மொத்த குடும்பமும் அழகாபுரம் கிளம்பி இருக்க வீடே வெறிச்சோடி இருந்தது. அனைவரும் கிளம்பிய அன்று மாலை சந்தியாவின் பெற்றோர் வந்து விட்டனர்.
அவர்களை இன்முகத்துடன் வரவேற்ற தென்றல் மீனா அவர்களை உபசரிக்க, “நல்லா இருக்கியா மீனாமா” என்று கேட்டதோடு நிறுத்திக் கொண்டார்கள்.
அவளின் நிச்சயம் நின்றதை பற்றி எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. பெற்றவர்களிடம் சந்தியா நிகழ்ந்ததை கூறி “இங்க வரும் போது எதையும் மீனுகிட்ட கேட்டுக்க வேண்டாம் ம்மா. அப்பா கிட்டயும் சொல்லிடுங்க. மீனு நார்மலா தான் இருக்கா. இருந்தாலும் நாம விசாரிச்சு எதையும் கிளறி விட்ற வேண்டாம்” என்று சொல்லி இருந்தாள்.
சந்தியாவின் பெற்றோர்களும் நல்ல குணம் கொண்டவர்கள் என்பதால் அவர்களும் எதையும் கேட்டு சங்கடப் படுத்தவில்லை. தங்களை உபசரித்தவளிடம் இன்முகமாகவே பேசினார்கள்.
“நாளைக்கு ஸ்கேன் எத்தனை மணிக்கு போகனும் சந்தியா?” என்று சந்தியாவின் தந்தை கேட்க,
“இல்ல மீனு. நீ நாளைக்கு கடைக்கு வேற போகனும். நீ ஒரு ஆள் தான் இருக்க. நாங்க போய்ட்டு வந்திடுறோம். அம்மா அப்பா ரெண்டு பேரும் இருக்காங்களே” என்ற சந்தியா, “ட்ரைவர் கூட வருவாங்க. நீ கடைக்கு போய்ட்டு வா” என்றாள்.
அவள் சொல்வதும் புரிந்தது. குல தெய்வக் கோவிலுக்கு செல்லும் திட்டம் இருந்தாலும் கடைக்கு விடுமுறை விடவில்லை. முருகேசன் கட்டுப்பாட்டில் கடையை திறக்க தான் முடிவு செய்திருந்தனர் அனைவரும்.
இப்போது தான் இங்கே இருக்க, செல்லாமல் இருக்க வேண்டாம் என்றவள் “சரி அண்ணி. நீங்க நாளைக்கு காலைல போய்ட்டு வந்திட்டு எனக்கு கால் பண்ணுங்க” என்றாள் தென்றல் மீனா.
அதே போல் மறு நாள் காலை பெற்றோருடன் ஸ்கேன் எடுத்து முடித்ததும் வீட்டிற்கு வந்த சந்தியா மீனாவிற்கு அழைத்திருந்தாள்.
“சொல்லுங்க அண்ணி… ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தாச்சா? ஸ்லேன் பண்ணியாச்சு தான? குழந்தை எப்படி இருக்காம்? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கியவளிடம்,
“மீனு… பொறுமை பொறுமை..” என்று சிரித்த சந்தியா, “குழந்தை நல்லா இருக்கு மீனு. தலை கீழ வந்தாச்சாம். எப்ப பெயின் வந்தாலும் உடனே ஹாஸ்பிட்டல் வர சொல்லி இருக்காங்க டாக்டர்” என்றவள்,
சற்று தயக்கத்துடன் “நீ எப்ப மீனு வீட்டுக்கு வருவ?” என்று கேட்க,
“வழக்கம் போல ஈவ்னிங் தான் அண்ணி. லஞ் எனக்கு கொடுத்து விட வேண்டாம். வெளில பாத்துக்கிறேன்” என்றவள்,
அவளின் குரலில் இருந்த தயக்கத்தை உணர்ந்து “என்ன ஆச்சு அண்ணி?” என்று கேட்க,
“இல்ல மீனு… அம்மாவோட சின்ன மாமியார் தவறிட்டாங்கலாம். இப்ப தான் போன் வந்தது. நான் கிளம்ப சொல்றேன். என்னை விட்டுட்டு போக அவுங்களுக்கு ஒரே யோசனை. அதனால போகலேன்னு சொல்லிட்டாங்க. எனக்கு தான் மனசில்ல. அம்மாவுக்கு அவுங்க சின்ன மாமியார் நல்ல பழக்கம். போகாம இருந்தா நல்லா இருக்காதுன்னு சொல்லிட்டேன். பிடிவாதமா இருக்காங்க” என்றாள் வருத்தத்துடன்.
ஐந்து ஆண்டுகள் கழித்து கருவுற்று இருக்கும் மகள். ஒன்பது மாதங்களாய் பாதுகாப்புடன் பத்திரமாக இருந்தாகி விட்டது. இப்போது இறுதி கட்டத்தில் வந்து நிற்கும் நேரம் புகுந்து வீட்டாரும் யாரும் இல்லாத நிலையில் தனியாக எப்படி மகளை விட்டுச் செல்வது என்று இருவருமே செல்ல மறுத்து விட்டனர். அவர்களுக்கும் இப்போது தானே மகளை பார்த்துக் கொள்ள சந்தர்ப்பம் அமைந்து இருக்கிறது. அதனால் செல்ல விரும்பவில்லை இருவரும்.
சந்தியா தான் மனம் பொறுக்காமல் “எல்லாரும் தப்பா நினைப்பாங்கப்பா. நான் மீனுவை வர சொல்றேன். நீங்க போய்ட்டு வாங்க” என்று சொல்ல,
“விளையாடாத சந்தியா. சென்னைக்குள்ளேயே இருந்தாலும் பரவாயில்லை. இது நம்ம சொந்த ஊர் போகனும். போனா ரெண்டு நாள் ஆகிடும் வர. எப்படி உன்னை இங்க விட்டுட்டு போறது. டாக்டர் வேற இன்னும் பத்து நாளைக்குள்ள எப்பவேணாலும் வலி வரலாம்னு சொல்லி இருக்காங்க. இப்ப போய் எப்படி நாங்க கிளம்புறது” என்று சந்தியாவின் அன்னை ஒத்துக் கொள்ளவே இல்லை.
இப்போது மீனாவிடம் சந்தியா கேட்டுப் பார்க்க, “அதனால் என்ன அண்ணி? நான் வந்து இருக்கேன். ரெண்டு நாள் தானே. இங்க கடைல முருகேசன் பாத்துக்குவார். நான் நைட் ஒரு டைம் வந்து பாத்துட்டா போதும். இல்லேன்னா இங்க அவரே மேனேஜ் பண்ணிடுவார். சாவியை மட்டும் வீட்டுக்கு வந்து கொடுக்க சொல்லிக்களாம். நாளைக்கு நைட்டு நம்ம வீட்லயும் எல்லாரும் வந்துடுவாங்க. அப்புறம் என்ன? நீங்க அத்தை மாமாவை சாப்பிட்டு கிளம்ப சொல்லுங்க. நானும் இப்ப கிளம்பி வீட்டுக்கு வரேன்” என்றாள்.
“ரொம்ப தேங்க்ஸ் மீனு..” என்ற சந்தியா, “உனக்கு பிரச்சனை இல்லையே?” என்று கேட்க, “ஒரு பிரச்சனையும் இல்லை அண்ணி. இதென்ன தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க?” என்று மென்மையாய் கடிந்தவள்,
“பத்து நாள் இருக்கு தானே. நான் பாத்துக்கிறேன் இந்த ரெண்டு நாள்” என்று இயல்பான தைரியத்துடன் சொன்னவள், மதியம் இல்லம் வந்ததும் சந்தியாவின் பெற்றவர்களிடம் பேசி அவர்களை தங்கள் காரிலேயே ஊருக்கு அனுப்பி வைத்தாள்.
இருவருக்கும் சேர்த்தே ஆயிரம் பத்திரங்கள் சொல்லி இருந்தார் சந்தியாவின் அன்னை.
“கொஞ்சம் வலி வந்தாலும் சொல்லிடனும் சந்தியா. பத்திரமா இருந்துக்கங்க” என்றவர்,
தென்றல் மீனாவிடம் “நீ இன்னைக்கு நைட் சந்தியா கூடவே படுத்துக்கோ மீனுமா. கொஞ்சம் உதவியா இருக்கும் அவளுக்கு” என்றார் மகளை கவலையுடன் பார்த்துக் கொண்டே.
“கண்டிப்பா அண்ணி கூடவே தூங்குறேன் அத்தை” என்றவள், “நீங்க பயப்படாம போய்ட்டு வாங்க” என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.
மதிய உணவை உண்டதும் அசதியாக இருக்கிறது என சந்தியா உறங்கச் சென்று விட, ஹாலில் கை பேசியோடு அமர்ந்து விட்டாள் தென்றல் மீனா.
தந்தைக்கு அழைத்து விஷயத்தை சொன்னவள், “நீங்க நாளைக்கு நைட் வந்துடுவீங்க தானே ப்பா. நான் கடைக்கு போகல. வீட்லயே அண்ணி கூட இருக்கேன். அண்ணா கிட்ட சொல்லிடுங்க” என்றாள்.
“சம்மந்தியும் இப்ப தான் எனக்கு போன் பண்ணி சொன்னார் மீனு. கொஞ்சம் சங்கடமா பேசினாங்க. பொண்ணை பாத்துக்க வந்துட்டு பாத்துக்க முடியாம கிளம்புற மாதிரி ஆகிடுச்சுன்னு. நான் தான் நீ இருக்க தானேன்னு சொல்லி சமாளிச்சேன்” என்ற வெங்கடேசன்,
“இங்க அம்மா தான் ஒரே புலம்பல்… இப்படியா பொம்பளை புள்ளைங்கள விட்டுட்டு தனியா போவாங்கன்னு. கௌதமுக்கு வேற இன்னைக்கு நைட்டும் ஆஃபிஸ் போல. பத்திரம் மீனுமா. எதுவா இருந்தாலும் எங்களுக்கு கால் பண்ணு” என்று சொல்லி மேலும் சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டித்தார்.
தந்தையிடம் பேசியதும் சிறிது நேரம் ஹாலில் இருந்த சோஃபாவிலேயே சரிந்தவள் கண்ணயர்ந்து விட, எழும் போது நேரம் மாலையாகி இருந்தது.
“இவளோ நேரமா தூங்கினோம்” என்று எழுந்து சந்தியாவின் அறைக்குச் சென்று பார்க்க, அப்போது தான் எழுந்து கொள்ள முடியாமல் சிரமத்துடன் அசைந்து கொண்டிருந்தாள் சந்தியா.
“இருங்க அண்ணி வரேன். என்னை கூப்பிட்டு இருக்கலாம் தானே. நானும் நல்லா தூங்கிட்டேன். இப்ப தான் எழுந்தேன்” என்றவள், அவள் எழ உதவி செய்தபடி, “ரெஸ்ட் ரூம் போகணுமா அண்ணி?” என்றாள்.
“ஹ்ம்ம் மீனு. போகனும்” என்றவள், அவளின் உதவியுடன் சென்று வந்ததும் “கொஞ்சம் சூடா டீ மட்டும் கமலா அக்காவை போட்டுத் தர சொல்லு மீனு” என்றாள் முகத்தை துடைத்தபடி.
“ரொம்ப நேரம் நடக்க வேண்டாம்னு டாக்டர் சொல்லி தான் அனுப்பினாங்க. இருந்தாலும் படுத்தே இருக்க ஒரு மாதிரி இருக்கு. கொஞ்ச நேரம் மட்டும் தோட்டத்துல நடக்கலாம்” என்றாள்.
தென்றல் மீனாவும் அவளுக்கு டீயும், தனக்கு காஃபியும் வேலையாள் கமலாவிடம் சொல்லி வாங்கிக் கொண்டு வர, குடித்து முடித்ததும் சந்தியாவுடன் தானும் தோட்டத்தில் நடந்தாள்.
இரண்டு நிமிடம் சென்றதற்கே சந்தியாவிற்கு மூச்சு வாங்க, “போதும் மீனு.. முடியல” என்று பெரு மூச்சை விட்டுக் கொண்டு சொன்னவள், அவள் கைகளை பற்றிக் கொண்டு “ரூம் போகலாம்” என்றாள்.
அவள் மூச்சு வாங்கியதை கவனித்தவள், “பெயின் எதுவும் இருக்கா அண்ணி?” என்று கேட்க,
“சரி அண்ணி. நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் முருகேசன் சார் கிட்ட பேசிட்டு வரேன்” என்று வெளியே வந்தாள். முருகேசனிடம் அவள் பேசி முடித்ததும் கௌதமிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க கௌதம் அண்ணா..” என்றதும்,
“மீனு.. என்ன பண்றீங்க? அண்ணியோட அப்பா அம்மா ரெண்டு பேரும் ஒரு டெத்க்கு ஊருக்குப் போய்ட்டாங்களாமே… அப்பா கால் பண்ணி சொன்னாங்க” என்றவன்,
“நான் வேணும்னா பர்மிஷன் சொல்லிட்டு வரவா?” என்று கேட்க,
“இல்லண்ணா. அண்ணி நார்மலா தான் இருக்காங்க. கொஞ்சம் நேரம் நடந்தாங்க தோட்டத்துல. அப்புறம் டயர்டா இருக்குன்னு ரெஸ்ட் எடுக்குறாங்க” என்றவள்,
“நீங்க வரப்பவே வாங்க அண்ணா” என்றாள்.
“சரி மீனு. நான் வர மிட் நைட் மேல ஆகிடும். மீட்டிங் வேற இருக்கு பதினொரு மணிக்கு” என்றவனிடம்,
“நைட் பதினொரு மணிக்கு மீட்டிங்கா” என்று கேட்டவள், “இதுக்கு தான் சித்தப்பா சொன்ன மாதிரி நம்ம ஸ்வர்ணம் பேலஸ்லயே ஜாயின் பண்ணி இருந்தீங்கன்னா இந்நேரம் பாதி தூக்கத்துல இருந்திருப்பீங்க” என்றாள் கிண்டலாக.
“பாத்தியா…. பாத்தியா… நீயும் அப்பா பக்கம் தாவிட்ட… எனக்கு கோல்ட் பிஸ்னசை விட சாஃப்ட்வேர்ல தான் இன்ட்ரெஸ்ட் வந்தது. நான் என்ன செய்ய மீனு?” என்றவன்,
“என் போன் சைலண்ட் மோட்ல இருக்கும். நீ எதுவும்னா மெசேஜ் பண்ணு மீனு. பாத்து பத்திரம்” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
இரவு உணவு வரையிலும் வீட்டினர் யாராவது மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டு தான் இருந்தனர். நிகேதன் மனைவியிடம் அரை மணி நேரத்திற்கு ஒரு தரம் பேசிக் கொண்டு இருந்தான்.
ஒரு கட்டத்தில் “முடியலங்க. நான் போய் தூங்குறேன். பத்திரமா தான் இருக்கேன். மீனு இருக்கா கூட. நீங்க கொஞ்சம் அங்கேயும் கவனிங்க. என் கிட்ட மட்டும் பேசிட்டு இருந்தா எப்படி?” என்று சந்தியா சொன்ன பின்னர் தான் தொடர்ந்து அழைப்பதை நிறுத்தி இருந்தான் நிகேதன்.
இரவு உணவையும் தயார் செய்து வைத்து விட்டு கமலா கிளம்ப, “சாப்பிடலாம் அண்ணி” என்று அழைத்த தென்றல் மீனாவிடம், “கொஞ்சம் ரெஸ்ட்லஸ்ஸா இருக்கு மீனு. அப்புறம் வந்து சாப்பிடுறேன்” என்றவளுக்கு வயிற்றில் நமநமவென இருந்தது.
நேரம் ஒன்பதரையை தாண்டி இருக்கவும், “இப்பவே மணி பத்தாக போகுது அண்ணி. நான் வேணும்னா கொண்டு வந்து தரவா” என்று கேட்க, “இல்ல மீனு.. ஒரு டென் மினிட்ஸ் போகட்டும். நானே வரேன்” என்று மறுத்தவள்,
“நீ சாப்பிடு மீனு. எனக்காக ஏன் வெயிட் பண்ற?” என்றாள்.
“இல்ல அண்ணி.. நீங்களும் வாங்க. சேர்ந்து சாப்பிடலாம்” என்றவள் “நான் போய் நைட் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் அண்ணி. வந்ததும் சாப்பிடலாம்” என்று மேலே தன் அறைக்கு சென்றாள்.
முகம் கழுவி, உடை மாற்றி கீழ வந்த போது சந்தியா பேத் ரூமில் இருக்க, “அண்ணி…” என்று கதவைத் தட்டினாள்.
அவளோ அவளின் கைகளில் பற்றிக் கொண்டு “இல்ல மீனு.. எனக்கு வேணாம். நீ சாப்பிடு” என்றவள் அவளின் உதவியுடன் கட்டிலில் வந்து அமர,
“ரொம்ப டயர்டா இருக்கீங்க அண்ணி. சாப்பிடாம எப்படி தூங்குவீங்க? கொஞ்சம் சாப்பிடுங்க. நான் எடுத்துட்டு வரேன்” என்று நகர எத்தனிக்க,
அவளின் கையை பற்றிக் கொண்ட சந்தியா “மறுபடியும் வாஷ் ரூம் போகனும் மீனு” என்றாள் மூச்சு வாங்க.
“இப்ப தான அண்ணி போய்ட்டு வந்தீங்க?” என்று தென்றல் மீனா கேட்டாலும் “வாங்க அண்ணி” என்று அவள் கைப் பற்றி உதவினாள்.
சந்தியா வாஷ் ரூம் சென்று வந்த அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் வாஷ் ரூம் செல்ல,
“என்ன அண்ணி ஆச்சு?” என்று அவள் சந்தியாவின் தோள்களை பற்றிக் கொள்ள, அவளோ அடி வயிற்றை பற்றிக் கொண்டு “பேபி.. பேபி வரப் போகுதுன்னு நினைக்கிறேன் மீனு. பெயின் வருது” என்றவள், பெரிய பெரிய மூச்சுக்களாக எடுத்து விட, சுத்தமாய் இதனை எதிர்பார்க்கவில்லை தென்றல் மீனா!