நேரம் மாலை ஐந்தரையை தாண்டி சென்றிருந்தது. ஆனால் அங்கிருந்த கூட்டம் மட்டும் இன்னும் நகராமல் அப்படியே இருந்தது. காவல்துறையினரின் வாகனமும், பல அரசு வாகனங்களும் வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருக்க வைஷ்ணவியும் ஷெர்லினும் ஒரு காவல் அதிகாரியின் பின்னே அவர் செல்லும் இடமெல்லாம் அலைந்துகொண்டிருந்தனர்.
அங்கு வேலை பார்க்கும் அனைவரும் இடத்தில் இருந்தனர். சுந்தர் முதல் சித்தாள், கொத்தனார் என அனைவருக்கும் வரிசையாக மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். அனைத்தையும் ஒரு ஓரமாய் நின்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சுப்பிரமணிக்கு தான் மனதில் பெரிய பாரம் குடிகொண்டது.
மகன் எவ்வளவு ஆசையாக துவங்கியது இப்படியா வந்து நிற்க வேண்டும்? அவன் பொறுப்பில் விட்டது, அவன் நண்பர்கள், பங்குதாரர்கள் வந்து கேட்டால் என்ன பதில் கூறுவது… இனி இதற்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று சண்டையிட்டால்?
இதற்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்று சண்டையிட்டால் என்ன கூறி சமாளிப்பது என குழப்பங்களும் கேள்விகளும் சரி விகிதத்தில் அவரை கிறங்கடித்தது. இதில் மஹாலக்ஷ்மி தொடர்ந்து கைபேசியில் அழைத்துக்கொண்டு இருந்தார். மனைவியின் பதட்டம் புரிந்தாலும் பதில் என்ன பேசுவதென்று தெரியாமல் தவிர்த்துவந்தார்.
“வைஷு என்னடி உன் ஆளு கொலை பண்ற அளவு பெரிய ஆளா என்ன?”
காதை கடித்த ஷெர்லினை பார்த்து முறைத்த வைஷ்ணவி, “ஓங்கி ஒரு மிதி மிதிச்சா குத்தால அருவில தான் போய் விழுவ”
“நீ கோவப்படுத்த எல்லாம் கூட்டி கழிச்சு பாத்தா நீயும் ஒடந்தையா இருப்பியோனு எனக்கு சந்தேகம் வருது”
“ச்ச ச்ச… சாதாரண சாப்பாடுக்கே முதல உன்ன வச்சு தான் டெஸ்ட் பண்ணுவேன், இதுல சொல்லவா வேணும்? எப்படி எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணலாம், எங்க அறுத்த சட்டுனு உசுரு போகும்னு எல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு தான் அடுத்தவன்” – வைஷ்ணவி
“சரி எதுக்குடி ஜேம்ஸ(ஷெர்லின் தந்தை) இங்க வர வச்ச?” – ஷெர்லின்
“உன் அப்பா மண்டைல ஈஸியா மொளகா அறச்சிடலாம்” – வைஷ்ணவி
“அந்த ஆளுக்கு எல்லாம் அவ்வளவு பவர் இல்லடி. டம்மி பாவா. உள்ள ஒளிஞ்சிருக்க அம்பி வெளிய தெரிய படுத்த கூடாதுன்னு தான் அந்த முருக்கு மீசையே” தன்னுடைய தந்தை என்னும் பார்க்காமல் சரமாரியாக புகழ்ந்தாள் ஷெர்லின்.
“என்னமோ பண்ணட்டும் உன் அப்பாகிட்ட சொல்லி அவரு ஆளுங்கள இங்க இருந்து வேகமா காலி பண்ண சொல்லு”
“உன் வீட்டுல வாடகைக்கு இருந்தவனை காலி பண்ண சொல்ற மாதிரி போக சொன்னா ஒடனே அவங்க போகணுமா? நல்லா இடத்தை சுத்தி அலசி ஆராஞ்சு தான் கெளம்புவாய்ங்க. சரி நீ இப்போ என்ன பண்ண போற?” – ஷெர்லின்
“என்ன பண்ண போறனா? மணி ஆறாச்சு உங்க அப்பாகிட்ட காசு வாங்கு டீ குடிச்சிட்டு வரலாம்” – வைஷ்ணவி
“உலகமே அழிஞ்சாலும் டீ மட்டும் வேளா வேளைக்கு குடிச்சிடு. உன் ஆளோட மனசுல அழுத்தமா ஒக்கார இத விட சரியான சந்தர்ப்பம் வேற எதுவுமே இல்ல” – ஷெர்லின்
“ஓ கால் பண்ணி பீல் பண்ண வேணாம்னு ஆறுதலா பேசவா?”
“ம்ம்ம் கையோட சவூதி-கு ஒரு டிஸ்யூ பேப்பர் டப்பாவையும் பார்சல் அனுப்பி விடு” நாக்கை மடித்து தோழியை பார்த்து திட்ட வந்த ஷெர்லின் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, “ஏண்டி கெழவியா மண்டைய போட்டுச்சு?
போன் பண்ணி ஆறுதல் சொல்லி கண்ண தொடச்சு விட, இது தொழில் சம்மந்தப்பட்டது. ஆரம்பத்துலையே இவ்ளோ பெரிய பிரச்னை வந்தா பெரிய தடங்களா நெனச்சு பீல் பண்ணுவாங்க. சோ இத உன் ஆள் காதுக்கு போகாம நீயே பிரச்னையை சால்வ் பண்ணி விடு”
ஏதோ பிடித்தது, ஏதோ உதைத்தது ஷெர்லின் திட்டம், “அது எப்படி ஷெர்லினு உன்ன மாதிரி ஒன்னத்துக்கும் ஆகாத உதவாக்கரையையும், உன் அப்பா மாதிரி டம்மி போலீஸ் எல்லாம் கூட வச்சிட்டு இத செஞ்சு முடிக்க முடியும்?” யோசனையோடு தாடையை தடவினாள்.
“ஆள் பலம் இல்ல, ஆனா உனக்கு தான் உன் வாய் கால்வாய் மாதிரி நீண்டுட்டு இருக்கே. அத யூஸ் பண்ணு” – ஷெர்லின்
“அதெல்லாம் சரி தான்… ஆனாலும் இந்த சமையலுக்கு தெரிஞ்சா அடுப்புக்கு என்ன விறகாக்கிடுமே” – வைஷ்ணவி
“விறகா? கட்டி புடிச்சு முத்தம் தான் குடுப்பாரு லா…”
முகம் மலர்ந்து, “அப்படிங்கிற?” – வைஷ்ணவி
“ஆமா… முதல உன் மாமனாரை பேசி சமாதானம் படுத்து” சரி என்று வைஷ்ணவி சுப்பிரமணி இருந்த இடத்திற்கு நடந்தாள்.
“சார் உங்க பையன வர சொல்லுங்க” ஒரு கான்ஸ்டபில் வந்து சுப்ரமணியிடம் கேட்க அப்பொழுது அருகே வந்த வைஷ்ணவி காதில் விழுக வேகமாக அவர் அருகில் வந்து, “சார் உங்கள இன்ஸ்பெக்டர் கூப்பிட சொன்னாரு” தூரத்தில் நின்ற ஷெர்லின் தந்தையை கை காட்டிவிட்டாள்.
“வர சொல்லுங்க சார்” மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திவிட்டு அந்த போலீஸ் செல்ல கைபேசியை எடுத்து மகனுக்கு அழைக்க போனவரை,
“வேணாம் அங்கிள்” என்ற வைஷ்ணவி வார்த்தை தடுத்து வைத்தது.
“அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவருக்கு விசயமும் தெரிய வேணாம். ப்ளீஸ் இப்போ வந்துர்றேன்” அந்த கான்ஸ்டப்பில் சென்ற திசையில் விரைந்தவளை அந்த கான்ஸ்டபிலும், ஷெர்லின் தந்தையும் ஒரு சேர பார்க்க தோழி அருகே சென்று அமைதியாக நின்றுகொண்டாள் வைஷ்ணவி.
“நீங்க போங்க நான் பேசிக்கிறேன்” அவரை அனுப்பி வைத்து வைஷ்ணவியை ஜேம்ஸ் முறைத்தார்.
“பெரிய மீசை வச்சிருந்தா மதுரை வீரன்-னு என்னமோ உன் அப்பனுக்கு” வைஷ்ணவி தோழியை காதில் கேட்டாள்.
“அவருக்கு கேக்குற மாதிரி பேசு அவரே பதில் சொல்லுவார்”
“என்ன வைஷ்ணவி இது? எங்களை வேலை செய்யவே விட கூடாதுன்னு முடிவோட தான் இருக்கியா?” – ஜேம்ஸ்
“அவரே ரொம்ப நொந்து போய் நிக்கிறாரு, அவர்கிட்ட உங்க பையன வர சொல்லுங்க-னு சொன்னா என்ன பண்ணுவார்? அவரோட பையன் இப்போ சவூதில இருக்காங்க அங்கிள். எப்படி வர முடியும்?” – வைஷ்ணவி
“வரணும் வைஷ்ணவி. இடத்தை பேசி வாங்கிருக்குறது அவன் தான். அப்ப அவன் தானே முக்கியம்? இது என்னோட ஏரியால வர்றதால என்ன தான் இன்ச்சார்ஜ் எடுத்துக்க சொல்லிட்டாங்க” என்றார் களைப்பாக.
“அப்ப வசதியா போச்சு” – வைஷ்ணவி
“அது ஏன் அவர் வரணும்? வெளிநாட்டுக்கு போனவரை உங்களால வர சொல்ல முடியுமா? கூடாது தகப்பனே கூடவே கூடாது. இது சட்டத்துலயே இல்ல” இந்த பாய்ண்ட் நமக்கு தோன்றவில்லையே என்று தோழி பக்கம் திரும்பி கையை நீட்டி இருவரும் சிரித்த முகத்துடன் கை குலுக்கிக்கொள்ள,
“எத்தனை படம் பாத்துருப்போம்” பெருமையாக ஷெர்லின் தந்தையை பார்த்து கர்வத்துடன் நின்றாள்.
“அதையும் மீறி நீங்க அவரை வர சொல்லியே ஆவேன்னு சொன்னா உங்க மேல கேஸ் போடப்படும். வேணும்னா அவர் ஆறு மாசம் கழிச்சு வர்றப்ப விசாரிச்சுக்கோங்க” – வைஷ்ணவி
“எதுக்கு அந்த பையன் மேல உங்களுக்கு இவ்ளோ அக்கறை? பெத்தவரே அமைதியா அங்க நிக்கிராறுல?” போலீஸ் புத்தி சரியாக வேலை செய்தது தோழிகளின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டு.
“நீங்க ஜேம்ஸ் பாண்ட் தான் ஜேம்ஸ் பாண்ட் தான். அவர் எங்களுக்கு வேலை வாங்கி தந்தவர்” – வைஷ்ணவி
“மரியாதையே இல்லாத வீட்டுல ஒரு வேளை தோசை சாப்பிட்டாலும் கால் மேல கால் போட்டு சாப்புடுறோம் இப்போ தான்” – ஷெர்லின்
“அது தொடரணும்னா இந்த இடத்துல வேலை நிக்காம நடக்கணும்” – வைஷ்ணவி
“அதுக்கு அவர் ராசி நட்சத்திரம் பாக்காம இந்த ஹோட்டல முழுசா கட்டி முடிக்கணும்” – ஷெர்லின்
வீட்டிலிருந்து தோழியை அழைத்து கிளம்பும் பொழுதே ஜேம்ஸ் தங்களின் மேல் சந்தேகம் வந்தால் எதை பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்தவர்களுக்கு சரியாக அது உதவவும் செய்தது.
“நான் பெத்ததும் சரியில்ல, அதுகூட சுத்துறதும் சரியில்ல” புலம்பியவாறே அங்கிருந்து அகன்றார்.
சுப்பிரமணி இருந்த இடத்திற்கு வந்த வைஷ்ணவி, “அவருக்கு விசியம் தெரிய வேணாம் அங்கிள். நாமளே முடிஞ்ச அளவு பாத்துக்கலாம்”
“அது சரி வராது ம்மா… அவன் ஆரமிச்சது. அவனே வந்து பாக்கட்டும்” ஒரு இடத்தை பார்க்கும் பொழுது அதை தெளிவாக விசாரிக்க வேண்டாமா என்ற கோவமும் மகன் மேல் உதித்தது அவருக்கு.
“அவர் வந்துனா? அங்க இருக்க வேலைய விட்டுட்டு இங்க வர சொல்றிங்களா அங்கிள்?”
“வந்து தானே மா ஆகணும்? சின்னதா ஒரு கடைய ஆரமிச்சு அதுல கொஞ்சம் லாபம் பாத்துட்டு அப்றம் இந்த மாதிரி பெரிய முயற்சி எடுக்கணும். எடுத்த ஒடனே பெரிய குதிரைல தான் ஏறுவேன்னு நின்னா இப்டி தான் நடக்கும்” – சுப்பிரமணி
“சின்ன கடை, சின்ன முயற்சி, சின்ன வீடு இப்டி எல்லாமே சின்னதா பாத்துட்டே இருந்தா எப்ப தான் அங்கிள் வளர முடியும்? இவ்ளோ பெரிய ஸ்டேப் எடுக்குறாருன்னா உங்க பையனுக்கு தன்னோட திறமை மேல எவ்ளோ நம்பிக்கை இருக்கும்னு யோசிச்சு பாருங்க”
“அவன் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா ஒரு இடத்தை வாங்குறப்ப அத தெளிவா விசாரிக்க வேணாமா?” – சுப்பிரமணி
“இதெல்லாம் நடக்கும்னு அவருக்கு தெரியுமா அங்கிள்?”