ஜெய் வேலைகள் முடிந்து அரக்கபறம்பில் வீடு சென்று அச்சுதனிடம் பேசிவிட்டு அவர்கள் தென்னந்தோப்புக்கு வந்தான். பாலாவும் வினயனும் வேலையாக சென்றிருக்க, ராஜீவன் அந்த தோப்பில் இருக்கும் சிறு குளத்தின் அருகே இருந்த கல் மேடையில் உட்கார்ந்தபடி நீரினை பார்த்தார். நேற்றிலிருந்து ஜெயனிடம் பேச நினைக்க, நேரம் கிடைக்கவில்லை.
ஊர்மிளாவை நினைத்து கவலையாக இருந்தது, கூடவே அந்த ஊர் அவரின் ஞாபகங்களை அதிகமாகத் தூண்டிவிட்டது. மனைவியை மறக்காதவர் தான்! அதே நேரம் வேலையில் இருக்கும்போது நாடும், வீரர்களும் மட்டுமே முக்கியமாக இருப்பார்கள். இங்கோ அவர் இழந்தது மட்டுமே கண்முன் நிற்க, கல் மேடையில் கையை ஊன்றி அமைதியாக நீரினை பார்த்தார். சுற்றி தென்னை மரங்களும் இன்னும் சில செடிகள், மரங்கள் இருக்க காற்று உடலை தொட்டு சென்றது.
ஜெய் ஜீப்பில் வந்து இறங்கியவன், அங்கு சுற்றிப்பார்த்தான். குளமருகே ஆள் இருப்பது தெரிய, யார் என்று அறிய நெருங்கினான். ராஜீவனை கண்டதும் அவரருகே வந்தவன்
“என்ன மாமா இங்க தனியா இருக்கீங்க?” என்று கேட்டான்.
“பாலா வீட்ல இல்ல, சும்மா அப்படியே நடந்து வந்தேன்” என்றவர் ஜெயனிடம் பேச நினைக்க, அதற்குள் அவனே தொடங்கினான்.
“ஓஹ்! நானும் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன் மாமா” என்றதும் அவருக்குப் புரிந்தது.
“ஜெய்! இதை நான் போன முறை வந்தப்பவே சொல்லிட்டேன். ஊர்மிளாவோட உன் கல்யாணம் நடக்கிறது கஷ்டம், எனக்கு உரிமை இல்லைனாலும் கடமை இருக்கு இல்லையா? அதை விட எனக்கு என் பொண்ணு எதுக்கும் கஷ்டப்படக்கூடாது, இந்த காதல் எதுவும் வேண்டாம். அதுவும் உன்னோட கண்டிப்பா வேண்டாம்!” என்றார் அழுத்தமாக.
ஜெயனுக்கு இதுதான் பிடிக்கவில்லை. அதை அப்படியே அவன் முகம் காட்டியது. காற்றில் பறந்த வேட்டியைக் கையால் இழுத்துப் பிடித்தவன், அவரை பார்த்தபடி குளத்தின் அருகே இருந்த வரப்பில் உட்கார்ந்தான்.
“எனக்கு எங்கப்பா இப்படி சொல்றத விட நீங்க சொல்லும்போதுதான் மாமா வருத்தமா இருக்கு” என்றான்.
“ஜெய், நீ கஷ்டப்படக்கூடாதுனும் எனக்கு எண்ணமிருக்கு” என்றதும் ஜெய் மறுப்பாக தலையசைத்தான்.
“இந்த லவ்’ன்ற வார்த்தையை நான் எப்போ முதல்தடவ கேட்டேன் தெரியுமா? ஒரு அஞ்சாறு வயசு இருக்கும். சொல்லப்போனா உங்களால தான் முதல் தடவ கேட்டேன், அச்சம்மா அவங்க பையனை பத்தி பேசுறப்போ அச்சச்சனுக்கும் அவங்களுக்கும் சண்டை வரும். அப்போ எல்லாரும் பேசிப்பாங்க, அச்சச்சன் பையன் லவ் பண்ணி வீட்டை விட்டு போய்ட்டார்னு. அப்போ நான் நினைச்சதில்லை, எனக்குப் பிடிக்காத ராஜீவன் மாமா பொண்ணை எனக்குப் பிடிக்கும்னு” என்றதும் ராஜீவன் ஆச்சரியமாக அவனை பார்த்தார்.
“எனக்கு அச்சச்சனை ரொம்ப பிடிக்கும், அவர் உங்களை எப்பவும் திட்டுவார். அவரையும் அச்சம்மாவையும் அழ வச்சுட்டுப் போனவரை எனக்கு எப்படி பிடிக்கும் சொல்லுங்க?” என்று அவரிடம் கேட்டவன்
“காதலிச்ச மனைவி இறந்த பின்னாடியும், அவங்களை மட்டுமே நினைச்சுட்டு இருக்கிற நீங்க, என் விருப்பத்துக்கு மறுப்பு சொல்றது எனக்கு வருத்தமாவும் கோபமாவும் இருக்கு மாமா” என்ற ஜெயனின் உணர்வுகள் அவன் வார்த்தைகளில் அப்பட்டமாக தெரிந்தது.
“ஜெய், நான் காதலுக்கு மறுப்பு சொல்றவன் இல்லை” என்று ராஜீவன் மறுத்து சொல்ல
“இல்லை ஜெய்! அவ என்னோட பொண்ணா மட்டும் இருந்தா, பாலாவோட பையனுக்குக் கட்டிக் கொடுக்கிறதுல எனக்கு எந்த மறுப்பும் இருந்திருக்காது. இப்போ அப்படியில்லை!”
“உங்க காதலுக்கு என் அப்பா, உங்க அப்பா யாரும் ஹெல்ப் பண்ணல. எல்லாரும் எதிர்த்தாங்க. நீங்களும் எனக்கு அதையே பண்றீங்க” என்று குற்றம் சாட்டியவன்
“ப்ரகடியர் ராஜீவனா யோசிக்காம உங்க ப்ளஸீயோட ராஜீவனை யோசிங்க மாமா! என் அப்பாவுக்கு இந்த ஃபீலிங்க்ஸை எல்லாம் எனக்குப் புரியவைக்க முடியாது. ஆனா உங்களுக்குப் புரியும் தானே?” என்று அவர் முகம் பார்த்தான்.
ப்ளஸியின் ராஜீவன் என்ற வார்த்தை ராஜீவன் முகத்தை மென்மையாக்கியது. மெல்ல புன்னகை உதயமாக, அதை பார்த்த ஜெய்க்குக் கடுப்பு.
“ராஜீவனுக்குப் ப்ளஸீ மாதிரி, ஜெய்க்கு ஊர்மி” என்றதும் அதுவரை மென்மையாக இருந்த ராஜீவன் முகம் இறுக்கமானது.
“ஷட் அப் ஜெய்! நீ ராஜீவனாவும் இருக்க வேண்டாம், என் ஊர்மி ப்ளஸியாவும் இருக்க வேண்டாம்” என்றவர் கண்கள் சிவந்தன.
“என் பொண்ணுக்கு எல்லா சந்தோஷமும் ஆயுசும் கிடைக்கணும். நீ..நீயும் நல்லா இருக்கணும்” என்றார் குரல் கமற.
“மாமா! நான் உங்களுக்குப் புரியணும்னு” என்று ஜெய் சொல்ல வர, ராஜீவன் அவன் கையைப் பிடித்துத் தடுத்தார்.
“எனக்குப் புரியுது ஜெய்! ஆனா ஊர்மிளாவுக்கு உன்னை பிடிச்சாலும் அவ தாத்தாவும் பிரபாவும் ஒத்துக்க மாட்டாங்க! இது உன்னால கிடையாது, என்னால. நீ என் நண்பன் பொண்ணு, தேவிகுளத்துக்குக்காரன்’ ன்ற ரீசன் போதும்! பிரபா அப்பாவுக்கு உண்மை தெரிஞ்சப்ப கூட என் பேத்தினு தான் சொன்னார், ஊர்மி என்னை பார்க்க வந்தது கூட அவருக்குப் பிடிக்கல. அப்படியிருக்கப்போ எப்படி உன்னோட காதல் நிறைவேறும்?” என்று ராஜீவன் ஜெய் மீதான அக்கறையில் கேட்டார். அது அவனுக்கும் புரிந்தது.
“ஊர்மிளாவை இத்தன வருஷம் வளர்த்தவங்க, அவங்களை காயப்படுத்திட்டு ஊர்மி வர மாட்டா! உன்னால அவளுக்குத் தேவையில்லாத கஷ்டம் வேணுமா? ஏற்கனவே என்னால என் பொண்ணு அழுதுட்டா!” என்று ராஜீவன் வருத்தமாக சொல்ல
“உங்களோட எண்ணம் எனக்குப் புரியுது மாமா, என்னோட எண்ணத்தை ஏன் யோசிக்காம நிராகரிக்குறீங்க? உங்க கல்யாணம் எல்லார் சம்மதத்தோட நடந்ததா? ப்ளஸீ அத்தை அவங்க வீட்டை விட்டு வந்தப்போ இதெல்லாம் நீங்க யோசிச்சீங்களா? உங்க காதலுக்காக நீங்க வீட்ல போராடினீங்க, சண்டை போட்டீங்க! உங்க காதலுக்கு மதம் குறுக்க நின்னா, எனக்கு மனுஷங்க!”
“எல்லாம் விடுங்க மாமா, ப்ளஸி அத்த இல்லனாலும் அவங்க பெயரை சொன்னா கூட உங்க முகமே மாறிடுதே? ஊர்மி மேல எனக்கு அந்தளவு எல்லாம் காதல் இல்லை, உயிரைக் கொடுக்கிற நேசம் அதெல்லாம் நாங்க சேர்ந்து வாழ்ந்தா வரும். இப்போ எனக்கு அவ மேல விருப்பமிருக்கு, அவளை பார்த்த பார்வையில வேற யாரையும் பார்க்க முடியல. நான் சொல்ல வரது உங்களுக்குப் புரியுது நினைக்கிறேன்!” என்றவன் பெருமூச்சுடன்
“பதினெட்டு வயசுல உங்க ப்ளஸீயைப் பார்த்து பிடிச்சு காதலிச்சு சண்டை போட்டு கல்யாணம் செஞ்சு வாழ்ந்தீங்க. இப்ப ஐம்பது வயசுல கூட உங்களை வாழ வைக்கிறது அந்த காதல் தானே? எனக்கு இருபத்தாறு முடிஞ்சிடுச்சு மாமா, அஞ்சு வருஷமா என் அப்பாவோட பிஸ்னஸ் பார்க்கிறேன். எமொஷன்ஸை மட்டும் வச்சு பிஸினஸ் செய்ய முடியாது, ஆனா எமொஷன்ஸும் முக்கியம்தானே? என்னை மட்டும் ஈசியா ஊர்மிளாவை மறந்திடு, விட்டுடு சொல்றீங்க? உங்க காதலை சொல்ல, பகிர வாய்ப்பு கிடைச்சது, எனக்கு அதுவுமில்லை.”
“நான் சில விஷயங்களை ரொம்ப நம்புவேன் மாமா, கடவுள் நம்பிக்கையும் அதிகம்! எங்கப்பா மிஸ்டேக்கா அனுப்பின ஃபோட்டோ ஏன் உங்க பொண்ணா இருக்கணும்? அவ ஏன் என்னை நேர்ல பார்க்கணும்? எனக்கு பிடிச்ச அச்சச்சன் பேத்தியா இருக்கணும்? சில நேரம் தோணும் நான் முட்டாள்த்தனமா யோசிக்கிறேனு, ஆனாலும் நமக்கு ஒருத்தரை பிடிச்சிட்டா, நமக்கு இன்னும் அவங்களை பிடிக்கவும் மத்தவங்களுக்கு அதை ஒத்துக்க வைக்கவும் மனசு காரணம் தேடுறது இயல்புதானே?”
“என் விருப்பத்தை சொல்லும்போதே நீங்க, என் அப்பா எல்லாம் உடனே வேண்டாம்னு சொல்றப்ப எனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு. எந்த விஷயத்துல பிரச்சனை வரது இல்லை? ஒருவேளை ஊர்மிளாவுக்கு என்னை பிடிச்சா அதுக்காக போராட வேண்டியது எங்க இரண்டு பேர் சம்மந்ததப்பட்டது. என் வாழ்க்கை, என் ஆசை! என்னை தவிர எல்லாரும் முடிவு எடுக்குறீங்க? நியாயமா மாமா இதெல்லாம்? நீங்க சோல்ஜர்தானே? போர்னா ஃபைட் பண்ணனும் தானே? நான் ஊர்மிகிட்ட இப்போதான் ப்ரோபோஸ் பண்ணியிருக்கேன், அவ சொல்லட்டும் நான் வேணும் வேண்டாம்னு” என்றதும் ராஜீவனின் விழிகள் அதிர்வில் விரிந்தன.
“அவ ரிஜெக்ட் பண்ணினா, நான் பார்த்துக்கிறேன். நீங்களும் என் அப்பாவும் முதல்ல ஊர்மியோட தாத்தா, பிரபாகரன் மாமான்னு என்னை டென்ஷன் பண்ணாதீங்க! அவங்களையும் நான் ஃபேஸ் பண்ணிக்குறேன்” என்றான் திடமாக.
ஜெயச்சந்திரன் அவன் அப்பாவிடம் கூட இத்தனை ஆழமாய் அவன் மனதின் நிலையைப் பகிரவில்லை. ராஜீவன் காதலித்தவர், இன்னும் மனைவியை காதலிக்கிறவர், அவரின் மறுப்பு ஆற்றாமையை ஆதங்கத்தை தர அவன் மனதை சொல்லிவிட்டான்.
ராஜீவனுக்கு ஜெயன் பேசியது அத்தனையும் நியாயமாகவே பட்டது. ஒருவேளை ஊர்மிளாவுக்கு ஜெயனை பிடித்தால்? இப்படி யோசிக்கும்போதே அவர் மனதில் சந்தோஷமும் சஞ்சலமும் சேர்ந்தே சங்கமித்தது. தன் மகளை நேசிக்கும் ஒருவன், மகளுக்குப் பிடித்த ஒருவனோடு திருமணம் என்பது சந்தோசம் என்றாலும் அவள் அதற்காக எதையும் இழப்பதை அவர் விரும்பவில்லை. அவ இல்லாம நான் இல்லை, உயிராக நேசிக்கிறேன் என்றாலும் சொல்லாது இயல்பாக அவன் பேசியது பிடித்தது.
ஜெயனை அதுவரை பாலாவின் மகனாக பிடிக்கும், நண்பனின் மகன் என்ற பாசம். இப்போதோ ஜெய் என்ற தனி மனிதனை பிடித்தது!
ராஜீவனுக்குப் பாலா தன் மீது வைத்திருக்கும் பாசம் தெரியுமே? மாறாத குறையாத பிரியம், அதே பிரியத்தை என் மகள் மீது இவன் வைத்தால்??
இந்த எண்ணம் இன்னும் புன்னகை கொடுத்தது.
“நீ இந்த விஷயத்துல எல்லாம் உன் அப்பா மாதிரி இருக்க, விரட்டி விரட்டி பாசம் காட்டுறது! ஆனா என்ன பாலா நான் சொன்னா கேட்பான்” சிரித்தபடி சொன்னார்.
“ஊர்மிளா உனக்கு ஓகே சொல்லுவாளா?” என்று ராஜீவன் அவனை கேட்க
“சொன்னா நல்லாயிருக்கும்! சொல்லுவானு ஒரு நம்பிக்கை இருக்கு மாமா, ராஜீவன் ப்ளஸி பொண்ணாச்சே? லவ் இல்லாம இருப்பாளா?” என்று கேட்டான்.
ஜெய் அப்படி சொல்ல, ராஜீவன் புன்னகை விரிய தன் இடக்கன்னத்தை தேய்த்தார்.
“ப்ளஸிகிட்ட ஃப்ர்ஸ்ட் டைம் ப்ரோபோஸ் பண்ணினப்போ பளார்னு ஒன்னு விட்டா” என்றார் சிரிப்போடு.
ராஜீவனுக்கு எப்படி ஜெய்யைப் புரிந்ததோ அது போல ஜெயனுக்கும் ராஜீவனை புரிந்தது. முன்பு ராஜீவன் மீது கோபம் இருந்தது, இப்போது அவரின் நியாயமும் புரிந்தது, பிரியம் அவரின் பக்கத்தையும் பார்க்க வைத்தது. ராஜீவன் சொல்லவும் ஜெய்யின் விழிகள் விரிந்து அதிர, அவன் பாவனையில் ராஜீவன் சிரிக்க, ஜெய்க்கும் ராஜீவன் அடி வாங்கியது கற்பனையில் விரிய சிரித்துவிட்டான்.
“ஊர்மி என்னை அடிக்கல, யோசிக்கிறேன் சொல்லிட்டா மாமா. அப்போ உங்களை விட எனக்கு சான்ஸ் அதிகம் அல்லே?” என்று அவரிடமே கேட்க,
“கொச்சு கள்ளன்!” என்று ராஜீவன் அவன் தோளில் தட்டினார். மெல்ல எழுந்தவர்
“ஊர்மியோட எந்த விஷயத்துலயும் நான் முடிவெடுத்ததில்லை ஜெய். இந்த விஷயத்துலையும் அப்படியே இருக்கலாம் முடிவு பண்ணிட்டேன்! பிரபாவுக்கும் ஜமுனாவுக்கும் தெரியும் ஊர்மிக்கு எது நல்லதுனு, அப்படியே ஊர்மிக்கு உன்னை பிடிச்சா அவளே உனக்காக பேசுவா! பிரபாவும் சரி அவன் அப்பாவும் சரி அவங்களுக்கும் ஊர்மிளாவோட சந்தோஷம்தான் முக்கியம். ஐ ஹோப் தி பெஸ்ட் ஃபார் யூ மோனே!” என்றார் ஆத்மார்த்தமாக.
அவருக்கு நிலைக்காத நீடிக்காத பிரியமான வாழ்க்கை, மகளுக்குக் கிட்டிட வேண்டும் என்ற ஆவல் மட்டுமே அவருக்கு.
“நான் உங்களுக்குப் ப்ராமிஸ் பண்றேன் மாமா, நிச்சயம் பிரபா மாமாவுக்கும் ஊர்மி தாத்தாவுக்கும் விருப்பமில்லாம நான் எதுவும் செய்ய மாட்டேன். எனக்கு ஊர்மி மட்டுமில்ல, அவ சொந்தமும் வேணும்!” என்றவனை மிகவும் பிடித்த போதும் பாலாவை போல் இவன் இவ்வளவு நம்பிக்கை வைக்கிறானே, எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற பயமும் பிரிகடியரை ஆட்கொண்டது.
மாலை நிறைந்து இரவும் தொடங்கிவிட, மழைத்தூறல் அவர்களை நனைக்க
“வாங்க மாமா, வீட்டுக்குப் போகலாம்” என்று ஜெய் அழைக்க, இருவரும் ஜீப்பில் சென்று வீட்டில் இறங்க அவர்கள் இருவரையும் ஒன்றாய்ப் பார்த்த பாலச்சந்திரன் அதிர்ந்தார். ஜெய் ஜீப்பை ஷெட்டில் விட, ராஜீவன் இறங்கியவர் பாலாவிடம்
“எந்தாடா? ஷாக் ஆகி நிக்கிற?” என்று கேட்டார்.
“இல்லை, ஜெய்யோட வந்திருக்க” என்றார்.
“ஏன் அவனோட வந்தா என்ன?” என்று கேட்டவர் கிண்டல் குரலில்
“ஏடா பாலா! நினக்கு எங்கனே புத்திமானாய் ஒரு மோன் உண்டாயி?”(எப்படி உனக்கு ஒரு புத்திசாலி மகன்?) என்றதும் பாலா நண்பனின் முதுகில் அடிக்க, ஜெய் இதனை பார்த்து சிரித்தபடி உள்ளே போனான். மழை இப்போது நன்றாக வலுக்கத் தொடங்கியிருக்க, ரொனால்டோ வீட்டுக்குள் ஓடி வந்தான். பாலாவும் ராஜீவனும் விஜயன் கல்யாண விஷயம் பேசிக்கொண்டிருக்க, வினயன் அவன் அறையில் இருந்தான்.
ஊர்மிளா முற்றத்து ஊஞ்சலில் அமர்ந்தபடி மழையை ரசித்திருக்க, ரொனால்டோ ஓடி வரவும் அவனை தடவிக்கொடுத்தாள். ஜெய் மாடியில் இருந்து இறங்கியவன் ஊர்மிளா ஊஞ்சலில் ஆடுவதைக் கண்டான்.
“என்ன பூனைக்குட்டி நாயைக் கொஞ்சுது?” என்று கேட்க, ரொனால்டோ ஊர்மிளாவை விட்டு ஜெய் அருகே வந்தது. ரொனால்டோவை அணைத்துக் கொண்ட ஜெய்யைப் பார்த்த ஊர்மிளா,
“எங்க ரோமியோ என்னை மிஸ் பண்ணுவான்” என்றாள்.
“ஓஹ், பார்த்தேன்.” என்றதும்
“எப்படி?” என்றாள்.
அந்த கேள்வியில் ஜெய்யின் முகத்தில் புன்னகை விரிந்தது. அவளை பற்றி பேசும்போதும், அவளிடம் பேசும்போதும் அவனுக்கு அலாதி சந்தோஷம்.
“எங்க அப்பா அனுப்பின ஃபோட்டோவுல நீ ரோமியோவோட தானே இருந்த?” என்றான்.
“ஓஹோ! எங்க தாத்தாவுக்கு பெட்ஸ்லாம் பிடிக்காது, ஆனா என் பெரியண்ணா கேட்டான்னு நாய்க்குட்டி வளர்க்க அலோவ் பண்ணினார், அப்புறம் பூனை எல்லாம் வளர்க்க நிறைய பேர் பிரியப்பட மாட்டாங்க. எனக்கு நாய்க்குட்டி பார்த்தா அப்போ எல்லாம் பயம், பூனைக்குட்டி புசுபுசுனு க்யூட்டா இருக்கும். எனக்காக எங்க தாத்தா ஒத்துக்கிட்டார், அவருக்கும் இப்போ ரோமியான்னா இஷ்டம்” என்றாள் ஊர்மிளா. அவளுக்குப் பிரியமானவர்களை பற்றிபேசும்போது அவள் முகம் கூடுதல் அழகாக தெரிந்தது.
மழையும் பெண்ணும் கவிதைதானே?! ஜெய்க்கு அந்த இரவின் தொடக்கம், அதோடு இணைந்த மழை, அவன் பிரியமானவள் பேச்சு எல்லாம் பிடித்தது.
தாத்தாவை பற்றி பேச ஆரம்பித்த ஊர்மி நிறுத்தவே இல்லை. அவரை பற்றி பேச, ஜெய்க்குப் புரிந்தது தாத்தா மீது அவளுக்கு எவ்வளவு பாசம், பிடித்தமென்று.
என்னையும் இவளுக்கு அது போல பிடிக்குமா, என்னை பற்றியும் இப்படி ரசித்து பேசுவாளா என்ற எண்ணங்கள் ஓடின. பிடித்தவர்களிடம் தானே பிரியமானவர்களை பற்றியும் பகிர தோன்றும்??
ஜெய்யின் இயல்பான பார்வை, கொஞ்சம் கொஞ்சமாக ரசனையாக அவதாரம் எடுக்க, ஊர்மிளா பேச்சின் இடையில் அவனை பார்க்க, அவன் பார்வை புதிதாக இருந்தது!