அவன் செய்வதையே பார்த்தபடி இருந்தவளுக்கு இவனுக்கு இது தேவையா? தனக்கு சேவகம் செய்யவேண்டும் என்று இவனுக்கு என்ன தலையெழுத்து? என்றுதான் தோன்றியது.
“போய் குளிச்சுட்டு வா ஷக்தி. சாப்பிட்டு பேசு…” என்றான்.
“எனக்கு நீங்க ஏன் இதை எல்லாம் செய்யனும்னு நினைக்கறீங்க? உங்க உயிரை காப்பாத்தினதுக்கு வேணும்னா பணம் குடுங்களேன். முடிஞ்சளவுக்கு இந்தியாவை விட்டே நான் போய்டறேன்…” என்றாள் அவன் காயப்படுவான் என்று தெரிந்தே.
“போகலாமே, இந்தியாவை விட்டு தானே? கல்யாணம் முடியட்டும். சேர்ந்தே போகலாம்…” என்றான் எந்த உணர்வையும் காண்பித்துக்கொள்ளாமல்.
“நீங்க இத்தனை தீவிரமா இருப்பீங்கன்னு நான் நினைக்கலை ஷேஷா. இப்பவும் நான் அந்த ஷக்தி தான். அதோட எச்சங்கள் இப்பவும் என்னை தொடரத்தான் செய்யும். உங்களுக்கு பிடிக்காது தானே?…” என சொல்ல,
“உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போகனும் ஷக்தி. ஆர்க்யூ பண்ணாம முதல்ல சாப்பிட்டு முடி. போற வழில பேசலாம்…” என்றான் இருக்கையில் சாய்ந்தமர்ந்து.
“எப்ப இருந்து இப்படி ஒரு கரிசனம்? என்கிட்டே எல்லாம் பக்கத்துல நிக்கவே தகுதி இல்லாதவ நீ? பணம் இருந்தா போதுமா? ஒரு மரியாதை வேண்டாமான்னு கேட்டீங்க தானே? அப்பறம் எப்படி அதே ஷக்தியை இப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சு?…” என்றாள் இகழ்ச்சியாய்.
“அன்னைக்கு நீயும் என்னை மதிக்காம பார்த்த. பேசின. பதிலுக்கு நானும் பேசினேன். ரெண்டும் சரியாகிடுச்சு. இப்போ இப்படி பேசி டைம் வேஸ்ட் பண்ணாத ஷக்தி…”
“உங்க வீட்டுலையே இருந்துட்டு உங்க உதவியை வாங்கிட்டு உங்களையே இப்படி பேசறேன்னு கொஞ்சம் கூட உங்களுக்கு தோணவே இல்லையா ஷேஷா?…” என்றாள் அவள்.
அவளின் முயற்சியை தான் அவன் கண்டுகொண்டானே. இதற்கடையோரம் சிறு புன்னகை.
“நான் நக்ஷத்ரா தான். ஷக்தி இல்லைன்னு அத்தனைதடவை அடிச்சு பேசின பொண்ணு இப்போ பேசும் போது ஷக்தி ஷக்தின்னு சொல்லுச்சே. அதுல நீ பேசினதை மறந்துட்டேன்…” என்றான் அமர்த்தலாக.
அவள் ஒரு அதிர்வுடன் அவனை விட்டு பின்னால் நகர்ந்து நின்றாள். எப்படி தன் அடையாளத்தை இப்படி சொன்னேன் என அவனை பார்க்க,
“ஓகே, நீ போய் குளிச்சுட்டு வா…” என சொல்லியவன் தனது போனில் நுழைந்துகொள்ள,
கண்ணெல்லாம் கலங்கியது அவளுக்கு. எப்படியான நிலையில் தாயை விட்டு சென்றாள்.
மீண்டும் பார்க்கவும் முடியாமல் தன்னை காத்துக்கொள்ள போராடிய நரக நிமிடங்கள்.
மடங்கி அமர்ந்தவளின் சோர்வையும், துக்கத்தையும் ஏறெடுத்து பார்த்தவன் மனதிற்கும் வருத்தமாக இருந்தது.
“ஷக்தி…” என்றான் மென்மையாக.
“ஓகே, வரேன்…”
“குட்…”
“அதுக்கு நீங்க வெளில போகனும்..”
“வாய்ப்பில்லை. உள்ளயே ட்ரெஸிங் ரூம் இருக்கே. அங்க சேஞ்ச் பண்ணிக்கோ. நான் இங்க வெய்ட் பன்றேன்…” என்றான் மீண்டும் பார்வையை போனில் பதித்து.
அரைநொடி அவனையே நின்று பார்த்திருந்தவள் பின் அமைதியாக குளிக்க சென்றாள்.
குளியலறையை ஒட்டியே உடைமாற்றும் அறையும் இருக்க, அங்கே இருந்தே உடைகளை எடுத்துக்கொள்ளும் படியும் இருந்தது அந்த அமைப்பு.
இரண்டுபக்கமும் உபயோகிக்கும் வண்ணம் இருக்க தான் முன்பு உபயோகித்ததை போன்ற இருந்த அந்த அறையை மனதில் ஏற்றாமல் கிளம்பி வந்தாள்.
இருப்பதிலேயே மிக மிக எளிமையான ஒரு உடை. சுடிதார் போன்று அதனை தானே சேர்த்துக்கொண்டாள்.
எந்த வேலைபாடுகளும் இல்லாத அந்த முழுநீள அங்கி போன்ற உடைக்கு ஒரு துப்பட்டாவை போட்டிருந்தாள்.
தலையை வழித்து சீவி பின்னலிட்டிருந்தவளின் நெற்றியில் அகலமான பொட்டும் சேர்ந்து பார்க்கவே ஏதோ போல இருந்தாள். வெளிர்நிற உடை, அவளின் நிறத்திற்கு சுத்தமாய் பொருந்தவில்லை.
எத்தனை நிறமாய் இருந்தவள் இப்போது இப்படி மாறிவிட்டாளே? என தோன்றியது.
அதிலும் அந்த உடை அவளுக்கு கொஞ்சம் கூட சரியான அளவும் இல்லாமல் லூஸாக இருந்தது.
“இந்த ட்ரெஸ் தான் பிடிச்சிருக்கா உனக்கு?…” என்றான் பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்தபடி.
“இதுவும் பிடிக்கலை. எதுவும் பிடிக்கலை…” என்றாள் முகத்தில் அடித்ததை போன்று உடனே அவனின் கேள்விக்கு பதிலாக.
“இது உன்னை நீ மறைச்சிக்கறதுக்காக பன்றதா தோணுதே?…”
“நோ இஷூஸ்…” என்றாள் அலட்சியமாக.
அத்தனை கோபம் அவனின் மேல் இப்போது. தன்னை ஆட்டி வைக்கிறானே என்று.
அதையும் மீறி இப்போது ஒரு பயம். இப்படி ஒரு வார்த்தை திருமணத்திற்கு சம்மதம் என்றதற்கே தன்னை விடமுடியாதென்று இருக்கிறானே திருமணத்தின் பின் என யோசிக்க தொண்டைக்குழி சிக்கியது.
“ஷக்தி?…” என்றான் சத்தமாக.
“சொல்லுங்க…” என தன்னுடைய பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேச,
“சாப்பிடு. கிளம்பனும் தானே?…” என்றான்.
“ட்ரஸ்ட்டுக்கா?…” என அவள் கேட்டதும் நிமிர்ந்தவன்,
“அதை பத்தி நீ கவலைப்பட வேண்டாம். ஆல்மோஸ்ட் எல்லாம் என்னோட கன்ட்ரோல்ல தான் இருக்குது. உங்கப்பா என்ன நினைச்சாரோ அவர் தர்ட்டி பர்சன்ட் ஷேர்ல இருந்துட்டார்…”
“ஆரம்பிச்சது நீங்க தானே? அத்தாரிட்டி எல்லாம் உங்களோடது. அப்பா உங்களுக்கு ஜஸ்ட் ஒரு ஹெல்ப் தான் பண்ணினாங்க…” என்றாள்.
நக்ஷத்ரா இதை பேசவும் அவளை கூர்மையாய் பார்த்தவனின் இதழ்கள் லேசாய் நெளிந்தது.
‘எங்கப்பா இல்லைன்னா இது உனக்கு சாத்தியமே இல்லை. என்னையே நீ இப்படி பேசினன்னு தெரிஞ்சா உன்னை என்ன செய்வாருன்னு தெரிஞ்சுக்கோ. உனக்கு தான் பணம் இருக்குதே. உன்னால என்ன பண்ண முடிஞ்சது?’ என அகங்காரத்துடன் கேட்ட ஷக்தி.
இப்போது தன் முன்னே அமர்ந்திருக்கும் ஷக்தி புடம் போடப்பட்ட பசும்பொன் என அவனால் உணர முடிந்தது.
அந்த யோசனையில் இருந்தவனுக்கு உடனே ஒரு யோசனை. அதை அவளிடம் வெளிப்படுத்தினான்.
“ஷக்தி, மும்பைல அந்த அட்டம்ப்ட் யாருன்னு கண்டுபிடிச்சாச்சு…” என்று சொல்லவும் ஆர்வமாய் பார்த்தாள் அவள்.
“எல்லாம் இந்த ட்ரஸ்ட்க்கு தான். பெய்ட் கில்லர்ஸ் வச்சு மூவ் பண்ணிருக்காங்க…” என்று சொல்லவும் நக்ஷத்ராவின் விழிகள் அகன்றது.
‘ட்ரஸ்ட். அதற்காக ஷேஷாவை கொள்ள ஏற்பாடா?’ இப்போது இன்னுமே பயம் நெஞ்சை கவ்வியது.
அவளால் நிச்சயம் சொல்ல முடியும் ட்ரஸ்ட்டுக்காக இந்த கொலை முயற்சி என்றால் நிச்சயம் அவனை விட வேறு யார் செய்ய முடியும்?
“ஷேஷா…”
“ஹ்ம்ம், சொல்லு ஷக்தி…” என்றான்.
“இப்போ இந்த கல்யாணம்…”
“அதை பத்தி நீ பேசவேண்டாம்னு சொல்லிட்டேன்…”
“இல்லை, நிச்சயம் நடக்க விடமாட்டாங்க. நடந்தா திரும்பவும் உங்களுக்கும் ஆபத்து. அந்த அகத்தியன் அவன் விடமாட்டான். விடமாட்டான்…” என்று எதையோ கண்டு பயந்ததை போல பெயரை உளறிவிட ஷேஷாவுக்கும் இதுதானே வேண்டும்.
ஓரளவு அவன் கணித்தது தான். அத்தனைக்கும் பின்னால் அகத்தியன் இருப்பதை.
மற்றவர்களுக்கு எங்கே அந்த அறிவெல்லாம்? இவை அனைத்திற்கும் சூத்திரதாரி அகத்தியன்.
ஆனால் ஷக்தியின் இந்த தலைமறைவும், அவளின் பயத்திற்கும், செயலுக்கும் காரணம். யோசித்ததில் ஓரளவு அனுமானித்தவன் பல்லை கடித்தான் ஆத்திரத்துடன்.
‘அப்படி மட்டும் இருக்கட்டும். அவன் சாவு என் கையில தான்’ என சூளுரைத்துக்கொண்டான் மனதினுள்.
“ஷேஷா, இப்போவாவது நான் சொல்றதை கேளுங்களேன். நான் இங்க உங்களோட இருக்கறது தெரிஞ்சா….”
“ச்சே அப்படி நான் நினைக்கவே இல்லை. இது அதுக்காக இல்லை…” என்றவளுக்கு ஏன்தான் இவனின் கண்ணில் பட்டமோ என்று இருந்தது.
“ஆனா நீ என்ன நினைச்சு இந்த மேரேஜ் வேண்டாம்னு நீ சொன்னாலும் ஷக்தியா நீ இங்க தான இருப்ப. உன்னை பாதுகாப்பா பார்த்துக்க வேண்டியது என்னோட கடமைன்னு நான் நம்பறேன்…” என்றவனை மறுத்து பேச அவள் நினைக்க,
“ஒரு நல்ல மனுஷனோட பொண்ணுக்கு இதை கூட செய்யலைன்னா நானும் மனுஷன் இல்லை ஷக்தி…” என்றவன் எழுந்துகொண்டான்.
“இன்னும் பைவ் மினிட்ஸ்ல சாப்பிட்டு வெளில வா. நான் வெய்ட் பன்றேன். உன்னோட அம்மாவை பார்க்க போகலாம்…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் அறையை விட்டு.
அவன் சென்றதும் அத்தனை முயற்சியும் வடிந்தவளாய் இப்போது புதிதாய் பாரமேறிய உணர்வு.
எல்லாம் கைமீறிவிட்டதை போன்றதொரு தோற்றம் கண்முன் பெரிதாய் தோன்றி அவளை அச்சம் கொள்ள செய்தது.
இனி தன் பேச்சு எதற்கும் அவன் தலைசாய்க்க போவதில்லை என நினைத்தவளுக்கு தானும் அகத்தியனின் பெயரை உளறிவிட்டதை எண்ணி தலையில் அடித்துக்கொண்டாள்.
சொல்லியதை போல ஐந்து நிமிடத்தில் உணவை எப்பொழுதும் போல விழுங்கிவிட்டு தண்ணீரை குடித்து உள்ளே தள்ளியவள் எழுந்து வெளியே வர ஷேஷா போனில் பேசிக்கொண்டு இருந்தான்.
அவள் வரவுமே கையசைத்து தன்னுடன் அழைத்துக்கொண்டவன் வேலையாட்கள் இருவரையும் பார்ப்பதை கண்டுகொள்ளாமல் வாசலுக்கு விரைந்தான்.
“கார்ல ஏறு நக்ஷத்ரா…” என்று சொல்லி மறுபக்கம் தான் ஏறிக்கொண்டான்.
வெளியில் அவனின் அழைப்புகள் எல்லாம் நக்ஷத்ராவாகவே இருந்தது. அந்தவகையில் ஒரு நிம்மதி.
கார் அந்த பங்களாவை விட்டு வெளியேவுமே கண்ணை மூடிக்கொண்டாள் நக்ஷத்ரா அந்த ஊரை பார்க்க விரும்பாமல்.