“பயப்படாதே நான் தான், நான் தான்…” என்று சொல்லியபடி அவளின் வாயில் கட்டப்பட்டிருந்த துணியை அவிழ்த்து திணிக்கப்பட்டிருந்த துணியை வெளியே எடுத்துவிட,
“விடு, விடுடா…” என்று திமிற ஆரம்பித்தாள்.
கன்னம், கழுத்து என்று அடித்த தடமும், நகக்கீறலுமாக இருக்க அது அவளின் பலத்த போராட்டத்தை பறைசாற்றியது.
பார்த்தவனின் முகம் இறுகி போக மனதை திடமாக்கியபடி அவளை அந்த கட்டுக்களில் இருந்து விடுவித்து அவளின் முகத்தை ஏந்தினான்.
அந்த தொடுகையை கூட புறந்தள்ளியவள் அவனை கீழே தள்ள முனைந்து கைகளால் அவனை தாக்க,
“ஷக்தி, ஷக்தி. இட்ஸ் மீ. ஷேஷா…” என்று அவளின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு சொல்லவும் தான் சற்றே நிதானத்திற்கு வந்தாள்.
அதுவரை ஏதேதோ முணங்கியவள் மூடியிருந்த கண்களை திறக்க முயல முடியாமல் போனது.
இடது கண்ணை ஒட்டி என்னவோ கிழித்திருக்க கண்ணோடு வீக்கமும், ரத்தமும் சொட்டி கட்டியாகி இருந்தது.
“ஷக்தி என்னம்மா?…” என கன்னத்தை லேசாய் தாங்கவும்,
“ஸ்ஸ்ஸ்…” என்றவளின் வலி மிகுந்த குரலோடான விலகல் எல்லாம் ஷேஷாவிற்கு தன்ராஜ் மீது கொலைவெறியை உண்டுபண்ணியது.
“ஷக்தி கெட் அப். ஹ்ம்ம். பர்ஸ்ட் இங்க இருந்து போலாம்..” என கேட்டதும் அவனின் ஷர்ட்டை பற்றிக்கொண்டவளின் தீனமான முணங்கல் ஒப்புதலை தர அவளை தூக்கி நிறுத்த பார்த்தான்.
“கால், கால்…” என நிற்கமுடியாமல் துவண்டு மீண்டும் கீழே விழ போக அவளை அப்படியே கையில் தூக்கிக்கொண்டான்.
“இப்போ போய்டலாம்…” என்றவன் அப்படியே தூக்கி செல்ல முடியாமல்,
“இப்படி உட்கார்…” என கட்டிலில் அமரவைக்க போக அவனின் கழுத்தை கட்டிக்கொண்டாள் நக்ஷத்ரா.
“நோ நோ…” என்று அலறவும் தான் அந்த கட்டிலையே அவன் பார்த்தான். பார்த்தவனின் முகம் ரத்தமென ஜிவுஜிவுத்து போனது அதில் கிடந்தவற்றை பார்த்து.
“நோ, ப்ளீஸ். நோ…” என்றவளின் அனத்தல் இன்னும் அதிகமாக,
“ஓகே ஓகே…” என்று அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டவன்,
“கிருஷ், அங்க எதாச்சும் ஒரு க்ளாத் எடுத்துட்டு வா. ஜல்தி மேன்…” என்ற குரலுக்கு கிருஷும் வந்து துணியை கொண்டுவந்து ஷேஷாவோடு சேர்த்தே மூடினான்.
“இப்போ ஓகே ஓகே…” என்று சொல்லி திரும்ப அப்போது தான் அந்த அறையில் இருந்த சிசிடிவி திரையை பார்த்தான்.
வாசலில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் நடப்பவற்றை எல்லாம் பார்த்திருந்துவிட்டு தான் தன்ராஜ் தன்னிடம் வந்து வெளியே கிளம்புவதாக பேசியிருக்கிறான் என்று புரிந்தது.
நக்ஷத்ராவுடன் வெளியே வந்தவன் கிருஷை பார்த்து தன்னருகே வரும் படி தலையசைத்து அழைத்தான்.
“இவன் உயிர் மட்டும் தான் இருக்கனும். லாஸ்ட் பவன்கிட்ட ஹேண்டோவர் பண்ணிடுங்க. அவன் டீல் பண்ணுவான். காட் இட்…” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்த சிசிடிவி புட்டேஜ்களை எல்லாம் சேகரித்து எடுத்துவரும் படி சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அத்தனை ஆத்திரம் அவனுக்கு, எப்படி இருந்த பெண்ணை இப்படி ஒரு நிலைக்கு ஆளாக்கிவிட்டானே என்று கொலைவெறி ஆனது.
அந்த நிமிடம் நக்ஷத்ராவின் தந்தை அவளை எப்படி எல்லாம் பார்த்திருந்தார் நினைக்கும் போதே நெஞ்சை பிசைந்தது.
நேராக தான் தங்கியிருக்கும் பீச் ஹவுஸிற்கு வர கிருஷ் ஏற்கனவே டாக்டருக்கு சொல்லியிருந்தபடியால் உடனே நக்ஷத்ராவிற்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
“ஹவ் இஸ் ஷி?…” என்றான் வெளியே வந்தவரை பார்த்து.
“ரிடிகுலஸ், யார் இப்படி பண்ணினது? ஏற்கனவே அவங்க அனீமிக். இப்படி போட்டு அடிச்சிருக்காங்க…” என அந்த டாக்டர் சொல்லவும் அமைதியாய் பார்த்தான் ஷேஷா.
“கண்ணை ஒட்டி ஏதோ கம்பியால அடிச்சிருக்காங்க. அதோட சின்ன சின்ன பார்ட்ஸ் சதையோட ஒட்டி இருக்குது. எல்லாம் கிளீன் பண்ணியாச்சு. இப்போதைக்கு அவங்க நார்மலா நடக்க முடியாது. ஓடாம இருக்க ரெண்டு கால்லையும் அடிச்சிருக்காங்க…” என்றவர்,
“ஒன் மந்த் ஆகும் நார்மலா எழுந்து நடக்க, ரெக்கவர் ஆக. காயம் ஆற நாள் ஆகும்…” என்றவர் மருந்துகளை எழுதி தந்துவிட்டு செல்ல அதை வாங்கி வர சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான் ஷேஷா.
மெத்தையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு கையில் செலைன் போடப்பட்டிருக்க முகமெல்லாம் காயமும், காலில் கட்டும் என பார்க்கவே சகிக்கமுடியவில்லை.
ஒரு நொடி கண்ணை மூட அவளை முதலில் பார்த்த நாள் ஞாபகம் வந்தது. பதினெட்டாம் பிறந்தநாள் அன்று இளமஞ்சள் நிற ப்ராக்கில் துள்ளிக்கொண்டு காரில் இருந்து இறங்கியது தான் தோன்றியது.
“ஓஹ், காட்…” தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
தன்னுயிரை காப்பாற்றியவளை தான் இப்படி பார்க்கும் சூழ்நிலையா? நினைக்கவே அத்தனை வேதனை.
இரண்டு நாள்கள் சென்றது அவள் இயல்பு நிலை திரும்பவே. லேசாக தொட்டால் கூட பதறி போக ஷேஷாவால் இயல்பாக அவளை நெருங்க முடியவில்லை.
தன்னை ஏன் இது இத்தனை பாதிக்கிறது என்றும் உணர முடியாமல் அவளை பாதுகாத்தான்.
அதிலும் வலியில் அவள் முகம் சுண்டுவதும் சமாளிக்க இதழ்கடித்து வலியை பொறுத்துகொள்வதும் என இவள் அவனை ஆச்சர்யமூட்டினாள்.
முகம் தெளிவாய் இருப்பவளிடம் ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் வந்தது. வேறு ஒரு வார்த்தை அதிகபட்சமாக கூட வெளிவந்து விழவில்லை அவளிடமிருந்து.
ஒருவாரம் சென்றிருக்க முதல் நாள் தான் கிளம்புவதாக அவனிடம் நக்ஷத்ரா சொல்ல நாளை பேசுகிறேன் என்றுவிட்டான்.
இப்படியே ஏதேனும் காரணம் சொல்லி இரண்டு வாரங்கள் செல்ல அத்தனை நாள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தவன் அவளிருந்த அறைக்குள் நுழைந்தான்.
ஜன்னலின் பக்கம் கடலை வெறித்துக்கொண்டு நின்றவளின் முகம் நிர்மலமாக இருந்தது.
“ஷக்தி…” என்ற அழைப்பில் திரும்பியவள் ஒரு மிதமான புன்னகையை சிந்தினாள்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கறியா?…” என்றவனை வியப்புடன் அவள் பார்த்தாள்.
“நிஜமா தான் கேட்கறேன். உனக்கு சம்மதமா?…” என்றான் மீண்டும் அழுத்தம் திருத்தமாக.
“இந்த கல்யாணம் எதுக்கு? நீங்க இருக்கிற இந்த பீல்டுல என்ன நடந்தாலும் நான் கேட்காம இருக்கறதுக்கா? ஏனா எனக்கும் இப்போ யாருமில்லையே. அதான்…” என்றாள் கசப்புடன்.
ஆனால் இப்போது கொஞ்சம் பயம் வந்தது. ஆதிஷேஷனின் முகம் மாற்றம் பெற்று இப்போது அவளின் கேள்வியை ஜீரணிக்கும் பாவம் வந்திருந்தது.
அதை கண்கூடாக கண்ட நக்ஷத்ரா தன்னை காப்பாற்றியவனையே சந்தேகித்து கேள்வி கேட்கும் தன்னிலையை அறவே வெறுத்தாள்.
“நான் தப்பா கேட்டிருந்தா மன்னிச்சிருங்க சேஷா ஸார். என்னை காப்பாத்தினதுக்கு நான் கடைசி வரை கடமைப்பட்டிருக்கேன். இன்பேக்ட், இது கூட ஒரு பதிலுக்கு பதில் தானே?…” என்றதும் அவன் புருவம் உயர்த்த,
“உங்களை காப்பாத்தினதுக்கு நீங்க என்னை பதிலுக்கு காப்பாத்தியிருக்கீங்க. சரியா போச்சு. ஆனா இந்த கல்யாணம். ஸாரி ஸார்…” என்று தானே முன்வந்து மன்னிப்பும் கேட்க லேசாய் சிரித்தான் அவன்.
“நீ இப்படி கேட்கலைன்னா தான் அதிசயம். வாழ்க்கையில பெருசா அடிபட்டவங்களுக்கு என்னைக்கும் ஒரு பயம் இருந்துட்டே இருக்கும். அது உன் பேச்சுல தெரியுது…” என்றான்.
“நான் என்ன பன்றதுன்னு தெரியலை. சொல்ல போன வாழவே இஷ்டம் இல்லை. எங்க போனாலும் என்னை தெரிஞ்சிருக்கு…” என்று வெறுத்து போய் பேசியவள்,
“நீங்க என்னை கல்யாணம் செஞ்சு தான் காப்பாத்தனும்னு இல்லை ஸார். எங்கையாவது உங்களுக்கு தெரிஞ்ச இடத்துல ஒரு வேலைக்கு சேர்த்துவிடுங்க. மரியாதையா வாழ்ந்தா போதும். அதை விட வேற எதுவும் வேண்டாம்…”
“அப்போ உன்னோட ப்யூச்சர்?…”
“அதையெல்லாம் என்னைக்கோ மறந்துட்டேன். மூணுவேளை சாப்பாடு, இருக்க நிம்மதியான இடம். கௌரவமான வாழ்க்கை. போதும். அதுக்கு கல்யாணம் மட்டும் தான் சொல்யூஷன் இல்லையே…” என்றாள்.
“இதுதான் உன் முடிவா? திரும்ப அந்த தன்ராஜ் மாதிரி வேற யாராலையோ பிரச்சனை வந்தா? சப்போஸ் ஏதோ ஒரு சூழல்ல உன்னை திரும்ப அந்த பிரடியூசர் கஸ்டடில எடுத்தா என்ன பண்ணுவ? எல்லா நேரமும் எனக்கு தெரிஞ்சிட்டே இருக்காது தானே?…”
அவளை அப்படியே விடவும் அவனுக்கு மனமில்லை. வருத்தத்துடன் பார்த்தான். தன்னுயிரை காப்பாற்றியவளுக்கு ஏதேனும் நல்லதை செய்துவிடமாட்டோமா என்று உள்ளம் கிடந்து தவித்தது.
அதையும் தாண்டி அவளை தனியாக விட்டுவிடாதே என மனது கூவிக்கொண்டே இருக்க அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை அவனால்.
அவன் கேட்டதுமே நட்சத்திராவின் விழிகள் பயத்தில் விரிந்தது. மீண்டும் அழுகை பொங்க அப்படியே மடங்கி அமர்ந்து வாய்விட்டு அழ தொடங்கினாள்.
“என்னை எப்பவுமே விடாம தொடருமோ இது? எதையும் நினைக்காம கவலை இல்லாம ரொம்ப பெருமையா சுத்தி வந்ததுக்கு இவ்வளவு பெரிய அடி. முடியாது அந்த வாழ்க்கைக்கு என்னால போக முடியாது முடியாது…” என்று அழுதவளை அமைதியாக பார்த்துக்கொண்டு நின்றான்.
எத்தனை நாள் அடக்கி வைத்த அழுகையோ மனதில் உள்ளவற்றை எல்லாம் பேசி பேசியே அழுது மயங்க மெல்ல அவளின் தலைக்கு தலையணையை வைத்துவிட்டு நகர்ந்து சென்று சோபாவில் அமர்ந்துகொண்டான்.
மனதினுள் பெரும் கலவரம். இந்த திருமணத்தால் தனக்கு பாதிப்பில்லை என்றாலும் நிச்சயம் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணும். சமாளிக்க கூடியது தான்.
இதுவரை இல்லாத கிசுகிசுக்களா? வதந்திகளா? ஆனால் அவை எல்லாம் உண்மை அல்லவே.
எழுதிக்கொள், பேசிக்கொள், அதை வைத்து சம்பாதித்துக்கொள் என உண்மையில்லாதவைகளுக்கு இதுதான் அவனின் பிரதிபலிப்பு.
உறங்கிக்கொண்டிருந்தவளை மீண்டும் திரும்பி பார்த்தான். அன்று மட்டும் அவளில்லை என்றால் இன்று தான் உயிருடன் இல்லை என்பது மட்டுமே மூளைக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது.
ஏதோ ஒருவகையில் தன்னை இந்தளவிற்கு பாதித்தவளை பற்றி நினைத்தவாறே ஒரு பெருமூச்சுடன் கண்ணை மூடியவன் அமர்ந்தவாக்கிலேயே உறங்கியும் போனான்.
அதிகாலை வழக்கம் போல விழிப்பு தட்ட முகத்தை உள்ளங்கையால் துடைத்துக்கொண்டவன் திரும்பி பார்க்க நக்ஷத்ரா படுத்திருந்த இடத்தில் இல்லை.
அவ்வறையின் ஜன்னலில் இருந்து அப்போது தான் எழுந்துகொண்டிருந்த சூரியக்கதிர்களை வெறித்தபடி கைத்தடி உதவியுடன் நின்றாள்.
அவளிடம் அத்தனை வைராக்கியம் விரைவில் குணமாகி செல்லவேண்டும் என்பதில். அதனால் விரைவில் ஓரளவு மீண்டும்விட்டாள்.
“நக்ஷத்ரா…” என்றவனின் அழைப்பில் திரும்பியவளின் முகத்தில் ஏதோ தீர்க்கம் தெரிய சென்றுவிடுவதில் உறுதியாய் இருக்கிறாளோ என்றே பார்த்தான்.
“எனக்கு சம்மதம் ஷேஷா ஸார். நீங்க சொன்னதுக்கு ஒத்துக்கறேன்…” என்று உடனே அவனை பார்த்ததும் சொல்ல அப்படி ஒன்றும் மகிழ்ச்சியில்லை ஷேஷாவிற்கும்.
நம்பமுடியாத பார்வையுடன் அவளருகே வந்து அவன் நின்றதும் அவளும் அவனை பார்த்தாள்.
“எனக்கு தெரியும் என் பிறப்பு, வளர்ப்பு, இப்போ நான் இருக்கிற நிலமை எல்லாம். ஆனா அதுவே உங்களுக்கு ஒரு பிரச்சனையா, தடையா இருந்தா நான் எப்போ வேணா கிளம்பிருவேன். அதுக்கு சம்மதமா?…” என்றாள் அவனிடம் எதிர்கேள்வியாக.
“இல்லை, சம்மதம் இல்லை. எப்போ நீ என் மனைவியா என் வாழ்க்கைக்குள்ள வந்திட்டா அடுத்து உன்னோட என்னோடன்றது தனித்தனி முடிவுகள் இல்லை. உன் ப்ரைவேசில எந்தவிதத்திலையும் நான் தலையிடமாட்டேன். அதே நேரம் நம்ம ரிலேஷன்ஷிப் உடையவும் நான் அனுமதிக்கமாட்டேன்…”
“இது என்ன இப்போவே?…”
“எனஃப் ஷக்தி. நான் போய் கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்றேன். வெடிங் சிம்பிளா பண்ணிட்டு பிரஸ்மீட் வச்சுக்கலாம்….” என சொல்ல,
“ஹ்ம்ம், சரி. ஆனா நக்ஷத்ராவா தான். ஷக்தியா இல்லை…” என அவள் கண்டிஷன் போட்டவளை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தான்.
“யூர் விஷ். நீ நக்ஷத்ராவாவே என் லைப்ல வரலாம். பட், எனக்கும் மட்டும் நீ எப்பவும் ஷக்தி தான். ஷக்தி ஆதிஷேஷன்…” என்று சொல்லிவிட்டு அவ்வறையை விட்டு செல்ல நக்ஷத்ராவின் மனதோ அடித்துக்கொண்டது.
“யூ ஆர் சோ ப்ரிஷியஸ் டூ மீ ஷக்தி…” என்று அவன் கடைசியாக சொல்லி சென்றது அவளின் காதை எட்டவில்லை.