காத்தமுத்துவை வம்பு செய்து கொண்டிருந்த பங்காளிகளைக் கலைத்தது பணியாள் வைரத்தின் குரல் தம்பி!… தம்பி!…. பதறிக் கொண்டு ஓடி வந்தவர் விடயத்தைச் சொல்ல.
நொடி பொழுதை வீண் செய்யாமல் நால்வருடன் காத்தமுத்துவும் ஓடினான். அங்கே மாசி கருப்பன் குடிலே அல்லோல பட்டுக் கொண்டிருந்தது.
“ஏலேய்! அய்யாவு இங்கன வா வே அவன் வலுவுக்கு உம்ம உடம்பு தாங்குமா?” சொக்கன் அந்தப் புதியவனைக் காட்டுத் தனமாக அடித்துக் கொண்டிருக்க அதனைத் தடுக்கப் போராடி கொண்டு இந்த தம்பியை அழைத்துக் கொண்டு இருந்தார் சிவசாமி.
சற்று முன் வரைக்கும் அவரும் சாமிகண்ணும் போராடி கொண்டு தான் இருந்தனர். எத்தனை முயன்றும் சொக்கனை அடக்க முடியவில்லை அத்தனை அகோரக்ஷமாக அந்தப் புதியவனை வெள்ளாவி வைத்து கொண்டு இருந்தான்.
பெண்கள் அனைவரும் கத்தி கதறிக் கொண்டு இருக்க மதி அந்தப் புதியவனை வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்றாள் வழமை போல் பதுமை மௌனமாக நின்றது.
அமுது பயந்து கதறி ஒரு நிலைக்கு மேல் சொக்கன் மூர்க்கம் கூட எங்கே அப்புதியவனுக்கு எதுவும் ஆகி விடுமோ என்று பயந்த அமுது.
ஓடி வந்து அவனது கையைப் பிடித்து “மாமா!… மாமா!… பயமா இருக்கு மாமா வுட்டு புடு” என்று அவனைப் பின்னிருந்து கட்டி கொள்ள உடனே அடித்துக் கொண்டு இருந்தவனைத் தள்ளி விட்டான் சொக்கன்.
அப்பன், சித்தப்பன், சின்னாயி, அம்மா என்று கூட்டமே ஆவென்று பார்த்துக் கொண்டு இருக்க. இவர்களைப் பார்த்தவாரே ஓடி வந்தனர் பங்காளிகள்.
மூக்கு,முகம்,உதடு என்று குருதி வழிய நின்றிருந்த அப்புதியவன் சொக்கனை பார்த்து
“சொக்கன் அவ என் பொண்டாட்டி உனக்கும் இதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை பிரச்சனை பண்ணாம அனுப்பி வை”
“அடிங்க ஆருக்கு ஆருடா பொஞ்சாதி நீதேன் விடுதலை கொடுத்து புட்டியே இன்னும் என்னவே பொஞ்சாதி
“அது உனக்கு தேவையில்லாத விஷயம்” என்றவன் மதியை நோக்கி போக
“அவ மேல கை பட்டுச்சு கொன்னே புடுவேன்” கர்ஜித்தான் சொக்கன்.
“இங்க பார் சொக்கன்…. எனக்கு அவ வேணும் நான் பேசுகிறேன் நீ நடுவுல வராத. அதுக்கு உனக்கு உரிமையே இல்லை. பழகுன பழக்கத்துக்குத் தான் உங்கிட்ட அடி வாங்கி நிக்கிறேன்” என்றவன் மதியை நெருங்கி.
“சந்திரா எதுவா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு போயி பேசிக்கலாம் வா” அவனை ஒரு சிறு வலி நிறைந்த புன்னகையுடன் பார்த்தவள்.
“அதற்கு முன்னமே நான் கொஞ்சம் கதைக்கனுமே சில கேள்விகளும் உண்டு தானே எனக்கும்”
“ப்ச் அதை ஊருக்கு போயி பேசிக்கலாம்”
“ஆரு கூடவும் நான் வர இயலாது என்னை விடுங்கோளேன்”
“ஏய்! என் பொறுமையைச் சோதிக்காத உனக்காக எங்க வீட்டை விட்டுட்டு வந்திருக்கேன்.இப்போ உனக்குன்னு யாருமே இல்ல என்னால உன்ன தனியா விட்டுட்டு போக முடியாது சொன்னா புரிஞ்சிக்கோ சந்திரா வா”
“அடேயப்பா!… என்ன அக்கறை சக்கரையாட்டம். கூடவே உம்ம பொஞ்சாதியையும் விட்டுபுட்டு வந்துட்டேன்னு சொல்லுவே” சொக்கன் கர்ஜிக்க அனைவரும் அதிர்ந்து நிற்க. சந்திரமதி கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்த வண்ணமாக இருந்தது.
“என்னவே முறைக்கிற உம்ம வண்டவாளம் அம்புட்டும் எங்களுக்குத் தெரியும். திண்டுக்கல் வூட்டுல மறைச்சு வச்ச உம்ம பொஞ்சாதி சங்கதியும் தெரியும்” என்றதும் சற்று அடங்கிப் போன சுரேஷ்
ஆம்! சுரேஷ் சந்திரமதியின் கணவன்.
“என்னவே இம்புட்டு நேரம் சலம்பிகிட்டு திரிஞ்ச இப்போ கம்முனு கிடக்க” என்றார் சிவசாமி.
“தம்பி நீ ஆரு அந்தப் புள்ள ஆரு உங்களுக்குள்ள என்ன சங்கதி இது எதுவுமே எங்களுக்குத் தெரியாது. அந்தப் புள்ளய எங்க சொக்கன் கூட்டியாந்துச்சு.
நாங்க சங்கதி என்னானு கேட்டப்போ நேரம் வரும் போது சொல்றேன்னு சொல்லுச்சு. அதுக்கு மேல என்னானு கேட்டுகிடல ஏன்னா எங்க புள்ள மேல நம்பிக்கை இருக்கு” என்றார் அய்யாவு.
பெரியவர்கள் பேச இளசுகள் அனைத்தும் சொக்கன் பின்னில் வந்து நின்றது. அக்காட்சி அழகிய ஓவியம் தான் போலும் சொக்கன் முன் நிற்க அவனை இன்னுமே அணைத்தவாறு கண்களை இறுக்க மூடி கொண்டு நின்றாள் அமுது.
அவளுக்குப் பின் அரணாக ஐவரும்…. இவர்களுடன் விடயம் அறிந்து மூச்சிரைக்க ஓடி வந்த முத்துவும் சேர்ந்து கொள்ளப் பார்க்கவே அத்தனை அழகாகத் தெரிந்தது உறவுகளின் பிணைப்பு.
இன்னுமே சொக்கனுக்குக் கோபம் அடங்க வில்லை என்பதை அவனது உஷ்ணமான மூச்சு காற்றும் நடுங்கி கொண்டிருந்த உடலும் சொல்ல கணவனது நிலை கண்டு இன்னும் இறுக்கி கொண்டது அரிவை.
தன்னைப் பற்றி நிற்கும் அமுதின் கைகளைப் பற்றி அவள் நோகாத வாறு தன்னைப் பிரித்துத் தள்ளி நிறுத்தியவன் திண்ணையை நோக்கி சென்று அமர,
செவ்வந்தி வேகமாக ஓடி வந்து அவனுக்குத் தண்ணீர் கொடுத்தார். அதை அருந்தியவன் சற்று தளர்வாகச் சாய்ந்து கொண்டான்.
இத்தனை கூத்துக்கும் அசராத ஆள் யார் என்றால் அது நம் பச்சையம்மாள் தான். எத்தனை காடு மேடு தாண்டி வந்திருப்பார்.
அதனாலோ என்னவோ அலட்டி கொள்ளவே இல்லை சந்திரமதியின் கைகளை மற்றும் இறுக்கப் பற்றி கொண்டார் இது பேரனின் ஏற்பாடு போலும்.
ஆக சொக்கன் சங்கதி அறிந்த இரண்டு கருப்பு ஆடுகளும் இங்கே நாடக கூத்து கட்டி நின்றது. இல்லை இல்லை நிற்க வைத்து விட்டான் சொக்கன்.இது ஒரு கிளை கதை போலும்.
“ஆருவே நீ” சாமிகண்ணு சற்று அதட்டல் போல் கேட்க அவரையும் சுற்றி உள்ளவர்களையும் பார்த்த சுரேஷ் சந்திரமதியை அழுத்தமாகப் பார்த்து விட்டு அவளை நோக்கி கையைக் காட்டி அவ புருஷன்.
“என்ன சங்கதி?”
“எனக்கும் உங்களுக்கும் பேச்சே இல்லை என் பொண்டாட்டிய என் கூட அனுப்புங்க அது போதும்”
“சொக்கன் நீ இதுல தலையிடாத ஒதுங்கி போ. நீ அவளுக்கு யாரு?” சுரேஷ் கோபத்தில் கொதிக்க அவனது கேள்விக்குச் சிவ சாமியிடம் இருந்து வில்லாக வந்தது பதில்.
“எம்ம பொண்ணுக்கு அவேன் அண்ணே”
“யாரு உங்க பொண்ணு இவ அப்பா பெயர் கைலாஷ் அவரும் இறந்து போயிட்டார். அம்மா கிடையாது இவ ரிலேடிவ் இலங்கைல இருக்காங்க யார் கூடையும் அவளுக்குப் பழக்கம் இல்லை கதை விடாதீங்க”
“அடிங்க ஆருடா கதை பேசுறது அவ என் பொண்ணுதேன்” என்ற சிவசாமி சாரதாவை பார்த்து “சாரதா” என்று அழைக்க ஒரு வித அதிர்ச்சியில் நின்ற சாரதா கணவன் அழைப்புக்கு திருத் திருவென முழித்து நின்றார்.
“நீ என்னடி முழிச்சிகிட்டு நிக்க அறைக்கு உள்ளர இருக்க மரப்பொட்டிய எடுத்துக்கிட்டு வெரசா வா” என்றதும் வேகமாக ஓடியவர் சிவசாமி சொன்னது போல் சிறிய அளவு வேலைபாடுகள் நிறைந்த மரப்பொட்டியை தூக்கி கொண்டு வந்தார்.
முக்கியமான சில காகிதங்கள் அடங்கிய அப்பெட்டியில் இருந்து அவருக்கு வேண்டிய காகிதத்தை எடுத்து கொண்டவர் மீண்டும் பெட்டியை சாரதாவிடம் கொடுத்து விட்டு சுரேஷை நோக்கி சென்றார்.
“படிக்க தெரியுமா உனக்கு?”
“நானும் உங்க பையன் மாதிரி மிலிட்டரி தான்” ரோஷமாக சுரேஷ் சொல்ல அவனை மேலும் கீழும் பார்த்தவர்.
“எம்ம மவனுக்கு நீ ஈடாவே வாயில அடி எம்ம புள்ள தங்கம்” என்றவர் காகிதத்தை அவனிடம் கொடுக்க அதனை வாங்கிப் படித்தவன் முகத்தில் அத்தனை அதிர்ச்சி.
“என்னவே படிக்கச் தெரியுது போல இப்போ பேசு. என்ன திணவு இருந்தா எம்ம பொண்ண கேட்ப மருவாதையா உசுர லாபமா எண்ணி ஓடிபுடு இல்லனு வையி சம்பவத்துக்கு நான் பொறுப்பில்ல.
“டிவோர்ஸ் பண்ணிட்டு தான் கல்யாணம் பண்ணுனேன் கம்பளைண்ட் கொடுத்தாலும் செல்லாது” என்று சுரேஷ் சொல்லி முடிக்கக் கதறி அழுது கொண்டே மதி உள்ளே சென்று விட்டாள்.
பதுமைக்குத் தனது கோபத்தை கூட காட்ட தெரியவில்லை கண்ணீர் வழி அதனையும் அமைதியாகக் காட்டி நின்றது.
“பொறவு எதுக்கு உமக்கு ஏழு பொஞ்சாதி? போவே”
“அவ கூடப் பேசணும்” அடமாக நின்றான் சுரேஷ்
“முடியாது எம்ம பொண்ணுக்கு புடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்” என்ற சிவசாமியை திடுக்கிட்டு பார்த்தார் சாரதா.
அவருக்கு எதுவும் விளங்க வில்லை என்றாலும் சிவசாமியின் உரிமை பேச்சு அவருக்கு பயத்தை கொடுத்தது. கணவனை வில்லங்கமாக எண்ண தொடங்கி விட்டார்.
சாட்சிகாரனை விடச் சண்டைக்காரனே மேல் என்று எண்ணினான் போலும் சுரேஷ் மீண்டும் சொக்கனிடம் வந்தவன் “சொக்கன் நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுங்க அவ எனக்கு வேணும் அம்மாக்கு அவளை பிடிக்காட்டியும் எனக்கு அவளை ரொம்பப் புடிக்கும்”
“இனி என் தங்கச்சிய பத்தி பேச ஒண்ணுமில்ல உனக்குன்னு குடும்பம் குட்டின்னு ஆகி போச்சு தானே பொறவு எதுக்குவே?” என்றதும் சுரேஷ் அதிர்ந்து பார்க்க
“என்ன பாக்குற உனக்குக் குழந்தை இருக்குறது தெரியும். அவளுக்குத் தான் தெரியாது ஏன்னா நீ இம்புட்டு பண்ணியும் வந்து கூட்டி போவணு சொல்லறவ கிட்ட என்னத்த சொல்ல சொல்லுற.
உம்ம ஆத்தாளுக்குப் பொண்ணு புடிக்கலைனா? எதுகுவே கண்ணாலம் வரைக்கும் போன. முதுகெலும்பு இல்லாத உமக்கெல்லாம் என் தங்கச்சி கேக்குதா ராசனாட்டம் மாப்புள்ள பார்த்து கட்டி கொடுப்பேன்டா திரும்பி பாக்காம போயிடு” என்றதும்,
சுரேஷ் உடனே அந்த இடத்தை விட்டு விரைந்தான் கூடி நின்ற அனைவர் முன்னும் அதனைத் தலை இறக்கமாக இருக்க நடையை எட்டி போட்டான்.
பணம் புலம் பின் புலம் இருந்தும் தப்பை தெளிவாக எடுத்துக்காட்ட சாட்சிகள் சொக்கன் கையில் .அதனால் அடங்கிப் போக வேண்டிய நிலை சுரேஷுக்கு
அவன் சென்றதும் அந்த இடமே அமைதியாக இருக்க அந்த அமைதியை சற்று கலைக்க முயன்றார் சாரதா.
“சொக்கு என்னவே நடக்குது அந்தப் பொண்ணு ஆரு? இந்தப் பையன் ஆரு? இந்த மனுசன் அந்தப் புள்ளைய பொண்ணுன்னு சொல்லுறாரு,ஆனா நீ கூட்டியாந்தப்ப இந்த மனுசன் அந்தக் குதி குத்துச்சாரு சொல்லு சொக்கு எனக்குப் பயந்து வருது”
“உங்களுக்கு ஏன்மா பயந்து வருது அவ என் தங்கச்சி தான்…………..” மேலும் அவனைப் பேச விடாமல். முன் பாதியை முழுங்கி கொண்டு.
“என்னது உம்ம தங்கச்சியா ஆ!… அ” என்று அலறியவர் சிவசாமியிடம் சென்று “அவ உங்க பொண்ணா?” என்று கேட்டு வைக்க. அவரும் தலையை ஆம் என்று உருட்ட பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார் சாரதா.
“ஆத்தி!…இந்தக் கூத்த நான் எங்கன்னு போயி சொல்லுவேன் கிளியாட்டம் நான் இங்கன இருக்க இந்த மனுசன் கண்டம் தாண்டி குரங்கு புடிக்கப் போயிருக்காரே!..” சாரதாவின் தீடீர் செயலில் அனைவரும் முழித்து நின்றனர்
“கிளி, குரங்கு என்னவே இது விலங்குகளுக்கும் பெரியப்புக்கும் என்ன தொடர்பு?” சங்கிலி குடக்கோவன் கதை கடிக்க.
“அவர் எதுக்குவே கண்டம் தாண்டி குரங்கு புடிக்கப் போனாரு.இங்கன இருக்க அழகர் கோவில் கிட்ட போனா நிறையா மேயுமே” யோசனை போல் குடக்கோவன்.
அண்ணன்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த முருகு “இன்னும் கொஞ்ச நாள்தேன் அம்புட்டும் பைத்தியமாகி போயி திரிய போகுதுங்க” முனகி கொண்டான்.
மீண்டும்……….
“ஐயோ!…ஐயோ!…எம்ம வாழ்க்கை நாசமா போச்சே பாவி மனுசா உம்ம பகுமானத்துக்கு ஏழு கேக்குதோ. மூட்டு வலி வந்த கிழவனுக்கு வாழ்வ பார்தீகளா கருப்பா அடுக்குமா” என்று ஒப்பாரி வைக்க.
அதுவரை சாரதா எதற்கு அழுகிறார் என்று எண்ணி கொண்டிருந்த சொக்கன் அவரது பேச்சின் நாடி பிடப் பட திகைத்து நிற்க……….. சிவசாமி அதிர்ந்து நின்றார்.