“பாரு நீ அழற. இங்க லச்சுமி முகத்த பாரு. அந்த புள்ள என்ன செய்யும்?…” என்று மாணிக்கவல்லி கூற, சாந்தாவும் அழுகையுடன் திரும்பி மகளை பார்த்தார்.
கண்ணீர் இன்னுமே பெருக்கெடுத்தது. மகளிடம் செல்லவேண்டும், அவளை அரவணைக்க வேண்டும் என்று என்னென்னவோ நினைத்தார்.
ஆனால் உள்ளே அரை உயிராய் கிடக்கும் கணவரின் நினைவில் மகளிடம் இருந்து ஒதுங்கினார்.
தன் பெண்ணுக்கு இத்தனைபேர் இருக்க, தன் கணவருக்கு தான் மட்டுமே. தானும் மகளை அவரின் மனமின்றி ஏற்றுக்கொண்டால் அவர் மருகி விடுவாரே என மனதை இறுக்கிக்கொண்டு சாந்தா மௌனம் காத்தார்.
“நல்லாருக்குய்யா உங்க நியாயம். இதுதான் புள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டியையும் ஆட்டுததா? வெளங்கிரும். என் வீட்டுக்குள்ள இப்படி ஒரு கொடுமையை செஞ்சிட்டு இப்போ நல்ல பிள்ளை மாதிரி வந்திருக்கீங்களா?…” என்று மீண்டும் வசைபாட ஆரம்பித்துவிட்டார் மயில்வாகனம்.
“இங்காருங்க, மரியாதையோட பேசுங்க….” என ஞானசேகரன் பொறுமையாய் சொல்ல அழகரும் மருத்துவரிடம் பேசிவிட்டு வந்துவிட்டான்.
“இந்தா இருக்காளே, இவளை எப்படியெல்லாம் வளர்த்தோம். கொஞ்சமாச்சும் அந்த பாசமிருந்தா அவ அவ அப்பன முழுங்க பார்த்திருப்பாளா? தான், தன் சுகம்னு தான ஓடி போனா…”என்று வார்த்தைகளை விட்டதோடு,
“போதுமா உனக்கு. ஒத்தை பொண்ணுன்னு செல்லம் குடுத்து வளர்த்ததுக்கு உன்னோட சந்தோஷத்துக்காக என் தம்பி உயிரை எடுக்க போற. அவன் மட்டும் போய் சேர்ந்தா அதுக்கு நீ தான் காரணம்…” என்று சொல்ல அதுவரை வெறித்த பார்வையுடன் பார்த்திருந்தவள் மனதினுள் அவ்வார்த்தைகள் இன்னும் ஆழமாய் சென்று இறங்கியது.
“என்ன பிரச்சனை உங்களுக்கு?…” என வந்ததும் நேரடியாக கேட்டவன் மயில்வாகனத்தை முறைக்க,
“உண்மையை பேசினா பிரச்சனையா?…” என்றார் அவர் துள்ளிக்கொண்டு.
“பேசலாம். வாங்க…” அழகர் அவரை அழைக்க,
“எங்க வர? ஒன்னும் தேவை இல்லை. உன்னோட உறவே வேண்டாம் எங்களுக்கு…” மயில்வாகனம் முறுக்கிக்கொள்ள,
“சரி வேண்டாம். ஆனா முக்கியமான விஷயம். தனியா பேசினா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்…” என்றவன் என்ன சொல்ல போகிறானோ என்னும் ஆவல் மயில்வாகனன் முகத்தில் தெரிந்தது.
“உன்கிட்ட எனக்கென்ன பேச்சு? எங்க பொண்ணை இப்படி பிரிச்சிட்டியே?…” என்றவரிடம்,
“வர இஷ்டம் இல்லைன்னா வரவேண்டாம்….” அழகர் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றவாறே கூற,
“வாடா, என்னன்னு கேட்டுட்டு வருவோம்…” என விஷாலை அழைத்துக்கொண்டார் மயில்வாகனன்.
“இங்க பாரும்மா, நான் அந்தபக்கம் போகவும் உன் குடும்பத்தோட உறவாடனும்ன்னு நினைச்ச அப்படியே அவங்களோடையே போயிரு. என் தம்பியை நாங்க பார்த்துப்போம்…” என்று எச்சரிக்க பல்லை கடித்தான் அழகர்.
மற்றவர்களுக்கும் அவரின் பேச்சில் உடன்பாடே இல்லை. அதையும்விட தங்களின் முன்னால் எப்படி பேசுகிறார் என்று கோபம்.
ஆனால் காட்டக்கூடிய சூழ்நிலையில் இல்லையே தங்களின் உறவும், உரிமையும்.
சாந்தா இப்போது வரை இத்தனைபேர் வந்திருந்தும் தங்களிடம் ஒருவார்த்தையும் பேசவில்லை.
அதுவே அவர் வீட்டின் நிலையை, அவர் பயத்தை காண்பித்திருக்க மேலும் அவரை சங்கடத்திற்கு உள்ளாக்கவில்லை.
யாருமற்ற ஓரிடத்திற்கு வந்ததும் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தான் அழகர். அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவ வளாகத்தின் ஒரு பகுதி அது.
“என்ன, என்ன பேசனும்? என்ன சமாதானம் செய்ய கூட்டிட்டு வந்தியா நீ? இந்த கால்ல விழுந்து கெஞ்சற வேலை எல்லாம் வச்சுக்காத…” என்ற மயில்வாகனன்,
“என் தம்பி மூச்சுக்கு மூச்சு சொல்லுவான். நீ ரொம்ப அமைதியான பையன். அதிகம் பேசமாட்டன்னு. அப்படிப்பட்டவன் எவ்வளோ பெரிய காரியம் செஞ்சிருக்க?…” என்றார்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.