“நானும் எவ்வளவோ அப்பாட்ட சொல்லிட்டேன் பேசவேண்டாம்ன்னு. கேட்கலை…” என்றும் அரவிந்த் கூற,
“நான் செஞ்சதை தானே சொல்றாங்க. அதுக்குன்னு என்னை பேசட்டுமே. ஏன் அப்பாவை?….” என்றவளை தேடி புகழ்மதி வர,
“ஓகே, லீவ் இட். நான் பார்த்துக்கறேன். நீ வொர்ரி பண்ணாத…” என்று அவளின் தோளை தட்டியவன் புகழ்மதியை பார்த்து புன்னகைத்தான்.
“நேரமாகுதே. சாப்பிட வாங்க…” என்றாள் புகழ்மதி.
“தேங்க்ஸ்…” அரவிந்த் கூற,
“எதுக்கு?…” என்றவள் கண்கள் விருஷ்திகாவையும் பார்த்துவைத்தது.
“நான் சொன்னதும் என் தங்கச்சிக்கு இன்பார்ம் பண்ணினதுக்கு….” என்றவன்,
“அன்ட், அதுதான் என் நம்பர். எதுவும் எமர்ஜென்ஸின்னா கட்டாயம் எனக்கு காண்டேக்ட் பண்ணும்மா…” என்றான் அரவிந்த்.
“ஹ்ம்ம்…” என பொதுவாய் தலையசைத்தவள்,
“போலாங்களா மதினி…” என்றாள் தன் அண்ணியிடம்.
விருஷ்திகாவும் அவளோடு சேர்ந்து வந்தவள் நேராக சென்றது மயில்வாகனத்திடம் தான்.
“பெரியப்பா…” என்று காட்டமாய் அழைக்க, ‘இவள் இப்ப எதுக்கு?’ என்னும் விதமாய் நிமிர்ந்து பார்த்தவர் எழுந்து நின்றார்.
“நீங்க எங்க குடும்பத்துக்கு பெரியவங்களா இருக்கலாம். அதுக்கு என் அப்பாவை பேசுவீங்களா? இப்படி அவரை படுக்க வச்சிட்டீங்களே?…” என்றாள் இன்னும் காட்டத்துடன்.
“ஏய்…” என்ற மயில்வாகனனின் கவனம் சட்டென அழகரிடம் குவிந்தது.
விருஷ்திகா அங்கே செல்லவும் மயில்வாகனன் திகைப்புடன் எழுந்ததையுமே கண்டு அங்கே கவனத்தை செலுத்தினான் அழகர்.
அவன் பார்ப்பதை பார்த்ததுமே மயில்வாகனத்தின் உயர்ந்த கைகள் சட்டென்று கீழே இறங்க,
“திமிராவே இருக்கட்டும். அப்படியே வச்சுக்கோங்க. நான் செஞ்சதுக்கு என்னை பேசுங்க. என் அப்பாவுக்கு தெரியுமா இப்படி நடக்கும்ன்னு? அவரை ஏன் பேசறீங்க? இந்தநேரம் அவருக்கு ஆதரவா, ஆறுதலா இருக்கவேண்டிய நீங்க கரிச்சு கொட்டறீங்களா?…” என்று கேட்க,
‘எனக்கு வெளில இருந்து எவனும் வேண்டாம். இவனே போதும். என் சோலியை முடிக்க’ என மனதிற்கு தான் மகனை வசைபாட முடிந்தது.
“என்னை பேசுங்க. எனக்கு தாலி கட்டினது என் புருஷன். அவரை கேளுங்க. அப்பா என்ன செஞ்சார்?…” என்று விருஷ்திகா கூற, மயில்வாகனனின் கை தன்னைப்போல் தன் கன்னத்திற்கு செல்ல பார்வையும் அழகரிடம் சென்றது.
அவனுக்கு இது கேட்கவில்லை என்றாலும் தானும், தன் முகபாவனையும் தெரியுமே. அதுவுமில்லாது தான் பேசியதை இவள் சொல்லிவிட்டால் என்று பல்லை கடித்துக்கொண்டு பார்த்தார்.
“ப்ச், என்னம்மா பேசற. விடு…” என வல்லி மருமகளை அழைத்து அங்கே தங்களுக்கு தரப்பட்டிருந்த அறைக்குள் அழைத்து சென்றார்.
மௌனமாய் உணவு நேரம். அழகர் வரவில்லை. மாணிக்கவல்லி தான் அரவிந்த், விருஷ்திகாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
எந்த முகத்தை வைத்துக்கொண்டு தகப்பனை காண்பது என மனதை வருத்திக்கொண்டவள் இதயத்தினுள் இன்னுமொரு சஞ்சலம்.
எங்கே தான் சென்று தன்னை பார்த்து அவரின் உடல்நிலை மேலும் மோசமாகிவிட்டால்? முகத்தை மூடியபடி அங்கேயே அமர்ந்துவிட்டவள் தன் நிலை எண்ணி பெரிதும் உடைந்து போனாள்.
யாருமற்று தனியாய் தனித்து நிற்பதை போன்று மனமெல்லாம் வெறுமை சூழ்ந்தது.
அவளின் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அவதானித்தபடி அழகர் முகம் இறுகி அமர்ந்திருந்தான்.
சாந்தா மட்டுமே உள்ளே செல்ல கதிர்வேலன் அப்போது தான் மெதுவாய் கண் விழித்து பார்த்திருக்க சாந்தாதேவி வார்த்தையின்றி கண்ணீரை மட்டுமே கொட்டினார்.
நொடியில் தன்னை விட்டு வெகுதூரம் செல்ல பார்த்துவிட்டாரே என்னும் ஆற்றாமையும், ஆதங்கமும், கூடவே அச்சமும் அவரை பந்தாய் சுழற்றிவிட்டது.
கதிர்வேலனின் பார்வையில் சிறு ஆறுதல் தோன்ற இன்னுமே அழுகை பொங்கியது சாந்தாவிற்கு.
“என்னை தனியா விட்டுட்டு போக பார்த்தீங்க இல்ல?…” என்று அழுதார் அவர்.
கனிவாய் மன்னிப்பை யாசிக்கும் பார்வை பார்த்த கதிர்வேலனின் கண்கள் சாந்தாவின் பின்னால் யாரையோ தேடியது.
“எல்லாருமே வந்திருக்காங்க. வெளில தான் இருக்காங்க…” என்றார் அவர்.
கதிர்வேலம் முகத்தில் வேதனையின் சாயலுடன் மகளின் முகம் காண மனம் பரபரத்தது.
உண்மைக்கும் தான் இப்படியே சென்றுவிடுவோமோ என்றுதான் பயந்து போனார்.
உயிர் இருக்கும் வரை தான் ஒவ்வொன்றும் பெரிதாய் தெரிய இப்போது இறப்பின் வாசல் வரை சென்றுவிட்டு வந்துவிட்டார்.
எங்கே மகள், மனைவியை விட்டு சென்றுவிடுவோமோ என்னும் பரிதவிப்பு வேறு.
தானில்லை என்றால்? அதுவும் மகளின் திருமணம் நடந்த சூழ்நிலை, இத்தகைய சமயத்தில் தனக்கொன்று என்றாலே அதற்கு மகள் கரணம் என்று பேசுபவர்கள் மத்தியில் அவளின் வாழ்வையும், நிம்மதியையும் பறித்து ச்நேற்றுவிடுவோமோ என்னும் பயம் வேறு.
அவரின் முகம் கொண்டே மகளை தான் தேடுகிறார் என்று சாந்தா மனதினுள் பெரும் துயரம்.
“கூப்பிடட்டுங்களா? நானும் அவக்கிட்ட ஒருவார்த்தை கூட பேசவே இல்லை. நொடிஞ்சு போய் உக்கார்ந்திருக்கா…” என்று சொல்ல அவரின் விரல்கள் அசைந்தது.
மீண்டும் கதிர்வேலன் கண்கள் மூடி திறந்து எதிர்பார்ப்புடன் கதவினை நோக்க சாந்தா வேகமாய் வெளியே ச்நேற்றார்.
“விருஷ்தி…” என்று மகளை அழைத்ததுமே தலையில் கைவைத்து குனிந்தமர்ந்திருந்தவள் விருட்டென்று நிமிர்ந்து பார்க்க இருவருமே உடைந்துவிட்டனர்.
“ம்மா…” என்று ஓடி சென்று தாயை அணைத்துக்கொண்ட விருஷ்திகா,
“ஸாரிம்மா. ஸாரிம்மா…” என்றதை தவிர வேறு எதையும் கூறவில்லை.
“சரிம்மா, அழாம வா. அப்பா கூப்பிடறார்…” என்று சாந்தா சொல்லவுமே,
“என்ன?…” என வீறுகொண்டு எழுந்த மயில்வாகனன், அழகரின் கனைப்பில் சட்டென்று அமர்ந்துவிட்டார்.
விருஷ்திகாவால் நம்ப முடியவில்லை. நிஜமாகவே அழைக்கிறாரா என்று அவள் பார்க்க சாந்தா மகளை கை பிடித்து அழைத்து செல்ல தன்னை நோக்கி வந்த மகளை பார்த்த கதிர்வேலன் மெல்ல மெல்ல மீண்டும் மயக்கத்திற்குள் சென்றார்.
“சாதாரண மயக்கம் தான். இனி பயப்பட எதுவுமில்லை…” என்று மருத்துவர் வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி சென்றார்.
அனைவரும் அவரை பார்த்துவிட்டு வர அழகரும் மருத்துவரோடு சேர்ந்தே சென்று பார்த்துவிட்டு வந்துவிட்டான்.
அதன்பின்னர் தான் சாந்தாவுமே கொஞ்சம் உணவை எடுத்துக்கொண்டார். அதுவும் முருகன் கொண்டுவந்த அவர்களின் வீட்டு உணவை.
இரவு இன்னும் நேரம் நீள அரவிந்த் தான் இதற்குமேல் அங்கே வேறு யாரும் இருக்கவேண்டாம் என்றான் அவர்களிடம்.
“இல்லம்மா, ரெண்டுபேர் தான் இருக்கனும். சித்திக்கு துணையா நான் இருக்கேன். அப்பாவையும் விஷால் வந்து கூட்டிட்டு போய்டுவான். நீ கிளம்பிட்டு காலையில வா…” என்றான் அரவிந்த்.
வேறு வழியின்றி அவள் கிளம்ப மாணிக்கவல்லி தான் ஆறுதலாய் நின்றார். சாந்தாவிடம் சொல்லிவிட்டு அவர்கள் புறப்பட அழகர் மயில்வாகனனிடம் வந்தான்.
“வாங்கினது ஞாபகம் இருக்குல. இனி வாய திறந்த…” என்று எச்சரிக்க,
“உன் அப்பா வயசு எனக்கு. என்னை போய். நீ இப்படி பேசுவன்னு நான் நினைக்கவே இல்ல. வயசுக்காச்சும் மதிச்சு பதமா பேசிருக்கலாம்…”
“உன்கிட்ட வேற எப்படி பேச நான்? பதமா பேச நீ என்ன என் பொண்…” என்றவன் பல்லை கடித்துக்கொண்டு,
“இருக்கற மண்டசூட்டுக்கு வாங்கி கட்டாதய்யா…” என்று சொல்லிவிட்டு சென்றான் அழகர்.
அவன் வெளியே வரும்முன் மாணிக்கவல்லி வந்திருந்த காரினுள் அமர்ந்திருந்தாள் விருஷ்திகா.
பார்த்ததும் சுர்ரென்று மண்டைக்குள் ஏறியது கோபம். பெரிதாய் எழுந்த மூச்சுக்களை அடக்கிக்கொண்டு அவர்களுக்கு தலையசைத்துவிட்டு தன் வாகனம் நோக்கி நடந்துவிட்டான் அழகர்.
அவனின் நடையிலேயே அவன் கோபத்தின் அளவு தெரிய தாய், தமக்கைகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.