ஜெய் ஊர்மிளாவிடம் அப்படி அதிரடியாக நடப்பான் என்று பாலச்சந்திரனும் வினயனும் எதிர்ப்பார்க்கவில்லை. ஊர்மிளா ஏற்கனவே மன வேதனையில் இருக்க, இவன் செயல் இன்னும் கோபம் கொள்ள வைத்தது.
“அங்கிள்! கதவை திறங்க!” என்று கத்தினாள்.
பாலச்சந்திரன் மகனிடம், “டேய் ஜெய்! என்னடா இதெல்லாம்? இப்படி செய்யாத, தள்ளு!” என்று கதவை திறக்க முன்னே வர
“திறந்து விடுங்கப்பா! இவ போய் அச்சச்சன்ட்ட எல்லாம் சொல்லுவா, விஜயனுக்கும் பிந்துவுக்கும் கல்யாணம் நடந்த மாதிரிதான்! ஒரு விஷயம் செய்ற முன்னாடி யோசிக்க மாட்டீங்களா? இப்போ இந்த பொண்ணும் அவசரப்பட்டு பேசி இன்னும் பெரிய பிரச்சனை ஆகும்” என்றவன் கைகளைக் கட்டிக்கொண்டு அப்பாவை பார்த்தான்.
“அடே! ராஜீவனுக்குப் பொண்ணு இருக்கிற விஷயமே எனக்கு நேத்து வரைக்கும் தெரியாதுடா, சத்தியம்டா மோனே!” என்று பாலச்சந்திரன் சொல்ல,
ஊர்மிளா அறைக்குள் இருந்து கத்தியவள், கதவை தட்டினாள். அவள் வேகமாக தட்ட, அந்த சத்தம் ஜெய்க்கு உவப்பாக இல்லை.
கோபத்துடன் கதவை திறக்க, ஊர்மிளா அதனை எதிர்ப்பார்க்கவில்லை. இரண்டடி பின்னே வைத்தாள்.
“என்ன இப்போ?” என்று ஜெய் அதட்ட, ஊர்மிளாவின் கண்கள் கலங்கின. பாலச்சந்திரன் மகனை பின்னே தள்ளி ஊர்மியின் முன் நின்றார்.
“உனக்கு அங்கிள் பொறுமையா எல்லாம் சொல்றேன் டா மோளே, ப்ளீஸ். அங்கிள் உன்னை ஏமாத்தல! என் புள்ளைங்க மேல சத்தியமா ராஜீவனுக்குப் பொண்ணு இருக்கிறது எனக்கு தெரியாது. அந்த ராஸ்கல் சொல்லவே இல்லைடா, அவனுக்கு அதுக்கு காரணமிருக்கு! அது தெரியாம நான் இங்க சில வேலை பண்ணிட்டேன். கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேளும்மா, உன் அப்பாவுக்கு சான்ஸ் கொடுப்ப தானே? இந்த அங்கிளுக்கும் சான்ஸ் கொடுடாம்மா” என்று அவளிடம் பொறுமையாகக் கேட்க, அமைதியாக தலையசைத்தாள். அவளுக்குப் பேசவே முடியவில்லை.
இரண்டே நாளில் எல்லாம் மாறிய உணர்வு, இருபத்து நான்கு வருட வாழ்வே பொய் போன்ற நிலை! ஊர்மிளாவின் மென்மனம் கனத்தும், கலைத்தும் போயிருந்தது. அவள் மெல்ல தலையசைத்ததே பாலச்சந்திரனுக்குப் போதுமானதாக இருந்தது.
“நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்மா! இவன் செஞ்சதுக்கு சாரி! நம்ம சாப்பிட்டு அப்புறம் பேசலாம்” என்றவர் அறையை விட்டு செல்ல,
ஜெய்யும் மெல்ல “சாரி!” என்றான். ஊர்மிளா அவனை முறைக்க, ஜெய் விழிகளில் சுவாரசியம்! அந்த முறைப்பை ரசித்து அவனும் அப்பாவின் பின் சென்றான்.
கதவை சாற்றிய ஊர்மிளாவிற்கு இரண்டு நாள் முன் நிகழ்ந்தவை எல்லாம் மனதில் ஓடியது.
************
‘காஞ்சிபுரத்தில் இரத்னவேல் இல்லம்’
ரத்னவேலுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். மூத்தவர் கிருபாகரன், அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். அடுத்து பிரபாகரன்-ஜமுனா, அவர்களின் மகள் ஊர்மிளா. மூத்தமகள் லீலாவதிக்கு சர்வேஷ், சரண்யா என்று இருபிள்ளைகள். அடுத்த மகள் லலிதாவிற்கு மாதேஷ், மயூரி என்று இரு மக்கள்.
மூன்று பேத்திகள் இருந்தாலும் ரத்னவேலுக்கு ஊர்மிளாதான் பிரியமானவள்! அதுவும் அவரின் மகன் வழியில் அவள் ஒற்றைப் பேத்தி! மற்ற பேத்திகளுக்கு எல்லாம் செய்வார், அதில் குறையே இருக்காது! சீர், வரிசை என்று குறையின்றி செய்தாலும் முக்கியத்துவம் என்னவோ ஊர்மிக்கே. பொன், பொருள் என்பதனை விட ஊர்மிளாவிற்கான முன்னுரிமை மிக அதிகம்! அது மற்ற பேரப்பிள்ளைகளை உறுத்தும், குறிப்பாக மகள் வீட்டு பேரப்பிள்ளைகளுக்குப் பிடிக்காது.
ஊர்மிளாவின் பெரியப்பா கிருபாகரனின் பிள்ளைகள் விஷ்ணு, விஷால் இருவரும் தங்கையிடம் அன்பாகவே நடப்பார்கள். விஷ்ணு திருமணமாகி வெளி நாட்டில் வேலையில் இருக்க, விஷால் டெல்லியில் படிக்கிறான், இப்போது வீட்டில் ஊர்மிளா மட்டுமே!
ஊர்மிளாவின் பெரிய அத்தை லீலாவதியின் மகன் ‘சர்வேஷ்’. ரத்னவேலின் பேரன், ரத்னவேலை பொருத்தவரை ஊர்மிளாவிற்கு வசதியான இடம் விட, பேத்திக்கு மகிழ்ச்சியான இடத்தில் வரன் அமைய வேண்டும் என்று நினைத்தார். கட்சியின் முக்கிய தலைவரின் பேரனுக்கு வரன் பார்க்கிறார்கள், இவரின் வசதிக்கு நிச்சயம் அங்கே சம்மந்தம் செய்யலாம், நாளை அந்த தலைவரின் பேரன் அமைச்சர் கூட ஆகலாம். ஆனாலும் தன் காமாட்சியை அப்படி யாரின் வீட்டிற்கோ அனுப்ப ரத்னவேலுக்கு இஷ்டமில்லை.
ஊர்மிளா அவர்கள் வீட்டின் பட்டாம்பூச்சி!! அந்த பட்டாம்பூச்சியின் சிறகை வெட்டாது பறக்கவிட வேண்டும், அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் ஒருவன் வேண்டும். தன் பெண் வீடு, தன் பேரன் என்றால் பேத்தி நலமாக இருப்பாள் என்று நினைத்தார். சர்வேஷ் நல்லவன், இப்போது சொந்தமாக இண்டீரியர் டெகரேட் செய்து கொடுக்கும் நிறுவனம் வைத்துள்ளான். ஊர்மிளாவுக்கு அவனே பொருத்தமாக இருப்பான் என்று நினைத்த ரத்னவேல் கிருபாகரனுக்கு அழைத்தார். பெரிய மகனிடம் கருத்து கேட்க,
அவர் உற்சாகமாக, “சந்தோஷமான விஷயம்பா! ஊர்மிளாவ தெரியாத இடத்துல கொடுக்கிறதை விட, நம்ம சர்வான்னா அவளை நல்லா பார்த்துப்பான். லீலா ரொம்ப சந்தோஷப்படுவா” என்றார் தங்கைக்கும் சேர்த்து. அடுத்து பிரபாகரனிடம் கேட்க அவர் ஊர்மிளாவின் இஷ்டம் என்றுவிட்டார். ஊர்மிளாவை கேட்க அவளுக்கு தாத்தாவின் முடிவை மறுக்க முடியவில்லை.
அதே நேரம், “நான் சர்வா மாமாவை அப்படி பார்த்ததில்லை தாத்தா!” என்று முகம் சுருக்கி சொல்ல,
“அதுக்கென்ன பாப்பா? உன் முறைப்பையன் தானே அவன்? அந்த பய உன்னை நல்லா வைச்சுப்பான். எதாவது வம்பு பண்ணினா கூட அவன் சட்டையைப் பிடிக்கலாம். தெரியாத இடத்துல உன்னை கொடுத்து வயசான காலத்துல இந்த கிழவனுக்குக் கஷ்டம் டா” என்றார் தாத்தா.
ஊர்மிளா யோசித்து பார்க்க, அவளுக்கு சர்வேஷை பிடிக்கும். ஆனால் கணவனாக அப்படி நினைக்க முடியவில்லை. தாத்தா இப்படி பேச, சரி அவர் இஷ்டம் என்று விட்டாள்.
“சரி தாத்தா! சர்வேஷ் மாமாவுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே!” என்று ஊர்மிளா சம்மதம் கொடுத்துவிட, உடனே மகளையும் மருமகனையும் அழைத்து பேசினார் ரத்னவேல். லீலாவதிக்கும் அவர் கணவர் கண்ணனுக்கும் மிகவும் சந்தோஷம். அவர்கள் சர்வேஷையும் அழைத்து வந்திருக்க, அவனை சம்மதம் கேட்க
ஊர்மிளாவை ஒரு நிமிடம் ஏறிட்டு பார்த்தவன், பெருமூச்சோடு, “இல்லை தாத்தா, எனக்கு இஷ்டமில்லை” என்றான் திடமாக. ஊர்மிளாவின் முகம் ஒரு நொடி வாடியது, இதுவரை அவளிடம் யாரும் காதல் சொல்லியதில்லை, சொல்லும் அளவு அவளை யாரும் நெருங்கவிட்டதில்லை அவளின் அண்ணன்கள். முதல் முறை திருமண பேச்சு, அது உடனே தடைபட ஒரு சின்ன சுணக்கம். அது முகத்தில் பிரதிபலித்தது, மற்றபடி அவளுக்கும் சிறு திருப்தி மனதில். சர்வேஷை பிடித்தாலும், அத்தை மகனாக மட்டும்தானே?
பேத்தியின் முகம் பார்த்த ரத்னவேல், அவள் மனதில் ஓடியதை கணிக்கவில்லை. அதைவிட யாருமே அங்கே சர்வேஷின் மறுப்பை எதிர்ப்பார்க்கவில்லை. ஊர்மிளா ரத்னவேல் வீட்டின் ஒரே பெண் வாரிசு, அவளை திருமணம் செய்தால் எல்லா வகையிலும் நன்மை. ஊர்மிளாவும் நல்ல பெண்! அதனால் லீலாவதி மகனை முறைத்தார். ஊர்மிளாவை திருமணம் செய்தால் சர்வேஷுக்கு இன்னும் முக்கியத்துவம் கிடைக்கும். வீட்டு மாப்பிள்ளை என்ற முறையில் குடும்ப தொழிலிலும் பங்கு வரும், அண்ணன் மகள் மருமகள் என்றால் அது தனி தானே?
“சர்வா யோசிச்சு சொல்லு, தாத்தா கேட்டா இப்படி உடனே மறுத்து பேசுவியா?” என்று அவன் அப்பா கேட்க
“என் பேத்தியைக் கட்டிக்க கசக்குதா உனக்கு?” என்று ரத்னவேல் கோபமாகக் கேட்டார். எல்லாரும் எதிர்ப்பார்த்ததுதான். மிகப்பெரிய இடங்களில் இருந்து சம்மந்தம் காத்திருக்க, இந்த சிறு பையன் என் முடிவை மறுப்பானா? என் பேத்தியை வேண்டாம் என்பானா?
“என் வீட்டு காமாட்சியைக் கட்டிக்க கசக்குதா உன் பையனுக்கு?” என்று மகளிடம் சத்தம் போட்டார்.