விதார்த்தின் முத்தங்கள் செவிகளை பெரும் சப்தத்தோடு நிறைக்க, ஒரு நொடி திடுக்கிட்டுத் தான் போனாள் தென்றல் மீனா!
பேச்சற்று திகைத்து விழித்துக் கொண்டிருந்தவள் மறு நொடியே தன்னை சுதாரித்துக் கொண்டு “விதார்த்…” என்றாள் சிறு கண்டனத்துடனும் கோபத்தோடும்!
அவளின் அழைப்பில் “ஓ…. என் பேரை சொல்லிட்டியா?” என்றவன் மீண்டும் முத்தமிட ஆரம்பிக்க தென்றல் மீனாவால் முடியவில்லை!
“விதார்த்… ஜஸ்ட் ஸ்டாப் இட்…. போதும் ப்ளீஸ்” என்று கெஞ்சியே விட்டாள் அவனிடம்.
“மீனு கெஞ்சுறியா….!!! நீயா கெஞ்சினது… கெத்தா இருப்ப எப்பவும்? இப்ப கெஞ்சுற? கெஞ்சுற அளவு நான் என்ன பண்ணிட்டேன்??!!!” என்று அந்தப் பக்கம் இருந்தவன் அவளின் நிலை புரியாது கேலி பேசி அவளை வம்பிழுக்க நினைக்க,
“விதார்த்.. கொஞ்சம் சீரியசா பேசுங்க” என்றாள் படபடவென வந்த குரலை மறைத்து முயன்று நிதானமாக பேசியபடி.
இதுவரை இப்படி ஒரு முத்தச் செயல்பாடெல்லாம் அவனிடம் இருந்து வந்ததில்லை!
இருவருக்கும் இன்னும் இருபது நாளில் நிச்சயம் என இரண்டு தரப்பு குடும்பத்தினரும் முப்பது நாட்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தனர்.
இந்த ஒரு மாத காலத்தில் அவனின் எல்லையை அவன் எப்போதும் மீறியதாக தென்றல் மீனாவிற்குத் தெரியவில்லை! இன்றானால் அலைபேசியின் வழி முத்தங்களை அள்ளித் தெளித்திருந்தான்.
ஒரு நொடி திகைத்து.. திணறிப் போனாள் தென்றல் மீனா!
அவனிடம் முழு கோபத்தையும் காட்ட முடியவில்லை அவளால்!
“இன்னைக்கு ஷாப்பிங் வர முடியாது விதார்த். நெக்ஸ்ட் வீக் போகலாம்” என்ற விஷயத்தை சொல்ல அவனுக்கு அழைத்திருக்க, அவனோ பேச வந்ததையே மறக்கடிக்கும் அளவிற்கு செய்து விட்டான்.
விதார்த்…
வெங்கடேசனின் உயிர் நண்பனான சாத்தப்பனின் மகன்! விவரம் தெரிந்த பருவத்தில் இருந்தே தென்றல் மீனாவை அவனுக்குத் தெரியும்.
அப்பாவின் நண்பருடைய பெண் என பல முறை அவளை கண்டிருக்கிறான். கண்டு கொண்டே இருந்தது ஈர்ப்பில் கொண்டு வந்து விட, அவ்வீர்ப்பு காதலில் வந்து நின்றது.
ஒரு கட்டத்திற்கு மேல் காதலை அவளிடமும் சொல்லி விட, முதலில் முகத்தில் அடித்தார் போல் “எனக்கு விருப்பம் இல்ல..” என்று சொல்லி விட்டவள்,
அத்தோடு நிறுத்தாமல் “என் ஃபேமிலி யாரை சூஸ் பண்றாங்களோ அவுங்க தான் என்னோட லைஃப் பார்ட்னர்” என்றும் சொல்லி அவனுக்கு அவளே வசதி படுத்திக் கொடுத்து விட்டாள்.
அவளைத் திருமணம் செய்து கொள்ள முதலில் அவளின் குடும்பத்தை தான் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும் என்று புரிந்து கொண்டவன் தந்தையிடம் தெளிவாகவே தன் விருப்பத்தை சொல்லி விட்டான்!
சாத்தப்பனிற்கும் மகனின் விருப்பத்தில் எந்த ஒரு மறுப்பும் இருக்கவில்லை. இயல்பாகவே அவருக்கு பணத்திலும் பணக்கார வர்க்கத்திலும் தான் பிடித்தம் அதிகம்!
அப்படி பணத்தை மையப் படுத்தி வாழும் மனிதருக்கு, பிரம்மாண்ட நகைக் கடையின் உரிமையாளர் பத்பநாபன் வீட்டின் ஒரே பெண் வாரிசை மகனிற்கு கட்டி வைக்க கசக்கவா போகிறது?????
சந்தோஷமாகவே மகனின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தவர் “குட் சாய்ஸ் விதார்த்! பொண்ணு நல்ல ஷார்ப்! அளவா பேசினாலும் அர்த்தமா பேசுவா! ரொம்ப போல்ட் அண்ட் பிரில்லியன்ட்” என்று தென்றல் மீனாவின் பெருமையை சொன்னவர்,
“நம்ம ஃபேமிலுக்கு ஏத்த பொண்ணு தான். நீ அவ கிட்ட சொல்லிட்டியா?” என்று மகனிடம் கேட்க,
“சொன்னேன் ப்பா. அக்ஸப்ட் பண்ணிக்கல. ஆல்சோ வித் தட்.. ஃபேமிலி யாரை சொல்றாங்களோ அவனை தான் லைஃப் பார்ட்னர்னு சொன்னா” என்றான் ஒரு மாதிரியான குரலில்!
அதைக் கண்டு சிரித்தவர் “இதுக்கு ஏன் டல்லா பேசுற. அவுங்க ஒட்டு மொத்த குடும்பமும் வெங்கடேசன் சொல்லுக்கு கட்டுப் படும். அந்த வெங்கடேசனோட உயிர் நண்பன் நானு… நான் சொல்லி அவன் பொண்ணை என் வீட்டு மருமகளாக்க சம்மதிக்காம விட்ருவானா?” என்று இறுமாப்புடன் சொன்னவர்,
“டோண்ட் வொரி விதார்த். நான் பேசுறேன். மொத்த குடும்பமும் நீ தான் மாப்பிள்ளைன்னு சொல்லுவாங்க. அப்புறம் பாரு.. தன்னப்பாட்டுல தென்றல் மீனாவும் நீ தான் என்னோட லைஃப் பார்ட்னர்னு சொல்லிடுவா” என்று மகனிடம் வாக்குக் கொடுத்தவர், அவனிடம் சொன்னதை செயலாக்கியும் இருந்தார்.
வெங்கடேசனை நேரில் சந்தித்து நேரடியாகவே “உன் பொண்ணை எங்க வீட்டு பொண்ணாக்கிக்க நினைக்கிறோம் வெங்கடேசா” என்று தன் எண்ணத்தை முடிவெடுத்த தோரணையுடன் கூற,
நண்பனின் கோரிக்கையில் திடுக்கிட்டாலும் மறுக்க எந்தக் காரணமும் வெங்கடேசனிற்கும் இல்லை.
அவர்களுக்கு சொந்தமாக மிகப் பெரிய அளவில் ஃபைனான்ஸ் தொழில் இருக்கிறது. அது போக ஊட்டியில் தேயிலை தோட்டம், காப்பிக் கொட்டைத் தோட்டமும் இருக்கிறது.
வசதி, அந்தஸ்து என எதிலும் குறைவில்லை. சாத்தப்பன் சற்றே பணப் பேர்வழியாக இருந்தாலும், அவரின் மனைவி குணவதி தான் என்பதால் வெங்கடேசனிற்கு தென்றல் மீனாவை கட்டிக் கொடுக்க சம்மதம் தான்!
இதை எல்லாம் விட விதார்த் அவரின் கண் முன்னே வளர்ந்தவன். மகளை கட்டிக் கொடுத்தால் நன்றாகவே வைத்துக் கொள்வார்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கும் இருந்தது.
எனவே நண்பனிடம் “எனக்கு சம்மதம் தான். வீட்ல பேசிட்டு சொல்றேன் சாத்தப்பா” என்று சொல்லி இருந்தார். அப்போதே சாத்தப்பனின் இதழ்களில் கர்வமான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.
‘எனக்கு சம்மதம்’ என்று வெங்கடேசன் கூறிய பொழுதே இத்திருமணம் உறுதியாக நடந்துவிடும் என்று சாத்தப்பனுக்கு புரிந்து போனது.
வெங்கடேசனின் சொல்லிற்கு மறு சொல் அங்கிருக்கப் போவதில்லை! அப்படி இருக்கும் நிலையில், நிச்சயம் தென்றல் மீனா தன் வீட்டு மருமகள் தான் என்பதை உணர்ந்து கொண்டவர்,
“சொல்லிட்டு எப்ப தட்டை மாத்திக்கலாம்னு தேதி பார்த்துட்டு வந்திடுடா” என்று நண்பனிடம் சொல்லி அனுப்பியவர் மகனிடம், “கூடிய சீக்கிரம் நிச்சயம் வச்சிடலாம்” என்று சொல்லி மகனைப் பார்த்து கர்வமாய் புன்னகை சிந்தினார்.
“தாங்க்ஸ் ப்பா. தேங்க் யூ சோ மச்” என்று தன் விருப்பத்தை நிறைவேற்றிய தந்தையை கட்டிக் கொண்டு ஆராவாரம் செய்தவன் நொடி நேரம் கூட தாமதிக்காமல் தென்றல் மீனாவிற்கு அழைத்து விட்டான்.
விதார்த்தின் எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும் ஒரு நொடி புருவம் சுருங்க அதை கண்டவள் அழைப்பை ஏற்கத் தோன்றாமல் அப்படியே இருக்க, அழைப்பு முடிந்து குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி கேட்டது.
அதில் தன்னிலை அடைந்து மொபைலை எடுத்துப் பார்த்தவளுக்கு அவன் அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை கண்டு கண்கள் அகன்றது கோபத்தில்!
“ஓகே.. நீ அட்டன் பண்ண மாட்ட..! தட்ஸ் பைன் மீனு! சீ யூ இன் அவர் என்கேஜ்மெண்ட் டே!!”
படித்ததும் கோவம் தலைக்கு ஏறினாலும் இவன் என்ன பைத்தியமா என்னும் சிந்தனை தான் அவளுக்குள் ஓடியது.
தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியும் இப்படி செய்தி அனுப்பி இருக்கிறான் என்றால் எவ்வளவு திமிர் என்று அவ்வளவு உஷ்ணம்!
ஆனால், அன்று கடையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் மொத்த குடும்பமும் ஹாலில் கூடி இருப்பதை கண்டு “என்ன எல்லாரும் இருக்கீங்க?” என்று தன் உணர்வுகளை பின்னிருத்தி சாதாரணம் போல் கேட்க,
“உன் கல்யாண விஷயமா தான் பேசலாம்னு எல்லாரும் உக்காந்து இருக்கோம்டா” என்று வெங்கடேசன் சொன்னதை கேட்டு அன்றைய நாளின் அடுத்த திகைப்பாகிப் போனது அவளுக்கு.
“என்னடி மீனு.. தெகைச்சு போய் அப்படியே நிக்கிற” என்ற பத்பநாபனின் மனைவி அழகம்மை, “இங்க வா.. வந்து உக்காரு முதல்ல..” என்றார் அவளிடம்.
பாட்டியின் ஆராயும் பார்வையில் சிரிப்பு வந்தாலும் “அழகு பாட்டி….. நீங்க இப்படி எல்லாம் கண்ணாலேயே ஸ்கேன் பண்ணனும்னு அவசியம் இல்ல. நீங்க கேட்ட மாதிரி கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தான். ஆனா, மாப்பிள்ளை யாரு? என்ன எதுன்னு எதுவும் தெரியாம எப்படி சம்மதிக்க முடியும்? அதுவும் வீட்டுக்கு வந்ததும் இந்த டாப்பிக் எடுத்ததும் கொஞ்சம் ஜெர்க் ஆனேன்! அவ்ளோ தான். மத்தபடி நீங்க குறுகுறுன்னு என்னை டெஸ்ட் பண்ற அளவுக்கு எல்லாம் இங்க ஒன்னும் இல்ல” எண்ட் என்று விட்டாள் சிரிப்புடன் நேரடியாகவே!!!
அவளின் பதில் மொழியில் அனைவருக்குமே சிரிப்பும் தங்கள் பெண்ணை நினைத்து பெருமையும் ஒருங்கே பிறந்தது.
“என் மீனு குட்டிக்கு பிடிக்காம போற மாதிரி நான் மாப்பிள்ளை பாப்பேனா” என்றார் மகள் மீதிருக்கும் அதீத பாசத்துடனும் பரிவுடனும்.
“பெரிப்பா சென்டி சீன் ஓட்டுனது போதும்.. கம் டூ த பாயிண்ட்!” என்றான் கனிஅமுதனின் இரட்டை மகன்களுள் ஒருவனான பிரவீன்!
அவனிடம் மெல்லிய முறைப்பை வீசியவர் மகளிடம் திரும்பி “எல்லாம் நமக்கு தெரிஞ்ச குடும்பம் தான் மீனும்மா” என்றவரிடம் அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல், “யாருப்பா?” என்று கேட்டு விட்டாள்.
கேட்ட பின்னர் தான் அவசரப் பட்டு விட்டோமோ என்றும் தோன்ற அமைதியாய் தகப்பன் முகம் பார்த்து அமர்ந்திருந்தாள்.
மகளின் அவசரத்தில் சின்ன புன்னகையுடன் “சாத்தப்பன் பையன் விதார்த் தான்” என்றதும் அப்பட்டமான திகைப்பு அவள் முகத்தில்!!!!!!!!