“எதாச்சும் அவசர சோலியா இருக்கும்டி. இது ஒருவிசயமா?…” என்ற திருமகள் தன் தம்பியின் மனைவியை கவலையுடன் பார்த்தாள்.
விருஷ்திகா அழகரை கவனித்ததாகவே தெரியவில்லை. அவள் ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தாள்.
வீடு செல்லும் வரை அவர்களிடம் எதுவும் அவளாக பேசவும் இல்லை. கேட்டதற்கு மட்டும் முகம் பாராமலே பதில்.
புகழ்மதியை தவிர வேறு ஒருவருமே அந்த திருமணத்தின் பின் அவளிடம் பேசவோ, முகம் காண்பிக்கவோ இல்லையே.
அழகுமீனாளின் கோபத்தில் அவர்களும் தானே ஒதுங்கி நின்றனர் என்று தான் ஒதுங்கிக்கொண்டாள்.
வீடு வந்ததுமே காரை நிறுத்தும் இடத்திற்கு அருகில் அழகரின் வாகனம் நிற்க கண்டு உள்ளே சென்றனர்.
விருஷ்திகாவும் எதோ நினைப்பில் வேகமாய் தனது அறைக்குள் செல்ல அழகர் அவளுக்காக காத்திருந்தான்.
முகமெல்லாம் சோர்ந்து வீங்கி போய் வந்தவளை பார்த்ததும் அவனின் கோபமும் மட்டுப்பட அவள் ஆசுவாசமாய் அமர காத்திருந்தான்.
முகம் கழுவிவிட்டு வந்தவள் அவனிடம் எதுவும் பேசாமல் அந்த அறையை சுத்தப்படுத்திவிட்டு நேராக சென்று அந்த அறையின் ஜன்னல் திண்ணையில் அமர்ந்துவிட்டாள்.
பார்வை அதனூடு தெரிந்த அவளின் வீட்டில் தான் பதிந்தது. கலங்கிய விழிகளை கண்சிமிட்டி கண்ணீர் வராமல் தடுத்துவிட்டாள்.
“லக்ஷ்மி…” என பொறுமை கரைந்து போய் அழகர் அழைக்க அவள் திரும்பவில்லை.
“ப்ச், உன்னை தான். காதுல விழுந்தும் என்ன இது ஆட்டிட்யூட்?…” என்று சொல்ல அப்போதும் திரும்பவில்லை.
கதிர்வேலன் உடல்நிலை குறித்து கவலை என்று நினைத்தவன் தானும் அந்த திண்ணையில் வந்தமர்ந்தான்.
“என்ன பிரச்சனை உனக்கு? அதுதான் உங்கப்பா சரியாகிட்டாரே? இன்னும் என்னடி?…” என்றான் அவன் தன்மையான குரலுடன்.
சுத்தமாய் அவனுக்கு அவளை எப்படி அணுகவேண்டும் என்று தெரியவில்லை.
கோபமும், ஆவேசமும் வெளிப்படுத்த தெரிந்தவனுக்கு அவளை குளிர செய்யும் வார்த்தைகளை பேச வரவில்லை.
தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே ஒளியாமல், மறையாமல் பேசிவைத்தான்.
இப்போதும் அந்தவழியிலே அவன் பேச உணர்வின்றி அவனின் முகம் பார்த்தாள் விருஷ்திகா.
“என்ன என் மேல கோபமா? இல்லை சண்டை போடனுமா? சரி போடு. அதுக்கு பேசாம இருப்பியா? என்னடி நினைக்கிற? உங்கப்பாவுக்கு இப்படி ஆனதுக்கு நான் காரணம்ன்னா? நம்ம கல்யாணம் தான்னா?…” என்றான் அவனாகவே.
ஆமாம் என்று கூறி சண்டையிடுவாள் என்று பார்க்க ‘இல்லை’ என்று தலையசைத்து அவனை திகைக்க செய்தாள்.
“நீங்க எப்படி காரணமாக முடியும்? உங்களை நானா ஏன் குறை சொல்லனும்? இதுக்கு உங்களை பழி சொல்ல முடியும்?…” என்றாள் அலுங்காமல்குலுங்காமல்.
அழகருக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றே புரியவில்லை. ஆனால் எதையோ வலிக்க பேச போவது தெரிந்துவிட்டது.
“இதுல தப்பு என் பேர்ல தான். நான் மட்டும் தான் காரணம். என்னால தான் அப்பாவுக்கு இப்படி ஒரு கஷ்டம்…”
“லக்ஷ்மி…”
“நிஜமாவே எனக்கு கொஞ்சமாவது புத்தின்னு இருந்திருந்தா நீங்க ஏன் திடீர்ன்னு என் பக்கம் வர்றீங்க, என்கிட்ட இதை கேட்கும்போது நீங்க என்ன நினைக்கறீங்க எதையுமே நான் யோசிக்கலையே….” என்றவள்,
“ ன் ஏன் எதிர்த்து அந்தநேரம் எதுவும் கேட்கலை? தப்பு என் பேர்ல. அப்போ எப்படி உங்களை குற்றம் சொல்ல முடியும்?…” என்றாள் பட்டுக்கொள்ளாத குரலில்.
“என்ன பேசற நீ?…” என்றவனுக்கு அத்தனை ஆயாசம்.
“நீங்க சொல்ற மாதிரி நானா தானே விரும்பினேன். அந்த விருப்பம் தான் எல்லாத்துக்கும் காரணம்….” என்றாள்.
“நீ இப்ப எதுக்காக இப்படி பேசற?…”
“எங்கம்மாக்கிட்ட நீங்க எனக்கு தாலி கட்டுவீங்கன்னு அந்தநிமிஷம் தெரியாதுன்னு அப்பவும் உங்களை நான் சொல்லலை. என் அண்ணாக்கிட்டையும் சொல்லலை. ஏன் தெரியுமா?…” என கேட்டு,
“புருஷன் பொண்டாட்டி ஒருத்தருக்கொருத்தர் இன்னொருத்தரோட மரியாதையை காப்பாத்தறது தான் முதல் கடமை. அப்படி எதையும் நீங்க எனக்கு செய்யலை. என்னை தான் கை காமிச்சீங்க. நான் சரின்னு சொல்லி தான் அந்த கல்யாணம்ன்னு…”
“அது உண்மை தான். ஆனா நான் சரின்னு சொன்னது அந்த நிமிஷத்துக்கா? ஏன் அந்த நிமிஷம் கூட உங்களை நான் தான் காப்பாத்தியிருக்கேன். நான் சொல்லியிருக்கலாமே, உங்களை விரும்பினது நிஜம். ஆனா இப்பவே தாலிகட்ட சொல்லலைன்னு. சொல்லிருந்தா தெரிஞ்சிருக்கும்…” என்றவள்,
“பேசாம, நீங்க மட்டும் சொன்னதையே தான சொல்றீங்க. அப்போ என் பக்கத்தை நான் யார்க்கிட்ட சொல்ல? காதலிச்சதுக்கே என்னை தப்புன்னு எப்படி பேசிட்டீங்க நீங்க….” என்றாள் ஆதங்கத்துடன்.
“ஒரு சாதாரண வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் எடுப்பியா நீ? நான் என்ன நினைச்சு சொன்னா நீ என்ன விதமா அதுக்கு சாயம் பூசற?…” என்றான் கோபமாய்.
“ஓஹ், அப்போ இதே மாதிரி என் இஷ்டத்துக்கு வர்ற வார்த்தையை எனக்கு நீங்க பேசினதை போல நான் உங்க அக்கா, தங்கச்சிக்கு சொல்லட்டுமா?…” என்றுவிட்டாள் பட்டென்று.
“லக்ஷ்மி…” அழகரின் குரல் உயர,
“நீங்க சொன்ன மாதிரி இது வார்த்தை தானே? நீங்க ஏன் உங்க இஷ்டத்துக்கு அர்த்தம் எடுத்துக்கறீங்க?…” என்றவள்,
“உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு உன் மனசறிஞ்சு நான் பேசாம போறேன். எவ்வளோ பேசற நீ? இன்னொருதடவை இப்படி பேசின பார்த்துக்கோ…” என்றவன் கோபத்தில் அவளுமே பட்டென்று எழுந்துவிட்டாள்.
“என்ன செய்வீங்க? நீங்க பேசினதை நான் பேசுவேன்னு சொல்லி காமிச்சதுக்கே இவ்வளோ கோவமா? அப்போ என்னை பேசினதுக்கு நான் மட்டும் அமைதியா போகனுமா? என்ன சொன்னீங்க, குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகிடும்ன்னு…” என்றவள்,
“பார்த்துட்டே இதுக்குன்னே உங்களுக்கு பொண்ணு பிறக்கனும். அப்போ புரியும் எங்கப்பாவோட வேதனை என்னன்னு. சட்டையை புடிச்சிட்டார்ன்னு கூட எவ்வளோ கோவம். நீங்க பண்ணினதுக்கு வேற என்ன செய்வாங்க?…” என்று அவள் பேச பேச அழகருக்கு அத்தனை கோவம்.
“நான் என் பொண்ணை அப்படி வளர்க்கமாட்டேன்…” என்று தான் சொல்லியிருந்தான் அவனின் சட்டையை பிடித்துவிட்டாள் விருஷ்திகா.
தன் கைகளின் பிடியை இறுக்கியபடி நின்றிருந்தவள் இதயம் ஒருநொடி துடித்தடங்கியது.
“என்ன சொன்னீங்க?…”
அவள் அடக்கப்பட்ட ஆவேசத்துடன் விழிகள் வறண்ட பார்வையை காண்பிக்கவும் தான் அழகருக்கு புரிந்தது தான் பேசியதன் அர்த்தம்.
“ப்ச், விடு லக்ஷ்மி…” என்று விலக போக,
“அப்போ என் வளர்ப்பு சரியில்லைன்னு சொல்றீங்களா?…” என்றாள் அவள்.
கண்ணீர் கடைபுரண்டு விழிகளை நிறைத்து அவனின் முகம் மறைத்தது. அவளின் கோபத்தை தூசு போல் தட்டி விடுபவனால் இந்த கண்ணீரை ஒதுக்கமுடியவில்லை.
“அது அப்படி இல்லைடி லக்ஷ்மி…” அதுவுமே அவனுக்கு சமாதானமாய் வரவில்லை.
“என் அப்பாவை மீறி ஒன்னு நான் உங்களை தாலி கட்டுங்கன்னு நிக்கலை. ஆனா என் குடும்பம் குடும்பம்ன்னு சொல்ற நீங்க ஏன் அப்படி உங்க பெத்தவங்களுக்கு தெரியாம இப்படி செஞ்சீங்க? அப்போ உங்க வளர்ப்ப நான் பேசவா?…” என்றாள் கனலாய் கனன்று.
“லக்ஷ்மி…” மீண்டும் கத்தினான் அழகர்.
எரிச்சலும் ஆயாசமும், சலிப்புமாய் தான் வெளிவந்தது. இப்படி ஒவ்வொன்றும் பிரச்சனையில் முடிகிறதே என்று.
மீண்டும் விருஷ்திகாவிடம் அசாத்திய மௌனம். அவனை விட்டு விலகும் பாவம் தென்பட, அவன் பிடித்துக்கொண்டான்.
“நான் அப்படி மீன் பண்ண வரலை லக்ஷ்மி. பேசுடி….” என்றான் அழகர்.
“என்ன பேசனும்? அதான் சொன்னீங்களே? என் அக்கா, தங்கச்சி சரியா இருந்தாங்க நான் சரியில்லைன்னு சொல்லியாச்சு. என் அப்பா என்னை சரியா வளர்க்கலைன்னும் சிம்பாலிக்கா சொல்லியாச்சு. இன்னும் வேற இருக்கா?…” என்றாள் உள்ளம் துடிக்க.
“ப்ச், அது கோபத்துல ஒரு வேகத்துல சொன்னா?…”
“நானும் அதே மாதிரி ஒரு வேகத்துல கல்யாணம் செஞ்சுட்டு இப்போ அவஸ்தை படறேன். என்னை எவ்வளோ அசிங்கப்படுத்த முடியுமோ செஞ்சிட்டீங்க, இல்ல….” அவள் உணர்வுகளின் வெடிப்பில் அவன் திண்டாடினான்.
“லக்ஷ்மி, லக்ஷ்மி…” என்றவன்,
“நீ லவ் பன்றதை தப்புன்னு சொல்லலை. ஆனா எனக்கு அதுல உடன்பாடில்லை. அதை நான் சொன்ன விதம் மாறிடுச்சு. எஸ், எனக்கு பிடிக்கலை. அதுதான் அப்படி சொன்னேன். படிக்கிற வயசுல என்ன பழக்கம் இதுன்னு எனக்கு ஒவ்வாத ஒன்னை நீ செஞ்சிட்டன்னு ஒரு கோவம்….” என்றவன்,
“மத்தபடி உன்னை இந்த வீட்டு பொண்ணா புடிக்கும். நீ சொன்ன காதல் எனக்கு அதுல உடன்பாடில்லை. அந்த கோபம். இவ ஏன் இப்படி செய்யறான்னு. நீ என்னை பார்க்கிற பார்வை, அது எனை நார்மலா இருக்கவிடலை. அது எல்லாம் சேர்த்து தான் உன்மேல கோவப்பட்டேன்…” என்று அவன் ஆயிரம் பேசியும் விருஷ்திகாவின் முகம் இறுகிக்கொண்டே தான் சென்றது.
பொங்கி நின்ற கண்ணீரை துடைத்தவள் தன்னை நிதானப்படுத்திவிட்டு அவன் முகம் பார்த்தாள்.
“இனி உங்களுக்காக நீங்க இப்படி என்னை பேசிட்டீங்கன்றதுக்காக என் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராது. வேல்யூ இல்லாத இடத்துல என்னோட உணர்வு கூட உறவாடாது…” என்றவள்,
“எங்கப்பா அடிக்கடி ஒருவார்த்தை சொல்லுவாங்க. புள்ளைன்னு வளர்த்தா அது அழகரை மாதிரி தான் வளரனும்ன்னு…” எனும்பொழுதே அந்த கண்களில் மிதமிஞ்சிய வலி.
“ஆனா இப்போ நான் சொல்றேன். எனக்கு மகன்னு ஒருத்தன் பிறந்தா சத்தியமா உங்களை மாதிரி வளரவிடமாட்டேன்….” என்றாள் விருஷ்திகா ஒருவித தீர்க்கத்துடன்.
“என்னோட காதல் நீங்க எனக்கு தாலி கட்டின நிமிஷத்தோடவே நின்னுடுச்சு. நீங்க சொன்ன மாதிரி இப்போ நான் வெறும் அழகரோட பொண்டாட்டி லக்ஷ்மி மட்டும் தான். விருஷ்தி இல்லை….” என்று உணர்வற்ற பார்வையுடன் அவள் கூற அழகரின் மனம் அசைந்தாடியது.
இத்தனை பேசுவாள் விருஷ்திகா என்பதே அன்றைக்குத்தான் அழகர் உணர்ந்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.