அந்த மெத்தை கட்டிலில் நடுநாயகமாய் தளர்ந்த உடலோடு ஆசுவாசமாய் படுத்திருந்தான் ஜேகோப். காதில் வொயர்லெஸ் ப்ளுடூத் சொருகியிருக்க, அதன் வழியே அன்னையின் கண்ணீர் சத்தத்தை கேட்டுக்கொண்டிருந்தான் அவன்.
“மாம்மி? வாட் இஸ் திஸ்?நான் இந்தியா போகணும்ன்னு அவ்ளோ அழுதீங்க! சரின்னு இப்போ இந்தியா வந்து படுத்திருக்கேன், இப்போ என்னன்னா இந்தியா விட்டு கிளம்பி வான்னு அழறீங்க? ஆட்சுவலி வாட் இஸ் யுவர் இஸ்ஸூ?”
நிஜமாகவே அன்னையின் இந்த கண்ணீரும், ‘திரும்பி வா’ என்ற பேச்சும் மெலிதான எரிச்சலை தான் கிளப்பியது ஜேகோபிற்கு. அவனை அப்போதே விட்டிருந்தால், இந்நேரம் எந்த நாட்டு கடலில், கப்பலின் மேல் ஜாலியாக மிதந்துக்கொண்டிருந்திருப்பானோ? அதையெல்லாம் விட்டுவிட்டு அன்னைக்காக இந்தியா வந்து இப்போது அவர் வீட்டினரிடம் பேச்சு வாங்கி உள்ளே நுழைந்து ‘அப்பாடா’ என மூச்சுவிட்டால், ‘இந்தியால இருந்தது போதும், கிளம்பி வா’ என மீண்டும் அழுகை, ஆர்ப்பாட்டம்!
“எனக்கு என்ன தெரியும், உன்னை இப்படி எல்லாம் பேசுவாங்கன்னு!” மூக்கை உறிஞ்சிக்கொண்டே தேவகி கேட்க, “என்ன பேசுனாங்கன்னு எப்டி தெரியும் உங்களுக்கு?” என்றான் அவன்.
“எல்லாம் தெரியும்! தேவி போன் பண்ணுனா, நான் எல்லாரும் கத்துனப்போ கேட்டுட்டு தான் இருந்தேன்!”
“ஓ! சரி அதுக்கென்ன இப்போ?”
“என்ன இப்படி கேட்குற? உன்னை என் அண்ணன் எப்படி எல்லாம் பேசுனான் பாரத்தீல? மரியாதை இல்லாத இடத்துல நீ ஏன் அவமானப்பட்டு இருக்கணும்! அதுக்கு தான் சொல்றேன், கிளம்பி வா!”
“உப்ப்!” புரியாமல் பேசினால் புரியவைக்கலாம். புரிந்தே பேசும் ஆளுக்கு என்னவென்று விளக்க என்று தெரியவில்லை அவனுக்கு. (Zolpidem)
“மாம்? உங்களுக்கு என்னை இந்தியா அனுப்பணும்ன்னு தோனும்போதே இங்க இருக்க உங்க வீட்டு ஆளுங்க எப்படி பிகேவ் பண்ணுவாங்கன்னு தெரியுமா தெரியாதா?” மறுமுனையில் மூக்கை உறிஞ்சும் சத்தம் மட்டுமே ஹெவியாக வந்தது.
“என்னை இன்சல்ட் பண்ணுவாங்க, திட்டுவாங்க… இதெல்லாம் தெரிஞ்சே தானே அனுப்பி வச்சீங்க?” ஜேகோப் கேட்க, உண்மை அதானே?! அவர் குடும்பத்தை பத்தி நன்கு தெரிந்தும் தானே அவனை அனுப்பி வைத்தது. ஆனால், கற்பனையில் பெரிதாய் பாதிக்காத ஒன்று, நிகழ்காலத்தில் உணரும்போது வலிக்கிறதே!
தேவியின் அலைபேசி வழியே அங்கே நடந்த பேச்சுவார்த்தையை செவிக்கொண்டு கேட்ட தேவகிக்கு தான் மகனை அங்கே அனுப்பியிருக்கவே கூடாது என்று தான் தோன்றியது. தன்னை அவமானப்படுத்தினால் பொறுத்துக்கொள்ளலாம்! கணவனை அவமானப்படுத்தினால் வருத்தப்படலாம்! அதுவே மகன் என வரும்போது அவருக்கு வலித்தது. சம்பந்தமே இல்லாமல் அவன் ஏன் பேச்சு வாங்க வேண்டும் என்ற எண்ணம்!
“அப்பாக்கிட்ட குடுங்க” தேவகி மூக்கை மட்டுமே உறிஞ்ச, கடுப்பானவன் தந்தையிடம் போனை தர சொன்னான்.
“இயா பப்பூ… இஸ் எவ்ரிதிங் ஓகே?” ரிச்சர்ட் லைனில் வர,
“சூப்பர் கூல் டேட்! தென், லெட் மீ ஸ்டே ஹியர், அட்லீஸ்ட் ஃபார் எ வீக்… கிளியர்லி கன்வே திஸ் டு யுவர் ஃவைப்… ஷி இஸ் ஜஸ்ட் பெஸ்ட்ங் மீ!”
(என்னை இங்க ஒரு வாரம் மட்டும் தங்க விடுங்க… அம்மா என்னை ரொம்ப தொல்லை பண்றாங்க, அவங்கக்கிட்ட நீங்களே இதை தெளிவா சொல்லிடுங்க) அன்னையின் தொல்லை தாங்கவில்லை என தந்தையிடம் புகார் படித்தான் ஜேகோப்!
சிரித்துக்கொண்டே, “யூ கேரி ஆன் பப்பூ” என்ற ரிச்சர்ட் அடுத்த சில நிமிடங்கள் அவனிடம் எதேதோ சிரிக்க சிரிக்க பேசிவிட்டு வைத்தார்.
தந்தையிடம் சிரிக்க சிரிக்க பேசிவிட்டு அதே நல்ல மனநிலையுடன் அப்படியே படுத்துக்கிடந்தான் ஜேகோப்.
மாலை மணி ஆறை நெருங்கியபோது, தூக்கமும் அவன் கண்களை நெருங்கியது.
‘ஜெட்லாக்’
இந்தியாவை விட நான்கு மணிநேரங்கள் முன்னே செல்லும் ஆஸ்திரேலிய நேரத்திற்கு பழகிய அவன் கண்கள் சொருகி உறக்கத்துக்கு கெஞ்ச,
கண்களை மூடிக்கொண்டு அப்படியே படுத்துக்கிடந்தவனுக்கு சில மணிநேரங்களுக்கு முன் அவன் இந்த வீட்டிற்குள் நுழைந்த நிகழ்வு நினைவில் வந்துப்போனது.
வீரய்யன் திடீரென வந்து அவனை வீட்டிருக்கு அழைத்துப்போக, முதலில் அதிர்ந்து நின்ற பரமேஸ்வரன் பிறகு சுதாரித்து, வேகமாய் அவர் குறுக்கே சென்று நின்றார்.
“நில்லுங்க ப்பா! நீங்க என்ன பண்றீங்கன்னு புரிஞ்சு தான் பண்றீங்களா?” அவர் முதன்முதலாய் தன் வாழ்நாளிலேயே தந்தையின் முன்னே குரல் உயர்த்துகிறார். ஆனால், அதை கூட உணராத அளவு கோபம் கண்ணை மறைத்துக்கொண்டிருந்தது.
“ஏன் என்னை பார்த்தா புத்தி பேதலிச்சவன் மாறி இருக்கா?” கடுகடுவென கேட்டார் வீரய்யன்.
“புத்தி பேதலிச்ச மாறி இல்லை… பழசை எல்லாம் மறந்த வியாதி வந்த மாதிரி இருக்கு… பட்ட அவமானம்… செஞ்ச துரோகம்… ஏமாத்துன வலி… இது எல்லாத்தையும் ஒரே நாள்ல துடைச்சு வீசுன மாறி இருக்கு” பரமேஸ்வரன் சொல்ல, அவர் வார்த்தைகள் கொடுத்த உணர்வில் சமைந்து நின்றார் வீரைய்யன். இப்போது நினைத்தாலும் மகள் ஏமாற்றிவிட்டு சென்ற வலி நெஞ்சை கிழிக்கிறது. ஆனாலும், அவர் கரத்தில் கோர்த்திருந்த தன் ரத்தத்தின் வாரிசு அதையெல்லாம் தள்ளி வைக்க சொல்லி அவருக்கு கட்டளையிட, திரும்பி ஜேகோபின் முகத்தை பார்த்தார் அவர்.
ஜேகோப் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டிருந்தான் தன் தாத்தனை. புகைப்படத்தில் பார்த்தது தான். நேரிலும் அந்த கம்பீரம் குறையவில்லை. ஆனால் மெலிதான தள்ளாட்டம், நடுக்கம் தெரிந்தது. ஆனால், அன்னை விவரித்திருந்த ‘கடுவன் பூனை தாத்தா’ இவர் அல்லவே! என்றே தோன்றியது அவனுக்கு.
தேவகி அவனிடம் தன் தந்தையின் கோபத்தை, இலகா தன்மையை, கடுமையை விலாவாரியாக விவரித்து ஒரு பிம்பம் கொடுத்திருக்க, அது எதிர்ப்பதமாய் ஜேகோபின் கண்களுக்கு தெரிந்தார் வீரைய்யன். மாமனை விட தாத்தன் தான் ‘கொடூரப்புலி’ என்றிருந்தார் தேவகி. ஆனால், பரமு குதிக்க, தாத்தன் இவனை வீட்டுக்கு அல்லவா அழைக்கிறார்.
தன் மனதில் தேவகி வரித்திருந்த பிம்பத்தோட கண்முன்னே நிற்கும் பிம்பம் முரண்பட, அது கொடுத்த ஆச்சர்யத்துடன் அவன் தாத்தனை பார்க்க, அவனுக்கு தெரியவில்லை, தேவகி வரித்த ‘தந்தை வீரைய்யன்’ அதே கொடூர புலி தான் என்று! ஆனால், அவன் முன்னே நிற்ப்பது ‘தாத்தன் வீரைய்யன்’ ஆயிற்றே!
பிள்ளைகளிடம் கடும் முகம் காட்டும் எல்லா தந்தையுமே தாத்தனாக மாறும்போது கனிந்து விடுகின்றனரே! அதற்கு வீரைய்யன் மட்டும் விதிவிலக்கா என்ன!?
ஜேகோபின் முகத்தை பார்த்த வீரைய்யன், அவன் கரத்தை இன்னும் அழுத்தமாய் பற்றிக்கொண்டு வீட்டிற்குள் அழைத்துப்போக, உண்மையாய் பரமேஸ்வரனுக்கு நடப்பதை நம்பவே இயலவில்லை. தன்னை விட தங்கை மீது அதிக கோபத்துடன் இருந்த ஒருவரால் எப்படி ஒரே நாளில் அத்தனையும் மறந்து ஏற்றுக்கொள்ள முடிந்தது என்று!
நடமாட்டம் இன்றி படுத்துக்கிடக்கும் மனைவி, வீரைய்யனின் வீம்பை எல்லாம் தூக்கி எறிய வைத்துவிட்டார் என பரமு அறியவில்லை.
ஜேகோப் உள்ளே சென்றிருக்க, அதை பின்பற்றி வீட்டின் மற்ற உறுப்பினர்கள் உள்ளே போக, ஊர்க்காரர்கள் கூட வேடிக்கை முடிந்தது என கலைந்தனர். இறுதியில் அதே இடத்தில் சமைந்து நின்ற பரமுவின் தோளை தொட்டார் சத்தியநாதன்.
திரும்பிய பரமு, “பாரு சத்தியா? அவளை எந்த காலமும் வீட்டு படி ஏத்தக்கூடாதுன்னு மூச்சுக்கு மூச்சு சொல்லுவாரு! அவ சம்பந்தப்பட்ட பொருள் ஒன்னுக்கூட இருக்கக்கூடாதுன்னு அவ போட்டோ’ல இருந்து அவ ஆசையா வளர்த்த மாடு வரைக்கும் வீட்டை விட்டு தூர அனுப்புனாரு! அவரை பார்த்தே வளர்ந்த நான் பண்றது இப்போ தப்பா? எப்படி ஒரே நாள்ல எல்லாம் மாறும்?” சத்தியமாய் அவருக்கு விளங்கவில்லை.
“விடு பரமு… உனக்கு தங்கை’ன்னாஅவருக்கு மக இல்லையா? அந்த பாசம் இல்லாம போகுமா?”
“கைல புள்ளையோட வந்து வாசல்ல நின்னாளே… அப்போ எங்க போச்சு பாசம்? பொண்டாட்டிக்காக ஒருத்தன் கெஞ்சிக்கிட்டு வந்து நின்னானே… அவனை கழுத்தை புடிச்சு வெளில தள்ள வச்சாரே! அப்போ எங்க போச்சு கருணை? இப்போ பேரனை பார்த்தோனோ அப்படியே பொங்குதோ?” ஆதங்கமாய் கேட்ட பரமு,
“என்னவோ போ சத்தியா… கால் காணியா இருந்தாலும் சொந்த காணியா இருக்கணும்! அப்பாவோடதுன்னா என்ன, என்னுதுன்னா என்னன்னு பாகுபாடு பாக்காம இருந்ததுக்கு ஊரு முன்ன மூஞ்சில கரியை பூசுனாரு பாரு! இதே என் சொந்த இடம்ன்னா நான் இவனை எல்லாம் உள்ளே விட்டுருப்பேனா? இல்ல, எனக்குன்னு வேற போக்கிடம் இருந்துருந்தா மானங்கெட்டு இதுக்கு பிறகும் இந்த வீட்டுக்குள்ள தான் போவேனா?” தந்தையின் பேச்சு பரமுவின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.