‘என்னால அவளை பார்த்த பார்வையில யாரையும் பார்க்க முடியாது’
என்று அவன் பேசியதெல்லாம் இப்போது நெஞ்சத்தில் நினைவாக தூறல் விட, அந்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் ஊர்மிளாவின் மனதினை குளிர்வித்து, முகத்தில் புன்னகையைக் கொடுத்தது.
என்னை பற்றி என்னிடமே பேசியிருக்கிறான். எனக்குத் தெரியவில்லை!
என்னை பார்த்த பார்வையில் யாரையும் பார்க்க மாட்டானா?
அதை நினைக்க புதிதாய் ஒரு கர்வம் பெண்ணிடம்!
கன்னத்தில் கைகள் கொடுத்து விட்டத்தைப் பார்த்தவளுக்கு ஜெயனின் பேச்சும், செயலும் ஒவ்வொன்றாக அணிவகுக்க, அதனை ஆராய்ந்து பார்த்தாள்.
சொந்தமென்று பார்த்த பார்வையில் அவ்வளவு அன்பா அவனுக்கு? அன்று மலையேறிய போது தனக்காக அவன் காஃபி வரவழைத்தது, விண்டர் ஜாக்கெட் கொடுத்தது எல்லாம் நினைக்க,
“இம்ப்ரஸ் பண்ண நினைச்சிருக்கார்” என்று இப்போது புரிய, இதழ்களின் புன்னகை விரிந்தது. அது முகத்தில் பட்டு கூடுதல் லாவண்யம் அவளிடம்.
அதெல்லாம் விட அவளின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடாத அவன் பண்பு பிடித்தது, மற்ற செயல்கள் அவளுக்குப் பிடிக்குமென்றும், அவனை அவளுக்குப் பிடிக்க வேண்டுமென்று செய்தாலும் கூட அவனின் சில இயல்பான குணங்கள் பிடித்துதான் போனது!
அப்படியும் சொல்ல முடியாதே! முதல் முறையே என்னை திட்டி அறைக்குள் தள்ளினார். ரொம்ப கோவம் என்று ஆராய்ந்தாள்.
அவன் பிரியம் விட அவன் நம்பிக்கை கொஞ்சம் அசைத்தது, அவனுக்காக பார்த்த பெண் நேரில் வந்து நிற்கும்போது என்ன நினைத்திருப்பான், அவன் ஊர்மி ஊர்மி என்று உரிமை பாராட்டியது இப்போது நினைவில் வந்தது.
அன்றைய ஜெய் மனநிலை நினைத்தவளுக்கு பாவமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. எனக்கு அவனை யாரென்றே தெரியாது, அவனோ என்னை மனைவியாக போகிறவள் என பார்த்திருக்கிறான்.
“பாவம்! அய்யோ” என்று நினைக்க நினைக்க புன்னகை விரிந்து சின்ன சிரிப்பாக மாறியது. தேவதை கதை கேட்டவளுக்கு தேவதை நீயென்றால்?! அந்தவுணர்வை கொடுத்திருந்தான் ஜெய்.
அவன் தன்னிடம் அதனை பகிர்ந்தது நினைவில் தட்டியெழுப்பினாள். கொஞ்சம் வருத்தமாக, ஆவலாக, காதலாக என்று அவன் சொன்னது ஞாபகம் வர, முகம் மொத்தமும் புன்னகை பூசியது. அன்பு அவளுக்குக் கிட்டாத ஒன்றில்லை! அன்பு நிறை உலகம் ஊர்மிளாவுடையது! ஆனால் இந்த காதல்? பிரியம்?!
அந்த வார்த்தைகள் அவள் வாழ்க்கையில் அதுவரை நுழையாதவை! புதியவை! ஜெய் காதலிப்பது தனக்கு தெரியுமென்றதும் அவன் அதிர்ச்சி, அவன் சமாளிப்பு எல்லாம் இப்போது புரிந்தது.
ஜெயனின் சொல், செயல், அவன் பாவனை எல்லாம் எல்லாம் யோசித்தவளுக்கு சட்டென்று அது ஞாபகத்தில் வந்தது.
‘தேவிகுளத்து பொண்ணு!’ இந்த பேச்சு அவளை குழப்பியது. ஆனால் காலை ஏர்ப்போர்ட்டில் அவன் பார்த்தது, பேசியது என்று கொஞ்சம் நிதானமாக யோசிக்க, நிதானம் தவறினாள். ஜெயன் மீது பயங்கர கோபம்!
அந்த கோபத்தில் எதையும் யோசிக்காமல் சட்டென்று அவனுக்கு அழைத்தாள். அறைக்கு வந்த ஜெயன் கைகளை தலைக்குக் கொடுத்து படுத்திருக்க, அலைப்பேசி சத்தமிட எழுந்தான். ஊர்மி என்றதும் உற்சாகம் மிக
“சொல்லு ஊர்மி” என்றான் அவசரமாக.
“நான் யாரு?” என்றாள் கோபமாக. அவள் கேள்வி புரியாவிட்டாலும் குரலில் காரம் காஞ்சியிலிருந்து தேவிகுளம் வரை தெரிந்தது.
“என்னாச்சு ஊர்மி? நீ யாருன்னா?” என்று ஜெய் புரியாது கேட்டான்.
“நல்லா கேட்டுக்கோங்க, நான் காஞ்சிபுரம் ரத்னவேல் சிவகாமி பேத்தி. பிரபாகரன் ஜமுனா பொண்ணு! அக்மார்க் தமிழ் பொண்ணு!” என்றவளின் குரலில் சத்தம் குடியிருந்தது.
“ஊர்மி”
“நீங்க என்னை நினைச்சா இப்படி நினைக்கணும், உங்க இஷ்டத்துக்கு நினைப்பீங்களா?” என்று கேட்க, ஜெய்க்கு சுத்தமாக புரியவில்லை.
“ஊர்மி! உன்னை நினைக்கிறேன். அது உண்மை! ஆனா நீ என்ன சொல்ற எனக்கு புரியல”
“சன்செட் பார்க்க போனப்போ என்ன சொன்னீங்க? நீங்க லவ் பண்ற பொண்ணு மலையாளியானு கேட்டப்போ ஆமானு ஏன் சொன்னீங்க?” என்றாள் எரிச்சலாக. அவன் கொடுத்த புன்னகை மறைந்து, கண்களில் கண்ணீர் நிறைந்தது. ஏற்கனவே அத்தை தன்னை ஒதுக்கி பேசியதில் காயப்பட்டவளுக்கு, இவனும் என்னை அப்படி நினைக்கிறான் என்று புரிய அவ்வளவு கோபம்.
ஊர்மிளாவின் குரல் கமற, ஜெய்க்கு கஷ்டமாக இருந்தது.
“ஊர்மி, அது நீ தீடீர்னு கேட்கவும் அப்படி சொல்லிட்டேன்.”
“ஏன் தமிழ் நாட்டு பொண்ணுனு சொல்லியிருந்தா, தமிழ் நாட்டுல நான் ஒருத்திதான் பொண்ணா? தமிழ் பொண்ணுனு சொல்லியிருந்தா நான் என்னை நினைச்சிருப்பேனா?” என்றாள் கடுப்பாக.
“எனக்குப் பிடிச்ச தமிழ் பொண்ணு நீதானே?” அவன் ரசனையாக அப்போதும் சொல்ல, ஊர்மிளாவின் உள்ளக்கிடக்கை உணரவில்லை.
“என்னை வெறுப்பேத்தாதீங்க! நீங்க மட்டும் எங்க தாத்தா ஊரு, அது இதுன்னு என்ன என்ன பேசுனீங்க? உங்களுக்கு மட்டும் ஃபீலிங்க்ஸ் இருக்குமா? எனக்கு இருக்காதா? நீங்க சொன்னதை இப்போ யோசிச்சா எனக்கு எவ்வளவு ஹர்ட் ஆகுது தெரியுமா?” கண்ணீரோடு அவள் கேட்கவும் ஜெய் தலையில் கை வைத்தான்.
இப்போது எல்லாம் புரிந்தது, ராஜீவனின் மகளாக நான் அவளை பார்க்கிறேன் என்று நினைத்துவிட்டாள்.
“ஊர்மி! சத்தியமா சொல்றேன் முதன்முதலா உன்னை பார்த்தப்போ என் அப்பா எனக்குப் பார்த்த பொண்ணாதான் பார்த்தேன். அப்புறம் தானே எனக்கு விஷயம் தெரியும்! அன்னிக்கு நான் தீடீர்னு கேட்கவும் ஏதோ சமாளிக்க சொல்லிட்டேன். ப்ளீஸ் அழாத!” என்று தவிக்க ஊர்மிளாவிடம் அமைதி.
“எப்பவும் மறக்கக் கூடாது! என்னை தேவிகுளம் பொண்ணு எல்லாம் சொல்லக் கூடாது, உங்க ஃபீலிங்க்ஸ் ஆஃப் தேவிகுளம், உங்களுக்குப் பிடிச்ச லாலேட்டன், உங்க புட்டு, கடலைகறி எல்லாம் நீங்க வச்சிக்கணும். புரிஞ்சதா?” ஊர்மிளா கொஞ்சம் இயல்புக்கு மீண்டு கேட்டாள். ஜெயனுக்கு அவள் மனது புரிந்தது, அவளின் அத்தனை வருட அடையாளம், அதனை எப்படி இழப்பாள்.
இப்போதும் அவனுக்கு ராஜீவன் மகள் பிரபாகரனிடம் வளர்கிறாள் என்று தெரியுமே தவிர வேறெதுவும் அவனுக்குத் தெரியாது. அப்படியிருக்க அந்த விஷயத்தில் இவன் பேச ஒன்றுமில்லை. ஊர்மிளாவை அவன் பிரபாகரனின் மகளாகத்தான் பார்க்க வேண்டும் என்று மட்டும் தெளிவாக புரிந்தது.
“நீ தேவிகுளம் பொண்ணா வர வேண்டாம், மருமக பொண்ணா வரியா? எனக்குப் பிடிச்ச லாலேட்டன், புட்டு, கடலை கறி எல்லாம் எங்கிட்ட இருக்கு! எனக்குப் பிடிச்ச காஞ்சிபுரம் பொண்ணு எப்போ எங்கிட்ட வரப்போறா?” நேரிடையாக கேட்டான்.
ஊர்மிளா ஏதோ கோபத்தில் அழைத்துவிட்டாள்.
ஜெயன் மீது காதல் எதுவும் இல்லை அக்கணம்! ஆனால் அவன் தன்னை நினைப்பது பிடித்தது, அவன் காதல் பிடித்தது. அந்த காதலாக அவள் இருப்பது பிடித்தது.
எதிர்காலமோ எதிர்கொள்ளப்போவதோ எதுவும் அவள் எண்ணத்தில் இல்லை. இயல்பான பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவனை நோக்கி அவளை ஈர்த்தது.
“சொல்லு ஊர்மி! உன் தாத்தா ரத்னவேல் கிட்ட வந்து கேட்கணுமா? இல்லை உங்கப்பா பிரபாகரன் கிட்ட வந்து கேட்கணுமா? யாரை ஈசியா கரெக்ட் பண்ணலாம் சொல்லேன்” ஜெய் கேட்ட தோரணையில் ஊர்மிளாவுக்கு சிரிப்பு வர, அந்த சிரிப்பின் சத்தம் ஜெயனையும் தொட்டது.
“ஹலோ! நான் முதல்ல உங்களுக்குப் பார்த்த பொண்ணே இல்லை தெரியுமா? என்னமோ ரொம்ப உரிமையா கேட்குறீங்க?” ஊர்மிளா உண்மையை சொல்ல
“உன் மாமனார் வேற அடிக்கடி அதை சொல்லி என்னை இம்சை பண்றார், நீயுமா? சரி விடு. கல்யாணம் பண்ணி காதலிக்கலாம் நினைச்சேன், இப்போ காதலிச்சு கல்யாணம் பண்ணுவோமா?” என்று அவளிடம் கேட்டான்.
ஊர்மிளாவுக்கு அவன் பேச்சு ஆச்சரியம் கொடுத்தது. பின்னே அவளிடம் தன் மனதை சொல்லும் முன்னே அவ்வளவு ஆவலாக காதல் பேசியவன். இப்போது பேசாமல் இருப்பானா?
“ஜெய், காதல் கல்யாணம் இதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை. இப்ப யோசிக்கிற மைண்ட்செட்டும் இல்லை.” ஊர்மிளா அவள் மனதை சொல்ல
“காதல் கல்யாணம் எல்லாம் உன் மைண்ட் யோசிக்கலன்னா பரவாயில்லை. ஜெய்ச்சந்திரனை மட்டும் யோசி!” என்றதும் ஊர்மிளாவுக்கு சிரிப்பு.
“பார்க்கலாம் பார்க்கலாம்”
“பார்க்கணும்தான், கண்ணுக்குள்ள நிக்கிற நீ”
“உங்க ஊர் குளிர விட உங்க பேச்சு ரொம்ப குளிருதே! காலையிலதான் நான் இங்க வந்தேன். எவ்வளவு வேகம்?” என்று ஊர்மி கிண்டலாகக் கேட்டாலும், தனக்கான அவன் தேடலை ரசித்தாள்.
“எண்டே அம்மோ! இது வேகமா? கிட்ட தட்ட ஒரு மாசமா உன்னை தெரியும், காலையிலதான் கஷ்டப்பட்டு தைரியம் வந்து உங்கிட்ட சொன்னேன். உனக்கு எங்க என் கஷ்டம் தெரிய போகுது” ஜெய் புலம்பினான்.
“ஜெய்! ப்ளீஸ் எனக்கு டைம் வேணும்”
“ஓகே ஊர்மி! எனக்கு இப்போ ஒன்னு மட்டும் சொல்லு, அன்னிக்கு என் மனசுல இருக்க பொண்ணு லக்கி சொன்ன இல்ல, நீதான் அந்த பொன்ணுனு தெரிஞ்ச பின்னாடி என்ன தோணுது உனக்கு?”
“உங்களுக்கு நோ சொல்லக்கூடாது தோணுது” ஊர்மிளா மனது சொன்னதை மறைக்காமல் அவனிடம் பகிர
“எஸ்” என்று ஜெய் சந்தோஷமாகக் கத்த
“எஸ் எல்லாம் நான் மட்டும் சொல்லக்கூடாது! சொல்ல மாட்டேன். எங்க தாத்தாவுக்கு, என் அப்பாம்மாவுக்கு, எல்லாருக்கும் உங்களை பிடிக்கணும். எனக்கும் இன்னும் எஸ் சொல்லணும் தோணல. அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க! காலையில காதல் சொல்லி, சாயங்காலம் ரிசல்ட் கேட்கக் கூடாது!” ஊர்மிளா கண்டிப்பாக சொல்ல
“ஹாஹா! அது ஒரு எக்சைட்மெண்ட்! நீ பொறுமையா என்னை யோசிச்சே சொல்லு.” என்று ஜெயனும் ஒத்துக்கொண்டான்.
“ஓகே! நான் வைக்கிறேன்” என்றதும்
“அதுக்குள்ளவா?”
“நான் உங்க மேல கோவத்துல கால் பண்ணினேன். என்னமோ ஆசையில கூப்பிட்ட மாதிரி ரொம்ப பில்டப்”
“கோவமா, அதெல்லாம் மறந்திடு!”
“மறந்திடவா?”
“கோவத்தை மட்டும்!” என்றான் அழுத்தமாக.
“எனக்கு தூக்கம் வருது, பை” என்று ஊர்மிளா சட்டென்று வைத்துவிட்டாள். அவன் மனதின் வேகம் தாங்கவில்லை.
ஜெயனுக்கு முகமெல்லாம் விகசித்தது. உற்சாகத்தில் விசில் அடித்தவன் அப்படியே கட்டிலில் சந்தோஷமாக சாய்ந்தான். இருவாரங்கள் வேகமாக ஓடிவிட்டன. அதுவரை ஊர்மிளாவை அழைக்காதவன் அன்று அழைத்தான்.
ஊர்மிளாவுக்கு ஜெயனின் நினைவு அடிக்கடி வரும். ஆனால் அவனோடானா வாழ்க்கை, அதெல்லாம் இன்னும் யோசிக்கவில்லை. இவன் அவசரம் கோபம் தர
“ஒரு மாசம் கூட வெயிட் பண்ண முடியாதா ஜெய்?” என்றாள் கடுப்பாக. எடுத்தவுடன் அவள் கத்த ஜெயன் மனம் சுணங்கினாலும்
“அவங்க கல்யாணத்துக்கு நான் ஏன் வரணும்? நான் சொன்னது மறந்துட்டீங்களா?”
“உன்னையும் மறக்கல, நீ சொன்னதும் மறக்கல. எனக்கு உன்னை பார்க்கணும், அதுக்குக் கூப்பிட்டேன், அப்படியே திருவோணம் வருது. எங்க ஊருக்கு வா ஊர்மி, பார்க்காம பேசாம எப்படி என்னை உனக்கு பிடிக்கும்? இப்படி எதாவது காரணம் வேண்டாமா” என்று கேட்க, ஊர்மிளாவிற்கு அவன் சொல்வதன் தீவிரம் புரிந்தது.
தேவிகுளம் செல்ல அவளுக்கு விருப்பமில்லை. அதே நேரம் ஜெய்யை பார்க்க மனதில் ஆவல் இருந்தது.
“நான் யோசிச்சு சொல்றேன்” ஊர்மிளா மெல்ல சொல்ல
“நான் வேணும்னா மாமாவை கேட்கவா?” என்றதும்
“ஜெய்ய்ய்! முதல்ல நான் யோசிக்கணும்.” என்ற ஊர்மிளாவுக்கு வீட்டினரை நினைத்து யோசனை. ஜெய்யை எந்தளவு எனக்குப் பிடிக்கும்? என்ற எண்ணம் ஆட்டியது.