“ஊர்மி காலையிலயிருந்து சாப்பிடாம இருக்கா, கொஞ்சமாச்சும் உனக்குப் பொறுப்பு இருக்காடா?” என்று ரத்னவேல் கத்த, ஊர்மிக்குப் பயமாக இருந்தது. தாத்தாவுக்கு பிபி உண்டு, இதில் இப்படி கத்த
“ஹாஸ்பிட்டல்’ல படுத்துட்டு கத்தாம இரு தாத்தா” என்று தவித்தபடி ஊர்மிளா சொல்ல
“நல்லா சொல்லு இவருக்கு!” என்று அப்பாவை முறைத்தார் பிரபாகரன். ஊர்மிளாவிடம், “வாடா ஊர்மிம்மா, சாப்பிடாம ஏன் வந்த? வர வழியில சாப்பிட்டிருக்கணும் தானே?” என்று மகளை எழுப்பினார்.
“எனக்கு டென்ஷன்ல சாப்பிட முடியல” என்றதும் ரத்னவேலுக்குப் பேத்தியின் மனது புரிய, ‘என் பேத்தியை சந்தோஷமா வச்சுக்க காமாட்சி!’ என்று வேண்டுதல் வைத்தார்.
“பேசாம அழைச்சிட்டுப் போடா” என்று ரத்னவேல் மீண்டும் சொல்ல,
ஊர்மிளா, “நீங்க சாப்பிட்டீங்களாப்பா?” என்று பேசியபடி அவரோடு கேண்டீன் சென்றாள். அப்பாவும் மகளும் உண்டு முடித்து, ரத்னவேல் இருந்த பிரிவுக்கு வந்தனர். பிரபாகரன் ஜமுனாவையும், அக்காவையும் உண்ண அனுப்பி வைத்தார். டாக்டரைப் பார்க்க அவர் போக, ஊர்மிளா தாத்தாவின் அறைக்குள் போனாள்.
ஊர்மிளாவைப் பார்க்கவும் புன்னகைத்து, “சாப்பிட்டியா?” என்று கேட்க, அவள் தலையசைத்தாள்.
“என் முன்னாடி உட்கார்!” என்று ரத்னவேல் பேத்தியை முகம் பார்க்கும்படி உட்கார சொல்ல, ஊர்மிளாவும் ஸ்டூலை நகர்த்திப்போட்டு உட்கார்ந்தாள்.
“எதுக்கு நீ கேரளா போன?” என்று ரத்னவேல் ஆரம்பிக்க, அப்பாவை அம்மாவை சமாளித்தது போல் தாத்தாவிடம் முடியவில்லை. அரசியல்வாதி அல்லவா? விடாமல் கேள்வி கேட்டார்.
“ஊர் சுத்த” என்று ஊர்மிளா முயன்று சிரிக்க, ரத்னவேல் முறைத்தார்.
“இத்தன வருஷம் இல்லாம என்ன மாறிச்சுனு நீ போன?” என்று ஆற்றாமையோடு மீண்டும் கேட்க, அந்த குரலில் அவ்வளவு வருத்தம்.
“பின்ன, என்னை திட்டுட்டு சமாதானம் கூட செய்யல. அப்பாவை எல்லாரும் பார்க்கிற மாதிரி அடிச்சீங்க தாத்தா! எங்கப்பாவை அடிச்சா கஷ்டமா இருக்காதா எனக்கு?” என்றதும்
“அதுக்குப் பதில் நான் சொல்லிட்டேன்!” என்றவர் குரலை செருமி, “ஏன் பாப்பா என்ன சமாதானம் செய்யணும்? உன்னை திட்டினதே இல்லையா நான்?” என்று கேட்டார். ஊர்மிளாவுக்கு பேச முடியவில்லை. அப்படியே தாத்தா இருந்த மெத்தையில் முகம் காட்டாமல் தலை கவிழ்ந்தாள்.
ரத்னவேல் டிரிப்ஸ் ஏற்றாத இடக்கையினால் அவளின் தலையை வருடியவர், “நம்ம வீட்ல எதுவும் மாறல ஊர்மி! நான் உயிரோட இருக்கவரைக்கும் மாறாது!! எனக்கு அப்புறமும் மாறாது! நீ எதையும் யாரையும் நினைக்கக் கூடாது!” என்றார் அழுத்தமாக.
அந்த யாரையும் என்பது ‘ராஜீவன்’ என ஊர்மிளாவுக்கு சொல்லாமலே புரிந்தது.
“எனக்கு நிஜமா புரியலம்மா, யார் என்ன சொன்னாலும் சில விஷயங்கள் மாறாது இல்லையா? அப்படித்தானே இது? இதுக்கு என்ன சொல்லி சமாதானம் செய்யணும்?” என்று கேட்டார்.
ரத்னவேல் சொன்னது ஊர்மிளாவுக்குப் புரிந்தாலும், அந்த நேரம் அதனை எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. அவரின் பேத்தி என்பதை வார்த்தையால் விளக்கி வேறு சொல்ல வேண்டுமா? ஆனால் அவள் மனம்?!
அதில் ஒரு தேடல், கேள்வி எல்லாம் இருக்க இருமுக உணர்ச்சியில் தவித்தாள்.(ambivalent state)
“சாரி தாத்தா!” என்று ஊர்மிளா இப்போது நிமிர்ந்து சொல்ல,
பேத்தியை வாஞ்சையாகப் பார்த்தவர், “எப்படி களைச்சுப் போயிருக்க? நீ வீட்டுக்குப் போ ஊர்மி! டிரைவர வர சொல்லு.” என்றார்.
“உங்களோடதான் வீட்டுக்குப் போவேன், எனக்கு தேவிகுளத்திலிருந்து இங்க வர வரைக்கும் எவ்வளவு பயமா இருந்துச்சு தெரியுமா தாத்தா?” என்று ஊர்மிளா சொல்ல
“என்ன பயம்? உன்னை நல்ல இடத்துல கட்டிக்கொடுத்து, இன்னொரு குட்டி காமாட்சியை எல்லாம் பார்த்த அப்புறம்தான் நான் போவேன், உன் ஆச்சிக்கிட்ட அதுவரை பெட்டிஷன் போட்டிருக்கேன். இப்போ நான் வீட்டுக்கு வர எவ்வளவு நேரமாகுமோ? நீ கிளம்பு. ” என்றார்.
அந்த நேரம் சர்வேஷ் கதவை தட்டியபடி உள்ளே வர, ஊர்மிளாவிடம் அக்கறையாக பேசிக்கொண்டிருந்த தாத்தா கண்ணில்பட, நிச்சயம் பொறாமை, நிறைய ஏக்கம்!!
சர்வேஷ் வரவும் ஊர்மிளாவுக்கு அவ்வளவு கோபம். “நான் வெளியே இருக்கேன் தாத்தா” என்று ஊர்மிளா எழ, ஊர்மிளா வீட்டில் இல்லாதது, தாத்தாவின் உடல் நிலை எல்லாம் சர்வேஷுக்கு தன்னால் என்ற உணர்வு தந்தது. மனதுக்கு கஷ்டமாக போக,
“ஊர்மிளா, சாரி” என்று சொல்ல, ஊர்மிளா காதில் வாங்காமல் அறையை விட்டு வெளியே செல்ல, தன் காமாட்சியின் செய்கையை சிரிப்போடு பார்த்த ரத்னவேல் பேரன் பக்கம் திரும்பினார்.
“எப்படி இருக்கீங்க தாத்தா?” என்று கேட்க
“அதான் என் காமாட்சி வந்துட்டாளே! நான் நல்லா இருக்கேன்” என்று மீசையை நீவினார்.
“நான் அந்த நேரத்துல உண்மையை சொல்லியிருக்கக் கூடாது தாத்தா! மாமா மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்னு அப்புறம்தான் புரிஞ்சது, நான் யோசிக்கவே இல்லை! இப்போ மாமா எங்கிட்ட பேசவே மாட்டேங்கிறார்.” என்றான் வருத்தமாக.
அவன் பெரிய மாமா கிருபாகரன் மேல் நிறைய மரியாதை என்றால், சின்ன மாமா பிரபாகரன் மிகவும் நட்பாக நடப்பார். அவரை காயப்படுத்தியது நினைத்து மறுகியவன் மன்னிப்புக் கேட்க, பிரபாகரன் இவனை சட்டை செய்யவில்லை.
ரத்னவேல் பேரன் பேசட்டும் என்று அமைதியாக இருக்க, சர்வேஷ் அவரை கோபமாகப் பார்த்து
“அதுக்குக் காரணம் நீங்கதான்! எப்ப பாரு அவதான் உசத்தின்னா? நாங்களாம் அப்போ? சரி பேரனை விட பேத்திங்க பிடிக்கும்னா சரண்யா, மயூரி எல்லாம் பேத்திங்கதானே? எனக்கு விருப்பமில்லைனா விடாம என் பேத்தி… என் பேத்தின்னு.. அப்போ நான் யாரு?” என்றான் எரிச்சலாக.
“நீ என் பேரன் டா!” என்றார் சிரிப்போடு.
“என்ன கிண்டலா?” என்று சர்வேஷ் கடுப்பாக,
“பின்ன என்னடா? சின்ன புள்ளையா நீ? உனக்கு ஞாபகம் இருக்கா? உங்க ஆச்சி இருந்தவரைக்கும் விஷ்ணு, விஷால் விட உன்னைதான் அவ சீராட்டினா! பண்டம், பலகாரம்னா கூட உனக்குத்தான் முதல்ல! அப்போ மட்டும் இனிச்சதா ராசா?” என்று பேரனை கேட்க, அவன் ஆச்சியை மிகவும் தேடினான்.
“எங்க ஆச்சி இருந்தவரைக்கும் பாசம் கிடைச்சது..” என்று முணுமுணுக்க
“அப்புறம் நான் உன்னை அடிச்சா விரட்டினேன்? சரி நான் பிபிக்கு மாத்திரை போடுறேனே, அது பெயர் சொல்லு” என்று கேட்டார்.
“ஹா..ன்..! பிபி..” என்று சர்வேஷ் விழித்தான்.
“சர்வேஷா!! எனக்கு என் பேரப்பசங்க எல்லாரையும் பிடிக்கும்! எல்லாருக்கும் இதுவரைக்கும் நான் சமமா செஞ்சிருக்கேன். விஷ்ணு, விஷாலுக்கு கூட சொத்தோ, பணமோ நான் கொடுத்ததில்லை. உன்னை நம்பி உன் தொழிலுக்குக் கொடுத்தேன்! என் பசங்கதான் இப்போ பிஸ்னஸ் பார்க்கிறாங்க, ஆனா யாரையும் கேட்காம நான் உனக்கு செஞ்சேன்! என் பேரனுக்காக!” என்றதும் சர்வேஷ் நிமிர்ந்து பார்த்தான்.
“செய்றதுல எந்த குறையும் நீங்க வச்சதில்ல தாத்தா, பட் ஊர்மியை..?” என்று அவன் ஆரம்பிக்க
மறுப்பாக கையசைத்த ரத்னவேல், “பணத்தை சமமா பிரிச்சுக் கொடுக்கலாம்டா சர்வேஷா! பாசத்தை அப்படி கொடுக்க முடியாது, உனக்கு நாலஞ்சு ப்ரண்ட்ஸ் இருந்தாலும் ஒருத்தன் இரண்டு பேர் ரொம்ப க்ளோஸ் இல்லையா? பாசத்தை எப்படி எல்லாருக்கும் ஒரு கிலோனு அளக்க முடியுமா? எனக்கு என் பேரப்பசங்க எல்லார் மேலயும் பாசம் உண்டு, நீங்க எல்லாரும் என் மேல பாசம் வச்சிருக்கீங்க. ஆனா பாசம் வேற, அக்கறை வேற!” என்றார் அழுத்தமாக.
“என் பேத்திக்கு என்னை விட என் மாத்திரை சரியா தெரியும், நேத்து நான் ஆரணி போறதுக்கு நாலு நாள் முன்னாடியே எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டா. போன மாசம் செக் அப் போனப்போ எவ்வளவு பிபி’னு சரியா சொல்லுவா.” என்றதும்
“அவ உங்களோடவே இருக்கா” என்று இடையிட்டான். அவனுக்கு ஊர்மிளாவை கஷ்டப்படுத்திவிட்டோம் என்ற வருத்தம் இருந்தாலும், பேரனாக எனக்கு உரிமை அதிகம் என்ற உணர்வு.
“எக்கரையிலிருந்தாலும் அக்கறையா இருக்கணும்டா சர்வா! பாசம் எல்லாருக்கும் இருக்கிறது, அதைக் காட்டுறது அக்கறை! அது என் புள்ளைங்களை விட என் பேத்திக்கிட்ட அதிகம் இருக்கு. உனக்கும் என்னைக்காச்சும் என்னை புரியும்! இல்லைனாலும்… என்னடா..? எனக்கு ஊர்மிளா மேல தான் பாசம் அதிகம்!! இப்போ அதுக்கு என்னாங்குற?” என்று மீசையை நீவியபடி அவனை முறைத்தார்.
ரத்னவேல் தீவிர அரசியலில் இருந்த சமயம் அவர்களின் மற்ற பேரப்பிள்ளைகளோடு நேரம் செலவழிக்க முடிந்ததில்லை., கொஞ்சம் கொஞ்சமாக அவர் அரசியலில் இருந்து விலக, வீட்டில் இருந்தது ஊர்மிளா மட்டுமே! விஷ்ணுவும் விஷாலும் ஹாஸ்டலில் இருந்தனர், பெரிய பிள்ளைகள் எல்லாருக்கும் மீசைக்கார தாத்தா மீது பயம் இருக்க, எட்டு வயது ஊர்மிளாவுக்கு பயமில்லை. தாத்தா தாத்தா என்று சுற்றிய பட்டாம்பூச்சி, அவரின் செல்லமாகி போனாள்.
சர்வேஷ் அமைதியாக இருக்க, “என் பேத்தி நல்லாயிருக்கணும் நினைச்சேன், அவ நம்ம வீட்டு காமாட்சிடா! உன்னை நான் எவ்வளவு பெருசா நினைச்சிருந்தா, நான் பெருசா நினைக்கிற என் பேத்தியை உனக்குக் கொடுக்க நினைச்சிருப்பேன்..? உனக்கெல்லாம் அறிவில்லைடா, ஆயிரம் கசப்பு இருந்தாலும் எதிர்க்ட்சிக்காரனோட சொந்த விஷயம் நான் பேசி அரசியல் செஞ்சதில்லை! நீ உன் சொந்த தாய் மாமன், அவனுக்குப் பொறக்கலனாலும் இத்தன வருஷம் உயிர பொண்ணா வளர்க்கிறாண்டா அவன்! அவனை பத்தி கூட யோசிக்காம உண்மையைப் போட்டு உடைச்சிட்டியேடா! தப்புடா!” என்றார் வருத்தமாக.
சர்வேஷ் அதனை உணர்ந்திருந்தானே, “சாரி தாத்தா” என்றான் மீண்டும். ரத்னவேல் தலையசைத்து கண்மூடினார்.
**********************
மூணாறில் இருந்த தங்கள் ரிசார்ட்டில் இருந்தான் ஜெய்ச்சந்திரன், மணி மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் ஊர்மிளா அவனுக்கு அழைக்கவில்லை. அழைத்து பேசு என்று சொல்லி அவன் கார்ட் கொடுத்திருந்தான். ஊர்மிளா அதனை கையில் வைத்திருந்தவள், விமானத்திலியே தவறவிட்டிருந்தாள்.
அவன் அறையின் ஸ்க்ரீனை திறந்திவிட, அந்த கண்ணாடி வழியே வெளியே சுற்றிலும் பசுமை. தூரத்தில் உயரமான மலைகள், தேயிலை தோட்டங்கள் எங்கும்! இடுக்கிக்குரிய இதமான வானிலை, ஈரமான காற்று!
எல்லாம் ரசிக்கும்படி இருந்தது, ஆனாலும் ஜெய்ச்சந்திரன் மனது ஊர்மிளாவை தேடியது. அந்த உயரமான மலைக்கு அழைத்து சென்று அவளோடு சூர்யோதயம் பார்க்க வேண்டும். கைகோர்த்து சூர்யன் மறைவதை அந்த பாறைகளில் உட்கார்ந்து பார்த்து, கதைகள் சொல்ல வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு ஆவல்கள் வளர்ந்தன!
ஊர்மிளா ஏன் ஊருக்கு வந்தாள் என்று தெரியவில்லை, காஞ்சியில் என்ன பிரச்சனை..? இப்போது உண்மை தெரிந்தது என்றால் எவ்வளவு உடைந்து போயிருப்பாள், அப்படியா வளர்த்த பெண்ணை அனுப்புவார்கள் என்று யாரென்றே தெரியாதவர்கள் மீது ஊர்மிக்காக இவன் கோபப்பட்டான்.
போனாளா இல்லையா? பிரச்சனையா என்று தவித்தவன் உடனே அவளுக்கு அழைத்தான்.
அம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டிருக்க, கண்மூடி இருக்கையில் சாய்ந்திருந்தாள் ஊர்மிளா. அரை உறக்கத்தில் இருக்க, ஜெய்யின் அழைப்பு.
“ஹலோ..” ஊர்மிளா உறக்கத்தில் பேச
“ரீச் ஆகிட்டியா ஊர்மி? தாத்தா எப்படி இருக்கார்?” என்று ஜெய் கேட்டான்.
“நீங்க?” என்றவளுக்கு யார் என தெரியவில்லை.
“நான் ஜெய்.. ஜெய்ச்சந்திரன்..” என்றான். அவளுக்கு பாலச்சந்திரனை தெரிந்தது, இவன் பெயர் எல்லாம் சத்தியமாகப் பதியவில்லை.
“ஒருத்தன் ஏர்ப்போர்ட்ல விட்டு போனானே, ரீச் ஆகிட்டு பேச சொன்னானேனு உனக்கு ஞாபகமிருக்கா ஊர்மிளா? பேஸீக் கர்டஸி கூட இல்லை” என்று கடுப்பானவனுக்குப் பேச பிடிக்கவில்லை.
நான் இவளை நினைத்து இருக்க, இவள் என்னை சாதாரணமாக கூட நினைக்கவில்லை என்று புரிய, சட்டென்று போனை கட் செய்தான்.
ஊர்மிளாவுக்கு அப்போதுதான் தேவிகுளமே நினைவில் வந்தது. தலையில் தட்டிக்கொள்ள, அந்த நேரம் டாக்டர் வர, ஜெய்யை மறந்தே போனாள் ஊர்மிளா.
ஜெய் கோபத்தில் இருக்க, ஷஜி பாவம் அந்த நேரம் உள்ளே வந்தான்.
“ஜெயேட்டா! லாலேட்டண்ட படம் ரீலிஸ்.. நமக்கு இன்னு போகாம்? (நம்ம இன்னிக்குப் போகலாமா?) ” என்று உற்சாகமாகக் கேட்க
“நினக்கிப்போல் எந்தானு வேண்டதுடா ?(உனக்கு இப்போ என்ன வேணும்டா)” என்று கத்தினான் ஜெய்.
ஜெய் கோபமாக இருப்பதுணர்ந்து, “யான் பின்னே வராம் ஏட்டா!( நான் அப்புறம் வரேன்)” என்று ஷஜி அலுவலக அறையை விட்டு வெளியே வர
“எந்தாடா ஷஜி? பார்த்துவா” என்று அவர் மீது மோதியவனை பிடித்தார் பாலச்சந்திரன்.
“டேய் வினயா! இவன் மேல உள்ள கோவத்தை நம்ம மேல காட்டிட்டா என்ன செய்றது?” என்று சந்தேகம் கேட்க, அவனோ கிண்டல் சிரிப்போடு
“சின்ன திருத்தம்! அவன் உங்க மேல உள்ள கோவத்தை கூட ஷஜி மேல காட்டியிருக்கலாம் டாடி” என்று ராகமிழுத்தான்.
“அடப்பாவி! அன்னிக்கு விஜயனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு, இன்னிக்கு உங்க மேல கோவம்’ ன்னு பிரிச்சு பேசுற. பட்டி!” என்று வினயை தோளில் அடித்தார். வினயன் சிரிக்க,
“வாடா சீக்கிரம்! அவன் போன் செஞ்சாலும் எடுக்க மாட்டேங்கிறான், இவங்கிட்ட விசயத்தை சொல்லாம என்னால இருக்க முடியாது” என்ற பாலச்சந்திரன் மகன் அறைக்கதவை தட்ட,
“எந்தாடா??” என்று ஜெயேட்டனின் சத்தத்தில் பாலச்சந்திரன் ஜெர்க் ஆகி வினயன் மீது மோதினார். அப்பாவை நமட்டு சிரிப்போடு பிடித்த வினய்,
“ஜெயேட்டா! ஷஜி இல்ல, நானும் அப்பாவும்” என்று சொல்ல
“வாங்க” என்றான். இவர்கள் கதவை திறந்து அவன் முன்னால் இருந்த இருக்கையில் உட்கார்ந்தனர்.
“என்னப்பா?” என்றான் இருவரையும் பார்த்து.
“அது ஜெய்… ராஜீவன் ஊர்மிளா இங்க வருவானு சொல்லி, எனக்கு அவ போட்டோவும் போன் நம்பரும் அனுப்பினான். அன்னிக்குப் பொண்ணு வீட்டுக்காரங்களும் போட்டோ அனுப்பினாங்க.. அக்சுவலி ஊர்மிளா நேத்து வருவானு தெரியாது. ஊர்மிளாவை பிக் அப் பண்ண, இவனுக்கு அனுப்ப வேண்டிய ஃபோட்டோவை உனக்கும், உனக்கு அனுப்ப வேண்டிய பொண்ணு ஃபோட்டோவை இவனுக்கும் ஏதோ டென்ஷன்ல மாத்தி அனுப்பிட்டேண்டா” என்றார் வேகமாக.
ஜெய் அதிரவெல்லாம் இல்லை. இயல்பாக இருக்கையில் பின்னால் சாய்ந்து , கைகளை கோர்த்து தலைக்குப் பின்னால் கட்டிக்கொண்டவன்
“நீ காலையில சொல்லவும்தான் எனக்கு புரிஞ்சது ஜெய், உனக்கு பொண்ணு போட்டோ இப்போ அனுப்புறேன், கன்ஃயூஷனுக்கு சாரி” என்று மன்னிப்புக் கேட்க
“பரவாயில்லைப்பா! நேத்து ஊர்மிக்கு என்னை தெரியாதப்பவே எனக்கு டவுட், நைட் ஊர்மிளாவோட நீங்க பேசின அப்புறம் எனக்கே ஏதோ மிஸ்டேக்னு புரிஞ்சது” என்று சொல்ல பாலச்சந்திரன் அப்போதுதான் நிம்மதியானார். அதே நிம்மதியோடு சின்னவனை பார்க்க, ஜெய் அடுத்து சொல்லியதில் பதறி எழுந்தார்.