பெருநகர மும்பை மாநகராட்சி நடு இரவில் அத்தனை ஒளிர்வுடன் மின்னிக்கொண்டிருக்க சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றது ஆடி கார்.
உள்ளே அமர்ந்திருந்தவன் கொஞ்சமும் நிதானமின்றி தெளிவில்லாத பார்வையுடன் சாலையை கூர்ந்து கவனிக்க முயன்றான்.
முயன்றானே தவிர முடியவில்லை. எத்தனை தான் வேகத்தை குறைத்து காரை ஓரங்கட்ட நினைத்தாலும் எல்லாம் கை மீறியது அந்த ஆள் அரவமற்ற சாலையில்.
அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்ட்ரியரிங்கில் மயங்கி தலைசாய கார் சீறிக்கொண்டு பக்கவாட்டில் இருந்த தடுப்பு சுவற்றை கடந்து இரும்பு கம்பியில் இடித்து அதை தாண்டி இருந்த பகுதிக்குள் நுழைந்து சுவற்றில் மோதி நின்றது.
அதை கூட உணரமுடியாதிருந்தவன் நெற்றியில் பலமாய் அடிபட்டு ரத்தம் சொட்ட சரிந்து லேசாய் திறந்திருந்த கதவில் விழுந்திருந்தான்.
அந்த கார் சுவற்றில் மோதிய நேரம் இன்னொரு தெருவின் வழியாக அந்த சாலைக்குள் நுழைந்த ஆட்டோவில் இருந்தவள் இந்த சத்தத்தில் ஆட்டோவை திருப்ப சொன்னாள்.
இங்கே ஹிந்தி பேச்சு மொழிகள் தமிழாக்கத்தில்…
“பையா ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. ப்ளீஸ். யாருன்னு தெரியலை…” என்று ஆட்டோ ஓட்டுனரையும் கெஞ்சி கூப்பிட்டுக்கொண்டு இறங்கியவள் அந்த காரை நோக்கி ஓட வேறு வழியின்றி அவளுக்காக சென்றார் அவரும்.
“நமக்கு தேவையில்லாத வேலைம்மா…” என்றும் சொல்லிப்பார்த்தார்.
வழக்கமாக அவளுக்கு ஆட்டோ எடுத்து வரும் அவருக்கு அவளை மறுத்தும், விட்டும் செல்லமுடியாத நிலை.
அதை எல்லாம் கருத்தில் கொள்ளாதவள் காரின் கதவை நன்றாக திறந்ததும் சரிந்து கீழே இருந்தவனை தாங்கிக்கொண்டாள்.
வேறு யாராவது அப்பக்கம் வந்திருந்தால் கூட காப்பாற்றிவிடுவார்கள் என்று விட்டுவிட்டு சென்றிருப்பாள்.
இருப்பதோ ஒரு குறுகலான சாலை. அதுவும் அதிகம் பயன்படுத்தப்படாத சாலை வேறு.
அங்கே அத்தனை வருடம் இருந்ததால் அவளுக்கு எல்லாம் நன்றாகவே தெரிந்திருந்தது.
இதுவே மெயின் ரோடென்றால் கூட இன்னும் சிலர் பார்த்திருக்க கூடும். இப்படி ஒரு விலையுயர்ந்த கார் இந்த பக்கம் எப்படி வந்ததோ? என்ற நினைவுடன் அவனை காரிலிருந்து மெல்ல இறக்கி ஆட்டோவிற்கு கொண்டுசென்றாள்.
முதலில் அவன் யாரென்று அவள் அறிந்திருக்கவில்லை. முகத்தில் ரத்தம் வழிந்திருக்க ஆட்டோவில் அவனை சாய்த்ததும் அவரிடம் தனக்கு தெரிந்த ஹாஸ்பிட்டலை சொல்லி போக சொல்லியவள் லைட்டை போட சொன்னாள்.
ஹேண்ட்பேக்கில் இருந்த வாட்டர்பாட்டிலை எடுத்து தனது சுடிதார் துப்பட்டாவில் நனைத்து அவனின் முகம் துடைத்து தலைக்கு கட்டு போட்டு அவசரமாக அவனுக்கு முதலுதவி போல செய்ய அப்போது தான் முகமே ஞாபகத்தின் வந்தது.
“ஷேஷா…” என்று முணுமுணுத்தாள்.
‘இவன் ஏன் தனியே? அதுவும் அத்தனை பாடிகார்ட்ஸ் இருக்கும் பொழுது இதென்ன இப்படி இவன் விழுந்திருக்கிறான்?’ என்ற எண்ணம் தோன்றும்பொழுதே தொடர்ந்த கசப்பான நினைவுகள்.
இவனின் துறையில் இப்படியெல்லாம் நடக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம் என நினைத்துக்கொண்டாள்.
அவளின் மனது அடித்து சொன்னது நிச்சயம் இது கொலை முயற்சியாகவும் கூட இருக்குமென்று.
நினைத்ததும் உடனே மனது படபடக்க அவனின் நாடித்துடிப்பை அவசரமாக பரிசோதித்தாள்.
“நல்லவேளை உயிர் இருக்குது…” என்று நிம்மதியானாள்.
அவனின் அறக்கட்டளை மூலம் எத்தனை எத்தனை பேர் வாழ்கிறார்கள். ஏற்கனவே இருமுறை செய்தியில் இப்படி ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறாள் தான்.
அந்த அறக்கட்டளையை பற்றி நினைக்கும் போதே சொல்லொண்ணா நினைவுகளும் படையெடுக்க நெகிழ்ந்து கலங்கவிருந்த மனதை கட்டி நிறுத்தினாள்.
அதற்குள் மருத்துவமனை வந்துவிட அவனை உள்ளே அனுமதிக்க செய்து கூடவே இருந்தாள்.
ஆட்டோ ஓட்டுனருக்கு பணத்தை தர அதை வாங்கிக்கொண்டவர் அவளை கவலையுடன் பார்த்தார்.
“இது உனக்கெதுக்குமா? நாளைக்கு போலீஸ் கேஸ்ன்னா உன்னால அலைய முடியுமா?…” என அக்கறையுடன் கேட்க,
“ஒரு நல்லது செய்யறதுக்கு இப்படி யோசிக்க கூடாது பையா. இன்னைக்கு இவர் பிழைச்சா நிறைய குடும்பத்துக்கு நன்மை. எனக்கு தெரிஞ்சவர் தான்…” என பேசினாள்.
“எனக்கொரு உதவி செய்யனும் பையா. இப்படி ஒருத்தரை இங்க சேர்த்ததை பத்தி யாருக்கும் சொல்லிற வேண்டாம்…”
“அதெப்படிம்மா தெரியாம போகும்? அந்த கார் இருக்குது. கூடவே கேமரா இருக்குது…”
“இல்ல பையா அது இருட்டு. நம்மளை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. அதோட அந்த கேமரா, ஹ்ம்ம். பார்த்துக்கலாம். ஆனாலும் நீங்க எங்கயும் நீங்களா சொல்ல வேண்டாம்…”
“சரிம்மா, ஆமா நீ வீட்டுக்கு?…”
“இல்ல நான் கூட இருக்கேன். நாளைக்கு நானே பஸ் பிடிச்சு போய்க்கறேன்…”
“அட என்னம்மா நீ? கிளம்பறப்போ சொல்லு. நானே வந்து அழைச்சுக்கறேன்…” என சொல்லிவிட்டு கிளம்பினார்.
அவர் சென்றதும் ஒரு பெருமூச்சுடன் உள்ளே வந்தவள் நீளமாக போடப்பட்டிருந்த அந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டாள். உடையில் திட்டுத்திட்டாக குருதி கறைகள்.
இரண்டு அறைகள் கொண்ட சிறிய மருத்துவமனை. ஆனால் சிறந்த சிகிச்சை என்பதில் தரமானது. அதனால் தான் இங்கே அவள் கொண்டுவந்தது.
மேலும் தெரிந்ததும் கூட என்பதால் கேள்விகள் இருக்காது என்று நினைத்து தன்னுடைய உறவினர் என்று சொல்லியே சேர்த்திருந்தாள்.
நினைத்ததை போலவே உயிருக்கு மதிப்பளித்து அவளையும் அறிந்திருக்க உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது அவனுக்கு.
இதில் இன்னொன்று அவனை அவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை தற்போதைய அவனின் முகம், சிகை மாற்றமாக கூட இருக்கலாம்.
எதுவோ ஒன்று அவன் காப்பாற்றப்பட்டால் மட்டும் தனக்கு போதும் என்று இருந்தது.
கண்ணை மூடியவளுக்கு நிம்மதி இல்லை. எதற்காக இப்படி நடந்திருக்கும் என்ற யோசனையில் இருந்தவளை நர்ஸ் அழைக்க எழுந்து சென்றாள்.
“உட்காருங்க நக்ஷத்ரா…” என்று அவளை பார்த்ததுமே அந்த பெண் மருத்துவர் அமர சொல்ல,
“டாக்டர் இப்போ அவருக்கு எப்படி இருக்கு?…” என்றாள்.
“இருக்குதும்மா. அதனால தான் அன்கான்ஷியஸ் ஆகிருக்காரு. இப்ப அதுக்கு தான் ட்ரீட்மென்ட் பண்ணிருக்கேன்…” என்று சொல்லும் பொழுதே கஷ்டமாக போனது.
அவள் அறிந்தவரை ஷேஷா நிச்சயம் ட்ரக் எடுப்பவன் இல்லையே? என்று ஒருமனம் அடித்து கூறினாலும் இன்னொரு மனமோ இவை எல்லாம் அவன் பார்க்காததா? இல்லை அவனை அந்தளவுக்கு அந்தரங்கமாக தெரிந்திருப்பவளா நீ? என மனது எக்காளமிட்டது.
இல்லையே, அவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவன் எப்படி என்று யாருக்கும் தெரியாதே? என்ற எண்ணங்கள் சூழ அவள்.
“நாளைக்கு மார்னிங் கண் முழிச்சிடுவார். அந்த ரூம்லயே அட்டண்டர் பெஞ்ச் இருக்குது. நீங்க யூஸ் பண்ணிக்கோங்க…” என்று சொல்லி அவர் சொல்லவும் எழுந்து வெளியே வந்தாள்.
வந்தவள் அவன் படுத்திருந்த அறைக்குள் நுழைய தலைக்கு கட்டு போடப்பட்டு வலது கையிலும் கட்டு போட்டிருந்தது. கையிலயும் ப்ராக்ச்சரா இருக்குமோ? என்றபடி அருகே வந்தாள்.
‘இவன் இப்படி ஒரு மருத்துவமனையில் இருப்பான் என்று யாரேனும் நம்புவார்களா? அவனே எழுந்து பார்த்தால் என்ன நினைப்பானோ?
தன்னை பார்த்தால் கண்டுகொள்வானோ? தன்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் கண்டுகொண்டால்?
தன்னை குனிந்து பார்த்துக்கொண்டாள். மிக மோசமில்லாத உடை தான் என்றாலும் வெகு சாதாரண காட்டன் சுடிதாரும், நலுங்கிய துப்பட்டாவும். அதிலும் பலமுறை துவைத்து சாயம் போயிருந்தது.
எல்லாவற்றுக்கும் மேல் தன்னுடல். பொலிவிழந்து தோல் ஒட்டி மெலிந்து போய் நிறமும் மாறி பால் வண்ணம் தூசிபடிந்ததை போல மாறிவிட்டிருந்தது.
நிச்சயம் தன்னை அடையாளம் தெரியாது. வாய்ப்பே இல்லை. தன்னை அப்படி பார்த்துவிட்டு இப்படி பார்க்கும் போது அடையாளம் தெரிய வாய்ப்பே இல்லை என்று நினைத்துக்கொண்டாள்.
அதன் பின்னரே ஒரு நிம்மதி தோன்ற அந்த பெஞ்சில் தனது பேக்கை வைத்தவள் அதில் தலைவைத்து உறங்க முயன்றாள்.
முன்னை போல எல்லாம் எதையும் நினைத்து அழுது புலம்பவே அவளுக்கு விருப்பமில்லை.
அழுதால் தொண்டைக்கட்டும். முதலுக்கே மோசம் போல அவளின் குரல் ஒன்றே அவளின் வாழ்வாதாரம்.
அதையும் கெடுத்துக்கொள்ள முடியுமா? மறுநாள் வேலை இல்லை. அதனால் கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது.
திடுக்கென்று எழுந்தவள் தன்னிடம் எவ்வளவு இருக்கிறதென கணக்கிட ஆரம்பித்தாள்.
ஓரளவு கணிசமான தொகை தான். ஒருத்திக்கு என்ன செலவிருந்துவிட போகிறது? வாங்கிய சம்பளம் அத்தியாவசிய தேவைகளை தாண்டி அவளுக்கு நன்றாகவே மிச்சம் இருந்தது.
எனவே நாளைக்கே அவனுக்காக பில் செட்டில் செய்ய சொன்னால் மிரளாமல் தைரியமாகவே கட்டலாம் என்று நினைத்துக்கொண்டாள்.
கையில் அவசரத்தேவைக்கு பணமிருப்பதே ஒரு அசாத்திய நம்பிக்கையையும், தைரியத்தையும் தரும்.
நக்ஷத்திராவிற்கும் அப்படியே. மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது அவளிடம் இருந்த பணம்.
அதே நேரம் மனம் ஒரு குரங்கு என்றும் நிரூபித்தது அவளின் மனம். இந்த செலவுகள் எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருந்ததா? இல்லையே.
இப்படி பார்த்து பார்த்து எண்ணி எண்ணி என்றுமே அவள் செலவளித்ததில்லையே.
மூடிய கண்களுடன் இப்படி நினைவுகளும் முன்னும் பின்னுமாக மாறி மாறி பயணிக்க களைப்பில் ஒருகட்டத்தில் உறங்கியும் போனாள்.
மறுநாள் காலை நர்ஸ் வந்து எழுப்பியதும் உடனே எழுந்தவள் அங்கிருந்த பாத்ரூமில் முகத்தை கழுவிவிட்டு பேக்கில் இருந்த சிறு டவலில் முகத்தை அழுத்தமாக துடைத்துவிட்டு நிமிர்ந்தாள்.
அன்று என்னவோ பழைய நினைவுகள் அப்படி அலைமோதியது. அதை கட்டாயமாக அடித்து துரத்தியவள் வெளியே வந்து நர்ஸ் தந்த டீயை குடிக்க ஆரம்பித்தாள்.
ஆற அமர மெல்லிய குரலில் அந்த நர்ஸுடன் ஹிந்தியில் பேசியபடி உரையாடியவளின் உள்ளுணர்வு எதையோ உணர்த்த திரும்பி ஷேஷா படுத்திருந்த இடத்தை காண அவன் விழித்தபடி அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவன் கண் விழித்ததுமே வேகமாய் எழுந்தவள் பதட்டத்தை குறைத்துக்கொண்டு நர்ஸிடம் சொல்லி மருத்துவரை வர சொல்லிவிட்டு அவனிடம் சென்றாள்.
ஒன்றும் பேசாமல் இன்னும் அவன் அவளையே பார்க்க நக்ஷத்ராவிற்கு அவனிடம் எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. தடுமாறி நிற்க அதற்குள் மருத்துவரும் வந்துவிட்டார்.