‘கொஞ்சம் ஓவரா தான் போறோமோ?’ என விருஷ்திகாவிற்கு தோன்றினாலும் ‘இவங்களை விடவா? அப்படித்தான் இருக்கனும்.’ என்றும் நினைத்தபடி அவனை பார்த்தாள்.
“இங்க பாரு, இது நம்மோட. நம்ம பிரச்சனை. அதை நாம பேசிக்கலாம். நீ ஏன் அப்பத்தாவை வம்பு பன்ற? எப்பவும் அவங்களோட நல்ல கனெக்ட்ல தான இருந்த நீ?…” என்றான் அழகர்
“அவங்க சரியா இருக்கனுமே? என்னை பார்த்தாலே என்னை பேசறது, அப்பாம்மாவை பேசறதுன்னு பேசினா நானும் பதிலுக்கு கேட்டுட்டு இருக்கமாட்டேன்…” என்றவள்,
“நம்ம சொந்தம் தானேன்னு ஒவ்வொருத்தரையும் யோசிச்சு தான் நான் இப்படி இருக்கேன். யாரையும் சரியா புரிஞ்சுக்காம, எதுவும் தெரியாம கண்ணை மூடிட்டு காதல்ல விழுந்து, இப்ப தேவை தான் எனக்கு…” என்று மூச்சுவிடாமல் பேசினாள்.
அழகருக்கே ஆயாசமாக இருந்தது. இவள் இதனை விடவே மாட்டாளா என்பதை போல.
தன் மீதிருக்கும் அதிருப்தியை களையவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றவே இல்லை.
பேசிய வார்த்தைகளை அள்ள முடியாது தான். அதற்காக என்ன செய்யவேண்டும் என்று இவள் எதிர்பார்க்கிறாள் என தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாய் பார்த்தான் அவளை.
வருத்தமாகவும் இருந்தது. அதே சமயம் கோபமாகவும் இருந்தது. முடிந்ததையே பேசி பேசி இன்னும் வருத்திக்கொள்கிறாளே என்று மீண்டும் கட்டிலில் படுத்துவிட்டான்.
வெகுநேரம் அமர்ந்திருந்தவள் நேரம் பார்த்துவிட்டு அழகரிடம் திரும்பினாள்.
ஒற்றை கையால் தலைக்கு முட்டுக்கொடுத்து படுத்திருந்தவன் இன்னொரு கரம் நெற்றியில் பதிந்திருந்தது.
இந்தநேரம் அவன் இன்னொரு கிளைக்கு கிளம்பவேண்டும். இங்கே என்ன செய்கிறான் என்ற யோசனையுடன் அப்போதுதான் பார்த்தவள்,
“நீங்க ஹோட்டலுக்கு கிளம்பலையா?…” என்றாள் அவனிடம்.
“ப்ச்…” சலிப்பாய் வெறும் சப்தம் மட்டுமே அழகரிடம்.
“உங்களை தான்….” என்றவள் எழுந்துவந்து அவனருகில் நிற்க, கண் திறக்கவே இல்லை.
நெற்றியில் வைத்திருந்த கையை தானாகவே எடுத்துவிட்ட விருஷ்திகா அவனின் தோள் தொட்டு எழுப்ப பட்டென்று எழுந்ததில் பின்னே சாய்ந்துவிட்டாள் அலறலுடன்.
“ஹேய் பார்த்துடி. இப்படி கத்தற?…” என அதற்கும் அழகர் இரைய,
“ஏன் இப்படி எழுந்தீங்க? பயந்துட்டேன்…” என்றவள் நெஞ்சை பிடித்துக்கொண்டு மூச்சிரைக்க அழகரின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு.
“பேச்சுல ஒன்னும் குறை இல்லை….” என்று அவளை நன்றாக அமர வைத்துவிட்டு தண்ணீர் எடுத்து நீட்டினான்.
“குடி, ரொம்ப பதட்டமாகிட்ட…” என்றதும் வாங்காமல் அவனை முறைத்தவள் கண்களில் நீர் ததும்பிவிட்டது.
“இன்னும் என்ன லக்ஷ்மி?…” என்றவன்,
“இங்க பாரு. அத்தனை சீக்கிரம் உங்கப்பாவால இந்த வீட்டை விக்கமுடியாது. அது ஒரு கோவத்துல பேசியிருக்கலாம்….”
“அதெப்படி விக்க முடியாது? அப்பா செய்வாங்க. முடிவு பண்ணவும் தானே தரகர்கிட்ட விலை பேச சொல்லியிருக்காங்க. அப்போ எவ்வளோ வருத்தம் இருக்கும்?…” என்றதும் அவளின் கையை பிடித்து தன் கரங்களுக்குள் வைத்துக்கொண்டவன்,
“இப்ப என்ன? அப்படியே வீட்டை விக்கிற நிலைமைக்கு போனாலும் நீ அப்ஜெக்ஷன் சொல்லு. சைன் பண்ணினா தானே?…” என்றவனை தீயாய் முறைத்தாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.