மகன் ஊட்டி கிளம்பி சென்றிருக்கிறான் என்பதே பெரும் அதிர்ச்சி தான் சாத்தப்பனிற்கு. அங்கே சென்று அவன் செய்யும் காரியங்கள் எல்லாம் அவரின் காதிற்கு அங்கிருக்கும் வேலை ஆட்கள் மற்றும் வாட்ச் மேன் மூலம் தெரிய வந்தாலும் இரண்டு நாட்களாக அவரின் அழைப்பை ஏற்காமல் சுற்றலில் விடும் மகனை எண்ணி பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது அவரால்!
அங்கே எஸ்டேட் வீட்டில் இருக்கும் லேன் லைனிற்கு தொடர்பு கொண்ட போதும் பணியாள் தான் எடுத்து பேசி விட்டு வைத்திருந்தார். இரண்டு நாட்களாக மகனை பிடிக்கவில்லை என்று கோபத்தில் இருந்தவர், மூன்றாம் நாள் ஒரு வழியாக அவன் அழைப்பை ஏற்றதும் கட்டுக்கடங்கா கோபத்தில் அவனை விளாசித் தள்ளி விட்டார் வார்த்தையால்.
உள்ளுக்குள் அவ்வளவு பற்றி எரிந்தது அவருக்கு. “ஏன்டா.. ஏன்டா இப்படி பண்ற? இப்ப தானே கொஞ்ச நாளா நல்லா இருந்த. இப்ப மறுபடியும் என்னத்துக்கு எஸ்டேட் பக்கம் போய் இருக்க. போறப்ப ப்ரெண்ட்ஸ் கூட போனவன் தான. அப்படியே திரும்ப அவுங்களோட வந்திருக்க வேண்டியது தானே. இப்ப எதுக்கு அங்க அந்த பொண்ணோட மட்டும் தனியா இருந்து கூத்தடிச்சிட்டு இருக்க” என்றவருக்கு மகன் திரும்பி பழைய நிலைக்கே சென்று இருக்கிறானே என்று அத்தனை ஆத்திரமும் இயலாமையும் பிறந்தது.
“அதான் அந்த பொண்ணு கூட கூத்தடிக்கிறதுல பிஸியா இருக்கேன்னு தெரியுது தானே. அப்புறம் எதுக்கு கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்றீங்க?” என்றான் விதார்த் கொஞ்சம் கூட பயம் இல்லாமல்.
“விதார்த் தப்பு பண்ற மறுபடியும்.. இதுக்கு முன்னாடி நீ இப்படி இருந்தப்ப நான் ரொம்ப கண்டிச்சது இல்ல. ஆனா, இப்ப உனக்கு நிச்சயம் ஆக போகுது. அதுவும் நீ ஆசை பட்ட பொண்ணு கூடயே. அப்புறம் ஏன் மறுபடியும் இப்படி பண்ற” என்றார் ஆத்திரம் நீங்காத குரலில்!
“நிச்சயம் ஆக தானே போகுது. இன்னும் ஆகளேல்ல” என்றவனின் குரலில் அவ்வளவு அலட்சியமும் அகம்பாவமும் தான் கொட்டிக் கிடந்தது.
“நீ இப்படி பேசுறதுக்கு தான் நல்லா அனுபவிக்க போற” என்றவர், “அன்னைக்கு மீனாவை ட்ரெஸ் எடுக்க போகலாம்னு கூப்டுட்டு நீ உன் இஷ்டத்துக்கு ஊட்டி கிளம்பி போய்ட்ட.. அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா? வெங்கடேசனும் பத்பநாபன் மாமாவும் பேச வந்தாங்க” என்று கோபத்தில் இரைந்தார் சாத்தப்பன்.
“என்னவாம்?” என்ற விதார்த்தின் குரலில் மருந்துக்கும் பரபரப்போ என்ன ஆகி இருக்குமோ என்னும் பதட்டமோ இல்லை.
அதுவே சாத்தப்பனை பதட்டம் கொள்ள வைக்க போதுமானதாக இருந்தது.
“இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு போனாங்க” என்றவர் நேரடியாக விஷயத்தை சொல்ல,
“என்னது… வேண்டாமா” என்று அதிர்ச்சியாய் கேட்டான் விதார்த்.
“நான் என்ன பண்ணேன் ப்பா. ஊட்டில ப்ரெண்ட்ஸ்க்கு பார்ட்டி கொடுக்க போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன். மத்தபடி ஒன்னும் அவுங்களுக்கு தெரிய வாய்ப்பில்லையே” என்றவனின் பேச்சில் சாத்தப்பனின் பொறுமை தான் பறந்து போய் இருந்தது.
“டேய்.. வெட்கமே இல்லாம அப்பன் கிட்ட எப்படிடா உன்னால இப்படி பேச முடியுது?” என்றவர்,
“நீ பண்ணதுக்கு மீனு சும்மா இருப்பான்னு நினைச்சியா. ஆரம்பத்துல இருந்தே அவளுக்கு உன் மேல நல்ல அபிப்ராயம் இல்ல. இப்ப சுத்தம். வீட்ல சொல்லி இருப்பா போல. அவ அப்பனும் தாத்தனும் நேர்ல வந்து எங்களுக்கு இந்த சம்மந்தம் வேணாம்னு பேசிட்டு போறாங்க. நான் தான் பேசி சமாளிச்சு அவுங்களை அனுப்பினேன்” என்றவர்,
“உனக்கு எப்படி பொண்ணு பாக்குறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நீயா வந்து மீனுவை பிடிச்சிருக்குன்னு சொன்ன போது நான் பட்ட நிம்மதிக்கு அளவே இல்ல தெரியுமா. நல்ல பெரிய இடத்து பொண்ணு. நீ விரும்பி வேற கேக்குற. சரி மாறிட்டேன்னு இருந்தேன். நீ என்னடான்னா மறுபடியும் உன் ஆட்டத்தை ஆரம்பிச்சு இருக்க? இது மட்டும் வெங்கடேசன் குடும்பத்துக்கு தெரிஞ்சது என்ன பண்ணுவாங்கன்னே தெரியாது விதார்த். நம்ம குடும்ப மானம் கவுரவம் எல்லாம் போய்டும். நீ ஒழுங்கா நாளைக்கு கிளம்பி வா. அவுங்க வீட்ல பேசி சமாதானம் பண்ணிடலாம்” என்றவருக்கு தென்றல் மீனாவை எப்படியாவது தங்கள் வீட்டின் மருமகள் ஆக்கி விட வேண்டும் என்று தீவிரம் மிகுந்திருந்தது.
அவரைப் பொறுத்த வரையில் தென்றல் மீனா பத்பநாபன் வீட்டின் ஒரே பெண் வாரிசு! சீர் வரிசைகளுக்கும் வரதட்சணைக்கும் நகைகளுக்கும் எந்த ஒரு குறைவும் இருக்கப் போவதில்லை. அவளும் நல்ல ஆளுமை நிறைந்த அறிவான அழகான பெண்!! அப்படி இருக்கையில் மகனுக்கு மணம் முடித்து வைத்து விட்டால் அவரின் சொத்து கணக்கு ஏறுவதோடு மட்டுமின்றி சமுதாயத்தில் கூடுதல் அங்கீகாரம் கூட கிடைத்து விடும்!
பத்பநாபன் குடும்பத்தின் சம்மந்தி என்கிற பெயரே அவரின் மதிப்பையும் தராதரத்தையும் இரண்டு படி உயர்த்தி விடும்!
அவர்கள் வட்டாரத்தில் தென்றல் மீனாவை நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு பெண் கேட்க அனைவருமே தயாராக இருந்தனர். தந்திரமாக அவர்களை எல்லாம் முந்திக் கொண்டார் சாத்தப்பன்! அதுவும் மகனே நேரடியாக அவனின் விருப்பத்தை சொல்லி இருக்க, அவ்வீட்டின் மூத்தவரான பத்பநாபனிடம் கூட பேசாமல் வெங்கடேசனிடம் பேசி அழகாக காயை நகர்த்தி நிச்சய நாள் முதல் கல்யாண நாள் வரை அனைத்தும் தயார் எனும் நிலையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.
அனைத்தும் ஒழுங்காக கூடி வருகையில் மகன் இப்படி ஆட்டத்தை கலைக்கிறானே என்று கோபம் தலைக்கேறியது அவருக்கு.
“என்னடா நான் பேசிட்டே இருக்கேன். நீ வாயே திறக்காம இருக்க? எதாவது ஏடா கூடமா பண்ணி காரியத்தை கெடுக்காத விதார்த். எல்லாம் கூடி வர நேரத்துல நீ கும்மி அடிக்காத… என்னடா.. அமைதியா இருக்க.. எதையாவது சொல்லித் தொல” என்று பொறுமை இழந்து இரைந்தார் சாத்தப்பன்.
“தெரியும் ப்பா மீனுக்கு என்னை பிடிக்காதுன்னு” என்று பல்லை கடித்த விதார்த்,
“எவ்வளோ தைரியம் இருக்கணும் அவளுக்கு. வீட்ல சொல்லி கல்யாணத்த நிப்பாட்ட பாக்குறாளா.. பாக்குறேன்.. எப்படி கல்யாணத்தை நிப்பாட்டுறான்னு. அவுங்க வீட்லயும் என்ன பண்றாங்கன்னு பாக்கலாம். நீங்க டென்ஷன் ஆகாதீங்க. அவ தான் நம்ம வீட்டு மருமக” என்றான் வெறியுடன்!
“நீ பேசி கிழிச்சது வரை போதும் விதார்த். நீ ஒழுங்க மரியாதையா நாளைக்கு கிளம்பி வா. நாலு நாள்ல நீ வந்திடுவேன்னு நான் சொல்லி வச்சு இருக்கேன்” என்றார் சாத்தப்பன் கறாராக.
“அவுங்க கிட்ட சொன்னா நா பயந்து வந்திடனுமா..” என்று அலட்சியமாய் சொன்னவன்,
“அதெல்லாம் முடியாது ப்பா” என்றான் அவனும் கறாராக.
“என்னடா நீ.. இப்படி பேசுற… நீ போற போக்கு எங்க கொண்டு போய் விடுமோ எனக்கு தெரியல விதார்த். இதெல்லாம் வெங்கடேசன் ஃபேமிலிக்கு தெரிய வந்தா ரொம்ப பிரச்சனை ஆகி போகும். அதுவும் வெங்கடேசன்.. பொண்ணு விஷயம்னு வந்தா சும்மா விட மாட்டான்” என்று மகனை முடிந்த மட்டும் எச்சரித்தார் சாத்தப்பன்!
“என்ன பண்ணிடுவாருன்னு நானும் பாக்குறேன்” என்றவன் அதே அலட்சியத்தோடு அழைப்பை துண்டித்து விட்டான்.
சாத்தப்பனிற்கு தான் தலை வெடிக்காத குறை மகனின் செயல் பாட்டில்!
மனம் கேட்காமல் மறு நாளும் மகனுக்கு அழைத்து வந்து விடுமாறு மன்றாடியே பார்த்து விட்டார் சாத்தப்பன்.
அவனோ “நான் எப்ப வரணுமோ அப்ப தான் வருவேன் ப்பா. விடுங்க” என்று விட்டான் முடிவாக.
“எப்ப தான் வருவ? அதையாவது சொல்லுடா!” என்று சாத்தப்பன் தான் மகனிடம் கெஞ்சும் நிலைக்கே சென்று விட்டார்.
“ரெண்டு நாள் ஆகும்னு சொல்லி வையுங்க” என்று வைத்து விட்டான் அவன்!
“தருதலைய பெத்ததுக்கு என் தலை எழுத்து” என்று தலையில் அடித்து கொண்டு தான் வெங்கடேசனிற்கு அழைத்து விஷயத்தை தடுமாறியபடி கூறி இருந்தார்.
“ரெண்டு நாள் கழிச்சு வந்து இவன் எதுவும் பண்ணாம ஒழுங்கா இருந்தா சரி” என்றதோடு தன் விதியை நொந்து கொண்டார் சாத்தப்பன்! அவருக்கும் வேறு வழியில்லயே!
ஆனால், அவரின் அருமை மகனோ இரண்டு நாள் கழித்து தான் வருவேன் என்று சொல்ல சொல்லி விட்டு மறு நாளே சென்னைக்கு வந்து மீனுவின் கண்களில் பட்டு தன் முகத்திரையை அவனே கிழித்திருந்தான்!