சிவசாமியின் மகள் தான் மதியென்று எண்ணிய சாராத கதக்களியாடி கொண்டு இருக்க ஓர் இரு தலைகள் வேடிக்கை பார்க்க நின்றது.
“மதனி ஊரே வேடிக்க பாக்குது எதுனாலும் உள்ளர போயி பேசிக்கிடலாம் அல்லாரும் உள்ளர போக” என்று அனைவரையும் அழைத்து வந்து விட்டார் சாமிகண்ணு.
மாசி கருப்பன் குடிலில் உள்ள சிவசாமி வசிக்கும் பகுதி கூடத்தில் தலைக்கு ஓர் தூண் என்ற கணக்கில் சொக்கன், முத்து ,கந்தன், சங்கிலி, குடக்கோவன், முருகு, காத்தமுத்து அமுது, அருளு தூணை துணை கொண்டு நிற்க பெரியவர்கள் என்ற நிலையில் வீட்டு மக்கள் மட்டும் குழுமி இருந்தனர்.
சிவசாமி தலையில் கை வைத்து ஓய்ந்து போயி அமர்ந்து விட்டார் வித விதமாக கெஞ்சி பார்த்தும் சாரதா அவரை பேசவே விடவில்லை.
ஒப்பாரியை தொடர்ந்தார் சாரதா…
“நம்புனேனே அம்புட்டு நம்புனேனே இந்த மனுஷனை என்ன இப்படி புலம்ப விட்டுட்டாரே!..
கிளியாட்டம் நான் இருக்க குரங்கு புடிக்க போனாரே!…
ஒத்தையா போனவரு மூணாகி வந்தாரே!
காளையாட்டம் இரண்டிருக்கா குயிலு வேண்டி நிண்டரே!
ஓ!…. வேறன்று ஒப்பாரி வைக்க சொக்கனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
செவ்வந்தி, “ஏன் ஆனந்தி சிவசாமி மாமாவ இங்கன கண்ட வரைக்கும், மாமா ராவு தாங்கி நான் பார்த்தே இல்லையே அப்புறம் எப்படி குயிலு… ச்ச மதி புள்ள வரும்” செவ்வந்தியின் கேள்விக்கு ‘ஏன் இப்படி?’ என்பது போல் பார்த்த ஆனந்தி.
“ஐயோ!…. அக்கா சாரதாக்கா தேன் புரியாம புலம்புறாங்கன்னா நீங்களுமா. அதேன் அந்த பையன் சொன்னானே மதி புள்ள அப்பா பெரு கைலாசுன்னு கேட்டுக்கிடலையா?”
“அட ஆமா…. பொறவு ஏன் அக்கா புலம்புது” செவ்வந்தி யோசனை போல்.
“மாமாவ பேச வுட்டா தேன் செய்தி புரியும். அதுக்குதேன் அக்கா காது கொடுக்க மாட்டேங்குதே” கவலையாக ஆனந்தி சொல்ல.
“நல்ல வேலை எங்க பெரியப்பு இதுங்க இரண்டையும் ஆணா பெத்து புட்டாரு பொண்ணா இருந்துச்சு. மூணு குடும்பம் முந்நூறா ஆகி போயி இருக்கும் இதுக்கே கருப்பனுக்கு கெடா வெட்டணும்” வழமை போல் முனகினான் முருகு.
மாமியாரின் பேச்சில் சற்று அமைதி பெற அழுது அழுது தேம்பி கொண்டு இருந்த சாரதா சற்று அடங்க.அது வரை சிரித்துக் கொண்டிருந்த சொக்கன் அவரிடம் நெருங்கி அவரை இறுக்கப் பற்றிக் கொண்டு.
“அம்மா உங்க அப்பாரு போல அம்புட்டு பெரும் இளிச்ச வாயா என்ன?” என்றதும் அவர் புரியாமல் பார்க்க புரிந்த சிவசாமியோ பல்லை கடித்தார். சொக்கனது பேச்சில் பக்கெனச் சிரித்து வைத்தார் சாமிகண்ணு
“ஆனாலும்வே உமக்கு ரொம்பத்தேன் குசும்பு”, அய்யாவு.
“லந்த பார்த்தியா?” அமுது.
மகனது பேச்சு இப்போது லேசாகப் பிடிபடச் சாரதாவிற்கும் சிறு புன்னகை.
“செத்த நேரத்துக்குள்ள சந்தி சிரிக்க வச்சுப்புட்டா சண்டாளி மவேன் பேசுனா மவுந்து போறது. புருஷனை போச கெட்ட தனமா எண்ணி வைக்கிறது” மனைவியை கடிந்து கொண்டாலும் அவரின் சிரிப்பில் அத்தனை நேரமிருந்த எரிச்சல் மறைய சற்று தளர்வாக அமிர்ந்திருந்தார் சிவசாமி.
தாயை ஒரு கையில் அனைத்து கொண்டவன் “நான் பேசிப்புடுறேன் அதுக்கு முன்னாடி மதி புள்ள கிட்ட பேசணும் அது பழைய சங்கதி நமக்கு வேணாம்…….”
“அது எப்படி சொக்கு அந்தப் புள்ள நம்ம புள்ளன்னு ஆனா பொறவு அதைப் பத்தி தெரிஞ்சிக்கிட வேணாமா?” சாமிகண்ணு.
“சரிதேன் சித்தப்பு ஆனா பொம்பள புள்ள சங்கதி. அது மனசு வைக்காம நான் பேச முடியாதுல எனக்கு அதுல சங்கடம் இருக்கு”
“சரித்தேன் கூப்புடு அதுகிட்டயே கேட்டு புடுவோம்” என்றதும் “மதி” என்று ஓங்கி அழைத்தான் சொக்கன்.
சொக்கன் குரலுக்கு உடனே செவி சாய்ந்தாள் மதி கூடத்தில் அனைவரும் இருக்க ஒருவித சங்கடம் போலும் பெண்ணுக்கு சற்று தயங்கியே வந்து நின்றது.
இங்கு வந்து மாதங்கள் பிடித்தாலும் சொக்கன், சொக்கன் குடும்பத்தைத் தாண்டி யாரையும் தெரியாது பெண்ணுக்கு.
கூடத்தில் இருந்த கூட்டத்தில் சிலரை அவள் பார்த்தேயில்லை வேறு. அவளது தயக்கத்தைச் சரியாகக் கண்டு கொண்ட சிவசாமி.
“மதி பாப்பா! தனது தம்பிகளை சுட்டிக்காட்டி இது உம்ம சின்னப்பன், சின்னாயி, அங்கன நிக்கிற அம்புட்டும் பையலுகளும் உம்ம அண்ணன் மாறு.
அருளு அமுதை சுட்டி காட்டி இதுங்க உம்ம மதினிங்க. நான் உம்ம அப்பன் சாரதாவை சுட்டிக்காட்டி அது உம்ம ஆத்தா.
பயந்துக்காம இரு வே உம்ம வூடு” அவரது உரிமையான பேச்சில் அனைவரும் ஆச்சிரயமாகப் பார்க்க. சாராதாவோ இந்த மனுசனுக்கு அம்புட்டு சங்கதியும் தெரியும் போலவே இருக்கட்டும் பார்த்துக்கிடுறேன் என்று கருவி கொண்டார்.
மதியை கை நீட்டி அழைத்த சொக்கன் தனது அருகில் அமர்த்திக் கொண்டு “உம்ம பத்தின சங்கதிய நம்ம அப்பன் ஆத்தாகிட்ட சொல்லவா”
பசப்பு வார்த்தைகள் அல்லாது உள்ளம் கொண்டு உணர்ந்து உறவை சொன்ன சொக்கனை, நெகிழ்ச்சியாக பார்த்து வைத்த பெண்ணுக்குக் கண்ணில் நீர் நிறையச் சரியென்றது சொக்கனது இந்த மரிமாணத்தில் சொக்கி தான் போனாள் அமுது.
எத்தனை மென்மை…. அவனது தோற்றத்துக்கும் குணத்துக்கும் இந்த மென்மையை எதிர்பார்க்க வில்லைப் போலும் .இன்னும் என்னென்ன சங்கதியை மறைத்துக் கொண்டானாம் இந்தக் கள்வன் ஒருவித போதையில் அமுது.
அவளது நிலையைக் கண்ட கந்தன் “பார்த்து அமுது வூடே ஒரே தண்ணியா கிடக்கு” என்றதும் மயக்கம் மாயமாகி போக அவனை முறைத்த அமுது,
பங்காளிகள் சிரிப்புச் சத்தத்தில் எரிச்சலாகி “எம்புட்டு பெரிய சங்கதி பேசுது என்னவே சிரிப்பு கொட்டி பையலுகளா. எரும கெடா வயசு ஆகுது இன்னும் விளையாட்டு “அதட்டலாகச் சாமிகண்ணு சொல்ல அனைவரும் கப் சிப்.
மனம் சற்று இலகுவாகத் தான் மதியுடன் கடந்து வந்த பாதையைச் சற்று விளக்கமாகச் சொல்ல தொடங்கினான் சொக்கன்.
“சந்திரமதி அப்பாரு பெரு கைலாஷ். அம்மா பெரு சங்கரி அவுக அப்பாரு காலத்துல லங்கை கலவரத்துல தப்பிச்சு இந்திய வந்து உழைச்சுப் பொழப்பப் பார்த்துக்கிட்டார்.
கொஞ்சம் சாம்பாருச்சு காசு சேர்த்து சாமான் கடை போட்டு இருக்காரு.நல்ல உழைப்பு அவர்கிட்ட வேலை பார்த்தவரோடு பொண்ணுத்தேன் இவுக அம்மா சங்கரி.
நல்ல லாபம் வர தொழில் பணம் பெருகி கிடக்க இந்த மதி புள்ள ஒத்தையா போச்சு பூர்வீகத்தைச் சுருக்கமாகச் சொல்லி கொண்டிருக்க சொக்கனை கலைத்தது சங்கிலியின் குரல்.
“ஏன் அண்ணே ஒத்த புள்ளையா போச்சு? அவனது கேள்வியில் அனைவரும் அவனை ஒருமாதிரி பார்த்து வைக்க முருகு தலையில் அடித்துக் கொண்டான்.
கடைக்குட்டி என்றாலும் கருத்துள்ள குட்டி முருகு இடம் பொருள் பார்த்து பேசி காரியம் சாதிக்கும் தன்மை கொண்டவன் என்பது கூடுதல் தகவல்.
“அதை அவுக அப்பார் கிட்டதேன் கேக்கணும் செத்த பொறு நான் வந்து உம்ம அவரு கிட்ட அனுப்பி வைக்கேன் நீ என்ன செய்தினு கேட்டு கிட்டு வா” என்க நெஞ்சை பிடித்துப் பாவமாகத் தலையை மறுப்பாக ஆட்டி வைத்தான் சங்கிலி.