உறுத்து விழித்தபடி தன்னை யாரோ என்றுணர்த்தி தள்ளி நிற்கும் அவளின் பார்வையை விரும்பவில்லை அவன் மனது.
வருத்தம் ஒரு ஓரத்தில் இருந்தாலும் தன்னிடம் மல்லுக்கட்டிக்கொண்டு புரியாமல் பேசுபவளை ஆயாசத்துடன் பார்த்தான்.
“ஸோ இதுதான் உன்னோட ஸ்டேட்மென்ட். ரைட்?…” என்று கேட்க, அதற்குமே பதிலின்றி அவனை தீர்க்கமாய் பார்த்தாள் விருஷ்திகா.
“சூட்டோட சூடா பேசற. உன்னை இன்னொருநாள் கவனிச்சுக்கறேன்…” என்றவன் அவளை கடந்து சென்றான் குளியலறை நோக்கி.
அவள் வரும்வரை உடை கூட மாற்றாமல் இருந்தவன் குளிக்க சென்றதும் தான் விருஷ்திகாவின் உடலும், மனமும் வெகுவாய் தளர்ந்தது.
வாழ்க்கை ஆரம்பித்த வேகத்தில் இப்படியாகி போனதே என்னும் கழிவிரக்கம் அவளை ஆட்டி வைக்க பார்க்க உதறி தள்ளினாள் அதனை.
வைராக்கியம் மனதினை அழுத்தும்படி கொணர்ந்தவள் அந்த ஜன்னல் திண்ணையில் சென்றமர்ந்தாள்.
இருள் சூழ்ந்திருந்த தனது வீட்டினை பார்த்தவளின் மனம் வெகுவாய் கலங்கியது.
எத்தனை ஆசையாய் அந்த வீட்டினை வாங்கியதாய் கூறினார் கதிர்வேலன்.
சாந்தாதேவியை திருமணம் முடித்தவருக்கு மேலூரில் பூர்வீக வீடு இருந்தாலும், அம்மையப்பனின் எதிர்வீடு விலைக்கு வருவதாய் தெரியவும் சாந்தாவிற்காகவே அதனை வாங்கியவர், மகள், மனைவியின் விருப்பப்படி அந்த வீட்டினை வடிவமைத்து பார்த்து பார்த்து கட்டியிருந்தார்.
மீண்டும் கண்களில் நீர் உடைப்பெடுக்க சட்டென்று அதனை துடைத்தவள் தலை சுவரில் லேசாய் சாய்ந்தது.
அழகர் மீண்டும் வரும்வரை அவ்விடத்தில் தான் அமர்ந்திருந்தாள் விருஷ்திகா.
வந்தவன் தலை துவட்டி, உடை மாற்றி எல்லாம் முடித்துவிட்டு படுக்கையில் விழ அப்போதும் எழவில்லை அவள்.
“ப்ச்…” எரிச்சல் மண்டியது அவள் முகத்திருப்பலில்.
“போடி சூனியபொம்மை…” என்ற சலிப்புடன் திரும்பி படுத்துக்கொண்டான்.
அவளே உறக்கம் வந்து தானாய் எழுந்து வரட்டும் என்று படுத்தவனுக்கு அந்த உறக்கம் கண்களை எட்டாமல் கண்ணாம்பூச்சி ஆட்டமாடியது.
“இவளோட…” என்று மீண்டும் அவளிருக்கும் திசையில் புரண்டு படுத்து, தலையை தூக்கி எட்டி பார்க்க இன்னும் அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தாள் அவன் மனைவி.
தானாய் எழுந்து வரட்டும் என்று படுத்தவனுக்கு உறக்கம் கண்களை எட்டவில்லை.
எரிச்சலானது அழகருக்கு. ‘என்ன செய்துவிட்டேனாம் இவளை?’ என்று தான் ஆற்றாமையுடன் பார்த்தான்.
மீண்டும் அவளை அழைக்கவும் அவனின் இறுக்கம் ஒத்துழைக்கவில்லை. ‘எத்தனை நேரம் இப்படியே இருக்கமுடியும்?’ என்று படுத்துவிட்டான்.
என்னதான் அலட்சியம் செய்ய நினைத்தாலும் முதல்நாள் இரவில் தன் கைகளுக்குள் பட்டுப்பூவாய் நெகிழ்ந்து, சிலிர்த்து, சிணுங்கிக்கிடந்தவளின் அண்மையை நாடி அவன் மனம் தவித்தது.
“இம்சை…” என்றான் வாய்விட்டே.
கெஞ்சினால் மிஞ்ச கூடும் என்று விட்டுப்பிடிக்க நினைத்தவன் தன்னை, தன் மனதை, ஆசையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாய் உறக்கத்தை இழுத்துப்பிடித்தான்.
முடியத்தான் இல்லை. எப்போதும் படுத்ததும் அலுப்பில் உறங்கிவிடுபவனுக்கு அன்றைக்கு பார்த்து சோதனை காண்பித்தது.
அதுவும் முதல்நாள் இரவெல்லாம் விழித்திருந்தவன் தான். இன்றைக்கும் இத்தனை பிரச்சனை, இத்தனை அலைச்சல், நாளெல்லாம் மருத்துவமனை.
கூடுதலாய் மதியமும், இரவும் உணவெடுக்கவில்லை. எப்போதும் இப்படி எதற்குமே உணவை தள்ளி வைப்பவன் இல்லை.
ஆனால் அந்த பசி உணர்வே மரத்து போயிருந்தது. மனமெல்லாம் மனைவியின் முகம் நிறைந்திருக்க உணவை நினைக்கவில்லை அழகர்.
அவ்வப்போது கண்களை திறந்து மட்டும் பார்த்துக்கொள்வதும், மீண்டும் விழி மூடுவதுமாய் அவனிருக்க கண்கள் வேறு எரிந்தது.
பாதி இரவு கடந்துவிட்டிருக்க மீண்டும் கண் திறந்து பார்த்தவனின் விழியில் விழுந்ததென்னவோ விருஷ்திகா கீழே விழப்போகும் காட்சி தான்.
அயர்ந்து உறங்கிவிட்டவள் உறக்கத்திலேயே கீழே சரிய போக, எழுந்து சென்றவன் சட்டென அவள் விழாமல் பிடித்துக்கொண்டான்.
அவனின் தொடுகையில் பட்டென்று கண்களை திறந்தவள் அவனை விழிகளால் எரிக்க,
“ரொம்ப பண்ணாதடி. சத்தியமா கடுப்பாகிடுவேன். விழுந்துகிழுந்து தொலைஞ்சா அதுக்கும் நான் காரணம்ன்னு சொல்லுவ. நீ சொல்லாட்டிலும் பார்க்கிறவங்க அப்படித்தான் நினைப்பாங்க…” என்றவன் அவள் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுதே தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.
“என்ன பன்றீங்க?…” என்று அவள் துள்ளி இறங்க பார்க்க, அந்த அசைவுகளில் அழகரின் கரங்கள் தாறுமாறாக அவளில் பதிந்தது.
“பேசாம இருந்தா இந்தாருக்கற கட்டில்ல போட்டுட்டு நான் படுத்திருப்பேன். இப்படி அசைஞ்சு என்னை டைவர்ட் பண்ணின தொலைஞ்ச நீ. அப்பறம் உன் கோவம், அழுகை, கண்ணீர், கவலைன்னு எதையும் பார்க்க மாட்டேன்…” என்றவனை வெறித்து பார்த்தாள்.
“ஒளிச்சு எதுவும் பேசலை. எனக்கு இதுதான் தோணுது. அப்பறம் நான் என்ன சூழ்நிலையில இருக்கேன், எவ்வளோ சண்டை போட்டேன். என்னை இப்படி பன்றீங்கன்னு பழி போட கூடாது. புரியுதா?…” என்றான் அதட்டலாய்.
“உங்களுக்கு நல்லவிதமாவே பேச வராதா?…” என்றவள் மீண்டும் இறங்க பார்க்க இன்னும் தன்னோடு சேர்த்து அணைத்தான் அழகர்.
“உன்கிட்ட உன் முகம் கூட சரியா பார்க்காம பேச நீ என்ன கதிர்வேலன் பொண்ணா? அழகர் பொண்டாட்டின்னு நீயே தான் சொன்ன. என் பொண்டாட்டிட்ட சௌக்கியமா? சரி சாஞ்சுக்கோன்னு சொல்லுவேனா? காதலிச்சா போதுமா? அதுக்கான விவரம் வேண்டாமா?…” என கேட்க விருஷ்திகாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
“இப்படி பட்டுப்போல பொன்னாட்டம் இருக்கனும். புரியுதா?…” என்று அவளை கட்டிலில் விட்டவன்,
“இங்க பாரு. நடந்த பிரச்சனையில ரெண்டுபேருமே ரொம்ப சூடா இருக்கோம். கோபம் தான். புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வராம எப்படி? அதை உடனே சரி பண்ணிட முடியுமா? பொறுமையா தான் சரி பண்ணனும். அதுவும் நீ முறுக்கிட்டு நிக்கிறதுக்கு….” என்று வியாக்கியானம் பேசினான்.
“யாரு நான் முறுக்கிட்டு பிரச்சனை பன்றேனா?…” என்றவள் மீண்டும் நெற்றிக்கண்ணை திறந்து,
“நீ என்னை புரிஞ்சுருக்கியா? அதுதான் இப்படி நடந்துக்கறியா? சொல்லு…” அழகர் புருவம் உயர்த்தி கேட்க,
“ஹப்பா சாமி, உங்களை புரிஞ்சவரைக்கும் போதும். அதுக்கே நான் இந்த நிலைமைக்கு வந்துட்டேன்…”
“அப்படி ஒன்னும் மோசமான நிலைமை இல்லை….” என்றான் அப்போதும் அவளை மேலும் கீழும் பார்த்துக்கொண்டே.
விருஷ்திகாவிற்கு தான் அவனை எப்படி அடக்குவதென்றே தெரியவில்லை. இத்தனை பேசுவானா இவன் என்றிருந்தது.
“என் மேல வருத்தம். உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. ஸோ, டைம் எடுத்துக்கோ. அதுக்கு இந்த சண்டைக்கு எல்லாம் நீ ரிவெஞ்ச் எடுக்கறேன்னு என்னை தள்ளி வைக்க பார்த்த….” என்று சுட்டுவிரல் நீட்டி அவன் எச்சரித்ததோடு,
“உன்னோட மனசுக்கு மதிப்பு குடுத்து பேசாம விடறேன். எவ்வளோ நாள் இப்படியே போகும்ன்னு தெரியாது. பார்த்துக்கோ. இப்போ தூங்கு…” என்று சொல்ல,
“இதுக்கு பேர் மதிப்பா? மதிப்புன்னா என்னன்னு தெரியுமா?…” என்று அவள் சீறிக்கொண்டு வர,
“அடிங். சொல்லிட்டே இருக்கேன். என்னை டெம்ப்ட் பண்ணாதன்னு. நானும் செம்ம கோவத்துல இருக்கேன். முத்தம் குடுத்து காமிச்ச மாதிரி கோபத்தை காமிச்சிட போறேன். அப்பறம் லபோதிபோன்னு கத்தாம இருக்கனும்….” என்று சொல்லவும் சுத்தமாய் விருஷ்திகா பொறுமை பறந்தது.
“நீங்கலாம் மனுஷனே இல்லை…” என்று தலையணையை அவன் மீது வீசியவள் எங்கே அவன் இன்னும் நெருங்கிவிடுவானோ என்று சுருண்டு படுத்துவிட்டாள்.
“மனுஷன்னு காமிக்கனும் போலயே…” என்றவன் தாடையை தடவியபடி கூற விருஷ்திகா திரும்பவில்லை.
வெகுநேரம் அழகர் அங்கேயே அவ்விடத்திலேயே தான் நின்றுகொண்டிருந்தான்.
அவள் உறங்கட்டும் என்று காத்திருந்தானோ என்னவோ, ஆனால் தனக்கு முதுகு காண்பித்து படுத்திருந்தவளின் மீதான விழிகளை அகற்றவில்லை.
மெலிதாய் அவன் இதழ்கள் வளைய கண்கள் கனிந்தது. ஒரு பெருமூச்சுடன் படுக்கையில் சாய்ந்தவன் விருஷ்திகாவின் காதோரம் குனிந்தான்.
“நிறையவே பிரச்சனை. இப்போ எதை பேசினாலும் பிரச்சனையா தான் போகுது. கொஞ்சம் போகட்டும். என்னை இவ்வளோ அடக்க நினைக்காதடி. என்னை டம்ப் பண்ண நினைக்க நினைக்க நான் அதைவிட பலமடங்கு தான் என் கன்ட்ரோலை விட்டு வெளில வர்றேன்…” என்றவன் அவளின் காதுமடலுக்கு மெல்லிய முத்தம் பதித்தான்.
விருஷ்திகா அசையவே இல்லை. அப்போதுமே கோபம் தான். இன்னுமே புரிந்துகொள்ளாமல் பேசுகிறானே என்று கனன்றது.
ஆனால் இப்போது பதில் பேசினால் அடங்கமாட்டானே என்று அமைதியானாள்.
அவளுக்குமே ஓய்வு தேவையாய் இருக்க மெல்ல கண்மூட, மூடிய இமைகளுள் நடந்து கடந்த விஷயங்கள் மட்டுமே.
அழகரின் பக்கம் சீரான மூச்சுக்காற்றின் மெலிதான சத்தத்தில் மெல்ல தலையை திருப்ப அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.