“எங்கடா போன நீ?…” என்ற மயில்வாகனத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு விருஷ்திகாவின் அருகில் அமர்ந்ததும் மாணிக்கவல்லி அவர்களுக்கு வழிவிட்டு நகர்ந்து நின்றார்.
“என்னடா, அதுதான் சித்தப்பாவுக்கு சரியாகிடும்ன்னு சொன்னாங்களே? மைல்ட் அட்டாக் தான். இனிமே பத்திரமா பார்த்துப்போம்…” என்று சொல்ல அவனின் கைகளை பிடித்துக்கொண்ட விருஷ்திகா தன் அண்ணனின் தோள் சாய்ந்தாள்.
“ஏன் இப்படி இருக்க? அழனுமா அழுதிடு விருஷ்தி…” என அவளின் தலை கோதியபடி கூற அப்போதும் அவளிடம் மௌனம் மட்டுமே.
அரவிந்த் நிமிர்ந்து அழகரை பார்க்க, அவனால் ஒன்றும் சொல்லவும் முடியவில்லை. மனைவியை நெருங்கவும் முடியவில்லை.
எங்கே அருகில் சென்று சட்டமாய் தான் அமர்ந்து அவள் தங்களுக்குள்ளான பிரச்சனையை வெளிப்படுத்தி விட்டால்?
வாய்விட்டு சொல்லவில்லை என்றாலும் சிறு விலகல் கூட மற்றவர்களின் பார்வைக்கு விருந்தாவதை அவன் விரும்பவில்லை.
அரவிந்தின் பார்வையில் இருக்கும் வருத்தத்தையும் அவன் கவனிக்கவே செய்தான்.
தலையசைத்து கண்மூடி திறந்த அழகர் பெருமூச்சுடன் அம்மையப்பனை பார்க்க அவர் பேரனை தான் கோபம் கொண்டு கவனித்தார்.
“ப்ச், இவர் வேற…” என்று காதை குடைந்தபடி முணுமுணுத்தவன்,
“அவருக்கு பரவாயில்லை. மூணுநாள்ல வீட்டுக்கு போயிடலாம்ன்னு சொல்லியிருக்காங்க. நீங்க கிளம்புங்க. கோவில் வேலைகள் இருக்கே…” என்றான் அழகர் அம்மையப்பனை விடுத்து ஞானசேகரனிடம்.
“அதுதான் மணி போயிருக்கானே?…” ஞானசேகரன் கூற,
“அதுக்காக எல்லாருமே இங்க இருப்பீங்களா? கிளம்புங்க. நான் இருக்கேன்…” என்றான் அவரிடம்.
“சரிங்க மாமா…” என்ற மாணிக்கவல்லி, சங்கடமாய் சாந்தாவை பார்க்க,
“நான் பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்கத்தை. எங்களுக்கு முருகனை செஞ்சு கொண்டுட்டு வர சொல்றேன்…” என்ற அரவிந்த்,
“சங்கடப்பட்டுக்கவேண்டாம். கண்டிப்பா சித்தி நீங்க கொண்டு வர்றதை சாப்பிடமாட்டாங்க. அதனால தான் நான் முருகனை எங்களுக்கு கொண்டுவர சொல்றேன்…” என்றான் தன்மையுடன் புரிந்துணர்வுடன்.
“சரிப்பா…” என்றார் மாணிக்கவல்லியும்.
அவர்கள் கிளம்பியதும் அழகர் அரவிந்தின் இருக்கையில் இருந்து இரண்டு இருக்கை தள்ளி அமர்ந்தான்.
விருஷ்திகாவை பார்க்க, பேச நினைக்கவில்லை. இப்போதிருக்கும் நிலையில் அவள் என்னவேண்டுமென்றாலும் செய்ய கூடும் என்று மௌனம் காத்தான்.
“ஆமா பெரிம்மா, மதினி இங்க கல்யாணம் முடிஞ்சு வந்த பின்னாடி என்னோட போன்ல இருந்துதான் அவங்களுக்கு போன் போட்டாங்க. அப்படி தெரியும் போல…” என்றாள் புகழ்மதி.
“செரித்தா, தங்கமான புள்ள. குணமான மனசு அந்த தம்பிக்கு…” என்றார் மாணிக்கவல்லி.
புகழ்மதியும் புன்னகையுடன் தலையசைத்தபடி அவருக்கு உதவி செய்ய சமையலை முடித்துக்கொண்டு மாணிக்கவல்லி திருமகளோடு புகழ்மதியையும் உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை வந்தார்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.