“டாக்டரையா… பிள்ள ரொம்ப நேரமா வழில துடிக்குது… ஆஸ்பத்திரில சேர்த்து பத்து மணி நேரம் மேல ஆகி போச்சு.. இன்னும் குழந்த வெளில வந்த பாடில்ல.. ஒரே பயமா இருக்குங்க. ஒன்னும் பிரச்சனை இல்லேங்க தானே?”
லேபர் வார்டை விட்டு வெளியே வந்த அந்த மருத்துவனிடம், உள்ளே பிரசவ வழியில் துடித்துக் கொண்டிருந்த பெண்ணின் தந்தை கலங்கிப் போன தோற்றத்தோடு கமறிய குரலில் கேட்க,
அவரின் கைகளை பற்றிக் கொண்டவன், “ஒரு பயமும் வேண்டாம்.. குழந்தை தலை நல்லாவே கீழ வந்தாச்சு. இன்னும் கொஞ்ச நேரம் தான் உங்க பேரக் குழந்தை வெளிய ஜம்முனு வந்திடுவாங்க” அமரிக்கையான புன்னகையை முகத்தில் தேக்கி அவருக்கு தைரியம் சொன்னவன்,
அருகே அவரின் மனைவி கண்ணீரும் வேண்டுதலுமாய் இருப்பதை கண்டு அவரிடம் “சுகப் பிரசவம் தான் ஆகப் போகுது. இவளோ பயம் வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரம் தான். தைரியமா இருங்க” என்று அதே புன்னகையுடன் சொன்னவன் மீண்டும் லேபர் வார்டிற்குள் சென்று விட்டான்.
அவன் சென்ற இருபதாவது நிமிடம் அப்பெண்ணின் உச்ச கட்ட அலறல் சத்தமும் குழந்தையின் அழுகை ஒலியும் ஒருங்கே ஒலிக்க, வெளியே அப்பெண்ணின் பெற்றோர்கள் கைகளை கூப்பி நின்றிருந்தனர்.
நர்ஸ் வெளியே வந்து அவர்களிடம் “ஆண் குழந்தை பிறந்திருக்கு” என்று மின்னல் வேகத்தில் சொல்லி விட்டு மீண்டும் உள் சென்று விட “எங்க பொண்ணு எப்படி இருக்கா?…” என்று அவர்கள் பரிதவிப்புடன் கேட்டதற்கு பதில் சொல்ல நர்ஸ் அங்கே இல்லை.
உள்ளே உதிரக் கரையோடு குழந்தையை கைகளில் ஏந்தி இருந்தவன், “வெல்கம் டூ திஸ் பியூட்டிஃபுல் வேர்ல்ட் மை கிட்” என்றான் புன்னகையுடன்.
அவன் முகமூடி அணிந்திருந்தாலும் அவனின் கண்கள் புன்னகையின் சுவடுகளை ஏந்தி இருந்தது.
அப்பெண் சோர்ந்து போய் படுத்தபடி “என்…ன குழந்தை??” அவ்வளவு சோர்விலும் ஆர்வம் குறையாமல் கேட்க, “பையன் பிறந்திருக்கான்மா” என்றவன், குழந்தையை அவளின் கன்னம் அருகே கொண்டு சென்றான்.
குழந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்ததும் அப்பெண் கண்கள் மூடி மிச்சமிருந்த கண்ணீரை வெளியேற்ற, அப்படியே சோர்வில் மயங்கி போனாள்.
அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செய்து முடித்தவர்கள் குழந்தையை குளியாட்ட கூட்டிச் சென்று அழைத்து வந்து தொட்டிலில் கிடத்த தன் மருத்துவ உடைகளை எல்லாம் கலைந்து தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தவன் தொட்டிலில் இருந்த குழந்தையின் கன்னத்தை ஒற்றை விரல் கொண்டு தீண்டினான்.
அந்த பிஞ்சு ஸ்பரிசம் எப்போதும் போல் அவனின் நெஞ்சை நிறைத்தது. இது அவனின் வழக்கம். அவன் பிரசவம் பார்த்து பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் ஒரு முறையேனும் கன்னம் தீண்டாமல் அவன் இருந்ததில்லை.
ஒவ்வொரு குழந்தையை தீண்டும் போதெல்லாம் அப்பிஞ்சின் உயிர் ஸ்பரிசம் அவனுள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்புவது போலொரு முழுமை அவனுக்கு!
அது மட்டுமா…..
பத்திரமாக ஒரு உயிரை வெளியே கொண்டு வந்து விட்ட நிறைவும், அவ்வுயிரை தாங்கி இருந்த இன்னோர் உயிரை காப்பாற்றி விட்டோம் எனும் நிறைவும் வேறு எதற்கும் ஈடாகாது!!
மீண்டும் விரல் கொண்டு குழந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்ததவன், புன்னகையுடன் வெளியே வந்தான். அப்பெரியவர்கள் நன்றியை தேக்கி இருந்த கண்ணீருடன் இவனின் கை பற்றிக் கொள்ள,
“அம்மா மகன் ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க பொண்ணு கண்ணு முழிச்சிடுவாங்க. நீங்க பாக்கலாம்” என்று சொல்லி நகர எத்தனிக்கும் சமயம்,
அந்தப் பெண்மணி இவனின் பற்றிய கைகளை விடாமல், “குடும்பம், பொண்டாட்டி, குழந்தை குட்டியோட நீ எப்பவும் நல்லா இருக்கணும் சாமி” என்று வாழ்த்தினார்.
அவரின் வாழ்த்தை முகம் நிறைந்த புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு அவனின் அறைக்கு வந்தவன் அப்போது தான் பசியை உணர்ந்தவனாய் நேரத்தைப் பார்க்க, நேரம் இரவு பத்து மணியை நெருங்கி இருந்தது.
அவனின் டியூட்டி டைம் முடியும் நேரம் தான் என்பதால் வீட்டிற்கு கிளம்பலாம் என்று உடைமைகளை எடுத்துக் கொண்டு பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி இருந்த அவனின் பைக்கின் அருகே வர சரியாக அந்நேரம் அவனின் அலைபேசி அலறியது.
“அனும்மா” எனும் பெயரை தாங்கி இருந்த திரையைப் பார்த்தவனின் முகத்தில் புன்னகை!
அழைப்பை ஏற்றவன் “சொல்லுங்க அனும்மா… கான்ஃபரன்ஸ் எல்லாம் எப்படி போகுது? கனடா ஸ்னோ உங்களை அன்போடு அரவணைச்சு இருக்குமே” என்று குறும்புடன் லகுவாய் கேட்டபடி அவனின் பைக்கை உயிர்ப்பிக்க,
“அருண்….” என்று அந்தப் பக்கம் கூறிய அனுஜாவின் குரலில் அளவு கடந்த பதட்டம்.
அதில் ஒரு நொடி நிதானித்த அருண்மொழி “என்னாச்சுமா? எதுவும் பிராப்ளமா?” என்று கேட்க, “ஆமாடா.. உனக்கு டியூட்டி டைம் முடிஞ்சதா? எமர்ஜென்சி கேஸ் எதுவும் இருக்கா?” என்றார் பரபரப்புடன்.
“இல்ல அனும்மா.. இப்ப தான் ஒரு நார்மல் டெலிவரி முடிஞ்சது” என்றவன்,
“அங்க ஹாஸ்பிடல்ல எதுவும் எமர்ஜென்சியாம்மா?” என்றான் அவரிடம்.
“ஆமா அருண். கிருத்திகா கேஸ் தான். சொல்லி இருந்தேனே” என்றார் அவனுக்கு நினைவூட்டும் விதமாக.
பாக்கெட்டில் இருந்த ப்ளூ டூத்தை எடுத்து காதில் பொருத்திக் கொண்டவன் பைக்கை கிளப்பி இருந்தான்.
“பெயின் வந்திடுச்சாம்மா?”
“ம்ம்… அட்மிட் பண்ணிட்டாங்க அருண். எக்ஸ்பெக்ட் பண்ண டேட்டை விட முன்னாடியே பெயின் வந்திருக்கு. கொஞ்சம் கிரிட்டிக்கள் தான். இப்ப தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கால் வந்தது” என்றவர்,
“நானும் இங்க வந்துட்டேன். மத்த ரெண்டு டாக்டர்சும் அவைலபிலா இல்ல. கதிரவன் மட்டும் தான் இருக்கார். அவரும் பேமிலி கூட அவுட்டிங் போயிருப்பார் போல. விஷயம் சொன்னதும் இன்னும் ஒன் ஹவர் ஆகும்னு சொன்னாரு ஹாஸ்பிட்டல் ரீச் ஆக. அதான் உன்னை கூப்பிட்டேன்” என்றார் பதற்றம் நிலவிய குரலில்.
“நான் இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல ரீச் ஆகிடுவேன்மா. நீங்க அங்க எல்லாம் ரெடி பண்ணி வைக்க சொல்லுங்க” என்றவன் பைக்கின் வேகத்தை கூட்டி இருந்தான்.
“அருண்… கிருத்திகா கேஸ் க்ரிட்டிக்கள் தான். உனக்கு அந்த ரிப்போர்ட்ஸ்லாம் காட்டி டிஸ்கஸ் பண்ணி இருக்கேன். நியாபகம் இருக்கு தானே” என்றார் நம்பிக்கை உடைந்த குரலில்.
அவர் சொல்ல வருவதில் அர்த்தம் அவனுக்கும் புரியாமல் இல்லை. தாய் அல்லது குழந்தை இருவரில் ஒருவரை தான் காப்பாற்ற முடியும் எனும் நிலை!
இரண்டு மாதத்திற்கு முன்பே இந்த பிரசவ சிக்கலை பற்றி அவனிடம் கலந்து கொண்டிருந்தார் அனுஜா.
இப்போது அவரும் எதிர்பாராத விதமாக ஒரு முக்கிய சர்வதேச கலந்தாய்விற்கு கனடா சென்றிருக்க, இந்த சூழ்நிலையில் அப்பெண்ணிற்கு பிரசவ வலி வந்தது முற்றிலும் எதிர்பாராத ஒன்று!
“முன்னாடியே முடிவு பண்ணிருந்த மாதிரி ‘C’ செக்ஷன் தான் அருண். நீ ஹாஸ்பிட்டல் போறதுக்குள்ள எல்லாம் ரெடியா இருக்கும்” என்றவர்,
அவரின் கலக்கம் இருவரையுமே எங்கோ இழுத்துச் செல்ல, இவனுக்கும் மனம் பிசைந்தது. ஆனாலும், நிதானத்தை தப்ப விடாமல்,
“பாத்துக்கலாம்மா. லெட்ஸ் ஹோப்” என்றவன் அழைப்பை துண்டித்து விட, அனுஜாவின் மனதில் வெகு நாட்கள் கழித்து பெரும் பாரம்!
நாளை கான்பரன்ஸ்சிற்காக லேப்டாப்பில் படித்துக் கொண்டிருந்த கட்டுரையை மூடி வைத்து கண்களை இறுக மூடிக் கொண்டார்.
உள்ளுக்குள் பல வருடங்களுக்கு முன்னால் கேட்ட அருண்மொழியின் அழுகை இன்றும் அவரின் நெஞ்சில் அதன் சுவடு மாறாமல் எதிரொலித்தது.
*****************
“மதர் கேர்” மருத்துவனையை அடைந்ததும் பைக்கை நிறுத்தி விட்டு கிட்டத்தட்ட உள்ளே ஓடினான் அருண்மொழி.
லிஃப்ட்டின் மூலம் நான்காம் தளத்தை வந்தடைந்தவனை எதிர் கொண்டார் அம்மருத்துவமனையின் சீஃப் நர்ஸ்.
இவனைக் கண்டதும் “எல்லாம் ரெடி டாக்டர். ஆபரேஷன் தியேட்டருக்கு பேஷண்ட்டை கூட்டிட்டு போயாச்சு. கழுத்துல கொடி சுத்தி இருக்கு டார்கர். அல்சோ ஷீ இஸ் ப்ளீடிங். பல்ஸ் ரேட் கம்மியா இருக்கு. ஃபீட்டல் பொசிஷனும் கிடைக்கல. ஹார்ட் பீட்டும் அப்நார்மல்லா இருக்கு” என்று அத்தனையும் சொல்லியவர்,
“யாரையாவது ஒருத்தரை காப்பத்துறதே பெரிய விஷயம் டாக்டர்” என்றார் அவரின் அனுபவத்தில்.
அவர் கூறியதை அனைத்தையும் கேட்டுக் கொண்டபடி வந்தவன் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. அவரிடம் தென்பட்ட பதற்றம் எதுவும் அவனிடம் இருந்தது போல் தெரியவில்லை அவருக்கு.
அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே நின்றிருந்த கிருத்திகாவின் உறவினர்களும், கணவனும் மிகவும் பயந்து தவித்து போய் கண்ணீருடன் இருந்தனர்.
கை எழுத்தை வாங்குவதற்காக அவள் கணவனிடம் காகிதங்களை சீப் நர்ஸ் நீட்டியபோது கை எழுத்தை போடாமல் அருண்மொழியின் கைகளை பற்றிக் கொண்டவன்,
“என்.. என் ஒயிஃபை எப்படியாவது காப்பாத்தி கொடுத்திடுங்க டாக்டர். கு… குழந்தை..” என்று முடிக்க முடியாமல் கண்ணீர் சிந்தியவனை கண்டு, “அழ வேண்டாம் சார். பீ வித் ஹோப்” என்று மட்டும் கூறி விட்டு உள்ளே சென்றான்.
நர்ஸ் சொன்னது போல் அத்தனை சிக்கலான விஷயம் தான் இரு உயிரையும் காப்பாற்றுவது! ஆனால், போராடித் தான் ஆக வேண்டும் என்ற உறுதியுடன் கதறிக் கொண்திருந்த அப்பெண்ணிடம் சென்றவன்,
“கிருத்திகா… இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க பேபி உங்க கைல இருக்க போறாங்க. பாக்க ரெடியா” என்றான் புன்னகையுடன்.
அத்தனை பரபரப்பிலும் பதட்டத்திலும் அவனின் இந்த அமைதியான, நேர்மறையான பேச்சு அங்கிருந்த மொத்த மருத்துவ குழுவையும் ஒரு நொடி நின்று திரும்பி பார்க்க வைத்தது.
அப்பெண்ணோ கண்ணீருடன் “ஆ…மா.. பாக்க…ணும். பேபி.. பேபி.. பத்திரமா வந்திடும் தான வெளிய” என்றாள் வலி நிறைந்த அழுகையுடன்.
அறுவை சிகிச்சையை தொடங்கிய இருந்தனர். குழந்தையை வெளியே எடுத்ததும் அழுகை குரல் இல்லாமல் போக, அனைவருக்குமே அதிர்ச்சியும் கவலையும்!!!
அழகான பெண் குழந்தை அசைவில்லாமல் அருண்மொழியின் கைகளில்!!!!
அருண்மொழிக்கு நெஞ்சம் தடதடவென அடித்துக் கொள்ள, அறுவை சிகிச்சையின் இடையே வந்து இணைந்து மற்றொரு மருத்துவர் கதிரவனை கிருத்திகாவிற்கான ஸ்டிட்ச்சஸ் வேலையை மேற்கொள்ள சொன்னவன்,
குழந்தையை படுக்க வைத்து மார்பிலும் முதுகிலும் விடாமல் பலத்தோடு தேய்த்தான். எந்த ஒரு அசைவும் இல்லை!
விடாமல் தேய்த்துக் கொண்டே இருந்தவன், உதட்டில் ஆக்சிஜன் செலுத்திப் பார்க்க அப்போதும் பலனில்லை.
சற்று முன்னர் அவளிடம் அவன் சொன்ன நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை இப்போது தனக்கும் சேர்த்து சொல்லிக் கொண்டு போராடினான் அந்த அசைவில்லாத குழந்தையுடன்.
இருபது நிமடங்களுக்கு மேல் போராடியும் அசைவில்லை என்றதும் அருண்மொழியின் உள்ளம் ஆட்டம் கண்டது.
கதிரவன் இவன் அருகில் வந்து குழந்தையை பரிசோதித்து “நோ மூவ்மெண்ட்ஸ் அருண்” என்றார் அவன் தோளில் தட்டி!
வெளியே சென்று வந்த நர்ஸ் “எப்படி இருக்காங்க ரெண்டு பேரும்னு கேட்கராங்க டாக்டர் அவுங்க ஃபேமிலி” என்றார் கவலையுடன்.
குழந்தையை கையில் ஏந்தி இருந்த அருண்மொழி “எதுவும் சொல்ல வேண்டாம் இப்போதைக்கு. லெட்ஸ் ட்ரை. லாஸ்ட் சேன்ஸ்” என்றபடி குழந்தையை தலைகீழாக பிடித்தவன்,
குழந்தையின் முதுகிலும் பின்புறத்திலும் பலமாக அடிக்க, அடுத்து பத்தாவது நிமிடம் கண் விழித்த குழந்தை வீலென்ற சத்தத்துடன் அழுதிருந்தது!!!!
அறுவை சிகிச்சை அறையில் இருந்த அனைவருமே கை தட்டி மகிழ, அருண்மொழி நெஞ்சத்தில் சொல்லொண்ணா மகிழ்ச்சி.
அழுத குழந்தையை நேரே திருப்பி முகத்தின் அருகே கொண்டு வந்தவன், “பிறந்த உடனேயே அடிக்க வச்சிட்டியே குட்டி” என்றான் அந்த ரோஜா மொட்டிடம்!
கண்கள் லேசாக கலங்கி இருந்தது அவனுக்கு. சூழ்நிலை கருதி மறைத்துக் கொண்டவன், குழந்தையின் கன்னத்தை தீண்டி “அடிச்சதுக்கு சாரி அண்ட் வெல்கம் டூ திஸ் பியூட்டிஃபுல் வேர்ல்ட்” என்றவன் குழந்தையை நர்சிடம் கொடுத்தான்.
வெளியே வந்ததும் ஒட்டு மொத்த உயிர் பயத்தையும் முகத்தில் தேக்கி இவனிடம் வந்த கிருத்திகாவின் கணவனிடம்,
“கங்கிராட்ஸ். பெண் குழந்தை பிறந்திருக்கா. பேபி அண்ட் மதர் ரெண்டு பேரும் சேஃப்” என்றான் புன்னகையுடன். கிருத்திகாவின் கணவன் அவனை அணைத்து கதறியே விட, “ரிலாக்ஸ்! இன்னும் கொஞ்ச நேரத்துல ஜெனரல் வார்ட்டுக்கு மாத்திடுவாங்க. போய் பாருங்க” என்றான் அவன் தோளில் தட்டிக் கொடுத்து.
அந்த மருத்துவமனையில் இவனுக்கான அறைக்குள் நுழைந்ததும் அனுஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது!
விஷயம் அவரை சென்று சேர்ந்திருக்கும் என்று தெரியும். அழைப்பை ஏற்றதும் “சந்தோஷம் அருண். ப்ரவுட் ஆஃப் யூடா” என்றார் ஆத்மார்த்தமாய்.
“குழந்தை அடி வாங்கிட்டா அனும்மா” என்றவனிடம் “அடிச்சு பிழைக்க வச்சிட்டியே” என்றவரின் குரலில் தவிப்புகள் அடங்கி அப்படி ஒரு ஆசுவாசம்!
“ம்ம்… ரெண்டு பேரும் ஃபைன்” என்றவன் சிறிது நேரம் அவரோடு பேசி விட்டு அழைப்பை துண்டிக்க போக, “சாப்பிட்டியாடா” என்றார் அவனிடம்.
கேட்ட அவரே “சாப்பிட்டு இருக்க மாட்ட! நீ வீட்டுக்கு போ நான் திலகாவை சமைச்சு வைக்க சொல்றேன்” என்றார்.
“இல்லமா. நேரம் ஆச்சு. நான் வீட்டுக்கே போறேன். எதாவது ஃப்ரூட்ஸ் சாப்பிட்டுக்கிறேன். இந்நேரம் டிஸ்டர்ப் பண்ண வேணாம்” என்றவன் அவர் சொல்லச்சொல்ல மறுத்து விட்டு அவனின் இல்லத்திற்கே கிளம்பி இருந்தான்.
வீட்டிற்கு வந்ததும் குளித்து வந்தவன், அவனின் அறையில் மாட்டி இருந்த அன்னையின் புகைப்படத்திடம் இன்று நடந்ததை பகிர்ந்தவன்,
“காப்பத்தவே முடியாதுன்னு நினைச்சேன். ஆனா, குழந்தை அழுத பின்னாடி தான் எனக்கு சிரிப்பே வந்தது” என்றான் இப்போதும் நம்ப முடியாத சிரிப்புடன்.
அவன் கூறுவதை எல்லாம் புகைப்பட சட்டத்திற்குள் அவனைப் போலவே அமரிக்கையான புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் அவனின் அன்னை ஜெயந்தி.
“அந்தக் குழந்தை பாக்க பாக்க நம்ம யாழினி நியாபகம் தான்மா” என்றான் அருகில் இன்னொரு புகைப்பட சட்டத்திற்குள் பிறந்த குழந்தையாய் கண்கள் மூடி இருந்த இவன் தங்கையை பார்த்தபடி!
இருவரின் முகங்களையும் பார்த்தவன் சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தான். பின்னர் அழைப்பு மணி அடித்ததில் தன்னை மீட்டுக் கொண்டு கண்களை துடைத்தபடி அறையை விட்டு வெளியே வர,ஹாலை நெருங்கி கதவை திறப்பதற்குள் அழைப்பு மணி பல முறை கதறி இருந்தது.
“இவனைஐஐஐ…….” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அருண்மொழி கதவை திறந்ததும் தான் அழைப்பு மணியின் ஓசை ஓய்ந்தது.