“அச்சம்மா!” என்று புன்னகையோடு ஜெயன் வாசலில் நின்றவரை அழைக்க
“வாடா ஜெயா! சாயா குடிக்கிறியா?” என்று அச்சம்மா கேட்டார்.
“குடிச்சிட்டேன் அச்சம்மா, அச்சச்சன் கூப்பிட்டார். அதான் வந்தேன்” என்றதும் அவர் அறையில் இருப்பதாக அச்சம்மா சொல்ல, ஜெயனும் அச்சுதன் அறைவாயிலில் நின்று அழைக்க உள்ளே வர சொன்னார். அச்சுதன் தீவிர யோசனையில் கட்டிலில் உட்கார்ந்திருக்க
“சொல்லுங்க அச்சச்சா” என்று அவர் முன் நின்றான் ஜெய்ச்சந்திரன்.
“ஜெய், யாரானுடா ஊர்மிளா?” என்று கேட்க
“அச்சச்சா!” என்று ஜெயனுக்கு சட்டென்று ஒரு தயக்கம்.
“ஊர்மிளா நான் கல்யாண பண்ண போற பொண்ணு அச்சச்சா” என்றதும்
“என்னை உன் அச்சச்சனா நினைக்கிறது உண்மைனா ஊர்மிளா யார்னு சொல்லு? இப்போ வந்த ராஜீவனுக்கு எப்படி ஊர்மிளாவை தெரியும்? காஞ்சிபுரத்துல இருக்க பொண்ணு ஏன் என் அம்மா மாதிரி இருக்கா? உங்கப்பனை முதல் நாள்ல இருந்து கேட்கிறேன், அவன் எங்கிட்ட சொல்லல, என் மகனை கூட நான் கேட்கல, நீ சொல்லுடா!” என்று அழுத்தி கேட்டார்.
“அந்த பொண்ணு என் அம்மா மாதிரி இருக்கானு உன்னி கூட சொல்லிட்டு போறான், சத்தியம் பறைடா ஜெய்! நீ எங்கிட்ட உண்மை சொல்லுவனு நம்பி கேட்கிறேன்.” என்று அவனை தீர்க்கமாய்ப் பார்த்து கேட்க, ஜெயனுக்கு அச்சுதன் நேரடியாகக் கேட்கும்போது பொய்யுரைக்க முடியவில்லை.
“ஊர்மிளா உங்க பேத்திதான் அச்சச்சா! ராஜீவன் மாமா பொண்ணு ஊர்மிளா, பிந்து இல்லை!” என்றதும் அச்சுதனுக்கு ஏற்கனவே இப்படி இருக்கலாம் என்று தெரிந்தாலும், அது ஜெயன் சொல்லி கேட்க அதிர்ந்தார்.
“அப்போ பொய் சொல்லியிருக்க” என்று அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க,
“இல்ல அச்சச்சா!” என்று மறுத்தவன் எல்லா உண்மையும் சொல்லிவிட்டான். எல்லாம் கேட்ட அச்சுதனுக்கு மனது தாளவே இல்லை. மகன், பெயரன், பாலச்சந்திரன், ஜெயன் யாரும் தன்னிடம் உண்மையாக இல்லை, தன்னையும் தன் மனைவியையும் ஏமாற்றியிருக்கின்றனர் என்று புரிய தாங்க முடியாத வேதனையைத் தாங்கினார் மனிதர்.
ஜெயனுக்கு இத்தனை நாள் அவரிடம் உண்மையை மறைத்தோமே என்று குற்றவுணர்வு. அவன் அமைதியாக நிற்க,
“அவன் பொண்ணு யார்னு தெரிஞ்சிக்கிற உரிமை கூட எங்களுக்கு இல்லையாடா?” என்றவர் கண்கள் கலங்கியிருக்க ஜெயனுக்கு அச்சச்சனை அப்படி பார்க்க முடியவில்லை.
“இல்ல அச்சச்சா! அப்பாவுக்கு அவருக்குப் பொண்ணு இருக்குனு தெரியாது..”
“பேசாதடா நீ! என் ஜெயன் எங்கிட்ட சொல்லியிருக்கணும்தானே? உங்கச்சன் அவன் ப்ரண்டுக்காக மறைச்சான், நீ? விஜயன் மறைச்சது கூட விடுடா! அவன் சின்னப்பையன், நீயும் பாலாவும் மறைச்சிட்டீங்களே, பெத்த புள்ளையே எங்களை நினைக்கல” என்றவர் கோபத்துடன் எழுந்தார். அவர் வேகமாக அறையை விட்டு வெளியேற, ஜெய் பதறி அவர் பின் போக இவர்கள் வேகமாக செல்வதை கண்டு அச்சம்மா பதறி மகளையும் பேரனையும் அழைத்தார்.
ஜெயன் அவர் பின்னே ஓட, விஜயனும் ஏதோ பிரச்சனை என்று போக, பெண்கள் மூவரும் வீட்டில் இருந்தனர்.
“ஜெயேட்டா என்னாச்சு?” என்று விஜயன் கேட்க,
“வாடா நீ வேற” என்று கத்திய ஜெய் அச்சுதனை சமாதானம் செய்ய நினைக்க, அவரோ இவனை கண்டுகொள்ளாது பாலாவின் வீட்டில் நின்றார்.
“எந்தா அச்சா?” என்று ராஜீவன் அப்பாவை பார்த்து கேட்க, ஊர்மிளா அப்போதுதான் வினயன் தந்த காஃபியைப் பருகியபடி உட்கார்ந்தவள் நிமிர்ந்தாள்.
மகன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாது ஊர்மிளாவை பார்த்த அச்சுதன்,
“இவனுக்குத்தான் உண்மையை சொல்ல மனசு வரல, உனக்கும் வரலயாம்மா? உனக்கு உன் அச்சச்சனை, அச்சம்மாவை பார்க்கணும் இஷ்டமில்லையா?” என்று அச்சுதன் கேட்க, ராஜீவனும் ஊர்மிளாவும் அதிர்ந்தனர். பாலச்சந்திரன் அதை விட அதிர்ந்தார்.
“அச்சா?” என்று பாலா பேச
“நீ பேசாதடா பாலா! ஏண்டா ராஜீவா பெத்த பொண்ணை கூட வளர்க்க முடியாம யார்கிட்டயோ தூக்கிக் கொடுத்திருக்க, நீயெல்லாம் ஒரு மனுஷனா?” என்று கேட்க, ராஜீவனுக்கு அந்த வார்த்தைகள் வலி கொடுக்க, அமைதியாக நின்றார். விஜயனோ அச்சுதனுக்கு உண்மை தெரிந்ததே என்று பயத்தில் நின்றான்.
“அச்சா! என்ன நடந்தது தெரியாம பேசாதீங்க, அன்னிக்கு அவன் இருந்த சூழ்நிலை வேற” என்று பாலா நண்பனுக்காக பேச, அது இன்னும் அச்சுதனை கோபப்படுத்தியது.
“என்ன நடந்தா என்னடா? இத்தனை வருஷம் கழிச்சு நீ இவன் பொண்ணுன்னு அழைச்சிட்டு வந்தப்ப நாங்க ஏத்துக்கிட்டோம்தானே? ஆனா இவன் என் வீட்டுப்பொண்ணை, என் பேத்தியை யாரோ ஒருத்தர்கிட்ட கொடுத்துட்டான்.”
“இவன் பொண்ணு யார்னு தெரிஞ்சிக்கிற உரிமை கூட இல்லையா? அப்படி என்னடா பண்ணிட்டோம் நாங்க? இவன் காதலுக்கு ஒத்துக்கலனு எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுப்பானா?” என்று கேட்க, எதற்கும் ராஜீவன் பதில் பேசவில்லை. இறுக்கமாகவே நிற்க,
“பேசுடா! பதில் பேசு!” என்று அச்சுதன் ராஜீவனின் சட்டையைப் பற்ற
“அச்சச்சா!” என்று ஜெயனும் வினயனும் தடுக்க
“நீங்க பேசாதீங்கடா!” என்று அதட்டியவர் “ஏடா தெம்மாடி! காதலிச்சு கல்யாணம் பண்ணினா போதுமா? பெத்தவங்களைத்தான் இத்தன வருஷம் பார்க்கல, பெத்த பொண்ணை கூட வளர்க்கல, நீயெல்லாம் ஒரு அச்சனா?” என்று ஆத்திரத்தில் கத்தியவர் ராஜீவன் பேசாது இருக்க, உச்சக்கட்ட கோபத்தில் ராஜீவனை அறைந்தார். ராஜீவன் கசங்கிய முகத்தோடு நிற்க,
“பேசுடா” என்று அவர் வயதை மீறி கத்தினார் அச்சுதன்.
“நிறுத்துங்க!” என்று கத்தினாள் ஊர்மிளா.
“அச்சா!” என்று பாலாவும் கத்தினார்.
அவர்கள் போட்ட சத்தத்தில் அச்சுதன் கை மகனின் சட்டையில் இருந்து இறங்க, ஊர்மிளா ராஜீவன் அருகே வந்து நின்றாள். கலங்கிய கண்களோடு அச்சுதனை பார்த்தவள்,
“இவரை இதுக்கு மேல பேசுனீங்க அவ்வளவுதான்! எந்த உரிமையில என்னை பேத்தி சொல்றீங்க? நான் உங்க பேத்தி கிடையாது!” என்று ஊர்மிளா கோபத்தில் பேச
“ஊர்மி பேசாத!” ஜெயன் அவளை அடக்க, அவள் கேட்கவில்லை.
நண்பன் இரவெல்லாம் அவ்வளவு வேதனையில் புலம்பியிருக்க, பாலச்சந்திரனுக்கு அடித்தது அச்சனாக இருந்தாலும் பொறுக்கவில்லை.
“என்ன பண்றீங்க அச்சா! வாழ வேண்டிய வயசுல மனைவியை இழந்துட்டு இத்தன வருஷம் வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நிக்கிறான். இன்னும் அவனை காயப்படுத்துவீங்களா?” என்று கேட்க
“ஏடா பாலா! இவன் இப்படினு எங்ககிட்ட சொல்லியிருக்கலாமேடா, அப்படியென்ன பிடிவாதம்? நானும் இவன் அம்மாவும் எத்தன வருஷம் கஷ்டப்பட்டிருப்போம்” என்று தவிப்போடு கேட்டவர்
“என் பேத்தி யாரையோ தாத்தானு சொல்றா, எங்களை விடு. இவளை வளர்க்கிறது இவன் கடமை தானே? அது கூட இவன் செய்யலயே” என்றதும் ராஜீவனுக்குக் குற்றவுணர்வு அழுத்த, கண்கள் சிவந்தன. அந்த தோற்றம் ஊர்மிளாவால் தாங்க முடியவில்லை.
“போதும் நிறுத்துங்க! யார் யாருக்குப் பேத்தி? என்னை பெத்தவங்களை வேண்டாம் சொல்லிட்டு என் மேல மட்டும் என்ன உரிமை உங்களுக்கு? நல்லா கேட்டுக்கோங்க நான் காஞ்சிபுரம் ரத்னவேல் பேத்தி! அப்புறம் இவருக்கு மட்டும்தான் என் மேல உரிமை இருக்கு, அவர் பொண்ணு நான்! உங்களை விட இவர் நல்ல அப்பாதான்! நான் எதுக்கும் கஷ்டப்படக் கூடாதுனு இவர் கஷ்டப்படுறார்!” என்று அழுகையுடன் ஊர்மிளா சொல்ல
“ஊர்மிளா பெரியவங்க கிட்ட என்ன பேசுற?” என்று ஜெயன் அதட்டினான். அச்சுதனை ஊர்மிளா பேசுவதை அவனால் பொறுக்கமுடியவில்லை.
“ஊர்மி அழாதம்மா” என்று ராஜீவன் மகளை தேற்ற, அவரை முறைத்தாள்.
“இவ்வளவு நேரம் பேசாம இருந்தீங்க இல்ல, இப்பவும் அப்படியே இருங்க” என்றாள் ஆத்திரமாக.
“அச்சா! நீங்க நினைக்கிற மாதிரி இல்ல… எனக்கு அப்போ..” என்று ராஜீவன் தொடங்க, ஊர்மிளாவுக்கு அச்சுதன் ராஜீவனை நடத்திய விதம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. மனதுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அவளுக்கு அச்சுதன் என்பவர் யாரோ தான், ராஜீவன் மீது அப்பா என்று தெரியும் முன்னே அவளுக்கிருந்த பாசம் இப்போது அதிகமாகியிருக்கிறது அவ்வளவுதான்! அவள் ராஜீவன் அங்கிளை பேசினாலே கேட்கத்தான் செய்வாள்.
“நீங்க பேசாதீங்க, என் விஷயத்துல என்ன செஞ்சாலும் அதுக்கு நீங்க எனக்குப் பதில் சொன்னா போதும், வேற யாருக்கும் உங்கப்பாவா இருந்தாலும் சொல்ல தேவையில்லை!” என்றாள் கோபமாக. ஊர்மிளாவுக்கு இவ்வளவு கோபம் வரும் என்று ஜெயனுக்குத் தெரியவில்லை. அவளுக்கே தெரியாது!
“அப்போ உனக்கும் உன் பொண்ணுக்கும் நாங்க வேண்டாமாடா?” மகனை பார்த்து அச்சுதன் ஆற்றாமையுடன் கேட்க
“அச்சா! என்ன பேசுறீங்க? நம்ம அப்புறம் பேசலாம்” என்று ராஜீவன் சொல்ல, ஊர்மிளாவோ பொறுக்கவில்லை.
“எப்பவும் உங்களுக்கு எங்கிட்ட ரைட்ஸ் இல்லை!” என்றாள் பட்டென்று. ராஜீவனின் காதலை ஏற்கவில்லை, இப்போது பேத்தி மீது மட்டும் என்ன உரிமை? என்று ஊர்மிளாவுக்கு உள்ளம் கொதித்தது.
“ஊர்மிளா! அச்சச்சனை இப்படி பேச மட்டும் உனக்கு ரைட்ஸ் இருக்கா?” என்றான் ஜெயன் குரல் உயர்த்தி.
“விடுடா! ஜெய்! என் மகனே எங்கிட்ட உண்மை சொல்லல, அந்தளவு அவன் பொண்ணு யார்னு கூட சொல்லாத அளவு எங்களை வெறுத்துட்டான், இதோ நிக்கிறானே பாலா.. என் புள்ளைக்கு அப்புறம் இவந்தான் என்னை பார்த்தான், இவனே மறைச்சிட்டான்! நீயே நான் கேட்கலன்னா சொல்லியிருக்க மாட்டதானே ஜெய்.. போதும்டா இந்த வயசுக்கு எனக்கு அளவுக்கு மீறி சந்தோஷம் கொடுத்திட்டீங்க” என்று கலங்கிய குரலில் சொன்னவர் வீட்டை விட்டு வெளியேற, எல்லாரும் அதிர்ந்து நிற்க, விஜயன் அவர் பின்னே செல்ல பாலச்சந்திரன் மகனிடம்
“நீதான் அச்சன் கிட்ட சொன்னியா ஜெய்?” என்று கேட்க அவன் தலையசைக்க, பாலச்சந்திரனுக்கு நண்பனுக்குக் கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாத கோபம், ஆதங்கம். பட்டென்று மகனை கை நீட்டிவிட்டார். ஜெயன் அதிர்ந்து நிற்க, ஊர்மிளாவுக்கு ஜெய் தன்னை அச்சுதனிடம் பேத்தி என்றதில் அவ்வளவு வருத்தம்.
வேகமாக அவன் அருகே வந்தவள், “உங்களை எங்க வீட்ல இருக்க எல்லாருக்கும் பிடிக்கணும் நினைச்சேன். ஆனா நீங்க என்னை என் குடும்பத்துகிட்ட இருந்து பிரிக்க நினைச்சிருக்கீங்க, எத்தன முறை நான் சொல்லியிருக்கேன், நான் அவர் பேத்தி இல்லனு, இல்லை ஜெய் இனி ஒன்னுமே இல்லை! ” என்று கலங்கிய குரலில் சொன்ன ஊர்மிளா, தேவிகுளத்தை விட்டு காஞ்சிபுரம் கிளம்பினாள்.
ஜெயனின் காதல் வேண்டும் என்று அதனோடு வீட்டிற்கு செல்ல நினைத்தவள், ஜெயனை விட்டும் அவன் தந்த பிரியங்களை அவனோடு விட்டு… அவள் மட்டும் போனாள். அவனை வேண்டாமென்று போனாள்!