“அப்போ ஏன் இன்னைக்கு நக்ஷத்ரா இங்க வந்திருந்தா?…” என ஷேஷாவின் கேள்வியில் ஒருகணம் தடுமாறிய தன்ராஜ்,
“பணம் கேட்டுருந்துச்சு அந்த பொண்ணு. அதை வாங்க தான் வர சொல்லிருந்தேன்…” என சொல்ல உண்மையாக இருக்குமோ என்று எண்ணியபடி ஷேஷா யோசனையுடன் நிற்க,
“வேற எதுவுமா ஸார்? நான் வெளிய போகனும்….” என்று சொல்லவும் வெளியே வரவும் உடனே கதவை வெளிப்புறமாக பூட்டினான் தன்ராஜ்.
“ஸார், ஸார். போய்டாதீங்க, இந்தாளு பொய் சொல்றான். அந்தக்கா உள்ள தான் இருக்கனும்…” என ஆபீஸ்பாய் ஷேஷாவிடம் போய் மின்னல் வேகத்தில் மெதுவாக சொல்லிவிட்டு நகர்ந்து நின்றுகொண்டான்.
தன்னை பார்த்தால் தான் தான் காட்டிக்கொடுத்தது என்று தன்னை என்னவேண்டுமானாலும் செய்வான்.
அதே நேரம் வேலையும், கணிசமான சம்பளமும் போய்விடும் என்று அவன் தன்னையும் பார்த்துக்கொண்டான்.
“வரேன் ஸார்…” என கையாட்டிவிட்டு கிளம்ப,
“தன்ராஜ், ஒருநிமிஷம்…” என ஷேஷா நிறுத்தவுமே,
“எனக்கு வேலை இருக்கு ஸார்…” என்றான் அவன் நிற்காமல்.
“இருக்கட்டும். எனக்கு உங்க ஸ்டூடியோவை பார்க்கனுமே. ஒரு பெரிய ப்ராஜெக்ட் ப்ரடியூஸ் பண்ணலாம்னு இருக்கேன். அது சம்பந்தமா பேசலாம்…” என்று சொல்ல தன்ராஜ்க்கு இருதலைகொள்ளி நிலை.
நிச்சயம் ஷேஷா தன்னை போல ஒருவனிடம் தொழில் ஒப்பந்தம் வைத்துக்கொள்ள விரும்பமாட்டான் என்று தெரியும்.
அவனின் உயரமே வேறு. அப்படி இருக்க இப்படி கேட்பதே நக்ஷத்ரா விஷயமாக தெரிந்துகொள்ளத்தான் என்று தெளிவாய் புரிந்தது.
‘இவனுக்கு என்ன அவ மேல அப்படி ஒரு கண்ணு? நாளைக்கு வேணாலும் கூட்டிட்டு போயா. இன்னைக்கு விடேன்.’ என நினைத்துக்கொண்டு அவனை பார்த்தான்.
“வாட்?…” என்று ஷேஷா கேட்க மறுக்கவும் முடியவில்லை அவனால்.
மறுத்தால் நேரடியாக சட்டையை பிடித்துவிடுவானே. இப்போது அழைத்து உள்ளே சுற்றி காட்டினாலும் அந்த ரகசிய அறைக்குள் அவள் இருப்பதை இவனால் கண்டுகொள்ளமுடியாதே என்னும் தைரியத்தில் பான்பராக் கறை சூழ்ந்த பற்களை காட்டியவன்,
“வாங்க ஸார்…” என கதவை திறந்து உள்ளே அழைத்து சென்றான்.
மனது திக் திக் என்றாலும் கிஞ்சித்தும் அதை காட்டிக்கொள்ளவில்லை தன்ராஜ். வரவழைத்துக்கொண்ட ஒரு தைரியம். ஆபீஸ்பாயும் உடன் வர,
“நீ வெளில போ…” என தன்ராஜ் அனுப்ப முயன்றான்.
“ஏன்? அவன் இருக்கட்டுமே? என்ன இப்போ?…” என்ற ஷேஷாவின் குரலே அச்சமூட்டுவதாக இருந்தது.
ஷேஷா மட்டும் வந்திருந்தால் கூட இத்தனை பயம் இருந்திருக்காதோ? அவனுடன் ஆறுபேர் சுற்றி நிற்க நடுநாயகமாக ஷேஷா முன்னே வந்தான்.
ஒவ்வொரு இடமாக பார்த்துவிட்டு கடைசியில் தன்ராஜ் அலுவலக அறையை நெருங்க,
“பிஸ்னஸ் பேச ஆபீஸ் ரூம் தான் கரெக்ட். ஓபன் பண்ணுங்க…” என கையை கதவை நோக்கி நீட்டினான் ஷேஷா.
வேறு வழியின்றி கதவை திறந்துவிட்ட தன்ராஜிற்கு வியர்க்க ஆரம்பித்தது. முகத்தை துடைத்துக்கொண்டே உள்ளே சென்றவன்,
“உட்காருங்க ஸார்…” என்றான் ஷேஷாவிடம்.
“இருக்கட்டும்…” என அவ்விடத்தையே சுற்றி சுற்றி கவனித்தபடி இருந்தான்.
“ஹ்ம்ம், இந்த பில்டிங் நல்லா இருக்கே. மும்பைல மெயின் பில்டிங். இது சொந்த பில்டிங்கா? லீஸ் ஆர் ரென்ட்டலா?…” என கேட்டுக்கொண்டே அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் ஸ்டிக்கை எடுத்து சுவற்றை தட்டியபடி சுற்றி வந்தான்.
“இது பிரடியூசர் பில்டிங் தான் ஸார். நான் இங்க ரெக்கார்டிங் தியேட்டர் வச்சிருக்கேன். அவர் சேனல்ல ப்ரடியூஸ் பன்ற சீரியல்ஸ் கூடவே மத்த சீரியல்ஸ்க்கும் இங்க நாங்க டப்பிங் பண்ணி தருவோம்…”
சரளமாக ஷேஷாவின் கேள்விகளுக்கு தன்ராஜ் பதில் தந்தாலும் அந்த அறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஷேஷா கவனித்துவிட கூடாதே என்று ஓயாமல் அதை பார்க்கவும் ஷேஷாவை பார்க்கவுமாக இருந்தான்.
“கிருஷ்…” என கூப்பிட்ட ஷேஷா தன்ராஜ் பார்த்த பகுதியை சுட்டிக்காட்டி,
“அங்க என்ன இருக்குன்னு பார்…” என்றதும் க்ருஷும் அங்கிருந்த துணிகளை விலக்கி அவ்விடத்தை தட்டி பார்த்தான்.
“வால்(சுவர்) மாதிரி இருந்தாலும் இது வால் இல்லை பாஸ்…” என்று அவன் உடனே சொல்ல,
“தன்ராஜ், தன்ராஜ்…” என்று திரும்பிய ஷேஷா,
“ஐ வான்ட் நக்ஷத்ரா இமீடியட்லி…” என்று சொல்லவும் தன்ராஜ்க்கு தொண்டை உலர்ந்தது.
“ஸார், அங்க அவ இல்லை. அப்பவே போய்ட்டா…” என உளறினான்.
“என்னை பேச வைக்காத மேன். ஓரளவு இண்டஸ்ட்ரில என்னை நீ தெரிஞ்சிருப்ப தானே?…” என கேட்டபடி ஓங்கி அறைய அறைந்த வேகத்தில் உதடு கிழிந்து ரத்தம் சொட்டியது.
“ஸார்…” என நடுங்கிக்கொண்டே வேகமாய் தன் போனை எடுத்தான்.
“எனக்கும் ஆள் இருக்குது. சும்மா மிரட்டறீங்களா?…” என்றவனின் மொபைலை பறித்த கிருஷ் பவுன்சர்ஸ் பக்கம் பார்வையை திருப்ப அடுத்தநொடி தன்ராஜை அரை உயிராய் ஊசலாடவிட்டார்கள்.
“சொல்லிடறேன்…” என அவன் அலறியும் அவனை விடவில்லை.
அவனின் கதறலை கவனித்தபடியே சிறிதுநேரம் அவனை கத்தவிட்ட ஷேஷா அதன் பின்பு தான் பொறுமையாக பேசினான்.
“எனக்கே சுத்தி காமிச்ச தானே? அதுக்கு நீ அனுபவிக்க வேண்டாம்?…” என்றவன்,
“ஓபன் தி டோர்…” என்று சொல்லவும் மெல்ல நகர்ந்து தன்னிருக்கையில் அமர்ந்து கீழே ஒரு பட்டனை தட்ட அந்த அறை ஒரு ஆள் நுழையுமளவிற்கு திறந்துகொள்ள பாக்கெட்டில் கைவிட்டபடி நின்றிருந்தவன் வேகமாய் சென்று அங்கே பார்த்தான்.
“டேய் பரதேசி நாயே, லைட் எங்கடா?…” என ஆக்ரோஷமாக சுத்த தமிழில் கத்த,
“அங்க சைட்ல…” என்று காண்பித்ததும் கிருஷ் மொபைல் டார்ச்சில் அடித்து அவ்வறையை ஒளிரவிட்டான்.
“கிருஷ் அவுட்…” என்று வெளியேற சொல்லியவன் திரும்பி பார்க்க அங்கே கட்டிலோடு சேர்த்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயக்கத்தில் இருந்தாள் நக்ஷத்ரா.
“நக்ஷத்ரா…” என அவன் அழைப்பும் கூட காதில் ஏறாமல் துவண்டு இருந்தவளின் உடைகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டு இருந்தது.
ஏற்கனவே நைந்திருந்த உடை, ஒரு இழுப்பில் கிழிந்துவிட்டிருக்க அவனின் குரலை கூட அடையாளம் காணமுடியாமல் காலையும் இழுத்து மடக்கி உடலை குறுக்கினாள்.