மீண்டும் மீண்டும் ஷேஷாவின் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே தான் இருந்தது இது வெறும் பணம், உரிமை சம்பந்தப்பட்டதல்ல என்று.
கோவிலுக்கு சென்றவர்கள் பாதுகாப்புடன் உள்ளே சென்று தரிசனம் முடிந்து வெளியே வர பாதுகாப்பிற்கு வந்திருந்த பவுன்சர்ஸ் அத்தனை பேரை பார்த்ததுமே மக்கள் ‘என்னவாக இருக்கும்?’ என்று வேடிக்கை பார்த்தபடி ஒதுங்கி நின்றார்கள்.
ஷேஷாவை தெரிந்திருந்தவர்கள் அவனை கையில் மாலையுடன், அருகில் புது பெண்ணுடன் பார்த்ததுமே உடனே போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்க விஷயம் அகத்தியனின் காதை அடைந்தது.
“எழில், இந்த பொண்ணு முகம் தெளிவில்லாம இருக்கே?…” என அந்த புகைப்படங்களை எல்லாம் உற்று உற்று பார்த்துக்கொண்டு இருந்தான்.
“இவனுக்கு தலையெழுத்தா? எப்படி பார்த்தாலும் பொண்ணு ரொம்ப சுமாரா இருக்கா. இவன் தலையாட்டினா அழகான பொண்ணுங்க அத்தனை பேரும் க்யூல வருவாங்க. இப்படி போய் விழுந்திருக்கானே?…” எழில் அந்த போட்டோவை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டு இருந்தான்.
தெளிவில்லாத முகமும் புடவையை தோளை சுற்றி அவள் போட்டிருந்த விதமும் கழுத்தில் மாலை மறைத்த அரைகுறை முகமுமாக இருக்க யார் அந்த பெண் என்று குழம்பி போனார்கள்.
“சும்மா எவளையோ இழுத்துட்டு வர இவன் என்ன சாதாரணமான ஆளா? அந்த பொண்ணு பத்தின விவரத்தை தேடுங்க…” அகத்தியன் தனது அடிமைகளுக்கு சொல்லிக்கொண்டிருக்க,
“மாமா, பிரஸ்மீட் இருக்காம் இன்னும் கொஞ்சம் நேரத்துல…” என்றதும்,
“அதுல வரும்ல மருமகனே. பார்த்துக்கலாம்….” என்று அகத்தியன் தன் தடையை நீவ,
“இதனால நமக்கு பெருசா என்ன மாமா இருக்க போகுது?…” என்றான் எழில்.
“மருமகனே, என்ன இப்படி சொல்லீட்டீங்க? இத்தனை வருஷம் குடும்பம்ன்ற ஒரு வட்டதுக்குள்ளையே வராதவன். அதுல விருப்பமும் இல்லைன்னு வெளிப்படையா சொல்லிட்டு இருந்தவன் திடீர்ன்னு கல்யாணம்ன்றான். அதை இத்தனை ரகசியமா வச்சிருக்கான்னா நாம யோசிக்கனும்….”
“அதுமட்டுமில்ல மருமகனே, சரியான வியாபாரி. சரக்கிருக்கற குதிரையில பணத்தை கட்ட தெரிஞ்சவன். பத்து ரூவா அவன் கையில இருந்து போனா அதுக்கு பலமடங்கு திரும்ப வரனும்னு நினைக்கறவன். இந்த ட்ரஸ்ட் எல்லாம் ஒரு கணக்கு காட்டறதுக்கு தான?…”
அகத்தியன் சொல்லிக்கொண்டிருக்க எழிலுக்கும் அப்படி இருக்குமோ என்று தான் தோன்றியது.
தன்னை போலவே அகத்தியன் ஆதிஷேஷனையும் எடைபோட்டு வைத்து சொல்லிக்கொண்டிருக்க ஷேஷா அகத்தியன், எழில் போன்றவர்களுக்கு அப்படித்தான் தன் பிரதிபலிப்பை காட்டுவான் என்று புரியாமல் போனது.
“இளா…” என சத்தமாக மகனை அழைக்க,
“அவன் இன்னும் எழுந்துக்கலை மாமா…” என்ற எழில்,
“சரி நான் கிளம்பறேன். கட்சி ஆபீஸ்க்கு போகனும்…”
“சரிங்க மருமகனே, நானும் கிளம்பி வரேன். நீங்க முன்னாடி போங்க…” என சொல்ல எழில் கிளம்பிவிட்டான்.
——————————————————
ஷேஷாவின் வீடு வந்து சேர்ந்ததும் நக்ஷத்ரா உள்ளே சென்றுவிட சற்று நேரத்திற்கெல்லாம் பத்திரிக்கையாளர்கள் கூட்டம் அங்கே அமைக்கப்பட்டிருந்த சிறிய மீட்டிங் ஹாலில் கூடியது.
“பவன் எல்லாரும் அசம்பிள் ஆகியாச்சா?…” என கேட்டுக்கொண்டே வந்த ஷேஷா இன்னும் பட்டு வேஷ்டியில் தான் இருந்தான்.
அவன் கோவிலுக்கு சென்று வந்ததன் அடையாளம் அப்பட்டமாக இருக்க இன்னும் உடைமாற்றவில்லையே என்னும் விதமாய் பார்த்தான் பவன்.
“வாட்?…” என்றான் அவனிடத்தில்.
“இன்னும் நீங்க காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணலையே பாஸ்…” என பவன் சொல்ல தன்னை குனிந்து பார்த்தவன் முகத்தில் அகத்தில் ஒளிந்திருந்த புன்னகை எட்டிப்பார்த்தது.
“ஹ்ம்ம், லுக்கிங் கிரேட்…” என தன்னை சொல்லிக்கொண்டான் எதிரே இருந்த ஒரு அலங்கார கண்ணாடியில் தன் உருவம் பார்த்து.
ஷர்ட்டின் கையை முட்டிவரை மடக்கிவிட்டவனாக அவன் தன்னை பார்த்தபடி சொல்ல பவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.
“எஸ் பாஸ், லுக் ஸ்டன்னிங்…” என்று அவனும் சொல்ல,
“இஸ் இட்?…” என்றான் மென்புன்னகையுடன்.
“ஓகே, டைம் ஓவர். கம்…” என சொல்லி அவன் முன்னே செல்ல,
“பாஸ் மேம்?…” என்றான் பவன்.
“வருவாங்க, பார்த்துக்கலாம்…” என்றபடி தன் வேகத்தை நிறுத்தாமல் அவன் நடக்க இதை எல்லாம் மாடியில் இருந்து பார்த்தபடி இருந்தாள் நக்ஷத்ரா.
“ஹலோ எவ்ரிஒன்…” என்று அனைவருக்கும் ஒரு வணக்கத்தை வைத்தவன் வந்ததற்கு முதலில் நன்றி தெரிவித்தான்.
வழக்கமான பேச்சுக்கள் ஆரம்பமாக கேள்விகள் எல்லாம் அம்பென பாய்ந்து வந்தது ஆதிஷேஷன் மேல்.
“ஸார், புது பட பூஜையா?…” என ஒரு நிருபர் நக்கலாக கேட்க,
“அப்படின்னா நான் உங்களை ஸ்டூடியோவுக்கு தானே வர சொல்லிருப்பேன். வீட்டுக்கு ஏன் வர சொல்லனும்?…” என எதிர் கேள்வி கேட்டான் ஷேஷா.
“ஓகே, லீவ் இட். உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். நானுமே அந்த போட்டோஸ் பார்த்தேன். அப்பறம் ஏன் எதுவும் தெரியாத மாதிரி இப்படி கேள்வி?…” என்றதும் மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.
“ஓகே, இன்னைக்கு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. என்னோட வெடிங்கை அநோன்ஸ் பண்ண தான் உங்க எல்லாரையும் வர சொன்னேன்…”
“இப்போ வருவாங்க…” என்றவன் நக்ஷத்ராவிற்கு அழைப்பு விடுக்க இரண்டு நிமிடத்தில் அவள் வந்துவிட்டாள்.
வந்தவளை எழுந்து சென்று கையோடு அணைத்து பிடித்தபடி வந்து அனைவருக்கும் அறிமுகம் செய்ய பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியானது.
அழகிய ஒரு பெண்ணை எதிர்பார்த்து இருந்தவர்களின் முன்னால் பட்டு புடவையை சுற்றி சுருட்டியவாறு நெடுநெடுவென ஒல்லியாய், கொஞ்சமும் லட்சணமற்ற முகத்துடன் வந்த ஒருத்தியை நினைத்தும் பார்க்கவில்லை.
அவர்களுக்கு அது ஒரு அதிர்ச்சி என்றால் அவர்கள் முன்னால் நிற்கவே கலங்கி போய் ஷேஷாவின் கையை பிடித்துக்கொண்டு நடுங்கியபடி நின்றாள் நக்ஷத்ரா.
“நான் இருக்கேன்ல. பயப்படாம இரு…” என்று அவன் தைரியம் கூறினான்.
“ஸார், இவங்க தான்…” என்று ஒரு நிருபர் கேள்வியை முடிக்கும் முன்னர்.
“என்னோட மனைவி நக்ஷத்ரா. மும்பையை சேர்ந்தவங்க…” என்று அவன் அறிமுகப்படுத்தவும் அவள் வணக்கமோ, புன்னகையோ எதுவும் செய்யாமல் சிலையென நின்றாள்.
ஒளிவெளிச்சம் அவளை சுருட்டி கேமராவில் ஒளித்துக்கொள்ள ஷேஷாவை இன்னுமே இறுக்கமாய் பற்றிக்கொண்டாள்.
“இது அரேஞ்ச்ட் மேரேஜா சார்? இல்லை லவ்?…”
“அஃப்கோர்ஸ் லவ் மேரெஜ் தான்…” என அடுத்த குண்டை போட்டான்.
ஒருவராலும் நம்பமுடியவில்லை. தமிழ் சினிமாவாகட்டும், ஹிந்தி, தெலுங்கு என்று அவன் கால் பதிக்காத இடமே இல்லை. நாயகனாக அன்றி அந்த படத்திற்கான பணப்பரிவர்த்தனை அவனிடமே பெரும்பாலும்.
அதிலும் அவனின் ப்ரடக்ஷனில் தயாரிக்கப்படும் படங்களும் அநேகத்திற்கும் அதிகமாய் வெற்றிப்படங்களே.
ஆணகழனாய் வசீகரிக்கும் தோன்ற கொண்டவன் இப்படி கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒருத்தியை எப்படி மனம் முடித்தான்? அதிலும் காதல் என்கிறானே? என நம்பமுடியாமல் பார்த்தார்கள்.
நக்ஷத்ராவின் முகத்தை ஆழந்து பார்த்துவிட்டு ஷேஷாவை பார்த்தால் அவன் சொல்லியது நம்பும் படியாக தான் இருந்தது.
அவளை அத்தனை வாகாய் அணுகி அரவணைத்து நின்றான். அந்த முகமும், கண்களும் அவள் மீதான அபரிமிதமான அன்பினை பொழிந்தது.
“உங்களுக்கு சொந்தமா ஸார்?…” என்றார் ஒருவர் ஜீரணிக்கமுடியாமல்.
“ஹ்ம்ம், ஆமா…” என்று நக்ஷத்ராவை பார்த்தபடி அவன் சொல்ல அவளுக்கு நிற்கவே முடியவில்லை.
பத்திரிக்கையாளர்கள் கேட்பதற்காக சொல்கிறான் என்றே இருந்தாலும் அதை எல்லாம் மனது ஏற்கவே இல்லை.
இந்த திருமணமே தனக்கு அதிகம் என்றிருந்தவளுக்கு இப்போது அவன் மீது அத்தனை ஆற்றாமை. இவனுக்கு ஏன் இது என்று வழக்கம் போல தோன்றியது.
அதற்கடுத்து மாறி மாறி கேள்விகள் வர அதை அழகாய் தவிர்த்தவன் பேச்சை திசை மாற்றினான்.
“ஓகே, தனிப்பட்ட கேள்விகள் போதும். வேற கேளுங்க…” என்றான் ஷேஷா.
“உங்களோட அடுத்த தயாரிப்பு எந்த மொழி படம் ஸார்? ரீசன்ட்டா மும்பைல ஒரு ப்ராஜெக்ட் சைன் ஆகிருக்குன்னு பேசிக்கிட்டாங்க. அது உண்மை தானா? இல்லை தமிழ் படம் பன்றீங்களா?…”
“பேச்சுவார்த்தை போய்ட்டு தான் இருக்கு. ஆனா மும்பை ப்ராஜெக்ட் பத்தின நியூஸ் உங்களுக்கு வரும். எப்போன்னு இப்போ சொல்ல முடியாது. நானே கண்டிப்பா இன்வைட் பன்றேன்…” என்றான் தன்மையாக.
சற்று நேரத்திற்கெல்லாம் மீட்டிங் முடிந்து அவர்கள் கலைந்து செல்ல நக்ஷத்ராவுடன் உள்ளே வந்தான்.
அவன் வருவதை கண்டுகொள்ளாமல் விட்டால் போதும் என்பதை போல வேகமாய் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஓடிவிட்டாள் நக்ஷத்ரா.
அவள் செல்வதையே பார்த்திருந்தவன் பவனை அழைத்து நக்ஷத்ரா கையெப்பமிட்ட அந்த பேப்பர்களுடன் அலுவலக அறைக்கு வரும்படி உத்தரவிட்டு சென்றான்.
நக்ஷத்ரா கையெழுத்திட்டிருந்த அந்த வெற்று தாள்களை வைத்து தனது வேலையை ஆரம்பித்திருந்தான் ஆதிஷேஷன்.
———————————————
ஆதிஷேஷன் வீட்டில் நடந்து முடிந்திருந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அந்தந்த தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டு இருக்க அதை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் இளவேந்தன்.
அவனால் நம்பவும் முடியவில்லை. இது அவள் தானோ என்று மனது சொல்ல மீண்டும் மீண்டும் உற்று பார்த்தான். பார்த்துக்கொண்டே இருந்தான்.
இல்லையே, அந்த உடை, புடவை கட்டு. பயந்த பார்வை. முகம், உருவம் என்று மாறியிருந்தாலும் அவனால் ஏற்கமுடியவில்லை. ஏன் இது ஷக்தியாக இருக்க கூடாது? என்றே தோன்றியது.
ஆனால் தோன்றியதை அப்போதைக்கு யாரிடமும் அவன் சொல்லவில்லை. தனது சந்தேகம் உண்மையோ பொய்யோ.
ஆனால் எதுவாக இருந்தாலும் அவர்களாகவே தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்.
ஒருவேளை தான் சந்தேகத்தின்படி அவள் ஷக்தியாக இருப்பின் ஷேஷாவின் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என நினைக்கும் பொழுதே நெஞ்சின் ஈரம் வற்றிவிட்டது.