாமியும்.மகன்கள் இருவரும் சிரித்து நிற்க. மருமகள்கள் இருவரும் முழித்து நிற்க மதியோ அதிர்ந்து நிற்க என்ன செய்தி என்று நொடியில் பிடிபட்டது சிவசாமிக்கு வழமை போல் சாரதாவை முறைத்து வைத்தார்.
“ஏலேய்!.. என்னவே சிறுசுங்களாட்டம் பொழுதுக்கும் வம்பு பண்ணி வைக்கீறீக” என்று போலியாகக் கடிந்து மருமகள்களைப் பார்த்து நீக போ சாமி அவீங்களுக்கு வேலை இல்லை” என்றவர் கையோடு மருமகளைக் கூட்டி கொண்டு தப்பித்துச் செல்ல சிவசாமி மகன்கள் இருவரையும் முறைத்து நின்றார்.
சில நாட்களுக்கு முன்பே அவர் மதியிடம் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தார். அதிலும் அப்பெண் அண்ணா என்று அழைக்க அந்த எண்ணம் இன்னும் வலுப் பெற்றது.
இன்னுமே சிரித்துக் கொண்டிருக்கும் மகன்களை முறைத்தவர் மதியிடம் திரும்பி முதல் முறையாகப் பேசினார் “அம்மாடி பொண்ணு” என்க தன்னை அழைத்த சிவசாமியை ஆச்சிரியமாகப் பார்த்து பதுமை வேகமாக எழுந்து நின்றது.
“உள்ளர மருமவ பொண்ணுக கூடப் போயி இரு தாயி பேசி பழகு. நீ ஆருனு தெரியாது ? ஆனா ஆரா இருந்தாலும் நல்ல இருக்கனும் சில சேர்மானம் உம்ம குணத்தையே கெடுத்து புடும்” என்று மகன்களை மறைமுகமாகச் சொல்ல அதற்கும் சிரித்து வைத்தனர் இருவரும். அதில் கடுப்பாகி போனது என்னவோ சிவசாமி தான்.
“அகவாலி பையலுக அடங்க மாட்டேங்கிறாய்ங்க”புலம்பி கொண்டே சென்றார் பெற்றவர் பாவம்.
******
வீட்டில் உள்ள வேலையை முடித்து விட்டு மதிய வேளை உணவை பங்காளிகளுக்குக் கொடுத்து பத்திவிட்டுப் பெண்கள் இருவரும் மாமியாரிடம் வந்து நின்றனர். அங்கு செவ்வந்தி, ஆனந்தி பச்சையம்மாள் அமர்ந்து பூ தொடுத்து கொண்டிருந்தனர்.
பச்சையம்மாள் வேறு அமுது மேல் கோபத்தில் இருந்தார். அன்று கோவிலுக்குச் சென்று வந்தவரிடம் நடந்த விடயத்தைச் செவ்வந்தி, ஆனந்தி, சாரதா மூவரும் சொல்லி புலம்ப.
பெரியவருக்கு அத்தனை கோபம் அமுதை பார்க்கும் போதெல்லாம் அவர் பங்கிற்கு முறைத்துக் கொண்டு இருந்தார்.
“ஐயித்த” மாமியாரிடமும் ஓரகத்திகளிடமும் பேசி கொண்டு இருந்த சாரதா திரும்பி
“என்னமா?”
“வூட்டுக்கு ஒரு எட்டு போயி அப்பாரா பார்த்துப்புட்டு வாரோம். அது சோறு பொங்காம இருக்காம் இப்படி உண்ணாம இருந்தா என்னதுக்குனு ஆகும்” என்றதும் ஆனந்தி கவலையாக.
“நானும் வாரேன் அமுது”
“வேணாம் ஐயித்த எதாவது பேசி வைக்கும் அப்புறம் சங்கடமாகி போகும் அது கோபம் குறையட்டுமே” என்று சொல்ல அதுவும் சரிதான் என்றனர் மற்றவர்கள்.
“எல்லாம் சரி எம்ம பேரனுக கிட்ட சொல்லிபுட்டியா” சரியாக நாடி பிடிக்க உள்ளுக்குள் உதறினாலும் வெளியில்.
“ஆச்சு ஆச்சு” என்றாள் அமுது அவளது அவசர பதிலில் சிறு சந்தேகம் பிறக்க குறு குறுவெனப் பார்த்து வைத்தார் பச்சையம்மாள்.
“ஐயோ அக்கா கிழவி உத்து உத்து பாக்குது”
“எனக்கே பயமாத்தான் இருக்கு புள்ள”
“பக்கத்து தெருவுக்குப் போயி பெத்தவனைப் பாக்குறதுக்கு என்ன பாடுபட வேண்டியதா இருக்கு”
“எல்லாம் நம்ம எழுத்துதேன் நல்ல சிறப்பா எழுதி வச்சு புட்டான் போல” அமுதும் அருளும் கிசு கிசுப்பாகப் பேசி கொள்ள
“என்னவே அங்கன ரகசியம்”
“ஒண்ணுமில்ல அம்மாத்தா” என்றவர்களை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே
எம்ம பேரனுக வந்தா காபி தண்ணி கொடுக்கனும் உதடு சுளித்துக் கொண்டு பச்சையம்மாள் பேச
“இம்புட்டு நாள் ஆரு கொடுத்தாவாம் காபி தண்ணி” பல்லை கடித்துக் கொண்டு அமுது சன்ன குரலில் பேச
“நீ வேற ஏண்டி பேசாம இரு” அருள் அதட்ட
“வெரசா போயிட்டு வாக” பச்சையம்மாள் சொன்னது தான் தாமதம் இருவரும் விட்டால் போதுமென ஓடினர்.
அரக்க பறக்க தகப்பனை பார்க்க வந்தவர்கள் தனது வீட்டின் முன் நின்று இருந்த பங்காளிகளைக் கண்டதும் அதிர்ந்து நின்றனர்.
அங்கே முத்துச் சொக்கனை தவிர்த்து நால்வரும் நின்று ஆட்களை வைத்து எதோ செய்து கொண்டு இருந்தனர்.
“அடியாத்தி கொடுமை கொடுமைனு கோவிலுக்குப் போனா அங்கன இரண்டு கொடுமை ஜிங்கி ஜிங்கினு ஆடுச்சாமே. அந்தக் கதையால இருக்கு நம்பப் பொழப்பு” அமுது சொல்ல
“என்னவே இது இவீங்க என்ன பண்ணுறாய்ங்க அப்பாரு எங்க?” அருளு.
“தெரியலக்கா இப்போ என்ன செய்ய”
“ஐயோ பார்த்துப்புட போராய்ங்க வாடி” என்று அருளு அமுதின் கையைப் பிடித்துத் திரும்பி ஓட பார்க்க வழியை மறைத்து நின்றான் முத்துப் பின்னில் சொக்கன் அவனுடன் காத்தமுத்து.