நக்ஷத்ரா திருமணத்திற்கு சம்மதித்ததும் அடுத்து எவ்விடத்திலும் தேங்கி நிற்கவில்லை ஷேஷா.
துரிதமாய் அதற்கான ஏற்பாட்டை ஆரம்பித்திருந்தவன் அதனை மிகுந்த ரகசியமாகவே வைத்திருந்தான். முக்கியமாக நக்ஷத்ராவிற்கு.
அதற்கு காரணமும் இருந்தது. அவளிடம் என்றைக்கு எங்கே திருமணம் என்று சொல்லவில்லை. அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட்டிருந்தான்.
அடுத்த மாதம் திருமணம். அதற்குள் அவள் இன்னும் குணமாகட்டும் என்று முடிவெடுத்திருக்க அதுவரை அவன் மும்பையிலேயே இருப்பது என்ற முடிவிற்கு வந்திருந்தான்.
தன் முடிவை குறித்து அவனுக்குமே ஆச்சர்யம். அந்த விபத்தில் மட்டும் அவளை சந்தித்திருக்காவிடில் நாளடைவில் அப்படி ஒருத்தி இருந்ததையே மறந்துதான் போயிருந்திருப்பான்.
பார்த்ததும் அவன் அடைந்த அதிர்வும், அதன் பின் அவளுக்கேதேனும் செய்யவேண்டும் என்ற பேராவலும், எங்கேயும் இனி அவளை விடுவதாய் இல்லை என்னும் ஒரு ஸ்திரமான முடிவும் என்று அவனின் அடுக்கடுக்கான பல்வேறு மனநிலைகள் அவனையே திருப்பி போட்டது.
“ஷக்தி” என்ற உச்சரிப்பு என்னவோ செய்ய காதல் என்றும் அதனை வரையறுக்கமுடியாத ஒரு உணர்வு.
‘இவள் இப்படி இருக்கும் போதே இந்தளவு அகம்பாவம் காட்டுகிறாளே?’ என ஒருகாலத்தில் நினைத்தவனும் கூட.
ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் அவளை காண சகியாமல் இப்படி அவளை நினைத்து இந்தளவிற்கு வருவோம் என்று நினைத்தும் பார்த்ததில்லை.
திருமணம் என்பதில் பிடிப்பில்லாதவனுக்கு தானாக அந்த எண்ணத்தை விதைத்தவளோ சம்மதம் சொல்லியதோடு சரி.
இன்று வரை பார்த்தால் ஓரிரு பேச்சுக்கள். அதுவும் அவன் கேட்டாலே தவிர தானே முத்து உதிர்ந்துவிடாது.
அன்று காலை எழுந்ததும் வெளியே சென்றவன் இரவு நேரம் தான் வீடு திரும்பியிருந்தான்.
“நக்ஷத்ரா சாப்பிட்டாச்சா?…” என்று அவளை கவனித்துக்கொள்ளும் பெண்ணிடம் கேட்க,
“சாப்பிட்டாங்க ஸார்….” என்று சொல்லவும் அவரை பார்வையாலே செல்லும்படி தலையசைத்துவிட்டு அந்த அறைக்குள் நுழைந்தான்.
அங்கே அவள் வந்து அதிக நாட்கள் கடந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் திருமணம்.
சென்னை செல்ல வேண்டும். அதற்கு சம்மதிக்க வைக்கவே தான் போராட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தான்.
யோசனைகள் நிறைய இருந்தாலும் எது அவளை தலையாட்ட வைக்கும் என்று யோசித்தே தலை வெடித்தது.
இன்று பேசலாம், நாளை பேசலாம் என தள்ளி போட்டுக்கொண்டே தான் இருந்தான். ஆனால் பேசத்தான் முடியவில்லை.
நஷத்ரா நினைத்தது என்னவோ மும்பையில் தான் திருமணம். இங்குதான் இருக்க போகிறோம் என்று.
அவளுக்கு தெரியும் ஷேஷாவின் இருப்பிடம் சென்னை என்பது. ஆனால் அவனின் அதிக பயணம் மும்பை மற்றும் சில முக்கிய நகரங்கள்.
அவனின் வணிகமோ மும்பையில் தான் பெரும்பங்கு பெற்றிருந்தது. அதனாலேயே அங்க மிக ஆழமாக வேரூன்றி இருந்தான் அவன்.
திருமணம் முடிந்தாலும் தான் மட்டும் இங்கேயே இருந்துகொள்வது என்று நினைத்திருந்தாள்.
அவளின் நினைவிற்கும், அவனின் முனைவிற்கும் இடையிலான அந்த தூரங்களின் இடைவெளியை யார் இட்டு நிரப்புவார்கள்?
கதவை நாசூக்காய் இரண்டுமுறை விரலால் தட்டியதும் அதன் பின் மெல்ல திறந்தவன்,
“நக்ஷத்ரா…” என்று அழைக்கவும்,
“உள்ள வாங்க ஷேஷா…” என்றாள் இயல்பாக.
அங்கே அவள் தன்னுடைய பழைய வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து பிரித்து பார்த்துகொண்டு இருந்தாள்.
“இதை எல்லாம் எடுத்து வச்சு என்ன பன்ற?…” என்று ஒரு குஷனை எடுத்து வைத்து அதில் அமர்ந்தான்.
“இவையெல்லாம் என்னோட ஞாபகங்கள். எனக்கு இன்னொரு பக்கமும் இருக்குன்னு நான் வாழ்ந்து பார்த்த மறக்க முடியாத அனுபவங்கள்…” என்று அவனிடம் காட்டினாள்.
“இது எல்லாம் எப்பவும் என்னோடவே இருக்க போற என்னோட பொக்கிஷங்கள்…” என்று அந்த நைந்த சுடிதாரை எடுத்து நெஞ்சோடு பிடித்துக்கொண்டாள்.
“இப்பவும் எனக்கு ஆச்சர்யமா இருக்குது…” ஷேஷா சொல்லவும் அவனை பார்த்து புன்னகைத்தாள்.
“ஹ்ம்ம், எனக்கே ஆச்சர்யம் தான். ஆனா வாழ்ந்து பார்க்கறப்போ அஞ்சு வருஷம் முன்னே நான் வாழ்ந்த அந்த வாழ்க்கைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. வெறும் காகிதத்தில மட்டும் இல்லை வாழ்க்கைன்னு எனக்கு புரிய வச்ச இந்த உலகத்துக்கும், அந்த மனிதர்களுக்கும் நன்றி….”
“ஐ க்னோ. பட், இந்த லைப்ல நீ எப்படி அட்டாச் ஆன?…” என்றான் ஷேஷா.
“மிராக்கிள் தான். கையில அவ்வளவா காசு இல்லை. கிடைச்ச ட்ரெயின்ல ஏறினேன். பயந்து பயந்து யாரும் பார்த்திடவே கூடாதுன்ற அந்த ராத்திரியும், சாதாரணமா பார்க்கிறவங்களோட அந்த பார்வையும் கூட என்னை ரொம்பவே பாதிச்சது. திக்கு தெரியாம ஏதோ ஒரு இடம்…”
“மும்பை எனக்கு ரொம்பவுமே பழக்கமான ஊரா இருந்தாலும் நான் இருந்த இடம் நான் அதுவரைக்கும் பார்த்தே இல்லாத ஒரு இடம். மனுஷங்களை பார்த்தேன். பயத்தோட ஒதுங்க இடம் இல்லாத என்னை ஒரு பாட்டி தான் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க….”
“இப்போ நீ இருந்தியே அந்த ரூமா?…” என்றான் ஷேஷா.
“ஹ்ம்ம், போட்டுக்க மாத்து துணி கூட இல்லாம அவங்க வீட்டுல இருந்தேன். இதுல சில ட்ரெஸ் எல்லாம் அவங்க தந்தது தான்…” என்று சொல்லவும் அவளிடம் என்ன பேசவென்று அவன் மௌனமாக, நக்ஷத்ராவும் அந்த நியாபகத்திலேயே உழன்றாள்.
“நீ எப்படி அந்த இடத்துல? உனக்கு சென்னை பிடிக்கலை. ஓகே. ஆனா இங்க உனக்கு தெரிஞ்ச யார்க்கிட்டையாவது ஹெல்ப் கேட்டிருக்கலாம்ல? ஏன் அப்படி போய் தங்கனும்?…” என்றதும் அவளின் விழிகள் சிவந்தது.
“என்னோட நல்லதுக்காக தான். தெரிஞ்ச யாருக்கும் நான் எங்க இருக்கேன்னு தெரிஞ்சிட கூடாதுன்னு தான்…” என்று விரக்தியுடன் சொல்லியவள் அடுத்து வரவிருந்த வார்த்தைகளை தடை செய்தாள்.
அவளின் முயற்சியை கண்டுகொண்டவன் ஒரு பெருமூச்சுடன் தன் கைகளை பிரித்து கோர்த்தபடியே அவளிடம் பேசினான்.
“உனக்கு சொல்லனும்னு விருப்பம் இருந்தா சொல்லு. இல்லைன்னா, நோ ப்ராப்ளம்…” என்று சொல்லியவன்,
“ஆனா நீ அங்க இருப்பன்னு நான் நினைக்கவே இல்லை. உன்னால முடிஞ்சதா?…” என விடாமல் பேச இமை மூடி திறந்தவளின் முகத்தில் சிறு புன்னகை.
“அங்க போகனும்னு நினைச்சு போகலை. எங்க போறதுன்னு தெரியாம யாரும் பார்த்திடாம, அவனுங்க யூகிக்க முடியாத இடம்ன்னா அது தான் சரின்னு தோணுச்சு. ப்ளான் பண்ணி போகலை. ஆனா அங்க போய் அந்த பாட்டியை பார்த்ததும் அங்க இருக்கறது தான் சரின்னு எனக்கு பட்டது…”
“யார் அந்த பாட்டி?…” என்றான்.
“தெரியலை. மும்பை ட்ரெயினை விட்டு இறங்கும் போதே ஒருத்தர் பார்த்துட்டார். அவர்கிட்ட இருந்து தப்பிச்சு ஒரு பஸ்ல ஏறி கிடைச்ச பாதையில திரும்பி பார்க்காம போன இடம் தான் நான் தங்கியிருந்த ஏரியா…”
“யார் உன்னை பார்த்தாங்க? உன்னை துரத்தினாங்களா? ஏன்? அப்போ உன்னோட…” என ஆரம்பித்த ஷேஷா அடுத்து கேட்க அமைதியாகிவிட்டாள்.
“ஓகே, நான் கேட்கலை நீ சொல்லு…” என்று தன் கேள்வியை நிறுத்திக்கொண்டான்.
அவளின் வார்த்தைகளை கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தான். கேட்டால் ஒரு வார்த்தையும் வராது. அதனால் அவளின் போக்கிலேயே வார்த்தைகளை சேர்க்க ஆரம்பித்தான்.
“எனக்கு தேவை ஆள்நடமாட்டம் எப்பவும் இருக்கிற இடம். அதே நேரம் யாரோட கவனத்தையும் கவராம இருக்க கூடியதும். தற்செயலா நான் போன நேரத்துல மழை. அந்த படிக்கட்டுல தான் ஒதுங்கி இருந்தேன். அங்க தங்கியிருந்த பாட்டி தான் மேல கூட்டிட்டு போனாங்க…”
“அன்னைக்கு நான் இருந்த நிலைமை, எனக்கு யாருமில்லைன்னு சொல்லவும் அந்த பாட்டி அவங்களோட என்னை தங்கவச்சுக்கிட்டாங்க. அங்க இருந்தவங்க எல்லார்ட்டயும் என்னை அவங்க பேத்தின்னு சொன்னாங்க. அங்க இருந்தவங்க மூலமா தான் வாய்ஸ் டெஸ்டுக்கு போனேன்…”
“பாட்டி இருந்தவரைக்கும் அவங்க எனக்கு துணையா இருந்தாங்க. அவங்க போனதுக்கு அப்பறமா அந்த ஏரியா மக்கள் துணையா இருக்காங்க…” என்று அவள் முடிக்க,
“அப்போ அன்னைக்கு அந்த ஆக்ஸிடன்ட் மட்டும் நடக்கலைன்னா உன்னை மீட் பண்ணியிருந்திருக்க முடியாது, இல்லையா?…” என்றவனின் பேச்சில் சிறு புன்னகை.
“ஹ்ம்ம், இருக்கலாம். ஆனா இந்த நேரம் நான் இருந்திருக்கமாட்டேன். அந்த தன்ராஜ்…”
“டோன்ட் வொர்ரி. அவன் சேப்டர் க்ளோஸ்…” என்று சொல்ல,
“என்ன?…” என்று மெல்ல ஸ்டிக்கை பிடித்து எழுந்தாள்.
“எதுக்கு இவ்வளோ ஷாக்? சேப்டர் க்ளோஸ்ன்னா உயிர் போறதுதானா? அன்னைக்கு மாதிரி இனி எந்த பொண்ணையும் அவன் நடத்தவோ நினைக்கவோ கூடாது இல்லையா?…” என்றதும் ஒரு நிம்மதி அவளின் முகத்தில்.
“என்னவோ கேட்க நினைக்கிற, ஆனா உன்னை கன்ட்ரோல் பண்ணிக்கற நீ. என்ன விஷயம்னு ஓபனா கேளு. நான் பதில் சொல்லாம அவாய்ட் பண்ணமாட்டேன். அதுவும் நீ இனி என்னோட பெட்டர்ஹாஃப்…” என்று அவன் தங்கள் உறவை அவளுக்கு வலியுறுத்தினான்.
“இல்லை, வேண்டாம்…” என அப்போதும் அவள் மறுக்க,
“ஷக்தி…” என்றான்.
“இந்த பேர், இது வேண்டாமே?…” என்ற கெஞ்சலை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.
“ஓகே கேட்கறேன். அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல நீங்க ட்ரக்ஸ் எடுத்திருந்ததா டாக்டர் சொன்னாங்க. ஆனா நீங்க யூஸ் பண்ண மாட்டீங்க தானே? பின்ன எப்படி? அதான் தோணுச்சு. அப்பறம் அது நான் ரொம்ப மூக்கை நுழைக்கிறதா இருக்குமோன்னு தான்….” என்று அவள் சொல்ல,
“உனக்கு என்னை இவ்வளவு தெரியுமா ஷக்தி?…” என்றான் ஷேஷா.
“தெரியுமான்னா? புரியலை. என்னவோ தோணுச்சு. அப்படி எந்த கிசுகிசுவும் உங்களை பத்தி வந்ததில்லையே…”
“அப்போ இதுவரை வந்த கிசுகிசு எல்லாம் உண்மையா இருக்கும்னு நம்பறியா?…” என்ற கூர்மையுடன் அவன் கேட்க விழிகளை தாழ்த்தினாள்.
அதற்கு என்ன பதில் சொல்வது? அதை எல்லாம் தான் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொண்டதில்லையே?
ஷேஷாவின் கேள்விக்கு ஒன்றும் சொல்லாமல் மீண்டும் ஜன்னலின் பக்கம் சென்று நின்றுகொண்டாள்.
“ட்ரக்ஸ் நானா எடுத்தா தானா ஷக்தி? யாராவது எனக்கு இன்ஜெக்ட் பண்ணிருந்தா?…” என்று கேட்கவும் அவனை பார்த்தவளுக்கு அன்றே இதை ஓரளவு யூகித்ததும் தான்.
“ஓகே, நீ பேச வேண்டாம். கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு. உனக்கு ட்ரெஸ், ஜ்வேல்ஸ் எல்லாம் நானே செலெக்ட் பண்ணட்டுமா, இல்லை நீயும் என்னோட வரியா? நீ வரதுனா நான் உனக்கு ஈஸியா அரேஞ்ச் பண்ணனும்…”
“இல்லை, நான் எங்கயும் வரலை. என்னை கூப்பிடவேண்டாம்…” என்றவள்,
“நானே இதை பத்தி பேசனும்னு இருந்தேன்…” என சொல்ல அவன் அதை தானே எதிர்பார்த்தான்.
“ஹ்ம்ம், பேசலாம்…” என்று சொல்லியவன் இருவருக்கும் குடிப்பதற்கு வரவழைத்தவன்,
“எடுத்துக்கோ…” என்று சொல்லி தான் எடுத்து அருந்த ஆரம்பித்தான்.
“இந்த வெடிங் எதுக்காகன்னு நினைக்கறீங்க?…” என்றவளுக்கு பதில் சொல்லாமல் இருக்க,