கருமை சூழ்ந்திருந்த பரந்த வானில் ஒற்றை தீபமாய் வெண்ணிலா ஒளிர்ந்து மிளிர்ந்து கொண்டிருந்த பௌர்ணமி இரவு!
நேரம் நள்ளிரவை நெருங்கவிருக்க ஊரே உறங்கிக் கொண்டிருந்த அவ்வேளையில் அந்த பிரம்மாண்ட நகைக் கடையில் மட்டும் மனிதர்களின் நடமாட்டம் சதிராட்டமாய் இருந்தது.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்களுக்கு மேலாக அந்த பெரிய நகைக் கடையில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் தூக்கத்தை மறந்து அந்த பெரிய வளாகத்தில் பரபரப்புடன் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருக்க,
அந்த தங்க நகை மாளிகையின் உரிமையாளர் திரு. பத்பநாபன் பரபப்புடன் அலைந்து கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அயர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரின் வயதிற்கேற்ற சோர்வு அவரின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது! என்பதை தொடவிருக்கும் அவருக்கு தூக்கமும் ஓய்வும் மிகவும் இன்றியமையாத ஒன்று!
ஆனால், இன்றைய சூழலும் நிகழ்ந்த நிகழ்வும் அவரின் உறக்கத்தை மட்டுமின்றி அங்கிருந்த அனைவரின் உறக்கத்தையும் பறிபோக வைத்திருந்தது.
அந்த பெரிய தங்க நகை மாளிகையின் உரிமையாளர் திரு. பத்பநாபன் அவர்களின் ஒரே பெண் பேரப் பிள்ளை! அவளும் அங்கே உரிமையாளர் தான்!
ஆகையால் தான் நள்ளிரவை தாண்டியும் அனைவரையும் நிற்க வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தாள். அந்த அதிகாரமும் அவளுக்கு அளவுக்கு அதிகமாகவே கொடுக்கப் பட்டிருந்தது!
ஒரே பெண் வாரிசாகிற்றே! எனவே பத்மநாபன் குடும்பத்திற்கு தென்றல் மீனா அவர்களின் ஒற்றை தீப ஜோதி! அந்த தீப ஜோதி இன்று தீச் சுடராக மாறி அனைவரையும் பொசுக்கிக் கொண்டிருந்தது!
“ஸ்வர்ணம் பேலஸ்” அவர்களின் மிகப் பெரிய பிரம்மாண்ட நகை மாளிகை! சென்னையின் முக்கிய பிரதான சாலையில் ஆறு தளங்கள் கொண்டு மிகப் பெரிய அளவில் கட்டப் பட்டிருந்தது.
இரநூறுக்கும் மேலான ஊழியர்கள் பணி புரிந்தனர் அங்கே. இன்று அனைத்து ஊழியர்களும் அங்கே முகத்தில் உறைந்து போய்க் கிடந்த பயத்துடன் அவர்களுக்கு கொடுக்கப் பட்டிருந்த பணியை செய்து கொண்டிருந்தனர்.
ஆண், பெண் என எந்த பேதமும் இல்லை! அனைவரும் சமமாக அந்த இரவில் தங்கள் வீடு, குடும்பம், குழந்தை என அனைத்தையும் மறந்து சுற்றிக் கொண்டிருந்தனர்!
ஒற்றைப் பார்வையால் சுற்ற வைத்துக் கொண்டிருந்தாள் தென்றல் மீனா என்று சொல்லவும் வேண்டுமோ?
கிட்டத்தட்ட ஐம்பது சவரன் நகை! கற்பூரமென காணாமல் கரைந்து போய் இருந்தது!
காணாமல் போனதன் அடி ஆழமே களவாடப் பட்டிருப்பது தான் என்பதால் அதனை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டிருந்தனர் அந்த தங்க நகை மாளிகையின் உரிமையாளர்கள்!
எப்பொழுதும் கடை முடியும் நேரம் இரவு எட்டு மணி! ஆனால், அதன்பின்னர் தான் அவர்களின் முக்கிய வேலையே தொடரும்.
எட்டு மணியளவில் கீழ் தளத்தின் நுழைவாயில் ஷட்டர்கள் எல்லாம் மூடப் பட்டு விடும். ஆனால், கடையினுள் இருக்கும் ஊழியர்கள் தீவிரமாக வேலை பார்ப்பது கடை மூடப் பட்ட பின்னர் தான்!
டிஸ்ப்ளேயில் வைத்திருந்த நகைகளின் இடையை சரி பார்த்து அதனை அந்தந்த பெட்டிகளில் அடுக்கி பிரதான லாக்கரில் வைத்து முடித்து விட்ட பின்னர் தான் அனைத்து ஸ்டாஃப்களும் கிளம்ப முடியும்.
இன்றும் அவர்களின் வழக்கத்தில் எவ்வித மாறுதலுமின்றி தான் அனைத்தும் நடந்தது.
டிஸ்ப்ளேவிற்கென வைத்திருந்த நகைகளை செக் செய்து பார்க்கும் பொழுது தான் ஐம்பது சவரன் காணாமல் போய் இருப்பதே தெரிய வந்தது.
தெரிந்த நொடி சூப்பர்வைசர் முதல் மேனேஜர் வரை அனைவரும் நடுநடுங்கிப் போயினர்!
இத்தனைக்கும் எந்த ஒரு பெரிய நகையும் காணாமல் போய் இருக்கவில்லை. சின்ன சின்ன நகைகளான தோடு, மோதிரம், மூக்குத்தி என எதுவும் காணாமல் போய் இருக்கவில்லை.
அந்தந்த நகைக்கான டிஸ்ப்ளே ஸ்டான்ட்டுகளில் (Display stand) அனைத்தும் சரியாக பொருத்தி வைக்கப் பட்டிருந்தது.
ஆனால் அனைத்து நகைகளின் இடையை சரி பார்க்கும் போது கிட்டத்தட்ட ஐம்பது சவரன் இடை குறைவாக காட்டியது தான் அனைவரையுமே குழப்பத்தில் ஆழ்த்தியது.
என்ன ஆகி இருக்கும்? எப்படி ஆகி இருக்கும்? என அனைவருக்கும் ஒன்றும் புரியாத கலவர நிலை தான் அங்கே!
மேனேஜர் முருகேசன் தான் முதலில் சுதாரித்து ஐம்பது சவரன் குறைவாக இருந்த நகைகளை பீதியாகி பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களை கண்டு “யாரும் கிளம்பிட கூடாது. இந்த இஷு சார்ட் அவுட் ஆகாம யாரும் இருக்கிற இடம் விட்டு நகர கூட செய்யாதீங்க” என்று கடுமையாக எச்சரித்து விட்டே அங்கிருந்து நகர்ந்தார்.
முதலில் பத்பநாபனின் மூத்த மகனான வெங்கடேசனிடம் தான் இதனை தெரியப் படுத்த முயன்றார் முருகேசன். ஆனால், வெங்கடேசனின் நெற்றிக் கண் பார்வைக்கு ஆளாவதை நினைத்து நா வறண்டு போகும் போல் இருந்தது அவருக்கு.
எனவே, கீழ் தளத்தில் இருக்கும் முதலாளிகளுக்கான அறையில் பத்பநாபன் இருப்பதை அறிந்து அவரிடமே சொல்லி விடலாம் என அறைக்கு வந்த போது தான் பத்பநாபனோடு தென்றல் மீனாவும் இருப்பதை கண்டு திடுக்கிட்டு போனார்.
வெங்கடேசனை எண்ணி நா வறண்டு போனவருக்கு தென்றல் மீனாவை எண்ணி நெஞ்சாங்கூடே காலி ஆகி விட்டது.
“ஆத்தாடி….. மீனா மேடமும் இருக்காங்களா? வெங்கடேசன் சாரை சமாளிக்க தைரியம் இல்லாம தான் இங்க வந்தோம். இங்க என்னடான்னா அவரோட பொண்ணு உக்காந்து இருக்காங்க… ஹைதராபாத் போனவங்க எப்ப திரும்பி வந்தாங்க?” என்று உள்ளுக்குள் புலம்பியவர் வெளியே எச்சிலை கூட்டி விழுங்கியபடி வாசலில் நின்று விட்டார்.
அவரின் தடுமாற்றத்தை கண்டே தென்றல் மீனாவிற்கு எதுவோ சரியில்லை என்று புரிந்து விட “உள்ள வாங்க முருகேசன் சார்” என்று அழைத்தாள்.
அந்தக் குரலும் அழுத்தமான பார்வையும் முருகேசனை வியர்க்க வைத்தது. நிகழ்ந்த விஷயத்தை அவளின் முன் சொல்ல துளி கூட தைரியம் இல்லை முருகேசனிற்கு!
தைரியம் இல்லை என்று சொல்லி அப்படியே விட்டுச் செல்லும் விஷயமும் அல்லவே!
“என்னபா முருகேசா? இப்படி வந்து நிக்கிற? என்ன விஷயம்?” என்று பத்பநாபன் தான் தன்மையாக கேட்டார்.
அந்தத் தன்மையில் தைரியம் வரப் பெற்றவராக “சார்… அது வந்து..” என்று ஆரம்பித்தவர் திரும்பி தென்றல் மீனாவை ஒரு பார்வை பார்க்க, “நீங்க தாத்தா கூட தனியா பேச வந்தீங்களா முருகேசன் சார்! எதுவும் பர்சனல் விஷயமா? நான் வேணும்னா வெளிய போய்க்கட்டுமா??” என்று அவள் கேட்ட விதத்தில் இன்னும் பதட்டம் கூடிப்போனது அவருக்கு!
“அய்யோ… பர்சனல்லாம் எதுவும் இல்ல மேடம்!” என்றார் பணிவாக அவரின் வயதையும் மறந்து.
“ஓ…” என்றவளின் பார்வை “பிறகு என்ன? வந்த விஷயத்தை சொல்ல வேண்டியது தானே” என்று சொல்லாமல் சொல்ல, முருகேசன் எச்சிலை விழுங்கி கூற ஆரம்பிக்கும் முன்னர் அடுத்த கேள்வி அவளிடம் இருந்து அம்பாய் பாய்ந்து வந்தது.
“மெயின் எண்ட்டரன்ஸ் க்ளோஸ் பண்ணி எல்லாம் செக் பண்ணியாச்சு தானே? அப்புறம் ஏன் இன்னும் யாரும் செக் அவுட் ஆகல? எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்காங்க? நீங்களும் ஏன் லாக்கர் இருக்கிற ஃப்ளோருக்கு போய் ஜுவல்ஸ்ஸ வைக்காம இங்க வந்து ஒன்னும் சொல்லாம நின்னுட்டு இருக்கீங்க?”
பேத்தியின் கேள்விக் கணைகளை கண்டு பெரு மூச்சை விட்டுக் கொண்ட பத்பநாபன் தனது மூத்த மகனான வெங்கடேசனை மனதிற்குள் அர்ச்சித்தார்.
“அப்படியே அவனை மாதிரியே வளத்து வச்சு இருக்கான் பாரு!” என்று எண்ணிக் கொண்டவர்,
“மீனு.. முதல்ல அவனை பேச விடு! அப்புறம் நீ ஒன்னு ஒன்னாக் கேளு!” என்றவர் முருகேசனிடம் பார்வையை திருப்பி “நீ சொல்லு முருகேசா” என்க,
“நன்றி தெய்வமே!” என்பது போல் அவரை ஒரு பார்வை பார்த்தவர்,
“டிஸ்பிளேல வச்சிருந்த ஜுவல்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டு இருந்தோம் சார். கிட்ட தட்ட அம்பது பவுன் கம்மியா காட்டுது” என்று ஒரு வழியாய் சொல்லி முடிக்க,
“கம்மியா காட்டுதா? என்ன உளருற முருகேசா” என்ற பத்பநாபனிற்கு சற்றே பதட்டம் ஏற்பட்டது.
“மேடம்… எந்த நகையும் காணாம போகல. எல்லாமே இருக்கு. லிஸ்ட் செக் பண்ணியாச்சு. ஆனா நகை வெயிட் செக் பண்ணும் போது அம்பது சவரன் கம்மியா இருக்கு மேடம். மெஷின் ஃபால்ட்டுன்னு நினைச்சு மெஷினையும் செக் பண்ணோம். ஆனா மெஷின்ல எந்த பிராப்ளமும் இல்ல மேடம். எதுக்கும் நம்ம ஸ்டாக் வச்சிருக்க புது மெஷின்ல செக் பண்ணி பாக்கலாம்னு அதையும் பண்ணிப் பாத்தோம் மேடம்! அப்பையும் அம்பது பவுன் கம்மியா தான் காட்டுது. என்ன செய்றதுன்னு தெரியல. அதான் பெரிய ஐயா கிட்ட வந்து நிக்கிறேன்” என்றார் விளக்கமாய்!
பத்பநாபன் பேத்தியை திரும்பி பார்க்க, “எண்டரன்ஸ் லாக் பண்ணியாச்சு தானே?” என்றாள் முருகேசனிடம்.
“லாக் பண்ணியாச்சு மேடம். இன்னும் யாரும் கிளம்பல. என்ன எதுன்னு கண்டு புடிக்கிற வரைக்கும் யாரும் போக வேணாம்னு சொல்லிட்டு தான் வந்தேன்!” என்றார் முருகேசன்.
“ஓகே.. இன்னும் அஞ்சு நிமிசத்துக்குள்ள எல்லா நகைங்களையும் பேக் பண்ணி எடுத்திட்டு எல்லா ஸ்டாஃப்ஸும் டாப் ப்ளோர்ல அசம்பில் ஆகி இருக்கணும்! வெளில இருக்க வாட்ச் மேன் உட்பட!” என்று அதிகாரக் குரலில் கட்டளை இட்டவள்,
முருகேசன் சென்றதும் பத்தட்டத்துடன் இருந்த பத்பநாபனை கண்டு “ஒன்னும் இல்ல தாத்தா… சார்ட் அவுட் பண்ணிடலாம்” என்றாள் தைரியமாக.
அவரும் மேலும் கீழும் தலையை அசைத்து “வெங்கடேசனுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி திரும்ப வர சொல்லிடலாமா?” என்று கேட்க, சற்றே யோசித்தவள்,
“அப்பா டிரைவ் பண்ணிட்டு இருப்பாங்க தாத்தா. எப்படியும் சிட்டி தாண்டி இருக்க மாட்டாங்க! அவுட்டர் ரீச் ஆகுறதுக்கு ஒரு மணி நேமாவது ஆகும்” என்றாள் யோசனையுடன்.
“அப்ப குணாவுக்கு போனை போட்டு சொல்லிடவா?” என்றார் இரண்டாம் மகனைக் கூறி.
“வேணாம் தாத்தா. குணா சித்தப்பா கிட்ட சொல்லும் போது அப்பாவுக்கும் தெரிஞ்சு போகும். அப்புறம் அப்பா வண்டியை திருப்பிட்டு உறுதியா வந்துடுவாங்க இங்க. காரைக்குடி வரைக்கும் போற பிளான் ஸ்டாப் ஆகிடும். நாளைக்கு வைரம் எல்லாம் பத்திரமா வாங்கிட்டு வரணும். அதுக்காக தான் ட்ரைவர் கூட போடாம அப்பாவும் குணா சித்தப்பா மட்டும் போறாங்க. நாளைக்கு வைர நகைங்கள எல்லாம் இங்க கொண்டு வந்து சேக்குற வரைக்கும் பிரஷர்ல தான் இருப்பாங்க. இப்ப இதையும் சொல்லி இன்னும் அவுங்களை பிரஷர் பண்ண வேண்டாமே தாத்தா” என்றவளின் பேச்சில் இருந்த நியாயமும் சரியாகவே பட,
“பின்ன என்னமா பண்றது? உங்க அப்பன் கிட்ட சொல்லாம இருக்கவே பயமா இருக்கு. நாளைக்கு வந்ததும் விஷயம் தெரிஞ்சு தாம் தூம்னு குதிப்பான். தெரிஞ்ச உடனே ஏன் எனக்கு சொல்றதுக்கு என்னன்னு அந்த வாங்கு வாங்குவான்” என்றார் பத்பநாபன் மகனுக்கு பயந்தவராக!
தந்தையின் தந்தை பயத்தை கண்டு அச்சூழ்நிலையிலும் தென்றல் மீனாவின் முகத்தில் மெல்லிய குறுநகை!
அவளின் தந்தை வெங்கடேசன் என்றாலே குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பயமும் திகிலும் தான்! ஆனால், அவரைப் பெற்றவரும் அந்த வரிசையில் இருப்பதை எண்ணி சிரிப்பு தான் வந்தது தென்றல் மீனாவிற்கு!
“அப்பாவை நான் சமாளிச்சுக்கிறேன் தாத்தா” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.
“வேற வழி இல்ல ஆத்தா…. நீ தான் உங்கப்பனை சமாளிக்க வேணும். நாங்க எல்லாம் சொன்னாலும்.. என்ன சொன்னாலும் சாமி ஆடத்தான் செய்வான்! நீயே உங்கப்பன் வந்ததும் வேப்பில்லைய அடி! நான் அவன் கிட்ட பேசாம காய்ச்சல்னு படுத்திடுறேன்” என்றவரின் பேச்சில் தென்றல் மீனாவின் புன்னகை விரிந்தது.
“தாத்தா…. இப்ப சூழ்நிலை ரொம்ப சீரியஸ்! ஆனா நீங்க பேசுறது கேட்டு சிரிப்பை அடக்க முடியல” என்றவள் சிரித்தும் விட,
“உங்கப்பனுக்கு நான் பயப்படுறது உனக்கு சிரிப்பா போச்சில்ல” என்று பத்பநாபன் பாவம் போல் கோபமாய் கேட்க, இன்னுமே சிரிப்பு பொங்கியது அவளுக்கு.
“ஐயோ தாத்தா… விடுங்களேன்.. இந்த விஷயத்தை நாளைக்கு அவுங்க வந்தப்புறம் சொல்லிக்களாம். இப்போதைக்கு கனி சித்தப்பாக்கு மட்டும் போன் பண்ணி வர சொல்லுங்க” என்றாள் அடுத்த வேலையை பார்க்க செல்ல வேண்டும் என்கிற பரபரப்பை குரலில் தேக்கி!
பத்பநாபனிற்கும் சூழ்நிலையின் தீவிரம் புரிய, பேத்தியின் கூற்றை பின்பற்றி தனது இளைய மகனான கனிஅமுதனுக்கு போன் செய்து விஷயத்தைக் கூறி கடைக்கு வரும் படி சொல்லி விட்டு மேல் தளத்திற்கு பேத்தியுடன் விரைந்தார்!