சொக்கன் மதியின் ஆதி மூலத்தைச் சொல்ல அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்த சிவசாமி. அவள் தன்னுடன் பணிபுரியும் சக தோழனுடைய மனைவி என்றதும் சற்று அதிர்ந்து தான் போனார்.
சுரேஷும் இதனைச் சொன்னான் தான், ஆனால் அப்பொழுது இருந்த களேபரத்தில் அவர்கள் கண்டு கொள்ளவில்லைப் போலும்.
“என்னவே சொல்லுத”
“ஆமாப்பா அவனும் நானும் பக்கத்து வீடு ஒரே பதவித்தேன் எப்படி சொல்ல ஆஹான் அபிசரலயே கொஞ்சம் பெரிய பதவி நான் சீனியர் அவன் சூனியர் அதேன் வித்தியாசம்”
“அப்போ உங்களுக்கு அம்புட்டு சங்கதியும் தெரியும் தெரிஞ்சுக்கிட்டே எம்ம படுத்தி வச்சு இருக்கீக. இதுல நான் எம்ம அப்பாரு வூட்டுக்கு வேற போகணுமோ ஐயாவுக்கு. அப்பா சாமி என்னா நடிப்பு எம் சி யாரு (எம் ஜி ஆர் ) தோத்தாறு” சாராத ஏக கடுப்பில் குதிக்க.
“வாளு போயி கத்தி வந்தது டும்!…. டும்!….” சங்கிலி கேலி போல் சொல்லி வைக்கப் பாய்ந்து வந்து அவனது வாயை முடிய முருகு.
“செத்த சும்மான்னு இருண்ணே முத்தண்ணே முறைக்குது” என்றதும் பதறிய சங்கிலி முத்துவை பார்க்க அவன் நாக்கை மடக்கி பத்திரம் காட்ட.
“ஆத்தே!….” சங்கிலி அமைதியாக பதுங்கி விட்டான்.
“இவ ஆருடி இவ சின்ன இடம் அம்புட்டாலும் நுழைஞ்சு புடுற உம்ம மவன் மேலோட்டமா இதைச் செய்யப் போறேன்னு தேன் சொல்லுவான். செய்யவானு கேட்டுக்கிட மாட்டான். அவனுக்கு வேலை செய்யத்தேன் நான்னு.
மதி புள்ளய வுட்டுக்குள்ள வச்சுக்கச் சொன்னான். நான் எந்த உறவுல அந்தப் புள்ளைய கூட்டியார சொல்லு. ஆரு ஊருக்கும் உறவுக்கும் விளக்கம் வைக்க?
சரி நீ அந்தப் புள்ளைய கட்டிகிடுன்னு சொன்னேன் அதுக்கும் மறுத்துப்புட்டான் அவனே தத்தெடுத்துக்கலாம் ஓசனை சொல்ல எனக்கும் அதுதேன் சரினு பட்டுச்சு” சிவசாமி பேசி கொண்டே போக முத்து இடைபுகுந்து அது ஏன்னு சொல்லுக என்றதும்.
“அண்ணனும் தம்பியும் காரியத்துல கண்ணா நில்லுங்க டா” என்று எரிச்சலோடு சொன்னவர் அதே எரிச்சலோடு அமுதை பார்த்துக் கொண்டே “கட்டுனா முருகன் மவ அமுதை தேன் கட்டுவேன்னு பிடியா நின்னான்” என்றவர் முத்துவை பார்த்து போதுமா என்க வாயெல்லாம் பல் முத்துவிற்கு.
இதனை கேட்ட அமுது தான் இவ்வுலகில் இல்லை இது தனிக் கதை போலும்.
“மதினி செத்த இருங்க மதி புள்ள சங்கதிய கேட்டு கிடுவோம் பொறவு அடுத்தது பார்ப்போம்” பொறுமை பறக்க சாமிகண்ணு சொல்லவும் கணவனை முறைத்துக் கொண்டே அமர்ந்து கொண்டார் சாரதா.
“நீ சொல்லு சொக்கு”, அய்யாவு.
“அதேன் சித்தப்பு பார்த்து கட்டிவச்சாங்க இவன் கண்ணாலம் பண்ணி மாசத்துல அந்த புள்ள கூட அங்கன வந்து புட்டான் அதுவே அவன் அம்மாளுக்கு வெசனம்”
“இது நல்ல இருக்கே பொண்ணைக் கட்டி அது அங்கனையும் அவன் இகனையும் இருக்க எதுக்குக் கண்ணாலம்” செவ்வந்தி.
“அதை ஓசனை பண்ணித் தேன் இந்த முடிவு சின்னம்மா சந்தோசமா இருந்தாய்ங்கனு நான் எண்ணி இருந்தேன்…
நான் தங்கி இருந்த இடத்தாப்புல மூணு வூடு தேன் நான், சுரேஷு, பஞ்சாபி காரன் ஒருத்தேன் அவனும் அவன் பொஞ்சாதியும் நல்ல பழக்கம். இந்தப் புள்ளையும் சின்னு அண்ணான்னு ரொம்பப் பழகி புடுச்சு.
ஒரு நாள் வவுரு வலின்னு ஒரே அழுக இவன் டெல்லி போக வேண்டிய நேரம். அப்போ என்னையும் பக்கத்து வூட்டுல இருக்கப் பஞ்சாபிகாரன் பொஞ்சாதியையும் பார்த்துக்கிட சொல்லிப்புட்டு அவன் பாட்டுக்கு கிளம்பி போயிட்டான்.
அந்த புள்ளைக்குப் பால் குடிக்கிற புள்ள வேற அந்த புள்ளையால எம்புட்டு நேரம் மதிய பார்க்க முடியும் எனக்குச் சோலி முடிய ராவு ஆகி போகும்.
அந்தப் புள்ள வூட்டுக்கு போன நேரம் மதிக்கு ரொம்ப முடியாம போக மதி புள்ள மூணு மணி நேரம் வலியோட தவிச்சு கிடந்து இருக்கு.
டூட்டிக்கு போயிட்டு வாரேன் அப்படி ஒரு சத்தம் உள்ளர போயி பார்த்தா”என்றவன் பேச்சை நிறுத்தி கொண்டு கண்களை இறுக்க மூடிக்கொள்ள.
அன்றைய நாளின் தாக்கத்தில் மதி ஓ! வென்று கதறி விட்டாள். அரிவை பெண்ணின் வலியை உணர்ந்த பேரிளம் பெண்கள் பதறி போயினர்.
அதிலும் சாரதா “ஐயோ! பாப்பா அழுகாத சாமி” என்று மதியை கட்டி கொள்ளச் செவ்வந்தியும் ஆனந்தியும் மதிக்கு இருபுறம் வந்து பிடித்துக் கொண்டனர்,
இன்னும் சொக்கனால் அந்தக் காட்சியை மறக்க முடியவில்லை போலும் கண்களை இறுக்க மூடி கொண்டே தொடர்ந்தான் “கூடம் முழுசும் ரத்தம் நடுவாப்புல இந்தப் புள்ள தண்ணில இருந்து வெளிய வந்த மீனாட்டம் துடிச்சுகிட்டு கிடக்கு.
மூளைக்கு ஒரு செய்தியும் எட்டல எனக்கு. அடுத்து என்ன செய்யனு தவுச்சுகிட்டு நின்னுபுட்டேன் நேரம் கூடக் கூட இந்தப் புள்ள கத்துன கத்து தாங்க முடியல பொறவுத்தேன் பஞ்சாபி புள்ள வந்துச்சு.
அதுவும் நானும் சேர்ந்து மதிய தூக்கி அது அறையில வுட்டுப்புட்டு நான் போயி வண்டிய எடுத்து வந்தேன்.
அதுக்குள்ள அந்த புள்ள மதிக்கு உடுப்பு மாத்திவுட்டு கைபுள்ளய இடுப்புல இடிக்கிட்டு லபோ திபோன்னு ஆசுபத்திரிக்கு ஓடியாந்தோம்.மருத்துவச்சி மதிய பார்த்து புட்டு எம்ம அந்தப் பேச்சு”
“உம்ம ஏன் வஞ்சுச்சு” சாராத கேட்க
“மதிக்கு புள்ள கலைஞ்சு போச்சும்மா அதுவும் ஊசில உருவாகுன கரு” சொக்கன் சொல்ல இது அவர்களுக்குப் புதுச் செய்தி (கதை 96’ல் நடக்கிறது)
“என்னவே சொல்லுத இது என்ன கூத்து”, அய்யாவு.
“ஆமா சித்தப்பு சுரேஷு அம்மா இன்னும் குழந்தை இல்லனு எதோ சொல்லி இருக்கும் போல அதேன் இவன் குஜராத்துக்கு மதி புள்ளய கூட்டிட்டு வந்து அவுக அப்பன்கிட்டையே காசு வாங்கி வைத்தியம் பார்த்து இருக்கான்” சொக்கன் இறுகிய குரலில் அவனது கோபத்தின் எல்லை புரிந்தது.
“ஆத்தே காலம் இன்னும் என்னத்த செய்யப் போவுதோ தெரியல போ ஊசில புள்ளையாமே” பச்சையம்மாள் கலங்கி விட்டார் அவருக்கு இது புது செய்தி அல்லவா.
“அப்பத்தா நீ இன்னும் கேளு பொறவு இந்தக் காலம் எங்கன போயி நிக்குமுண்டு நீயே கணிச்சுப் புடலாம்” சொக்கன் பேச்சுக்கு சற்று நடுங்கிய பச்சையம்மாள்
“இன்னும் என்ன சாமி….”
“பதினாறு வயசுல கண்ணாலம் பண்ணி பதினெட்டு வயசுக்குள்ள இருபத்தி எட்டு முறை புள்ளைக்கு ஊசி போட்டு இருக்கான் அந்தச் சண்டாள பாவி” சொக்கன் கர்ஜிக்க அதிர்ந்தனர் இள வட்டங்கள்.
“ஆத்தி அவன் நல்ல இருக்க என்ன சாமி சொல்லுத” இது சிவசாமிக்கே புதிய செய்தி போலும் பதறி விட்டார்.
“ஆமாப்பா கொஞ்சம் காலம் பொறுத்து கிடந்தா இயற்கையாவே புள்ள பொறந்து இருக்கும். அவன் அவுக ஆத்தா பேச்ச கேட்டுகிட்டு வெட்டி விடவும் காசு கறக்க வேண்டி அந்தப் புள்ள உடம்பப் பாடா படுத்தி வச்சு இருக்கான்”
“ஏன் சொக்கு மதி புள்ள அப்பாருக்கு தேன் செல்வாக்கு இருக்குல்ல அவனைச் சும்மாவா வுட்டாரு” சாமிகண்ணு.
“இல்ல சித்தப்பு இவன் நேக்கா காரியம் பண்ணி இருக்கான் குஜராத் வந்த உடனே அவீங்க கிட்ட பேசுறதை நிறுத்தி புட்டான். இந்தப் புள்ள எழுதுன கடுதாசி அம்புட்டையும் வாங்கி அனுப்பமா எரிச்சு புட்டான்.
“அட சண்டாள பாவி” செவ்வந்தி.
“அதுமட்டும் இல்ல சின்னம்மா மதி பெத்தவங்க மதிய பார்க்க சுரேஷ் வூட்டுக்கு நடையா நடந்து இருக்காக. சுரேஷு அம்மா ரொம்ப மெத்தனமா பேசி அனுப்பி இருக்கு. இந்தக் கதை ஒரு வருசமா தொடரவும் சந்தேகம் வந்து மதி புள்ளைக்கு எதுவும் ஆகி போச்சு போலன்னு நோவு கண்டு மதி அம்மா உசுரையே விட்டுப்புடுச்சு.
“அய்யயோ இது என்ன கொடுமை”, ஆனந்தி.
“அம்மா செத்தது தெரியாம அவன் ஏமாத்துனது தெரியாம இவன் கூடவும் வவுத்துல உள்ள புள்ள கூடவும் இந்தப் புள்ள போராடி கிடந்து இருக்கு.
மதி புள்ள தேறி வர நாலு மாசம் புடுச்சுது நானும் அந்தப் பஞ்சாபி புள்ளையும் தேன் மாத்தி மாத்தி பார்த்துக்கிடுவோம்”
“சும்மா சொல்ல கூடாது பஞ்சாபி காரன்….. சாதிக் சிங்கு அந்தப் பையன் பெரு. அவனும் பட்டாளத்தான் தான் அது பொஞ்சாதி ராபியா நல்ல புள்ள.
அது இல்லனா என்னால மதிய முழுசா பார்த்துக்கிட முடியாம போயிருக்கும் என்ன இருந்தாலும் பொம்பளைங்களுக்குச் சங்கடம் இருக்கும் தானே….” என்றதும் மதியின் முகம் கசங்கி விட்டது. அந்த இடத்தில சொக்கன் இல்லையென்றால் தனது நிலை?…
“இத்தனையும் கடந்து இந்தப் புள்ளய தேதி கூட்டியாந்தா எங்க கூட்டாளி ஒருத்தரு சுரேஷை பத்தி செய்தி கொண்டு வராரு. அவன் திண்டுக்கல இன்னொரு புள்ள கூடக் குடித்தனம் இருக்கான்னு.
டெல்லிக்கு போனவன் அங்கன எங்க போனான் நான் விசாரிக்கப் போயி வந்த தகவல் தேன் மதி புள்ள டிவோர்ஸ் அதாவது மதிக்கே தெரியாம அந்தப் புள்ள கிட்ட கையெழுத்து வாங்கி விடுதலை வாங்கிப் புட்டான்” சொக்கன் சொல்ல அனைவரையும் அதிர்ந்து விட்டனர் யோசனையான கடை குட்டி மட்டும்.
“அண்ணே இரண்டு பேரும் ஒத்து போனாத்தானே விடுதலை. இரண்டு தரப்பு ஆளுங்களும் கூடித்தேன் முடிவு செய்வாக. அது எப்படி இந்தப் புள்ளைக்குத் தெரியாம பண்ண முடியும்” என்றதும் தம்பியை மனதுக்குள் மெச்சிய சொக்கன் வழமை போல் அவனைச் சீண்டும் பொருட்டு
“பரவ இல்லையே பொம்பள கடை பூ மார்க்கு பீடிய விட வெளி செய்தி பொது அறிவெல்லாம் என் தம்பிக்கு தெரிஞ்சு இருக்கே” என்றதும் பதறிய முருகு தனது தந்தையைப் பார்க்க.
அவரோ முருகுவை முறைத்துக் கொண்டே “அது என்னவே பூ மார்க் பீடி”
“அது எங்களுக்குள்ள சித்தப்பு” என்று சமாளித்தான் முத்து.
சங்கிலி “என்ன சொல்லிப்புட்டு இப்ப நீ ஏன்வே பொங்குன பாரு பங்காளிங்க இரண்டு பேரும் கிடா வெட்ட போராய்ங்க”
“இவனுக ஒருத்தவய்ங்க ஊடலா ஊடலா பேசிகிட்டு. ஏலேய்! முருகு செத்த இருவே உம்ம சந்தேகத்தை உடப்புல போடு” சாமிகண்ணு சற்று கடுப்பாகச் சொல்ல அவரைப் போலவே குடக்கோவன்
“ஆமா உடப்புல போடு” என்றதும் அய்யாவு அவனது தோளில் பலமாக அடித்து வைத்தார்.
“ஆஹா!..” வலியில் முனகியவனை
“இனி ஆறாவது பேசுனா சூடுத்தேன்” என்று முறைத்த அய்யாவு சொக்கனை பார்த்து “நீ சொல்லு சாமி” என்க
தம்பிகளது சேட்டையில் மனம் சற்றுத் தெளிவு கொள்ள வலியும் குறைந்தது போலும் சன்ன சிரிப்புடன் தொடர்ந்தான் சொக்கன்.
“முருகு சொன்னது சரித்தேன் ஆளு இல்லாம விடுதலை வாங்க முடியாது, ஆனா அதுக்கு அவன் என்ன செஞ்சான் தெரியுமா?
மதி புள்ளைக்கு மலட்டுத் தன்மை இருக்குனு மருத்துவக் கடுதாசி வாங்கி அதுனால ஓடி போச்சுன்னு சொல்லி இருக்கான்.
இங்கன இந்தப் புள்ள நோவுல கிடக்க அங்க இவ அப்பா அலை மோதி போயிட்டாரு பொஞ்சாதி செத்து போச்சு, தொழில் பார்க்க ஆள் இல்லமா, பெத்த பொண்ணு நிலை என்னானு தெரியாம தவிச்சுப் பக்க வாதம் வந்து படுத்தாச்சு
எதோ காசு இருந்ததுனால அவர் கிட்ட வேலை செஞ்ச விசுவாசி போல சூப்பர் வைசர் நிலையைச் சமாளிச்சு இருக்கார்”
“அட கொடுமையே ஒரு வம்சமே போச்சே” பச்சையம்மாள்.
“ஆமா அப்பத்தா இது இன்னும் நிறைய உள் பூசல் இருக்கு. இரண்டாவது கண்ணாலம் பண்ண புள்ளைய அவன் ஆருக்குமே காட்டாம ஒரு வருஷம் வச்சுக் குடும்பம் பண்ணி இருக்கான்”
“ரொம்பத்தேன் சாமர்த்தியம் அவன் குலம் விளங்குமா? நொடித்துக் கொண்டார் சாரதா.
“ஆமா இது எதுவுமே மதி புள்ளைக்குத் தெரியாதா?” சிவசாமி கேட்க இல்லை என்று தலை ஆட்டிய சொக்கன்.
“அதுக்கு உலகமே தெரியாதுப்பா. அது அப்பா அம்மானு கைக்குள்ள வளர்ந்த புள்ள. படிக்கும் அம்புட்டுதேன் அதுக்கு மெல்ல மெல்ல சொல்லி புரிய வச்சுப்புட்டு
நான் வந்த நேரம் தேன் எனக்கும் அமுதுகும் பேசி முடிசீக” என்றவன் பார்வை அமுதை தீண்ட
இப்பொழுது தான் அவனது செயலுக்கான நூல் முனை கிடைத்தது பெண்ணுக்குப் பாவமாக அவனைப் பார்த்து வைக்க அவளைப் பார்த்துக் கொண்டே பேச்சை தொடங்கினான்.
“ஆறல தேன் கட்டுன புருஷன் பண்ணதை தாங்கிக்க முடியும் சொல்லுக? இந்தப் புள்ள நான் இல்லாத நேரம் விஷத்தை குடிச்சு புடுச்சு”
“ஐயோ!…” இளசுகள் அனைத்தும் ஒன்றாக அதிர பெரியவர்கள் சற்று நிதானித்தனர்.
“அதேன் சொல்லிக்காம ஓடிட்டேன்” என்றவன் அமுதை பார்த்து “என்னடி விளக்கம் போதுமா?” என்க அத்தனை பெரியவர்கள் முன்னில் அவன் அடாவடியாகக் கேட்க,
என்ன சொல்லும் அரிவை பெண் அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு தலையைக் குனிந்து கொண்டது.
நான் திரும்ப வர்ரதுக்குள்ள பவுனை பேசி புட்டீங்க. என்ன செய்யனு ஓசனை பண்ணுனேன் அப்போதேன் காத்தமுத்துப் பங்காளி சிக்கக் கூடாத இடத்துல சிக்கி எனக்கு தோது பண்ணி புட்டாரு” என்றதும்
பெரியவர்கள் புரியாமல் முழிக்க அவர்களைப் பார்த்து பதறிய காத்துமுத்து “அண்ணே” என்றதும்.
இல்ல காத்தா அமுது வேண்டி நான் நிக்க எனக்கு எதுக்குப் பவுனு அதேன் காத்துமுத்து கிட்ட கொடுத்துப் புட்டேன். என்றவன் அமுதை சீண்ட எண்ணி
“கொழுப்ப பார்த்தியா இந்த மனுசனுக்கு உடம்பு முழுக்க நக்கலும் நய்யாண்டியும் தேன்” கந்தன்
“பெரியாத்தா பாலுக்குப் பதிலா இதைத்தேன் ஊட்டி வளர்ந்துச்சோ என்னமோ” சங்கிலி
“சரி சொக்கு இப்போ விளங்குது உம்ம சங்கதி இனி இந்தப் புள்ள?….” மதியை சுட்டி காட்டி கேட்க
“நம்ம வூட்டு புள்ள இன்னும் அது அப்பாரு போயி முழுசா 30 நாள் ஆகல. ஆகட்டும் பொறவு பார்ப்போம்”
“அப்போ போன மாசம் இந்தப் புள்ளைய அதுக்குத்தேன் கூட்டிகிட்டு போனியா”, ஆனந்தி.
“ஏன்யா சொல்லி இருந்தா நாங்களும்………” செவ்வந்தி முடிப்பதற்குள்
“சின்னம்மா அப்போ பேசுறதுக்கு நேரமே இல்லை. காலமும் நேரமும் கூடி வரல முருகன் மாமா மாப்புல தேடவும் தேன் நான் பேசுனேன். இல்லனா மதிக்கு ஒரு வழி பண்ணிப்புட்டு தேன் கண்ணாலம் பண்ணிக்க எண்ணி இருந்தேன்”
“அதுவும் சரித்தேன் ஒரு குடும்பத்தையே இல்லமா பண்ணிருக்கான் அதுவும் நல்ல பதவில இருக்கறவன் சும்மாவா விடுறது” சாமிக்கண்ணு
“இல்ல சித்தப்பு அவனைச் சும்மா விடக் கூடாது அதுக்குன்னு அவனை என்ன செய்றது சொல்லுக ஆதாரமே இல்லாம….. தெளிவா பேசி முடிச்ச கண்ணாலம் மதிக்கு பார்த்த அம்புட்டு மருத்துவச் சீட்டும் அவன் கிட்ட இருக்கு” முத்து சொல்ல.
“இப்போ என்னவே பண்ணுறது ஆனா சும்மா விடக் கூடாது அவனை. பொண்ணு புள்ள பொறக்க வேண்டி குலசாமிக்கு நேந்தி வைக்கிற கூட்டம்வே. உங்க ஆத்தா பொண்ணு இல்லனு புலம்பதா நாள் இல்ல” சிவசாமி தனது ஆதங்கத்தைக் கொட்ட.
“கள்ளி பால் கொடுத்து கொன்ன காலம் போயி பொண்ணு புள்ளைங்க தளிச்சு வளர்ந்து வருதுன்னு பார்த்தா இவனுக பண்ணுற கூத்துல அதுங்க பொறக்காமவே போகட்டும் போலையே” பச்சையம்மாள் பேச்சில் பெண்களுக்கும் முகம் கசங்கி போனது.
“நாங்களும் நிறையக் கண்டும் கேட்டும் இருக்கோம் மாமியார் கொடுமை ,புருஷன் சரியில்லை, சம்பாத்தியம் இல்லை, பொண்ணு மலடி, பொண்ணுக்கு சீர் செய்யல,
பங்காளி துரோகம், மாமன் மச்சினன் துரோகம் இப்படி நிறையா, ஆனா இது நம்ப வச்சு முதுகுல குத்துன கதையா ஒரு திணுசால இருக்கு” செவ்வந்தி.
“பெரியவுக பார்த்து பண்ண கண்ணாலமே இப்படின்னா என்னத்த சொல்ல” அய்யாவு.
“ஒரு பொண்ணு இல்லையேன்னு நாங்க வருந்தாத நாளே இல்லை தெரியுமா, ஆனா இப்போ…..” பேசி கொண்டே இருந்தவர் கணவனது கண் ஜாடையில் பேச்சை நிறுத்திய சாராத மதியை பார்க்க அவளும் அவரைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளது பார்வையில் என்ன கண்டரோ “இந்தாரு பாப்பா நீ என் புள்ள சாமி” சொல்லி கொண்டே பாய்ந்து வந்து மதியை கட்டி கொள்ள,
சில பல வலிகள் நிறைந்த கடந்த காலம் அங்கணம் துண்டிக்கப் பட்டு புதிய எதிர்காலத்தின் முதல் அத்தியாயம் அன்பை கொண்டு எழுத தொடங்கி விட்டது.
இக்கணம் சந்திரமதி சிவசாமி புது ஜனனம் கொண்டாள் எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கோ திருமணம் செய்து, எங்கோ அந்த உறவு முடிவு கொண்டு,
தமிழ் மரபு கொண்ட மண் மனம் கமழ வாழும் இக்குடும்பத்தில் அவளை இணைத்தது வீதியின் புதிய கதையின் முன்னோட்டம் போலும்.