பவுனு “அதுக்கு குடும்ப பாட்டு பாடி சேர்த்துப்பாய்ங்க”
“மதனி பதவி வந்தாலும் வந்துச்சு உங்களுக்கு நக்கல் சாஸ்தி ஆகி போச்சு…” முனகிய சங்கிலி இவர்களை கவனியாது முருகிடம்
“இரண்டு நாளுக்கு முன்ன ஆத்துப் பக்கம் ஒரே அக்கப்போறமுடா முருகு” என்றதும் தான் தாமதம் வண்டியில் எடுத்து வைக்க வேண்டி கையில் கொண்டு வந்த அண்டாவை அவன் காலில் நச்சென்று போட்டாள் அமுது.
“அடி சண்டாளி மதினி” சங்கிலி அலற
“இது தேவையா அது பட்டாளத்தான் பொண்டாட்டி சரியான ராவடி சோடி மரியாதையா வாய முடிக்க” முருகு எச்சிரிக்கக் கால்லை நொண்டி கொண்டே நடந்தவனைக் பார்த்து கந்தனும் குடக்கோவனும் சிரித்து கொண்டனர்.
“அம்மாடி அம்புட்டையும் எடுத்து வச்சு புட்டிகளா? அங்கன போயி இதைக் காணல, அதைக் காணலனு எதுவும் சொல்லிப்புடாதீக, அங்கன கடை வசதி இல்ல சொல்லிப்புட்டேன்” சிவசாமி சொல்ல.
“எல்லாமே எடுத்து வச்சாச்சு மாமா” குரல் கொடுத்தார் செவ்வந்தி.
“எல்லாரும் வந்தாச்சு சொக்கனும் முத்துவையும் தவிர” என்ற சாமிகண்ணு கந்தனை பார்த்து
“எங்கவே அண்ணைங்க”
“தெரியலப்பா”
“தெரியலையா?” இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே அண்ணன் தம்பி இருவரும் அட்டகாசமாக வெளியில் வந்தனர்.அவர்களும் ஒரே உடை என்றாலும் பெரிய கரை வைத்த வேட்டியை கட்டி மீசை முறுக்கி கொண்டு வர.
அருளு முத்துவை வெறிக்கப் பார்க்க. அமுது சொக்கன் பக்கம் திரும்பவே இல்லை. அன்று அவன் பண்ணிய முரட்டுத் தனத்தில் பெண் சற்று அலண்டு போகக் கோபமாக இருந்தாள். அவனும் வழமை போல் கண்டு கொள்ள வில்லைப் பேசி சமாதானம் செய்வதெல்லாம் அவனுக்கு கடும் உழைப்பு போலும்.
“வெரசா வாங்கப்பா நேரத்துக்குப் போயி சேர வேணாமா?” என்று காத்தான் தந்தை குரல் கொடுக்க.
“இதோ” என்று விரைந்து வண்டியில் ஏறி அவரவர் துணையுடன் அமர்ந்து கொண்டனர்.வண்டி மெதுவாகத் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
குளிர் காற்று மெல்ல வீச சொக்கன் அமுதுடன் நெருங்கி அமர்ந்தவன் வாகாக அவள் தோளை சுற்றி கையைப் போட்டுக் கொண்டு கெத்தாக அமர,
திரும்பி பார்த்து முறைத்தவள் இருக்கும் சூழ்நிலை கருதி பல்லை கடித்துக் கொண்டு மீண்டும் திரும்பி அமர்ந்து கொண்டாள்.
அவர்களுக்கு எதிர்த்த சீட்டில் அமர்ந்திருந்த கந்தன் இக்காட்சியை பார்த்துவிட்டு சங்கலியை திரும்பி பார்த்து
“உனக்கு உட்கார இடமே இல்லையா? இங்னத்தேன் சீட்டு புடிப்பியா?” ஏக கடுப்பில் கேட்க அவனை விடக் கடுப்பாகப் பதில் சொன்னான் சங்கிலி.
“நான் இரண்டு சீட்டு தள்ளி தேன் உட்காந்தேன் அங்கன காத்து அண்ணே தொல்லை தாங்கலை அதேன் இங்கன வந்தேன்”
“ஹ்க்கும்” என்ற கந்தன் தனக்கு முன்னாடி அமர்ந்திருந்த குடகோவனைச் சுரண்ட அவனோ பின்னால் திரும்பாமலே
“இங்கனையும் அதே கதைத்தேன், உனக்கு வேற வழியே இல்லை கண்ணையும் காதையும் இறுக்க முடிக்க” என்றான் ஏனென்றால் அவர்களுக்கு எதிர்த்த சீட்டில் முத்துவும் அருளும் அமர்ந்திருந்தனர்.
“இதுக்குனே கண்ணாலம் கட்டுறேண்டா” என்றான் கந்தன் பல்லை கடித்துக் கொண்டு
“எனக்கு நம்பிக்கை இல்லை” படக்கென சங்கிலி சொல்ல அலறிய கந்தன்.
“ஏன் நாயே?”
“அதேன் சொக்கன் சொல்லுச்சே வைரம் பொண்ணு தர மாட்டான்னு” முருகு திரும்பி கொண்டு சொல்ல.
“என்னங்கடா ஒருமாதிரி சொல்லுறீங்க” என்றவனுக்கு உண்மையில் பயந்து வந்தது பல நாள் கானாவை கள்ளி பால் கொடுத்து கழட்டி விட்டுவிடுவார்களோ என்று…
இவ்வாறு தம்பிகள் புலம்பி கொண்டே வர, அண்ணன்கள் உரசி கொண்டே வர, பெருசுகள் பேசி கொண்டே வர,
மதுரையும் வந்து சேர்ந்தது.முதலில் அழகர் மலை சென்று கருப்பனை வணங்கி விட்டு, மடப்புரம் காளியை பார்த்து விட்டு, பிறகு பாண்டி முனியை வணங்கி, குலசாமி கோவிலுக்குச் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அங்காளி, பங்காளி, உற்றார், உறவினர் என்று அனைவரும் குழுமி இருக்க வண்டியை விட்டு இறங்கிய உடனே அனைவரும் பிடித்துக் கொண்டனர்.
“சிவசாமி வா!.. வா!…. அப்பா இந்த வருசந்தேன் மகனோட வந்து இருக்கக் கூட மருமக பொண்ணும் சிறப்புத்தேன்”
“கருப்பன் ஆசிர்வாதம் மாமா”
“வாக வாகப் பூசை போட்டுரலாம்” அந்தக் கோவில் பெரியவர் சிவசாமிக்கு மாமன் முறை உள்ளவர் அனைவரையும் வரவேற்று கூட்டி செல்ல அனைவரும் உள்ளே சென்றனர்.
உறவு முறை பெண் ஒருத்தி சாரதாவை கட்டி கொண்டு, செவ்வந்தி கை பிடித்து, ஆனந்தியை வரவேற்றார் “வா!.. வா!.. ஆனந்தி!… அக்கா வாக எம்புட்டு நாள் ஆச்சு பார்த்து, புள்ள கண்ணாலத்துக்குக் கூடச் சொல்லாம போயிட்டிக” என்ற பேச்சை தொடங்க மெல்ல சிரித்துச் சமாளித்தார் சாராத.
இது ஆரம்பம் இனி வித விதமான பேச்சுக்கள் கேள்விகள் சங்கடங்கள் வரும். அதனைச் சிரித்துச் சமாளித்து நோவாத விடை சொல்லி கடக்க வேண்டும். குடும்ப பெண்களின் முக்கிய வேலை இது.
மதிக்கு அனைத்தும் புதுமையாகத் தெரிய பெரும் வியப்பை தேக்கி பார்த்துக் கொண்டு இருந்தவளை கூர்மையாகப் பார்த்துக் கொண்டு இருந்தான் ஒருவன்.
மதியை பற்றிக் காற்று வாக்கில் செய்தி பரவி இருந்தாலும். அவளைக் கண்ணால் கண்ட பின்பு சிறு சல சலப்பு இருக்கத் தான் செய்தது.
தனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவளை பவளம் “மதி தனியா போகாத புள்ள எதையாவது பேசி வைப்பாகப் உமக்கு பதில் சொல்ல தெரியாது. எங்க கூடவே இரு வா” என்று அழைத்து சென்று விட்டாள்.
தாரை தப்பட்டை விண்ணை பிளக்க முதலில் சுத்த பூஜை முடிந்து கெட வெட்டி பெரிய தலைக்கட்டுகள் அனைவருக்கும் குடும்பம் வாரியாக மரியாதை செய்யச் சிவசாமி,
சொக்கன், முத்து, கந்தன், குடக்கோவன் சங்கிலி, முருகு, என்று இளசுகளை முன் நிறுத்தினார்.
சொக்கன் பயபக்தியாகச் சாமி கும்பிடுவதை அமுது குறு குறுவெனப் பார்த்து வைத்தாள். அவளுக்குப் பல கேள்விகள் மிரட்ட தலையை உலுக்கி கொண்டு “இந்த ஆளை பார்க்க கூடாது சாமி பார்த்தவே மூளை குழம்பி போயிடும்” என்று மீண்டும் கடவுளை நோக்கி திரும்பி கொண்டாள்.
முதல் கட்ட பூஜை முடிந்து படையலுக்குச் சமையல் தாயாராக. அவர்களுக்குப் பரப்பாக ஆண்கள் உதவி கொண்டு இருந்தனர்.
அனைவரும் ஒன்று கூடி சமைக்க ஆளுக்கு ஒவ்வொரு வேலைகளைச் செய்து கொண்டு இருந்தனர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் உணவு தயாராகக் கடவுளுக்கு மனம் நெறைய படையல் போட்டு வெகு சிறப்பாகச் சாமி கும்பிட்டனர்.
சிவசாமிக்கு அத்தனை நிறைவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு முடிக்க மேலும் ஒரு மணி நேரம் கடந்தது. இப்பொழுது தான் சேட்டையைத் தொடங்கினர் இளசுகள்.
குலசாமிக்கு படைத்த தீர்த்த பாட்டிலுடன் இளசுகள் தங்கள் கூட்டத்துடன் ஒதுங்கினர். வருடத்தில் ஓர் நாள் இந்த நிகழ்வுக்கு வருடம் முழுமையும் காத்திருக்கும் கூட்டம் இது.
வாழ்க்கையின் வேகமான ஓட்டத்தை குறைத்து சொந்தங்கள் நண்பர்களுடன் தங்களை மறந்து இருக்கும் நாள் போலும் இளசுகளுக்கு.
மூன்று குழுவாக இளசுகள் பிரிந்து செல்ல சொக்கனை நோக்கி வந்தான் உறவினரும் நண்பருமான மணி.
“அப்புறம் சொக்கு பாத்து எம்புட்டு நாள் ஆச்சு இங்கனையே வந்து புட்டியாமே. ராசா சொன்னான்”
“ஏலேய் மணி முன்னேக்கே பார்த்தேன் பூஜை முடியட்டும் பேசிக்கிடலாம்னு இருந்தேன் நல்ல இருக்கேன் நீ எப்புடி இருக்க?”
“நல்ல இருக்கேன் சொக்கு என்னவே என்னென்னமோ கேள்வி பட்டேன்? முருகன் பெரியப்பா மவளை தூக்கியாந்து கட்டிகிட்டியாம் அப்போகூட எங்க நியாபகம் வரல”
“அட நீ வேற சூழ்நிலை அப்புடி சரி அதை விடு எங்கன அன்பு, சின்னப்பன் எல்லாம்”
“அப்புடியே பேச்சை திசை மாத்திப்புடு சரியான ஆளுவே நீ” சொக்கனை பற்றி அறிந்தவனாகச் சொல்ல சிரித்துக் கொண்டான் சொக்கன்.
“அவீங்க அங்கன தொடங்கிட்டாய்ங்க நீ எப்புடி அங்கன வாரியா” மணி கேட்டதும் சுற்றும் முற்றும் பார்த்த சொக்கன்.
“ரொம்ப வருசமாச்சு அங்கன வேணாம்வே ஆலமரத்துக்கு அந்தாண்ட துண்டை விரி மாப்புள. நான் காத்தான் முத்து பையல கூட்டியாரேன்” என்ற சொக்கன் விரைந்து போயி முத்துவின் காதை கடிக்க அவனும் யார் கருத்தையும் கவராமல் நழுவி வந்தான்.
“எங்கவே மூணும் போகுதுங்க” கந்தன் மற்ற மூவரிடம் கேட்க.
“தெரியலையே காத்தாண்ணே முழியே சரியில்லையே வாவே பார்ப்போம்”அவர்கள் பின்னில் சிறு இடைவெளி விட்டு தம்பிகள் படையெடுக்க.
சொக்கனை நோட்டம் விட்டுக் கொண்டே இருந்த அமுது.அவர்கள் பின்னே சென்றாள் “அம்புட்டு களவாணி கூட்டமும் எங்கன போகுது” யோசித்தவாரே சென்றவளை பிடித்துக் கொண்ட ஆனந்தி.
“ஏய் அமுது எங்கன போறவ வா வந்து சாப்பிடு புள்ள மணி என்ன?” என்று கூட்டி சென்று விட்டார்.
மதி பவளம் அருளு அமுது நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடிக்க மெல்ல மெல்ல பெண்கள் பேச்சுத் தொடங்கியது.
மதியை பிடித்துக் கொண்டு பேச பவளமும் அருளும் அவர்களைச் சமாளித்துப் பேசி கொண்டு இருந்தனர்.இதற்கிடையில் அமுது மெதுவாக நழுவி பங்காளிகள் திசை நோக்கி சென்றாள்.
அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து போனாள் அமுது.
தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு இருந்தவர்கள் மத்தியில் கையில் மதுவுடன் அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு சொக்கன் தோள்களைக் குலுக்கி, உதட்டை கடித்துக் கொண்டு கால்களை முன்னும் பின்னும் வைத்தாட.
அவனைத் தொடர்ந்து முத்து, காத்தான், அன்பு மணி என்று நண்பர்கள் பட்டாளமும் ஆடியது.
அவர்கள் ஆட்டத்தில் உற்சாமான தப்பட்டை அடித்துக் கொண்டு இருந்தவர். தனது வேகத்தைக் கூட்ட இவர்களும் அவர்களது வேகத்தைக் கூட்டி ஆட,
அதனைப் பார்த்த கந்தன் “ஆ… ஹ்ம்ம்.. ஆ ஹ்ம்ம்” என்று கண்ணை மூடி தலையை முன்னும் பின்னும் ஆட்ட,
சங்கலியோ, “ஆ!… அப்புடி ஆ!…. ஆஹான்” சொக்கனை கண்டு ஏக எரிச்சலில் இருந்தவள் இவர்கள் சேட்டையில் கோபத்தின் உச்சியில் நின்றாள்.
அவளது கோபம் புரியாமல் “பார்த்தியா ஆட்டத்தை எங்க அண்ணன் என்னம்மா ஆடுது. அதுக்குள்ள இப்புடி ஒரு கிராமத்து மைக்கில் சக்ஸ்ன் இருக்கான்னு தெரியாம போச்சு மதனி” என்றவன் மீண்டும் தலையை உலுக்கி கொண்டு முன்னும் பின்னும் ஆட்ட.
“ஓ!… வென்று அழுது கொண்டே சென்றாள்” அமுது
அமுதுவின் தீடீர் அழுகையில் ஆட்டத்தை நிறுத்திய நால்வரும் அவள் ஓடுவதைப் பார்த்து பயந்து கொண்டு.
“ஆத்தி அழுதுகிட்டே ஓடுதே ….வாவே கூட இருந்த பாவத்துக்கு நம்பத்தேன் அழுவ வச்சோமுண்டு சொல்லி புடுவாய்ங்க” என்று சொல்லி கொண்டே கந்தன் ஓட. அவனது பேச்சில் பதறிய மூன்றும் அவன் பின்னே ஓடியது.
“இவிங்க பின்னாடி ஓடியே காலம் போயிடும் போல” வழமை போல் எரிச்சலாக முனகி கொண்டே ஓடினான் முருகு.
அதற்குள் சிவசாமி கண்ணில் சொக்கன் நடன காட்சி பட அவரோ சுத்தி முத்தி பார்த்து விட்டு தனது கண்களை நம்ப முடியாமல்
“சாமிகண்ணு அங்கன இருக்குறது சொக்கனா பாரு” என்றதும் அவர் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தவர், அண்ணன் மகன் சேட்டையில் சிறு சிரிப்பு வர பார்க்க “நம்பச் சொக்கன் தேன்”
“அண்ணே இது என்ன? ஒரு நாள்தேன் கண்டு கிடாத இளசுங்க சந்தோசமா இருந்துட்டு போகட்டும்” அய்யாவு சொல்ல
“அட நீ வேற விருதுநகர் பெரிய முனி இல்ல இப்பத்தேன் நம்பப் பைய குடிக்காம இருக்கான் நல்ல வளர்ப்புனு பேசிப்புட்டுப் போனான், ஆனா இங்கன ஆட்டத்தைப் பார்த்தியா இவனை என்னவே பண்ணுறது”
“ஒண்ணுமில்லை விடுக எப்பப்பாரு புள்ளைய போயி…” என்று அய்யாவு சொன்னாலும் மேலும் அவர் புலம்பிக் கொண்டே இருக்க அய்யாவும் சாமிகண்ணும் அவரைத் தள்ளி கொண்டு சென்றனர்.
முடிந்த மட்டும் ஆடி எடுத்து சோர்ந்து நல்ல போதையில் அண்ணனும் தம்பியும் நிற்க.
அப்போது தான் சொக்கப்பன் வந்தான் அதாவது சிவசாமி உறவில் சொக்கனுக்கு மாமன் மகன்.
சொக்கன் தாத்தனுக்கும், சொக்கப்பன் தாத்தனுக்கும் பங்காளி தகராறில் கை கலப்பாகி இரு குடும்பம் பேசி கொள்வதில்லை அது அங்குள்ள அனைவருக்கும் தெரியும்.
எங்கு சொக்கனும் சொக்கப்பனும் பார்க்க நேர்ந்தாலும் வம்பு செய்து கொள்வார்கள். இன்று சொக்கனை பார்த்து சொக்கப்பன் வரவே சற்று நிதானித்து மணி
“வா சொக்கு” என்று அழைக்க
சொக்கனை பார்த்துக் கொண்டே வந்தவன் அவர்களுடன் அமர்ந்த அடுத்தப் பத்து நிமிடத்தில் இருவரும் மண்ணில் கட்டி உருண்டனர்.
இதனைக் கண்ட இளைய பங்காளிகள் விரைந்து வர பெண்கள் பதறிக் கொண்டு வந்தனர்.அமுது அழுது கொண்டு இருந்தவளுக்கு இவர்களது சல சலப்பு கேட்கவும் ஓடி வந்து பார்க்க,
கட்டி உருண்டு கொண்டு இருந்தனர் சொக்கனும் சொக்கப்பனும். இருவரும் ஒருவனுக்கு ஒருவன் சளைத்தவன் இல்லை போலும்.
இருவரும் கட்டி உருள இருபுறம் நின்று சொக்கு சொக்கா என்று இருவரையும் மாறி மாறி அழைத்துக் கொண்டு இருந்தனர் இரு குடும்ப மக்களும்.
“இவீங்க எந்தச் சொக்க சொல்லுறானுகன்னு அவீங்களுக்குத் தெரியுமா இரண்டும் தீவீரமா கட்டி உருளுதுங்க” படு யோசனையாக முருகு சொல்ல.
பதட்டத்தில் இருந்த மூவரும் அவனை முறைத்து விட்டு. அவர்களை விலக்க செல்ல இவர்களது செயலை கவனித்த முருகு படும் யோசனையில் ஆழ்ந்தான்.