விடியல் என்பது அத்தனை தித்திப்பாக இருக்கும் என்று இன்று தான் உணர்ந்தான் போலும் சொக்கன். மனைவியின் கன்ன கதப்பில் கன்னம் வைத்து மூக்கினை கழுத்துக்குள் நுழைத்து ஆழ்ந்து அவளது சுவாசத்தை உட்கொள்ள ஒரு வித பதட்டத்தில் நெளிந்தாள் அமுது.
“ப்ச் யோவ்!… பட்டாளத்தான் வெளில கதவ தட்டுறாங்கய்யா வுடு” என்றவள் ஒரு விதமான பயத்தில் அவனிடம் போராடி கொண்டு இருந்தாள்.
சில மணி துளிகளாகக் கதவு தட்டப்படச் சொக்கனோ அவளை விட்டேனா பார் என்று இறுக்கி பிடித்து வம்பு செய்து கொண்டு இருக்கிறான்.இதில் பொல்லாத சந்தேகம் வேறு கள்ளனுக்கு.
“ஏண்டி அமுது உமக்கு ஆருடி அமுதுனு பெரு வச்சுது அள்ள அள்ள குடிச்சும் திகட்ட மாட்டேங்கிறியேடி அம்புட்டு இனிப்பு. எப்படின்னா எங்க ஆத்தா செய்ற பால் முந்திரி கொத்து போல” நேரம் காலம் தெரியாமல் பேசி வைக்கும் அவனது ரசனையை எண்ணி பெண்ணுக்கு ஏக எரிச்சல் வர
“இம்புட்டு நேரம் இதைத்தேன் ஆராய்ச்சி பண்ணிகளா” என்றதும் மீண்டும் கதவு தட்டப்பட இன்னும் பதட்டமானாள் அமுது.
“யோவ்!….கதவுய்யா?…..என்ன அநியாயம் பண்ணுற பகலவன் பல்ல காட்டுது” ஜன்னலை தாண்டி வரும் சூரிய ஒளியில் நேரத்தை கணித்தவள் மேலும் பதட்டம் கொள்ள.
“ப்ச்” என்றவன் இன்னும் கழுத்துதடியில் புதைந்து மூச்சை உள்ளிழுத்து கொண்டவன் கஸ்தூரி மஞ்சள் மட்டும் போடாதடி பைத்த மாவு,
பூலாங்கிழங்கு, கொஞ்சம் முந்திரி அரைச்சு கலந்து குளி இன்னும் மினுப்பு கூடி மனத்து கிடப்ப” இரவில் செய்த கள்ளத்தில் கண்டதை எல்லாம் பேசி வைக்கும் அவனை என்ன தான் செய்ய.
“ரொம்ப முக்கியம் இதுல முந்திரி போட்டு வேற அரைக்கனுமோ” இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே மீண்டும் கதவு சற்றுப் பலமாகத் தட்டப்பட அதுவும் இம்முறை சிவசாமி குரல் கேட்க பதறி போனாள் அமுது.
“ஐயோ!..யோவ்!…உங்க அப்பாரு எழுந்திரியா” என்றவள் முழு பலத்தையும் சேர்த்து அவனைத் தள்ள சிறுது மட்டுமே அசந்து கொடுத்தவன்.
அவள் தள்ளியதில் சிறு கோபம் கொண்டு அவளை வன்மையாக முத்தியெடுத்து விட்டே எழுந்தான் தன்னைச் சரிப் படுத்திக் கொண்டு கதவை நெருங்க
அதற்குள் பக்க வாட்டில் ஓடி மறைந்த அமுது வேகம் வேகமாக தன்னைத் திருத்தி கொண்டு இருக்க. இங்கே கதவு திறக்கப் படவும் எதிரில் இருந்த சிவசாமியை கண்டு
“என்ன?” என்க.
அவனது கோலம் கண்டு திடுக்கிட்டு வந்த வழியே வெடுக்கென திரும்பி சென்றவர் வாய் மட்டும் முனகி கொண்டது “என்னத்த பேசி காரியத்த கண்டானு தெரியலையே வெளியில அந்த புள்ள வூட்டுக்குள்ள இந்தப் புள்ள இதையெல்லாம் பாக்கனுமுனு என் தலையெழுத்து”
அவரது நிலையைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்ட சாரதா “இதுக்குத் தேன் சொன்னே கேட்டாரா விவஸ்த கிட்ட மனுஷன்” முணு முணுத்தவர் சொக்கனின் பேச்சில் கலைந்தார்.
“என்னம்மா?”
“அந்த மதி புள்ள வந்துருக்கு”
“ஓ!…வந்துட்டாளா செய்தி சொல்லவே இல்ல என்றவன் நீங்க போக நான் வாரேன்” அவரை அனுப்பி விட்டு அறைக்குள் வந்தவன் அவசரமாகத் துணியை மாற்றிக் கொண்டு செல்ல .அதனை மறைவில் இருந்து பார்த்த அமுது மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.
அவளுக்குப் பயத்தில் கால்கள் தள்ளாடியது முன்னமே தெரிந்த சிக்கல் என்றாலும் அதனை எதிர் கொள்ள முடியவில்லை பெண்ணால்.
ஆசை எத்தனை ஆபத்தானது அதை விட விருப்பம், அதனைத் தாண்டி இந்த காதல், இவை அனைத்தும் இன்ப வகையில் நின்றாலும் பொல்லாத வலிகள் தர கூடியவை அல்லவா.
தங்கள் வாழ்க்கையில் அவளும் என்றதை எப்படி இந்தப் புத்தி மறந்தது? இனி ஒரே வீட்டில் இருவரது வாசம் எண்ணுகையில் ஒரு வித ஒவ்வாமை தீண்டியது பெண்ணுக்கு.
இரண்டு பெண்களோடு வாழ்க்கை முறை என்பது வழக்கத்தில் கண்டாலும் மனம் என்னவோ சுயம் கேட்டு நின்றது போலும்,
சொக்கனை விட்டுத் தர முடியவில்லை எனக்கே எனக்கு என்ற எண்ணம் ஒரு புறம் நின்றாலும். அப்பெண்ணுக்கு பாதகம் செய்யவும் முடியவில்லை தவித்து நின்றாள் அரிவை.
சட்டையை மாட்டி கொண்டு வெளியில் சென்றவன் கூடத்தில் நின்று இருந்த மதியை கண்டு வேகமாக அவளிடம் விரைந்தவன்,
அவளது கை பற்றித் தன்னுடன் நாற்காலியில் அமர வைத்து கொள்ள அனைவரது பார்வையும் ஒரு முறை சொக்கன் அறை வாசலை தீண்டி சென்றது.
அங்குக் கதவின் ஒரு பாகத்தைப் பிடித்துக் கொண்டு இவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் அமுது கண்ணில் பெண்ணுக்கு வற்றாத ஜீவநதி.அனைவருக்கும் அவளைப் பார்க்கும் போது பாவமாக இருந்தது.
தங்கையின் நிலையைப் பார்த்து தாங்க முடியாத தமக்கை அமுதரசி அருகில் நெருங்கி அவளது கையை ஆறுதலாக பற்ற வெடித்துக் கிளம்பிய அழுகையை மறைக்கப் போராடி தோற்று அருளை இறுக்கி கொண்டாள் அமுதரசி.
உற்றவன் கொடுத்த தித்திப்பு அனைத்தும் சுவைக்கும் முன்பே பறிக்கப் பட்ட உணர்வு பெண்ணுக்கு.
அவனது இயல்பான பேச்சில் கடுப்பான சிவசாமி மதிக்காகச் சற்றுப் பொறுமை காத்தார். அவருக்குச் சொக்கன் திருமணச் செய்தி மதிக்கு தெரியுமா என்ற கேள்வி? தெரிந்தால் பெண் இத்தனை இயல்பாக இருப்பாளா என்ன ?என்ற கேள்வி.
விடயம் தெரிந்து அந்தப் பெண் எடுக்கும் முடிவும் நடந்து கொள்ளும் முறையும் என்ன? என்ற கேள்வி.இந்த கேள்விகளை எல்லாம் எதிர்கொள்ளப் பயந்தே குமுறும் இதயத்தை அடக்கி அமைதியாக நின்றார்.
அப்பெண்ணும் அவ்வீட்டில் உள்ள மக்களுக்கு வழமை போல் ஒரு புன்னகையைக் கொடுத்து விட்டுச் சொக்கனிடம் பேச தொடங்கி விட்டது.
“சரி மதி குளிச்சு புட்டு வா பசிக்கும்” என்றவன் அவளது பெட்டியை வாங்கி மேல உள்ள அவனது அறையில் வைத்துவிட்டு வர அனைவரும் அவனைத்தான் பார்த்து நின்றனர்.
கூடி நின்ற அனைவரையும் சிறிதும் கண்டு கொள்ளாமல் நேராக அமுதிடம் சென்றவன் அவள் அருளை அனைத்து அழுது கொண்டு இருக்க.
“எதுக்குடி அழுது வைக்கிற அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் அழுக என்ன அருளு பண்ண என் பொஞ்சாதி அழுது கரையிரா” அவனது நக்கலில் அருள் முறைக்க பொங்கிவிட்டார் சிவசாமி.
மகனிடம் பேச மனம் மல்லுகிட்டியது இத்தனை வயது சென்று அவனிடம் கோபமாகப் பேச ஒப்பவே இல்லை அவருக்கு .அதற்காக அவன் செய்யும் செயலையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“அடியேய்!… சாரதா இன்னும் நாலு அறை காலியாதேன் கிடக்கு.மெத்தையில் அந்தப் புள்ள கீழே இந்தப் புள்ள மத்த நாலுக்கும் எப்படி? எந்த ஜில்லான்னு கேட்டுகிடு உம்ம மவேன் ஆறுகட்டி ஆளட்டும்”
நான் காசி, ராமேஸ்வரம் போயிடுறேன் நீயும் வந்து புடு வயசான காலத்துல எவன் கிட்டையும் அடி வாங்கி நிக்க முடியாது முக்கியமா முருகன் கிட்ட அவீங்கள எதிர்த்து பறந்து பறந்து அடிக்க நான் ஒன்னும் எம்சியார் இல்ல.
அவரது பேச்சில் அவரைத் திரும்பி அலட்சியமாக பார்த்தவன் மீண்டும் அமுதை நெருங்கி
“அமுது” என்க வேகமாக உள்ளே சென்றவள் அவசரமாகத் தனது உடைகளைப் பைக்குள் திணித்து வெளியில் வர அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
அதற்குள் மதி வந்த செய்தி சாமிகண்ணு அய்யாவு காதுக்கு எட்ட அவர்களும் குடும்பத்தோடு வந்து விட்டனர்.
ஆனந்தி அமுதரசி நிலையைக் கண்டு பதறி “என்ன புள்ள எங்கன போறவ”
“எங்கன ஐத்த போவேன் போக்கிடம் அப்பன் வூடுத்தேன்”
“என்ன புள்ள சொல்லுத அண்ணனுக்குத் தெரிஞ்சா விவகாரமாகி போகும், ஏற்கனவே ஊரு முழுக்க இதுதேன் பேச்சு இந்தக் குடும்பத்து மானமும் போகும்” என்றவரை வெறித்துப் பார்த்தவள்.
“நீ!..உம்ம புகுந்து வூட்டுக்கு காட்டுற விசுவாசத்த பொறந்த வூட்டுக்குக் கொஞ்சம் காட்டு இந்த ஆளு மேல ஆசை வச்சதைத் தவிர நான் ஒண்ணுமே செய்யல ஆசைக்கு ஒரு நாள் வாழ்ந்தாச்சு ப்ச்…..பேச வைக்காத நான் வாரேன்”
“ஐயோ!…எங்கன போவ ஏதா இருந்தாலும் பேசிக்கிடலாம் அமுது சொக்கு விட்டு கொடுக்காது புள்ள”
“அப்போ உம்ம மகனையும் அவர் கட்டுன அந்தப் புள்ளையையும் அனுசரிச்சுப் போகச் சொல்லுற என்னால அந்தக் கருமத்த பண்ண முடியாது ஒருத்தனுக்கு ஒருத்தித்தேன்” அத்தனை உறுதி பெண்ணிடம்.
“அந்த ஆள பங்கு வைக்க முடியாது என்ன வுடு” என்று மேலும் செல்ல போனவளை வளைத்துப் பிடித்துக் கொண்டான் சொக்கன்.
“நில்லுவே நேத்து ராவுக்கு என்ன சொன்னேன்” அவளை கூர்மையாக பார்த்து கொண்டே கேட்க
“ப்ச்!..அமுது” சொக்கன் சற்று இறுக்கமாக அழைக்க அவனது கோபத்தைக் கண்டு கொள்ளும் நிலையில் அவள் இல்லை.
“வுடு கேட்க ஆயி இல்ல அப்பனும் பைசாக்கு தேராதுனு தானே போட்டு பாக்குறீக உங்க பகுமானத்துக்கு என்னால ஈடு செய்ய முடியாது கால் வயிறு கஞ்சி குடிச்சாலும் மானத்தோடு எங்க அப்பன் வூட்டுல குடிக்கேன் வுடு என்ன”
அவளது கையை இறுக்கப் பற்றி “என்னவே பாவம் சின்னப் புள்ளன்னு பார்த்தா ரொம்பப் பேசுத மறுக்கா சொல்ல மாட்டேன் உள்ளர போ”
“மாட்டேன்!….. மாட்டேன்!….. நீ சொன்னா நான் கேட்கனுமா”
“கேட்டுதேன் ஆகனும்” வெகு இயல்பாக சொக்கன்.
“பட்டாளத்தானுங்குற திமிரு பேசுது நான் போவேன் என்ன செய்வ” பல்லை கடித்து கொண்டு அமுதரசி மல்லுக்கு நிக்க
நல்ல வேளை பச்சையம்மாள் இல்லை அவர் கோவிலுக்குச் சென்று இருந்தார். அவர் இருந்தால் இன்னும் சிறப்பாகச் சென்று இருக்கும் வாக்கு வாதம்.
அதற்குள் பங்காளிகள் கூட்டம் அருளை சூழ்ந்து கொண்டு “அருளு வார்த்தை முத்தி போகுது போயி பேசு புள்ள” முருகு சொல்ல.
“என்னத்த பேச தப்பு அம்புட்டும் மாமா மேலதேன் ஒரு பொண்ணா அவளை ஓசனை பண்ணு முருகு”
அதற்குள்….
“வம்பு பண்ணாம வாடி பேச்சு எல்லை தாண்டுச்சுப் பொறவு வச்சு செஞ்சு புடுவேன் பார்த்துக்கிடு” உச்ச பட்ச கோபத்தில் சொக்கன் கத்த.
அவனது அலட்சியம், பேச்சு, செய்கை, தோரணை அனைத்திலும் கோபம் கொண்டவள் “போட!..” என்று விட போடவா அவளது விளிப்பில் அவன் தடுமாறிய சமயம் அவனை அகங்காரமாகத் தள்ளிவிடச் சற்று தடுமாறி விழ போனான்.
அதற்குள் வெளியில் சத்தம் கேட்டு வந்த மதி கண்ணில் சொக்கன் நிலை படப் பதறி ஓடி வந்து அவனைத் தாங்கி “என்ன……”அழைக்க அவளது விளிப்பில் அமுதுக்கு தூக்கிவாரிப் போட அதிர்ந்து நின்றனர் குடும்ப மக்கள்
“அடி சண்டாள சிறுக்கி” பதறி சற்று சத்தமாக முனகி கொண்டனர் பங்காளிகள் கூட்டம்.