எழில் அன்று அகத்தியனை பார்க்க வந்துவிட்டு வீடு திரும்பியிருந்த நேரத்தில் மீண்டும் அகத்தியனிடமிருந்து போன்.
“சொல்லுங்க மாமா, இப்போ தானே அங்க நம்ம வீட்டுல இருந்து இங்க வந்தேன்? அதுக்குள்ளே போன்?…” என கேட்டுக்கொண்டே சாப்பிட டேபிளில் அமர்ந்தவன் தனக்கு உணவை பரிமாருமாறு மனைவி ராஜிக்கு கண் காண்பித்தான்.
“மருமகனே உடனே நம்ம ஆபீஸ்க்கு வாங்க. நானும் வீட்டுல இருந்து அங்க வந்திடறேன். முக்கியமான விஷயம்…” சொல்லிவிட்டு அகத்தியன் போனை கட் செய்துவிடவும் யோசனையுடன் சாப்பிட்டான் எழில்.
“என்னங்க…” ராஜியின் அழைப்பில்,
“ம்ம்ம்…” என்று குரல் கொடுத்து சொல்லும்படி தலை அசைத்தான்.
“இன்னைக்கு சாயங்காலம் கோவிலுக்கு போகனும். உங்களுக்கு நேரம் இருக்குமா?…” என கேட்க,
“அதெல்லாம் முடியாது. நீயே வேணும்னா போய்ட்டு வா. என்னை கூப்பிடாதே…” வேகமாய் சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து கிளம்பிவிட்டான்.
காரில் சென்றுகொண்டிருக்கும் பொழுதே இளவேந்தனிடம் இருந்து போன் வந்துவிட்டது.
“எழில் எங்க இருக்க?…”
“மாமா ஆபீஸ்க்கு வர சொன்னார்டா. அங்க தான் போய்ட்டு இருக்கேன்…”
“உனக்கு விஷயம் என்னன்னு அப்பா சொல்லலையா?…”
“இல்லையே…” என்றவனின் குரலில் இளவேந்தனிடம் இருந்த பதட்டம் வந்து தொற்றிக்கொண்டது.
“ஏதாவது பிரச்சனையா இளா?…” என்றதும் ஒருநொடி மௌனம்.
“இளா…” என்றான் மீண்டும்.
“பிரச்சனை தான் எழில். நீ முதல்ல ஆபீஸ் வா. நானும் வந்திடறேன்…” என சொல்லி போனை வைத்துவிட டென்ஷன் கூடியது எழிலுக்கு.
“என்னன்னு சொல்லமாட்டேன்றாங்களே…” என எரிச்சல் கொண்டவன் காரின் வேகத்தை அதிகரித்தான்.
அன்று காலையில் இருந்து அலுவலகமும் செல்லாமல் அகத்தியனுடன் ஒரு கோவில் கும்பாபிஷேசத்திற்கு சென்றிருந்துவிட்டு மதிய உணவு நேரம் தான் வீடு திரும்பி இருந்தான்.
இப்போது இப்படி உடனே கிளம்பி வரும்படி என்ன தலைபோகிற காரியமோ என்ற கடுப்பில் இருந்தவனுக்கு தலைபோகிற காரியம் தான் என்று தெரியவந்தது அலுவலகத்தை அடைந்ததும்.
“சொல்லுங்க மாமா…” அகத்தியனின் முன்னால் வந்து அமர்ந்தவன் கேட்க அகத்தியன் இளாவை பார்த்தான்.
“இதை பார் எழில்…” என சில பேப்பர்களை நீட்ட வாங்கி பார்த்ததுமே தெரிந்தது அது வக்கீல் நோட்டீஸ் என்று.
படித்தவனுக்கு வியர்க்க துவங்கியது. முதலில் பதட்டத்தில் அத்தனையையும் அவசரமாய் பார்வையிட்டவன் இப்போது ஒவ்வொன்றாய் நிறுத்தி நிதானமாய் வாசித்தான்.
அதில் இருந்த கையெப்பம் பொய்யில்லை. அடித்து கூறும்படியான அவளது கையெப்பம் தான்.
“மாமா ஷக்தியா?…” என அவன் அகத்தியனை ஏறிடவும்,
“பார்த்தீங்களா மருமகனே, அந்த குட்டி எங்கையோ ஒளிஞ்சிட்டிருந்து நம்ம கண்ணுலையே விரலைவிட்டு ஆட்டினா. இப்ப இவன் பின்னாடி இருக்கறா. நான் நினச்சது சரியா போச்சு…” அகத்தியனின் முகம் பயங்கரமாய் மாறிவிட்டிருந்தது.
“நிச்சயம் இத்தனைக்கும் பின்னால அந்த ஷேஷா பய தான் இருக்கனும். அனுப்பிருக்க வக்கீல் யாருன்னு தெரிஞ்சதா? அதுல இருந்தே நான் கண்டுபிடிச்சுட்டேன்…”
என்னவோ அகத்தியனே ஷேஷா கவனிக்காமல் விட்டு மாட்டிக்கொண்டதை போல அதை தான் கண்டுபிடித்துவிட்டதை போல இறுமாப்பில் பேசிக்கொண்டு இருந்தான்.
“இல்லை எழில், எனக்கு என்னவோ ஷேஷா தெரிஞ்சே இதை செஞ்சிருப்பான்னு தோணுது…” என எழிலிடம் சொன்னான் இளவேந்தன்.
“ப்ச், இவனை வாயை மூட சொல்லுங்க மருமகனே. நான் என்ன செய்வேன்னே தெரியாது…” என்று அகத்தியன் கத்தவும் இளாவும் வாயை மூடிக்கொண்டான்.
ஆனால் இது இப்படி வாயை மூடி அமைதிகாத்து ஏற்றுக்கொள்ளும் விஷயம் அல்லவே.
ஏற்கவும் தான் முடியுமா? இது தன்மானத்திற்கான அடி என்று நினைப்பதை விட அவனையும், அவளையும் ஜெயிக்க விட கூடாதென்பதற்காகவே இதை சட்டென்று ஏற்க முடியாதே.
“இளா, நீ சொல்லு. என்ன செய்யலாம்?…” என்றான் எழில்.
அவனுக்கு சுத்தமாய் யோசிக்க முடியவில்லை. மூளை மொத்தமும் இருள் குடிகொண்டதை போல இருந்தது.
அவனால் எதையும் அனுமானிக்கவோ, இல்லை இதற்கு என்ன தீர்வு என்பதோ நினைக்க முடியவில்லை.
தீர்வு என்றால் அது ஒன்றே ஒன்று தான். ஷக்தியிடம் அவளின் உரிமைகளை உடமைகளை ஒப்படைக்கவேண்டியது மட்டும் தான்.
அதை தவிர வேறு ஏதும் இருப்பதாக தோன்றவில்லை. அப்படி இருந்தது ஷேஷாவின் ஏற்பாடு.
“வாய்ப்பில்லைன்னு தான் தோணுது…” இளாவின் வார்த்தையில்,
“ஷேஷா…” என வாய்விட்டே அவன் கத்திவிட்டான் எழில் கனம் தாங்கமுடியாமல்.
“எழில் காம் டவுன், காம்டவுன் மேன்…” என அவனின் முதுகை தட்டிக்கொடுக்க எழிலால் இன்னும் சமநிலைக்கு வரமுடியவில்லை.
“எழில், எழில் இங்க பாரு…” என இளவேந்தன் அழைத்தும் அவன் டேபிளில் கை முட்டியை ஊன்றி இரு கையாலும் தலையை பிடித்தபடியே தான் அமர்ந்திருந்தான்.
“என்னடா பன்றது இளா? இவ நிம்மதியாவே இருக்க விடமாட்டேன்றாளே? இப்ப இவனுக்கு பின்னால இருந்துட்டு…” என நெற்றியை தட்டிக்கொண்டவன்,
“இவனை எதுவுமே செய்ய முடியாதா இளா? இவனை ஒன்னும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சு தானே அவனை அப்ரோச் பண்ணிருக்கா. எல்லாம் தெரிஞ்சு பண்ணிருக்கா…” என எழில் புலம்ப இளவேந்தனுக்கு வருத்தமாக இருந்தது.
‘அவ அவனை கல்யாணமும் பண்ணிருக்கா எழில்’ என வாய் வரை வந்துவிட்டதை அப்படியே உள்ளேயே நிறுத்தினான்.
சொன்னால் ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை என்ற கேள்வி வரும். அதையும் விட பிரச்சனை பெரிதாகும். இப்போது சொன்னாலும் இன்னுமே எழிலுக்கு தான் பிரஷர் கூடும் என்று மௌனமானான்.
ஊடோடே பார்வை அகத்தியனின் பக்கம் செல்ல அவனின் முகமே பலத்த யோசனையில் இருந்தது.
அது எதனால் என தெரிந்திருந்தவனுக்கு அருவருப்பான உணர்வு தோன்ற ச்சீ என்று முகம் சுளித்து திரும்பிக்கொண்டான்.
“ஓகே இளா. லெட்ஸ் கோ….” என எழுந்துகொள்ள அகத்தியனும் தங்களுடன் வர,
“மாமா நான் பேசிட்டு வரேன். நீங்க இருங்க…” என்ற எழிலை மறுத்து,
“வாங்க சேர்ந்தே போவோம். அவன் உங்களைன்னா பேசி ஏமாத்திருவான். என்னை என்ன பண்ண முடியும்னு பார்ப்போம். நமக்கு அரசியல் பலம் இருக்கு மருமகனே…” என முன்னே நடக்க இளாவுக்கு அத்தனை கோபம்.
“வா எழில்…” என அவனோடு கையை கோர்த்தபடி இளவேந்தன் செல்ல சற்று நேரத்தில் எல்லாம் வானம் அறக்கட்டளையை அடைந்தது அவர்களின் கார்.
எங்கிருக்கிறான் என்று கேட்டே கிளம்பி வந்திருந்தார்கள் மூவரும். உள்ளே செல்ல செல்ல இதயத்துடிப்பு அதிகமாகிக்கொண்டே தான் இருந்தது அவர்களுக்கு.
எங்களுக்குத்தான் அடுத்த உரிமை எனும் போதே கிஞ்சித்தும் மதிக்கமாட்டான். இப்போது இதை கேட்க செல்ல நிச்சயம் அவமதிப்பு தான் என தோன்றியது இளவேந்தனுக்கு.
“இன்னைக்கு அவனை என்ன செய்யறேன்னு பாருங்க. நினச்சு பார்த்திருக்கமாட்டான் இப்படி மாட்டிப்போம்ன்னு. இப்ப முகத்தை எங்க வச்சுக்கறான்னு பார்க்கறேன்…” என சூளுரைத்தபடி அகத்தியன் செல்ல இளவேந்தனுக்கு எரிச்சல் ஆனது.
ஷேஷாவின் அறைக்குள் நுழையும் முன்னால் அவனின் பாதுகாவலர்கள் அவர்களை தடுக்க,
“நான் யார் தெரியுமா?…” என அகத்தியன் எகிறியும் அவர்கள் அசைந்துகொடுக்கவில்லை.
“வெய்ட் பண்ணுங்க ஸார். பாஸ்கிட்ட கேட்டுட்டு வந்து சொல்றோம்…” என சொல்லி உள்ளே அவன் செல்ல இரண்டு நிமிடத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளே நுழைந்ததுமே அகத்தியன் பரபரத்து சுற்றிலும் பார்வையை அறை முழுவதும் துழாவ விட அதை கவனித்தபடி ஷேஷா அவனின் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
“எங்கடா, எங்க அந்த குட்டி?…” என்று முதலில் அகத்தியன் கேட்க எழில் இந்த நோட்டீஸ் சம்பந்தமாக என்று நினைக்க இளவேந்தனின் முகம் சிறுத்தது.
‘இப்பவும் இந்த மனுஷனுக்கு அவ நினைப்பு தான். திருந்தாத ஜென்மம்’ என மனதினில் நினைத்தான்.
“யாரை தேடறீங்க அமைச்சர் அகத்தியன்?…” என்றான் ஷேஷா.
அவனின் குரலில் அதுவரை பரபரத்து இருந்த அகத்தியன் உடனே நடப்பிற்கு வந்து உடல்மொழியை மாற்றிக்கொண்டு அவனை பார்க்கவும் புருவம் உயர்த்தினான் ஷேஷா.