“யாருங்க நீங்க என் விசயத்துல தலையிட?”
நண்பன் ஒருவன் மூலம் தன்னுடைய பிரச்னையை தேடி கண்டுகொண்டவன் முதலில் அன்னைக்கு அழைத்து ஏன் தன்னிடம் இந்த பிரச்னையை பற்றி கூறவில்லை என்று கடிந்துகொண்ட பொழுது வாய் தவறி வைஷ்ணவி தான் அவனிடம் கூற வேண்டாம் என்று வற்புறுத்தியதை சொல்லிவிட, அன்னையிடம் அணைப்பை துண்டித்து சில நிமிடங்கள் பிறகு குறையாத கோபத்துடன் வைஷ்ணவிக்கு அழைத்துவிட்டான்.
“கார்த்திக்…” வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க,
“அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது” எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது.
“உங்க கோவம் எனக்கு புரியுது கார்த்… புரியுது”
“இல்லங்க உங்களுக்கு ஒன்னும் புரியல. அது என்னோட பிரச்சனை. என்னோட கஷ்டம். அது எனக்கே தெரியாம வைக்கணும்னு நீங்க யோசிக்கிறது எந்த வித்ததுலங்க நியாயம்?” – கார்த்தி
“நான் அந்த அர்த்தத்துல சொல்லல…”
வைஷ்ணவியை பேசவே விடவில்லை அவன், “எந்த அர்த்தத்துல சொன்னாலும் நான் புரிஞ்சிகிட்ட ஒரே அர்த்தம் உங்களோட டாமினன்ஸ் தான். என் வீட்டு ஆளுங்க வர நீங்க ரொம்ப டாமினேட் பண்ணிட்டு இருக்கீங்க. எனக்கு அது சுத்தமா புடிக்கல. உங்களோட விளையாட்டு தனத்தை காட்ட என்னோட வாழ்க்கை தான் கெடைச்சதா? ரிசார்ட் என்னோட பல வருஷ கனவு. அது உங்களால வீணாபோறத என்னால பாத்துட்டு இருக்க முடியாது” குரல் சீராக இருந்தாலும் அவன் பேசிய விதம் அவனுடைய கோவத்தை திரையிட்டு காட்டியது.
“வீணாபோகுற அளவா நான் எதுவும் பண்ணிட்டேன்?” அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் துளி ஒன்று அவள் கன்னத்தை நீண்டு தரையில் சிதறியது.
“ஆமா… உங்களால இப்போ ஒருத்தன் பார்ட்னர்ஷிப்ல இருந்து போறேன்னு சொல்றான். என் மேல நம்பிக்கை போச்சு அவங்களுக்கு நான் எதுவும் பேசாததால. அதுவே சொல்லலையா உங்களோட அதிகபிரசங்கி வேலைய?” நிச்சயம் வைஷ்ணவி இந்த வீரியத்தை எதிர்பார்க்கவில்லை.
ஆனால் இப்பொழுதும் மாற்று வழியாக அவள் தந்தை இருப்பதாய் அவனிடம் சொல்ல கூடிய சூழலிலும் அவளை கார்த்தி நிறுத்தவில்லை.
“சும்மா ரெண்டு தடவ உங்கள பாத்து பேசுன ஒடனே என் லைப்ல முடிவெடுக்குறது எல்லாம் நீங்களாகிட முடியாது வைஷ்ணவி. உங்களுக்கும் எனக்கும் எந்த விதத்துலையும் ஒத்து வராது”
கார்த்தி பேச பேச மூச்சு முட்டியது அந்த அடைக்கப்பட்ட அறையினுள். கதவை திறந்து வெளியில் வந்து அமர்ந்துகொண்டாள்.
“இப்டி எல்லாம் பேசாதீங்க கார்த்…” கடினத்துடன் எச்சிலை விழுங்கினாள், “கஷ்டமாகுது ப்ளீஸ்” கண்கள் இருவரின் அறைக்கு வெளியில் காற்றில் ஆடிக்கொண்டிருந்த அந்த windchime மேல் நிலைத்திருந்தது.
அவனோ அவள் பேசியதை காதிலே வாங்கவில்லை, “நமக்குள்ள எந்த உறவும் இல்லாதப்பவே எனக்கு மூச்சு முட்டுது. இதுல நமக்குள்ள ரிலேஷன் இருந்தா என்னால் யோசிச்சு கூட பாக்க முடியல. ப்ளீஸ் தயவு செஞ்சு என்னோட லைப்ல நீங்க வந்துடாதீங்க” மனதில் உருவாகிய கோவத்தை எல்லாம் கொட்டிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.
ஏனோ தன்னுடைய சொந்த உழைப்பில் உருவான தளிரை தன்னிடமிருந்து அவள் பறித்தது போன்ற உணர்வு மேலோங்க தன்னையும் மீறி கோவம் வார்தைகளாள்க அவளிடம் பாய்ந்தது.
உடனே தன்னுடைய மேலதிகாரிகளிடம் சென்று ஒரு வாரம் மட்டும் விடுமுறை வாங்கி அடுத்த நொடியே பிலைட் டிக்கெட்டை கையேடு பதிவு செய்துவிட்டான்.
இங்கு நிலவொளியில் அமர்ந்திருந்த வைஷ்ணவிக்கு மனது மிகவும் கனத்து போனது. கண்களில் நிற்காமல் நீர் வடிந்துகொண்டே இருக்க முதலில் தேடும் ஆறுதலை இன்றும் நாடினாள் கைபேசி மூலம்.
உறக்கம் வராமல் விழித்திருந்த ஷெர்லின் ஒரே ரிங்கில் அழைப்பை ஏற்று காதில் வைத்து, “என்ன பாய்லர் காபி குடிக்க பஸ் ஸ்டாண்ட் போகணுமா? உளவுத்துறை கீழ தான் இருக்கார். லத்திய வச்சே மிதி தான் விழும் எனக்கு” பல முறை நடந்த சம்பவங்களை நினைத்து முதலிலே சுதாரித்துவிட்டாள் ஷெர்லின்.
“வேணாம்னு சொல்லிட்டாரு” உணர்வுகளை கட்டுப்படுத்தி வைஷ்ணவி கூற, அவள் குரலில் தெரிந்த மாற்றத்தை அந்த நிமிடம் ஷெர்லின் கவனிக்கவில்லை.
“உன் அப்பாவா?” – ஷெர்லின்
இல்லை என்று தலையை ஆட்டி, “நான் வேணாம்னு சொல்லிட்டாரு ஷெரூ…” வெடித்து அழுத்துவிட்டாள், “அவரு… அவருக்கு என்ன புடிக்கவே இல்ல. என்னால அவருக்கு மூச்சு முட்டுதுனு சொல்றாங்க ஷெரூ”
வாய் விட்டு கதறி அழுகும் தோழியை மன நிலை புரிய உடனே படுக்கையிலிருந்து எழுந்தவள், அப்பொழுது தான் வந்த தந்தையை கெஞ்சி வைஷ்ணவி வீட்டிற்கு புறப்பட்டாள்.
“ஏய் என்னடி இதுக்கெல்லாம் அழகுற?” – ஷெர்லின்
“நான் அவங்க வாழ்… வாழ்க்கையை வீணாக்குறேனு சொல்றாங்க ஷெரூ”
“வைஷு…”
ஷெர்லின் அழைக்க அந்த பக்கம் பதிலே இல்லாமல் ஏதோ நொறுங்கும் சத்தமும் சற்று தொலைவில் வைஷ்ணவியின் அழுகுரல் அவள் காதை நிறைக்க வேக வேகமாக வைஷ்ணவி இல்லம் வந்தவள் சிறிதும் யோசிக்காமல் அந்த சிறிய சுவரை ஏறி குதித்து மாடிக்கு செல்ல அங்கு தரையில் அமர்ந்து விசும்பி விசும்பி அழுகும் தோழியை பார்த்தவுடன் ஷெர்லின் உடலே ஒரு நிமிடம் பதறியது.
ஓடி சென்று தோழியின் முகத்தை ஷெர்லின் தூக்கி, “ஏய் என்ன இது இப்டி ஒரு அழுகை? நீ அழுகுறது ஊருக்கே கேக்கும்டி. அழுகாத” அதட்டி அவள் அழுகையை நிறுத்திவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டது தவறாகவே போனது.
“நான் அவங்கள கார்த்திக்-னு கூப்புட கூடாதாம். அவங்க… அவங்க லைப்ல… நா… நான் வர வேணாம்னு சொல்றாங்க” இன்னும் இன்னும் அழுகை அதிகமானது வைஷ்ணவிக்கு.
“இத்தனை நாள் அவங்களுக்கு என்… என்ன ஒரு தடவ கூட புடிக்கலயா?” சிறு வயது முதல் இதுவரை வைஷ்ணவி அழுத்தத்தை பார்த்திராத ஷெர்லினுக்கு அந்த அழுகையே அவளின் அவன் மேல் உள்ள அன்பை கூற, கார்த்தி மேல் தான் அதிகம் கோவம் வந்தது.
அழுது கறைபவளின் தோளை பற்றி அணைத்துக்கொண்டவள், “ஏதோ கோவத்துல பேசிருப்பாங்க வைஷு. இதுக்கெல்லாமா அழுவாங்க?”
“இல்… இல்ல அவங்க தெளிவா தான் பேசுறாங்க. ரெண்டு வாரம் *விசும்பல்* அவங்கள பாக்காம இருந்ததே அவங் *விசும்பல்* அவங்கள கண்ணு தே… தேடுது. என்னால சமயல மறக்க முடியுமா-னு தெரியலையே” என கூறி மீண்டும் முகத்தை கைகளால் மூடி கதறி அழுத்தவளை பார்த்த ஷெர்லினுக்கே கண்களில் நீர் கோர்த்தது.
சிறு பிள்ளை போல் ஏதேதோ நினைத்து வெகு நேரம் புலம்பியவள் இரவு முழுதும் உறங்கவே இல்லை.
ஷெர்லின் என்னென்னமோ சமாதானம் கூறியும் கேட்காமல் எதிர் வீட்டில் அவன் அறைக்கு மேல் தொங்கும் அந்த மணியையே வெறித்து பார்த்திருந்தவள் காலை சூரியனை பார்த்ததும் தான் தன்னுடைய அறைக்குள் சென்று மெத்தையில் கண்களை மூடி படுத்துகொண்டாள்.
ஷெர்லினுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. வைஷ்ணவி என்ன தான் விளையாட்டு குணம் அதிகம் இருந்தாலும், தனக்கு ஒன்று பிடித்தால் அதை அவ்வளவு சீக்கிரம் மறக்கவும் மாட்டாள். அதே பிரியத்தை கார்த்தி மேல் அவள் வைத்திருப்பது தெரிந்து மனம் கலங்கியது, காரணம், கார்த்தியின் அழுத்ததும்.
அடுத்த இரண்டு நாள் வைஷ்ணவி சகஜமாய் இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் அவள் அவளாக இல்லை என்பது ஷெர்லின் கண்களுக்கு மட்டும் அப்பட்டமாக தெரிந்தது.
அந்த இரண்டு நாட்களுமே சுந்தர் வேலைக்கு வரும்படி அழைத்திருக்க, ஷெர்லின் என்ன அழைத்தும் வைஷ்ணவி பிடிவாதமாக வரவே மாட்டேனென்று சாதித்துவிட்டாள். அவள் மனதை அவ்வளவு ஆழமாக தாக்கியிருந்தது அவன் வார்த்தைகள்.
மீண்டும் இன்று காலையில் ஷெர்லின் வேலை கிளம்பும் முன், “நா மட்டும் போகவாடி அங்க வேலைக்கு சேந்தோம்?”
“அது அப்ப. இப்போ தான் உனக்கு என்ஜினீயர பாக்குற வேலை இருக்கே”
‘அடி ஆத்தி…’ என ஒரு நிமிடம் திகைத்துப்போனாள் ஷெர்லின்.
“என்ஜினீயர நான் எதுக்குடி பாக்கணும்?”
“கோவிலுக்கு போய் சாமி குமிட போறவங்க மத்தில அப்பத்த டிப் பண்ணி தர்ற வைன திங்கவே போற உன்னோட கேடித்தனம் எனக்கு தெரியாதா” – வைஷ்ணவி
“போடா ஃபூல்” – ஷெர்லின்
“நான் கூட என்ன சமயலு கூட சேத்து வைக்க தான் அங்க வந்தனு நெனச்சேன். ஆனா என்ஜினீயர் உன் கைய புடிக்கிறதும், நீ வெக்கப்பட்டு ஓடுறதும். எப்பப்பா… என் காதலை வளக்குறேன்னு உன் காதலுக்கு என்ன கொன்னு பால் ஊத்தி வளக்குறியேடி… செவனேனு இருந்தா கூட அவர் மணியடிக்க வச்சே லவ் டெவெலப் பண்ணிருப்பேன். இப்போ முதலுக்கே மோசமாகிடுச்சே… உன்ன எல்லாம் செருப்பால அடிச்சா தான் என் மனசு ஆறும்”
தன்னுடைய அறைக்கு வெளியில் இருந்த தன்னுடைய காலனியை குனிந்து வைஷ்ணவி எடுக்கும் நேரத்தில் பின்னங்கால் பிடரியில் பட அந்த ஊரையே தாண்டியிருந்தாள் ஷெர்லின்.
தோழி ஓடிய வேகத்தை பார்த்து சிரிப்போடு காலனியை கீழே போட்டு தலையை உயர்த்திய நேரம் கார்த்தியின் அறை கதவு மூடும் சத்தம் கேட்டு நிதர்சனம் மறந்து திரும்பி பார்த்தவள் அவனை அங்கு எதிர்பார்க்கவே இல்லை.
ஒரு நிமிடம் தான் காண்பது கனவோ என்று கூட தோன்ற அவளை பார்த்தவன் வேகமாக மேலே மாட்டியிருந்த விண்ட்ச்சைமஸை அவிழ்த்து அறையினுள் போட்டு கீழே சென்ற பொழுது நொடியே அவளுக்கு கனவல்ல என்பது உரைத்தது.
சுருக்கென வலி மனதில் உதித்தாலும், “போயா யோவ்” என காலை உணவை கவனிக்க இறங்கினாள்.