ஆனாலும் இப்போதுவரை அழகரிடம் அவர் ஒருவார்த்தை பேசவில்லை. சாந்தாதேவியுமே மகளிடம் பேசினாரே தவிர்த்து அழகரிடம் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே.
அழகரும் அலட்டிக்கொள்ளவில்லை. பேசினால் பதில். இல்லை என்றால் மௌனமாய் நின்றுகொள்வான்.
இப்படியாக தன் மாமனார் வீட்டு வாசலில் ஆரத்தி சுற்றப்பட்டும் உள்ளே வராமல் விருஷ்திகாவின் கைபிடித்து அவன் நின்றிருக்க அனைவருமே அதிர்ந்தனர்.
“உள்ள வாய்யா…” என்று அம்மையப்பன் அழைக்க, அவரை முறைத்தான் அழகர்.
விருஷ்திகாவிற்கு அவன் பிடிவாதம் புரிந்தது. அவளும் வா என்று அழைக்கவில்லை.
இப்போதுவரை தன் தந்தை தங்களை ஏற்றுக்கொண்டாலும் தன்னிடமும், தன் கணவனிடமும் எதுவும் பேசாததை கவனித்து தான் இருந்தாள்.
“எம்மா லச்சுமி என்னம்மா?…” என அம்மையப்பன் தர்மசங்கடத்துடன் கேட்க,
“நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப எல்லாரும் உள்ள வான்னு தான தாத்தா கூப்பிட்டீங்க? இந்த விஷயத்துல என் அப்பாவாச்சு, அவர் மருமகனாச்சு. நான் தலையிடமாட்டேன். உங்க பேரன் நிக்கிறதுல எனக்கொண்ணும் தப்பா தெரியலை…” என்றுவிட்டாள் அவள்.
‘பார்ரா’ என அத்தனைபேரும் மட்டுமின்றி அழகருமே அசந்து தான் பார்த்தான் விருஷ்திகாவை.
இதற்கும் தர்க்கம் புரிவாள் என்று அவன் நினைத்திருக்க எத்தனை அழகாய் இதில் கழன்றுகொண்டு, கதிர்வேலனுக்கு சத்தமின்றி ஒரு குட்டு வைத்துவிட்டாள் என்று பார்த்தான்.
“என்னம்மா பேசற? அவன் உன் அப்பன். நீ செஞ்சிட்டு போனதுக்கு இவ்வளோ தூரம் அவன் இறங்கி வந்ததே பெருசு. நீ என்னன்னா?…” என மயில்வாகனன் இதுதான் சமயம் என்று பேச,
“இது என் அப்பாவுக்கும், என் புருஷனுக்குமானது. என்னை ஏத்துக்கிட்டா எல்லாத்துக்கும் நானும் இறங்கி போக முடியாதே. என்னோட அம்மாப்பா எப்படி இறங்கி வந்து இந்த விசேஷத்தை நல்லபடியா நடத்தி வச்சாங்களோ, அதுமாதிரி என் புருஷன் வீட்டுலயும் இறங்கி வந்து இவ்வளோ செஞ்சு, வாசல் வரை வந்துட்டோம்….” என்றவள் பார்வை சாந்தாவை அலைப்புறுதலுடன் பார்த்தது.
“தப்புதான். உள்ள வாங்க மாப்பிள்ளை…” என்று சொல்லிவிட்டார் கதிர்வேலன்.
மருமகனை அழைத்தாரே தவிர மகளை அல்ல. அப்போதும் மகளின் மீதான ஆதங்கத்தை இழுத்து பிடித்தார்.
“என்ன கதிர்வேலா நீ?…” என்ற மயில்வாகனன் விருஷ்திகா அழகருடன் வீட்டினுள் நுழைய கண்டு,
“உங்கப்பன் உன் மேல எவ்வளோ வருத்தத்துல இருந்தா உன்னை வான்னு கூட கூப்பிடாம இருப்பான்?…” என்று மீண்டும் அவளை தூண்டிவிட பார்த்தார்.
அத்தனை சொந்தங்கள் கூடி இருக்க இவன் என்ன செய்துவிடமுடியும் என்று அழகரையும் அலட்சியத்துடன் பார்த்தார் மயில்வாகனன்.
“ப்ச்…” என்றவள்,
“நீங்க வாங்க…” என அழகரின் கையை பிடித்தபடி அந்த வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள்.
உள்ளே நுழைந்ததுமே தன் பெரியப்பாவை பார்த்த விருஷ்திகா தகப்பனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“இது என் வீடு பெரிப்பா. எங்கப்பா கூப்பிடாட்டியும் வர எனக்கு உரிமை இருக்கு. அவர் என்னை கூப்பிடனும்ன்னு இல்லை. அதேமாதிரி எங்கப்பாக்கு என் மேல கோபம் இருக்கத்தானே செய்யும். இருக்கட்டும்….” என்றவள்,
“எங்கப்பாவுக்கு என்னை கோபப்பட, திட்ட, பேசாம விலக்கி வைக்க, ஏன் என்னை அடிக்க கூட உரிமை இருக்கு. உங்களுக்கு அதுல எதுவும் பிரச்சனையா? இருந்தா இருந்துட்டு போகட்டும்…” என சொல்லவும் மூக்குடைபட்டு நின்றார் அவர்.
“ப்ச், பேசாம வா விருஷ்தி, உக்கார்…” என்றார் சாந்தா.
“நீங்களும் உக்காருங்க மாப்பிள்ளை…” என அழகரிடமும் கூற மௌனமாய் அமர்ந்துவிட்டான் அவன்.
மணமக்களுக்கு பால், பழம் கொடுத்து, வந்தவர்களுக்கு எல்லாம் பலகாரங்கள் கொடுக்கப்பட்டு சுபமாய் அந்நிகழ்வு நடைபெற்றது.
புகழ்மதியும், திருமகளும் தான் உதவினார்கள். தில்லையும் வந்திருந்தார்.
அழகுமீனாள் அங்கே வரவில்லை என்றதுமே மாணிக்கவல்லி மாமியாரோடு வீடு சென்றுவிட்டார் சாந்தாவிடம் சொல்லிவிட்டு.
ஞானசேகரனும், சுடர்மணியும் கோவிலில் விருந்து நடக்கும் இடத்தில் இருந்தனர்.
மற்றவர்கள் மட்டும் இங்கே மறுவீடு வந்திருக்க வந்த இடத்தில் இப்படி ஒரு சூழ்நிலை.
எத்தனை சந்தோஷத்தில் விருஷ்திகா அங்கே வந்தாளோ, அத்தனையும் வடிந்துவிட்ட பாவனை.
பால், பழம் தவிர்த்து வேறு ஒன்றையும் எடுத்துக்கொள்ளவில்லை அழகர்.
கைக்கடிகாரத்தை வேறு அவ்வப்போது பார்த்துக்கொண்டே அவன் அமர்ந்திருக்க கண்டவளுக்கும் புரிந்தது.
அன்றைய நாள் முழுக்க அவன் கோவிலில் தான் இருப்பான். கோவில் அருகில் இருக்கும் பள்ளிக்கூட மைதானத்தில் பந்தல் போடப்பட்டு அங்கேயும் திருமண பந்தி நடந்துகொண்டிருக்கும்.
வரும் பக்தர்கள் நெரிசலில் உணவருந்த முடியாமல் போய்விடுமோ என்று இப்படியாக ஏற்பாடுகள்.
மாலை வரை வருபவர்களுக்கு திருமண விருந்து, குடிக்க தண்ணீர், பானகம், மோர் என்று வெயிலை தணிக்கும் அத்தனையும் மதுராபுரி உணவகத்தின் சார்பாக நடைபெறும்.
ஒவ்வொருவருடமும் இதுதானே என்பதை அறிந்தவளுக்கு அவன் வேலையும் புரிந்தது.
“விருஷ்தி இங்க வாடா…” என்றார் சாந்தாதேவி.
அம்மையப்பன் கதிர்வேலன் அருகில் அமர்ந்திருக்க, அரவிந்தும் அவர்களுடன் தான் இருந்தான்.
சாந்தாவின் அழைப்பில் அழகரும் அவரை நிமிர்ந்து பார்க்க, என்னவென்று எழுந்தாள் விருஷ்திகா.
“இப்ப வந்திடறேன்…” என்று அழகரிடம் சொல்லிவிட்டு தான் சென்றாள்.
மனதோரம் சில்லென்றிருந்தது அவளின் இந்த தன்மையும், தன்மையான பாவனையும்.
உள்ளே வந்ததுமே தனியே அழைத்து வந்த சாந்தா மகளின் கையை பிடித்துக்கொண்டார்.
“என்னடா இப்படி பேசிட்ட? முகமுமே சிடுசிடுன்னு இருக்கே?…” என்றார் மகளிடம்.
“உங்ககிட்ட நான் நினைக்கவே இல்லைம்மா. இப்போ உங்களுக்கு எங்க மேல வருத்தம்ன்னாலும் காலத்துக்கும் இப்படியேவா இருப்போம்? அதுவும் அத்தனை சொந்தத்துக்கு மத்தில?…”
“டேய், இல்லைடாம்மா…”
“ம்மா, பேசவேண்டாம்ன்னு சொல்லிட்டேன். எங்களுக்கு என்ன மாசம் ஒரு கல்யாணம் நடக்க போறதா? இல்லையே. இதை இப்படி நடத்தி எங்களை கூட்டிட்டு வாங்கன்னு நாங்க யாரும் கேட்கவும் இல்லை. நீங்களும் சம்மதிச்சு தானே எல்லா சடங்கும் நடந்தது…”
“ஆமாடா. ஆனா…”
“ம்மா, ப்ளீஸ். இப்படி பெரியப்பா அத்தனைபேர் முன்னாடியும் பேசற அளவுக்கு கொண்டுவந்துட்டீங்க. தப்பும்மா. நீங்க எங்க மேல வருஷமெல்லாம் கோபத்தோடவே இருந்து பேசாம இருந்தாலும் யாருக்கும் தெரிய போறதில்லை. ஆனா இன்னைக்கு அப்படியா?…” என்றவள்,
“இது காலத்துக்கும் என் மனசை விட்டு போகுமா? நீங்களும் ஏம்மா இப்படி செய்யறீங்க? இதுல நான் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?…” என்றாள் தன் மொத்த ஆதங்கத்தையும் கொட்டி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.