காதல் எப்போதுமே சுகமானது மட்டுமல்ல, அது தீரா வலியும் கூட. அந்த இரண்டையும் ஒருசேர தந்தவனின் முகம் பார்த்தாள் விருஷ்திகா.
“போட்டுவிடு அழகரு…” என்றார் அம்மையப்பன் தன் பேரனிடம்.
சற்றுமுன்னர் தான் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடந்திருக்க விருஷ்திகாவின் கழுத்திலும் புது தாலிக்கயிறு மாற்றப்பட்டது.
அதற்குள்ளாகவா என்றெல்லாம் கேளாமல் புதிதாய் அனைத்துமே வாங்கி கோர்க்கப்பட்டு புதிய மாங்கல்ய கயிற்றை அவன் ஏற்கனவே அணிவித்திருந்த திருமாங்கல்யத்துடன் சேர்த்தே கோர்த்து மீண்டும் மூன்று முடிச்சிட்டிருந்தான்.
இதைவிட ஒரு சிறப்பான திருமண நிகழ்வு யாருக்கும் அமைந்துவிடுமா என்பதை போல அனைவரின் மனதில் இருந்த கிலேசங்கள் எல்லாம் மறைய துவங்கியிருந்தது.
எப்போதுமே சித்திரைத்திருவிழா மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வின் பொழுது விருஷ்திகா அவனை அவன் கேளாமல் கேலி செய்வதுண்டு அழகுமீனாளிடம்.
“இந்த அழகர் மட்டும் டான்னு கரெக்ட் டைம்க்கு கல்யாணத்துக்கு வந்திடறாரே அம்மாச்சி…” என்று வருடாவருடம் அன்றைய பொழுதில் அவள் கேட்டுவிடுவதுண்டு.
தன்னை பார்க்கவில்லை என்றாலும் அவனின் பார்வையில் அவ்வப்போது அவள் பதிவதையே பெரிதாய் நினைப்பவள், இப்போது அவனின் அனைத்துமாய் தான் இருக்கையில் முழுதாய் மகிழ முடியவில்லை.
விருஷ்திகாவின் பார்வையை கண்டு அழகர் நிமிர்ந்து பார்க்க, அந்த விழிகள் சொல்லிய பாஷை என்னவோ?
கலங்கி போய் நின்றவள் முகத்தினில் மீண்டும் அந்த மலர்வை காணமுடியாமல் பார்த்த அழகர் லேசாய் முறுவலித்தான்.
“சிரிடி…” சத்தமின்றி இதழசைத்தவன் மொழியை பின்பற்றியவள் கைகள் கழுத்தின் அணிந்திருந்த மாலையை பிடித்துக்கொண்டது.
அந்த மாலையுமே ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ஆண்டாள் சந்நிதியில் வைத்து வணங்கி வாங்கி வந்திருந்தனர் மணமக்களுக்காக.
அம்மையப்பன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்திருந்தார். அதில் அழகரின் பங்கு முழுதாய் என்பது தான் உண்மை.
“இங்க மாலை கட்ட மாட்டாங்களா சாமி? அங்க இருந்து அந்நேரத்துக்கு கோவிலுக்கு போயி…” என்று அம்மையப்பன் யோசிக்க,
“அதுக்கெல்லாம் ஆளுங்க இருக்காங்க. நான் பேசிட்டேன். எங்களுக்கு மாலை அங்க கட்டி வரட்டும். ஆண்டாள் பாதம் தொட்டு வரட்டும். அழகருக்கு சூடிக்கொடுக்கறது அவ தானே?…” என்றான் அழகர்.
சுடர்மணி, ஞானசேகரன் தவிர வேறு யாருக்கும் இவ்விஷயமும் தெரிந்திருக்கவில்லை.
வீட்டினரும் பெரிதாய் வெளியே என்ன நடக்கிறது என்பதை ஆண்களாய் சொன்னால் தவிர்த்து தாங்களாக கேட்டுக்கொண்டதில்லை.
இவை இவை செய்யவேண்டும் என்று அவர்களிடம் சொல்லுவதோடு சரி. மாணிக்கவல்லி, தில்லையம்பாள் அப்படியே பழகிவிட்டனர்.
அழகரின் ஏற்பாட்டின் பெயரில் அவன் திருமண சடங்குகள் மிகவுமே பிரமாதமாக இருந்தது.
எதையும் தவிர்த்துவிடவில்லை. தவிர்க்கவும் கூடாதென்பதில் அவன் உறுதியாக இருந்தான்.
இப்போதும் அழகர் முறுவலை கண்டு மெல்லிய புன்னகை விருஷ்திகா இதழ்களில்.
தன்னை பார்த்து, தான் பார்க்க காத்திருந்து தன் புன்னகைக்கென மண்டியிட்டு அமர்ந்திருப்பவனை பார்த்தவள் ஆதங்கம் சிலநிமிடம் அவளிடமிருந்து ஒதுங்கி நின்றது.
அந்த நாள் இருவருக்கும் முக்கியமான நாளாகிற்றே. கையில் மெட்டியுடன் அமர்ந்திருந்தவன் பார்வையில் தானுமே மென்புன்னகை சிந்த, பதில் புன்னகை தந்தவன் இமைகள் அவளிடம் சரணடைந்து அரவணைத்தது.
“அட எவ்வளோ நேரம்? போடுய்யா…” என்ற ஞானசேகரன், திரும்பி பார்த்துக்கொண்டார்.
மற்ற பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்காதவண்ணம் தான் அவர்கள் இப்போது நின்றுகொண்டிருந்தது.
அத்தனை கூட்டமும் கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டே தான் இருந்தது மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிப்பதற்காகவே.
மஞ்சள் நாணை மாற்றியதுமே நகர்ந்துவிட்டனர் முன்னிலையில் இருந்து. மாலை மாற்றுவது எல்லாம் இடைஞ்சலின்றி வந்து நின்றதும் தான்.
“அட மெட்டிய போடுய்யா ராசா…” என அழகுமீனாள் கூற,
“ஏத்தா…” என்ற சுடர்மணி, சுட்டுவிரலை வாயில் வைத்து காண்பித்து, ‘மூச்’ என்பதை போல முறைத்தார்.
அத்தனை கோபம் தாயின் மீது. ‘இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது? இவர் விளையாடுகிறாரா?’ என்று.
நம்பியை ஒரு விரட்டு விரட்டிவிட்டு தாயை கண்டிந்தவர், ‘நீயி வீட்டுக்கு வாத்தா பேசிக்கிடுதேன்’ என பேச்சை வளர்க்காமல் விட்டார்.
இப்போதும் அழகுமீனாள் கூற சுடர்மணி தாயை முறைக்க, அம்மையப்பன் என்ன என்று பார்த்தார்.
“மெட்டிய போட கூட நீதேன் சொல்லனுமாத்தா?…” அம்மையப்பன் கேட்க,
“யாத்தே…” என்றார் அழகுமீனாள்.
அவர் பொதுவாய் கூற இங்கே அவர் சொன்னால் தான் செய்வேன் என்பதாக காட்சியாகி போக அரண்டு போனார்.
“நா செவனேன்னுதேன் நின்னேம்…” என்றவர் கப்சிப்.
விருஷ்திகா நன்றாகவே சிரித்துவிட்டாள் இதனை கண்டு. மற்றவர்களுக்கும் புன்னகை பிறக்க,
“ஆமா அவ சொல்லித்தான் நீயி கேக்கிற?…” மீண்டும் வாயை திறந்தார் அழகுமீனாள்.
“மீனா…” அம்மையப்பன் அழைக்கவும்,
“ராசா…” என்று முகம் ஜொலிக்க அழகுமீனாள் பார்க்க,
“இவ வேற…” என அம்மையப்பன் முறைத்தார் மனைவியை.
எப்போதாவது தானே இப்படியான அழைப்புகள். பலவருடத்திற்கு முன்பு பெயரை சொல்லி அழைத்தது.
எங்கேனும் வெளியில் சென்றால் நிச்சயம் வழக்கமான அழைப்பான ‘கெழவி’ அவ்விடத்தில் எட்டியும் பார்க்காது.
இப்போது அழைத்ததும் அழகுமீனாளுக்கு சுற்றுப்புறமே மறந்துவிட அவர் ஆவென்று பார்த்து சிரித்ததில் மற்றவர்களுக்கு கொண்டாட்டமாக, அம்மையப்பன் சங்கடத்துடன் முகம் திருப்பினார்.
“அட போடுய்யா வெரசா. இனிமேத்தேன் போயி பந்திய பாக்கனும். கல்யாண விருந்து எடத்துல நாம ஆராச்சும் இருக்கனுமில்ல…” என்று அவனை துரிதப்படுத்தவும் முத்துக்கள் பதித்த மெட்டியை மனைவியின் காலில் அணிவித்தான் அழகர்.
அதே நிம்மதியுடன் மீண்டும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்து ஆசி பெற்றுவிட்டு விருந்து நடக்கும் இடத்திற்கு வந்தனர்.
சொந்தபந்தங்களை அழைத்து சென்று உணவருந்தும் இடத்தில் விட்டுவிட்டு மணமக்களுக்கும் அங்கே அமர ஏற்பாடு செய்திருக்க ஜேஜே என்றிருந்தது கோலாகலமாய்.
சித்திரையின் அனல் தெரியாமலிருக்க மீனாட்சியின் அருளால் மெல்லிய சாரல் லேசாய் தூற, இதமாய் மாறிய வானிலையும் வர்ணஜாலம் காண்பித்து.
மதுரை மாடவீதிகள் மல்லிகையின் மணத்தோடு ஜவ்வாது, சந்தனவிபூதியின் மணமும் நிறைந்திருக்க தானாய் ஒரு சந்தோஷ ஊற்று.
கூட்டத்தினை கடந்து கோவிலை சுற்றி வந்து அடுத்து நேராக வந்து சேர்ந்தது கதிர்வேலனின் பூர்வீக வீட்டிற்கு தான்.
இப்போதுதான் மருத்துவமனை சென்று வந்தவர் என்று அழகர் வீட்டில் ஒருவரும் அவரை அலையவிடவில்லை.
“அடுத்தவகளா, பேசாம இருய்யா…” என்று அம்மையப்பன் உரிமையாய் ஒரு அதட்டல் போட்டுவிட கதிர்வேலன் அமைதியாய் அதனை ஏற்றுக்கொண்டார்.
இதோ சொந்தங்களுடன் மாப்பிள்ளையாய் அழகர் அந்த வீட்டின் முன் தன் மகளின் கைப்பிடித்து நிற்க கண்டவர் உள்ளமும் நெகிழ்ந்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.