இதோடு முப்பதுக்கும் மேற்பட்ட குறுந்செய்திகளை வரிசையாக அனுப்பியாயிற்று வைஷ்ணவி பக்கமிருந்து, ஆனால் எந்த மன்னிப்பிற்கும் பதில் தான் கார்த்தியிடம் வரவில்லை.
அவனுடைய கோவத்தின் நியாயத்தை உணர்ந்து, கணவனின் வார்த்தையில் மட்டும் தான் தவறுள்ளது என்று புரிந்தது, என்ன இருந்தாலும் அவனை கை நீட்டி அடித்திருக்க கூடாதென்று மனம் வருந்த தான் கணவனுக்கு கடந்த ஒரு மணி நேரமாக செய்தி அனுப்பிக்கொண்டே இருப்பது.
இன்றோடு ஐந்து நாட்கள் ஆகியிருந்தது வைஷ்ணவி செங்கோட்டை வந்து. அன்று விட்டு சென்றவன் தான், அதன் பிறகு இருவரும் ஒருமுறை கூட கைபேசியில் கூட பேசிக்கொள்ளவில்லை.
உன் வீட்டிற்கு போ என்று சொன்னவன் பேச்சை கோவத்தில் செயல்படுத்த முடியவில்லை வைஷ்ணவியால், உன்னை திருமணம் செய்த பிறகு இது தான் என் வீடு என உரிமையாய் அவன் வீட்டிற்கு தான் அவள் கால்கள் சென்றது. உள்ளே நுழைந்த வைஷ்ணவியை பார்த்தவுடன் மகாலட்சுமிக்கு பயம் வந்து ஒட்டிக்கொண்டது.
“எங்க ம்மா கார்த்தி?” வாசலை பார்த்து கேட்டார் முதல் கேள்வியாக.
“நான் பஸ்ல தான் த்தை வந்தேன், அவருக்கு நாளைக்கு ஏதோ பெரிய ஆர்டர் இருக்காம், அதான் நாளைக்கு வர என்னால வெயிட் பண்ண முடியாதுன்னு வந்துட்டேன்”
கண்களை சென்றடையாத சிரிப்பை முகத்தில் தேக்கி நிற்கும் மருமகளிடம் மறு கேள்வி கேட்கும் முன்பே, “ஏனுங்க மஹாராணி வந்துட்டீங்களா…” என சேர்மத்தாய் வந்து நின்றார்.
“மஹாராணி இல்ல… நான் பட்டது இளவரசி… என் செல்ல ராஜமாதாவுக்கு நான் என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் தெரியுமா?” அவர் கன்னம் கிள்ளி கொஞ்சியவள் கையை தட்டிவிட்டார் பெரியவர்.
“என் மகனையும் மருமகளையும் உன் கைக்குள்ள போட்டது பத்தலையோ உங்களுக்கு…” குத்தலாக பேசியவர் அவளுடைய வாடிய முகத்தை பார்க்கவே இல்லை, “மயக்கி என்ன பயன்? இந்த வூட்டுக்கு வாரிச பட்டது இளவரசியால குடுக்க முடியலையே கண்ணு… ஏன் மருமவளே?”
மஹாலக்ஷ்மியை பார்த்தவர், “ஜாதகம் பாத்துப்போட்டு தான இந்த கலியாணம் நடந்துச்சா இல்ல உம்ம மருமவளுக்காக அதையும் பாத்தாச்சுன்னு என்ற காதுல நூலை சுத்துணியலா?”
“அத்த என்ன அத்த இது? புள்ள மனசு நோகடிக்காதிங்க”
அவர் வார்த்தைகளை கேட்ட மஹாலக்ஷ்மிக்கே கண்ணீர் பெருக்கெடுக்க வைஷ்ணவியோ பெருகிய அழுகையை சிரிப்பை வைத்து மறைத்து, “கிழவிக்கு குசும்பு ஜாஸ்தி”
அவருக்காக வாங்கிய காட்டன் சேலையை அவர் கையில் கொடுத்து, “நான் அம்மாவை பாத்துட்டு வர்றேன்” பொதுவாக செய்தியை கூறி அன்னை வீட்டிற்கு ஓடினாள். அன்னையிடம் சம்ரதாயத்திற்காக பேசியவள் சில நிமிடங்கள் அங்கிருந்து கார்த்தியின் வீட்டிற்கு வந்த பொழுது சுப்பிரமணி இருந்தார் இல்லத்தில்.
“என்ன மாமா இன்னைக்கு ஏன் இவ்ளோ லேட்?”
“ஸ்கூல்ல கொஸ்டின் பேப்பர் வந்தது ம்மா, அதான் சைன் போட்டு வாங்கி வைக்க போனேன், நீ எப்போ வைஷ்ணவி வந்த?”
“அப்பயே வந்துட்டேன் மாமா அம்மாவை பாக்க போனேன்” மஹாலக்ஷ்மி மருமகளை உண்ண அழைத்தார்.
மருமகள் விரும்பி உண்ணும் உருளைக்கிழங்கு குருமாவுடன் தோசை செய்திருக்க அவளோ ஒரு தோசையோடு வயிற்று வலி என காரணம் கூறி மேலே சென்றதும் கணவனிடம் தன்னுடைய அத்தை வைஷ்ணவியிடம் பேசியதை கூற ஆத்திரப்பட்டவர் அன்னையை இது போல் பேசவே கூடாதென கடுமையாய் எச்சரித்து வைத்தார். அதன் பிறகு சேர்மத்தாய் வைஷ்ணவியிடம் பேசுவதே இல்லை.
அவளும் மனதின் வேதனை அத்தனையும் மறைத்து ஷெர்லினுக்கு உதவி செய்கிறேன் என கூறி முக்கால்வாசி நேரம் அவள் வீட்டிலேயே இருக்க அதற்கும் ஜாடை மாடையாக சேர்மத்தாய் பேச தங்கள் அறைக்குள் சென்று கண்ணங்களை மூடி கணவனை முடிந்தமட்டும் திட்டி தீர்த்துவிடுவாள் அழுகையோடே.
ஆறு மாதமாக கணவனின் கை சிறையில் இருந்தவளுக்கு இரவில் இருளும் தனிமையும் துணையாகி போக தலையணையை அணைத்து நடு நிசியை தாண்டிய பிறகும் தூக்கம் வராமல் திண்டாடிப்போனாள்.
தீண்டலும், கொஞ்சலுமாய் எந்நேரமும் அவளை பித்தாக்கி வைத்திருந்தவன் அருகாமை வேண்டி மனம் ஊமையாய் அழுக, அவன் மேல் கட்டுக்கடங்காத ஆத்திரம் தான் வரும்.
அதே சமயம் கார்த்தியோ பல முறை, “அம்மா மட்டும் உண்ண பாக்கலனா இந்நேரம் நான் உன்ன மிஸ் பண்ணிருப்பேன்ல டா?” என வருத்தத்தோடு அவள் முகம் பார்த்து கேட்ட பொழுது, “விடுங்க கார்த்தி” என அமைதியாக்கிவிடுவாள்.
எத்தனை முறை இது பற்றி பேசியிருப்பேன் அப்பொழுது கூட என்னால் தான் இந்த திருமணம் நடந்தது என உண்மையை கூறியிருக்கலாம் அல்லவா? அதை விட்டு பித்தன் போல் என்னை புலம்பவிட்டு வேடிக்கை தானே பார்த்துளாள் என்ற கோவம் அவனுக்கு.
அதோடு விட்டாளா? சுபத்ரா விசயமும், அவள் அறைந்ததும். அந்த சிறிய கைகளால் அடித்த பொழுது கூட வலி இல்லை என்றாலும் ஏதோ ஒன்று இன்னும் பேசினால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வளர்ந்து உறவில் விரிசல் வர கூடாதென்று தான் உடனே செங்கோட்டை வந்து விட்டது மனைவியை.
வைஷ்ணவி சென்ற அந்த நாள் இரவே மனைவி இல்லாமல் அவனுக்கும் உறக்கம் வராமல் தான் போனது, அதனால் தான் மறுநாள் நண்பன் திருநெல்வேலி செல்ல வேண்டும் என்று அழைத்த பொழுது அவள் மேல் இருந்த கோவத்தை தணிக்க மாற்று வழியாய் கருதி சென்றுவிட்டான்.
அங்கு சென்ற நான்கு நாட்களும் நிற்க கூட நேரமில்லாமல் அவனுக்கு ஓட மனைவியை வார்த்தைகளால் வதைத்தது கூட மறந்து போனது. சிவந்த விழிகளோடு தன் தோளில் சாய்ந்தவளின் வாடிய முகம் மட்டுமே கணவன் முகத்தை அரித்தது.
அப்பொழுது தான் திருநெல்வேலியில் இருந்து வந்த கார்த்தி வீட்டின் கதவை திறக்கும் பொழுது குறுந்செய்தி வந்த சத்தம் கேட்டு எடுத்து பார்க்கும் பொழுது, மனைவியிடமிருந்து எண்ணென்ற செய்திகள் வரிசைகட்டி வந்து நின்றது.
‘சாரி’ ‘சாரி’ என நூற்றுக்கும் மேற்பட்ட மன்னிப்புகள், அது மட்டுமல்ல, ‘என்கிட்ட பேச மாட்டிங்களா கார்த்திக்?’ என இறுதியாக அவள் அனுப்பியிருந்ததை பார்த்தவன் உடல் மொத்தமும் செயல் இழந்து கண்களை மூடி கதவில் தலை வைத்து அசையாது நின்றுவிட்டான்.
ஐந்து நாட்களாக வீட்டிலிருந்து தந்தை, அன்னை, சகோதரி அழைத்தாலும் பேசாதிருந்தவன் தந்தையிடம் வேலை இருப்பதாக கூறி பேச்சை முடித்துவிட்டான். அன்னையிடம் பேசவே இல்லை, அவர் மேலும் சிறு கோவம். தற்பொழுது தன்னவள் அனுப்பியிருப்பது சிறிய செய்தியாகவே இருந்தாலும் அவளது ஏக்கத்தை மொத்தமாய் அதில் இறக்கியிருந்தாள்.
அவளிடம் ஓடி சென்றடைய வேண்டிய இதயத்தை ஆணின் சோர்வு தடுக்க, மனதை திடப்படுத்தி கதவை திறந்து உள்ளே வந்து வெந்நீரில் நீண்ட குளியல் ஒன்றை போட்டான்.
சோர்வோடு வீடு மொத்தமும் நிறைந்த மனைவியின் வாசனையும், குரலும் படுக்கையில் அவனை வீழ்த்திய தருணம் தந்தையின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்தவன், “நாளைக்கு பேசுறேன் ப்பா” என்றான் கெஞ்சலாக.
“அப்பா பேசுனா கேப்ப, அம்மா போன் பண்ணா எடுக்க மாட்டியா ப்பா?” மனந்தாங்களுடன் அன்னை பேசவும் உடலிலிருந்து சோர்வெல்லாம் பறந்தது கார்த்திக்கு.
“வேலை அதிகம் ம்மா…”
“அம்மாகிட்ட பொய் சொல்ல வேணாம் கார்த்தி, எனக்கு உன்ன பத்தி தெரியாதா?”
“தெரிஞ்சும் ஏன் ம்மா இப்டி பொய் சொல்லி கல்யாணம் பண்ணனும்?”
“அதுக்கான காரணத்த வைஷ்ணவி கூட நீ வாழ்ந்த ஆறு மாசம் வாழ்க்கை சொல்லிருக்குமே ப்பா” நெற்றி பொட்டில் அடித்தது போல் திடுக்கிட்டது கார்த்தியின் கண்கள்.
“அம்மா…”
“அம்மா தான் ப்பா… உன்னோட அம்மா தான். அதுக்காக தான் ஆயிரம் பொய் சொல்லி யார் கூட இருந்தா நீ சந்தோசமா இருப்பியோ அந்த பொண்ணு கூட உன்னோட வாழ்க்கையை அமைச்சு வச்சேன்”
கண்களை மூடி திறந்தவன், “என்னைக்குமே என்னோட வைஷ்ணவியை கல்யாணம் பண்ணதுக்கு நான் வருத்தப்படல ம்மா… இந்த ஆறு மாசத்துல நூறு தடவையாவது உன்ன மிஸ் பண்ணிருப்பேன்ல வைஷ்ணவின்னு நான் பீல் பண்ணப்ப எல்லாம் எதுவும் பேசாம அமைதியா இருந்தா.
இப்போ இந்த விசியம் எனக்கு தெரியாம இருந்தா காலம் எல்லாம் பைத்தியம் மாதிரி இத சொல்லி நான் பொலம்புறப்ப நீ பேசிட்டே இருடா கிறுக்குனு தானே விட்ருப்பா? இந்த மாதிரி நான் முட்டாள் ஆகுறதுக்கு நீங்க வேற பொண்ண பாத்துருக்கலாம்”
மனதிலிருந்து வரவில்லை அந்த வார்த்தை, ஆனால் அதை சொல்லும் பொழுது மனைவியின் முகம் கண் முன்னே விரிய, முகத்தை மூடி தலையை கவிழ்த்துவிட்டான்.
“இதுக்கு தான்… இதுக்கு தான் ப்பா அந்த புள்ள சொல்லாம இருந்துருக்கும். வைஷ்ணவியை பத்தி உனக்கு தெரியுமோ இல்லையோ, உன்ன பத்தி என் மருமக உங்க கல்யாணம் முன்னாடியே நல்லா தெரிஞ்சு வச்சுருக்கா. அவ மேல உனக்கு ஆசை இருந்தாலுமே உன் மனச மறைச்சு நாங்க சொல்லற பொண்ண கல்யாணம் பண்ணிப்பன்னு தான் மறைச்சோம்”
“சரி… இப்போ சொல்லிருக்கலாமே?” தன்னை மொத்தமாய் புரிந்துகொண்ட மனைவியை எண்ணி கர்வமாகவும் இருந்தது.
“சொல்லிருந்தா? என்கிட்ட இப்போ சொன்னியே வேற பொண்ண பாத்துக்கலாம்னு… ஈஸியா நீ பேசிறுப ஆனா அவளா அத தங்கிருக்க முடியாது” கார்த்தி பக்கம் கனத்த அமைதி.
மஹாலக்ஷ்மியிடமிருந்து கைபேசியை வாங்கியிருந்த சுப்பிரமணி, “உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரிய வேணாம், ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் கார்த்தி, நம்ம வீட்டுல வாழுற பொண்ணுங்க மனசு எவ்வளவு சந்தோசமா, குளிர்ச்சியா இருக்கோ அத பொறுத்து தான் அந்த வீட்டோட சந்தோசம் இருக்கும். வைஷ்ணவி முகமே வாடிகெடக்குது தம்பி. சந்தோசமா சிரிச்சிட்டு இருந்த பொண்ணு ரூமே கதின்னு இன்னைக்கு அடைஞ்சு கெடக்குறத பாக்குறப்ப தப்பு பண்ணிட்டோமோன்னு தோணுது…”
“அப்பா…” என்றான் கார்த்தி வேகமாக.
“இதெல்லாம் பிரச்சனைன்னு சொல்லி அந்த பொண்ண வீட்டுக்கு வந்து விட்டுட்டு போறது நல்லாவா இருக்கு? வாழ்க்கையோட முதல் கட்டத்துல தான் இருக்க, இன்னும் இத விட பெரிய சவாலை எல்லாம் நீ சந்திக்கணும். அந்த நேரத்துல எல்லாம் நானோ, உனக்கு பொறக்க போற குழந்தையோ கூட நிக்காது, உன் மனைவி மட்டும் தான் உறுதுணையா நிப்பா. சின்ன பிரச்னைக்கே இப்படியா ஆளுக்கொரு திசைல இருப்பிங்க?” மெல்ல அவர் காட்டத்தை காட்டினார்.
“அம்மா வேற வைஷ்ணவியை மனசு நோகுறே மாதிரி வார்த்தைய விட்டுட்டாங்க. தான் மனைவி மேல தப்பே இருந்தாலும் அவ கூட நின்னு ஊரையே எதிர்த்து அப்றம் அவளுக்கு புரிய வைக்கிறவன் தான் தம்பி உண்மையான ஆம்பள… விட்டுட்டு போறவன் இல்ல”
மகன் யோசிப்பதை தெரிந்தவர், “வைக்கிறேன்” என வைத்துவிட்டார்.
கட்டிலில் சரிந்தவனுக்கு தந்தை, தாய் வார்த்தைகள் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்க தன்னையே அறியாமல் நெடு நேரத்திற்கு பிறகே கண்ணயர்ந்தான்.
வைஷ்ணவிக்கோ தூக்கமே வரவில்லை, எத்தனை முறை தான் மன்னிப்பு கேட்பது? அவனோடு பேச, அவன் குரல் கேட்க, அவன் கைகளில் சிக்குண்டு மாட்டி இன்ப வெள்ளத்தில் தத்தளித்து கூடி வாழ ஆசை எழுந்தது.
ஆனால் அவன் தான் அவள் செய்திகள் அத்தனையையும் பார்த்தும் பதில் பேசவில்லையே, இன்னும் கோவம் போகவில்லையா என வருத்தத்தோடே உறங்கிப்போனாள்.