“நீங்க தூங்காம என்ன பண்றீங்கப்பா?” என்று பிரபாகரன் அப்பாவை கேட்டார்.
ரத்னவேல் பதில் சொல்லாமல், பேத்தியை எட்டிப்பார்த்துவிட்டு ஹாலுக்கு சென்றார். அப்பாவும் மகனும் அமைதியாக உட்கார்ந்தனர்.
“ஜமுனாவுக்கு டெலிவரில நிறைய காம்ப்ளிகேஷன், சொன்ன டேட் முன்னாடியே பெயின் வந்துடுச்சு. குழந்தை அவ வயித்துலயே… ..போயிடுச்சு..” என்று வேதனையாக சொன்ன மகனின் கையைத் தட்டிக்கொடுத்தார் ரத்னவேல். இத்தனை வருடம் கழித்து, அப்பாவிடம் இதனை பகிர தைரியம் வந்தது போல… என்று ரத்னவேல் நினைத்தாலும் மகனை குறுக்கீடாமல் கேட்டார்.
“ஜமுனாவுக்கு இன்னொரு குழந்தை பொறக்க வாய்ப்பில்லைனு சொல்லிட்டாங்க! குழந்தை இறந்தது, அவ ஹெல்த் கண்டிஷன், மறுபடி கன்சீவ் ஆக வாய்ப்பில்லைனு எங்களுக்கு எல்லாமே அதிர்ச்சி! எதையும் யோசிக்கவே முடியல… நீங்களும் டெலிவரி டேட் வரலைனு எங்களை ரொம்ப கேட்கல.. உங்க கிட்ட பொய் சொல்லி சமாளிச்சோம். அடுத்த வாரத்துல ராஜீவன் மனைவி ப்ளஸீ ப்ரசவத்துல இறந்துட்டா, ரொம்ப நல்ல பொண்ணு.. ப்ச்.. ராஜீவன் மனைவி இறந்த அதிர்ச்சி தாங்காம நின்னப்போ… என் பொண்ணு ஊர்மியை எங்கிட்டதான் முதல்ல கொடுத்தாங்கப்பா!” என்றபோது இன்றுதான் மகளை வாங்கியது போல பூரித்து, கலங்கி தன் கைகளைப் பார்த்தபடி சொன்னார் பிரபாகரன்.
“ராஜீவன் ப்ளஸியை நினைச்சு துக்கத்துல இருந்தான். ஒரு வாரமும் ஊர்மியை ஜமுனாதான் பார்த்தா. எங்களுக்கு அவளை வளர்க்கிறது வித்தியாசமே தெரியல, அப்புறம் ராஜீவன் என்ன நினைச்சான் தெரியல, ஊர்மிளாவை எங்ககிட்டயே கொடுத்துட்டான்!”
“இந்த விஷயம் எப்பவும் என் பொண்ணுக்குத் தெரியவே கூடாது நினைச்சேன்பா, முதல்’ல ஜமுனாவுக்காக உண்மையை மறைச்சேன்! அம்மா அவளை எதுவும் சொல்லிட கூடாது நினைச்சேன். ஆனா ஊர்மி, அவ என் உயிர்ப்பா! என் பொண்ணு என்னோட பொண்ணா இருக்கணும்னு எனக்கு ஆசை! சுய நலம்னு தெரியும்… ஆனா… எனக்கு ஊர்மி விஷயத்துல அப்படிதான்பா இருக்க முடியுது” என்றார் தன்னை நொந்தவராக.
“இப்போ ஏண்டா வருத்தப்படுற? என் பேத்தி எப்பவும் உன்னைதான் அப்பாவா நினைப்பா! ரொம்ப யோசிக்காத” என்று ரத்னவேல் மகன் முதுகில் தட்டிக்கொடுத்தார்.
“இந்த விஷயத்தை நீ முன்னாடி சொல்லியிருந்தா என்ன சொல்லியிருப்பேன்… தெரியல.. இப்போ அவ என் பேத்தி! இத்தன வருஷத்துக்கு அப்புறம் கூட சொல்லணும்னு உனக்குத் தோணலையாடா? என் பேத்தியை அப்படியா நான் ஒதுக்கிடுவேன்.. அன்னிக்கு சர்வேஷ் சொன்னப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? முன்னாடியே தெரிஞ்சிருந்தா… கூட எனக்கு மனசு ஆறியிருக்கும்! இப்ப கூட என் பேத்திக்காக உன்னை விடுறேன்” என்றார் கொஞ்சம் கோபமாகவே.
“அந்த சர்வேஷ்… அவனை பத்தி பேசாதீங்கப்பா” என்றார் மிகுந்த ஆத்திரத்தோடு.
“டேய் பிரபா! அவன் சின்ன பையண்டா, எப்பவோ உண்மை தெரிஞ்சிருந்தா கூட சொல்லாம இருந்திருக்கான்… அவனுக்கு நான் அவனை முக்கியமா நினைக்கலனு கோவம், விடுடா!” என்று சொல்ல பிரபாகரனின் கோபம் தணியவில்லை.
“என்னடா?” என்று ரத்னவேல் கேட்க
“தெரியலப்பா! மனசுக்குக் கஷ்டமா இருக்கு, என் பொண்ணு அன்னிக்கு அழுத அழுகை எனக்கு மறக்கவே முடியலப்பா! ராஜீவன் கூட பேசணும்னு ஊர்மி அடம்பிடிச்சா.. உங்களுக்கு முடியலனு திரும்பி வந்துட்டா! மறுபடி கேட்டிருவாளோனு பயமா இருக்கு!” என்று குழப்பத்திலும் தந்தையென்ற தவிப்பிலும் மகனின் வார்த்தைகள் வர, தந்தையாக அவரை புரிந்துகொண்டார் ரத்னவேல்.
“ஊர்மி இனி அந்த பேச்சை எடுக்க மாட்டா! நீ மனசை போட்டு குழப்பாத! அவ எப்பவும் ரத்னவேல் பேத்திடா!” என்று மீசையை நீவி சொன்னதும் பிரபாகரன் முறைத்தார்.
“அவங்க எல்லாம் ஊர்மியை வேற மாதிரி டிரிட் பண்ணக்கூடாதுனுதான் நான் உண்மையை சொல்லலப்பா!” என்று பிரபாகரன் வேதனையோடு சொன்னார். அவரின் பட்டாம்பூச்சி தோட்டத்தில் சர்வேஷ் போட்ட சரவெடி, நிம்மதியை பறித்திருந்தது.
“என்ன பேசுறடா நீ? கிருபாவுக்கு ஊர்மி மேல நிறைய பாசம், நாளைக்கு நமக்கு அப்புறம் விஷ்ணுவும் விஷாலும் அவளை பார்க்கணும். சர்வேஷ் அன்னிக்கு சொன்ன மாதிரி, திடீர்னு உண்மை தெரிஞ்சா… என்ன நினைப்பாங்க? உண்மையை மறைச்சா கோவம்தான் வரும், சொன்னா புரிஞ்சிப்பாங்க.எனக்குத் தெரியும், நான் பார்த்துக்கிறேன்! நம்ம வீட்ல ஒன்னும் மாறல, நீ இப்படி முகத்தை வச்சிருந்தா என் பேத்தி வருத்தப்படுவா!.. சாதாரணமா இருடா” என்று மகனுக்கு அறிவுறித்தி அனுப்பினார். பிரபாகரன் தலையசைத்து எழுந்து போக, ரத்னவேல் மனதிலும் ஊர்மிளா குறித்த சிந்தனையே!
**************************
தேவிகுளத்தில் அன்று இரவு! ஜெயன் அவன் அறையில் இருந்து கீழ் இறங்கி வர, ரோனால்டோ அவனை நோக்கி ஓடி வந்தான்.
“என்னடா?” என்று அவனோடு பேசி விளையாட, பாலச்சந்திரனும் வினயனும் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் பின்னே விஜயனும் வந்தான். வந்தவன் நேராக ஜெய்ச்சந்திரனிடம் சென்று,
“ஜெயேட்டா! சாரி” என்றான். ரோனால்டோ விஜயன் மேல் ஏறப்போக, விஜயனை முறைத்தபடி, “ரோனால்டோ!” என்று அதட்டல் போட்டான் ஜெய்.
“இது ரோனால்டோவுக்கு அல்லாடா விஜயா! இது நினக்கானு!”(இது உனக்கு) என்று வினய் மெல்ல சொல்ல, விஜயன் நண்பனை முறைத்தான்.
ரோனால்டோ கோபமாக முறைத்துக்கொண்டு, பாலச்சந்திரனிடம் நின்று வாலாட்ட, அவர் அவன் முதுகை தடவிக்கொடுத்தார். அங்கேயே சிறிது நேரம் சுற்றிய ரோனால்டோவை வினயன் வெளியே விட்டு வந்தான்.
பாலச்சந்திரன் விஜயனை பார்த்து,
“என்னடா அமைதியா இருக்க? எல்லாத்துக்குக் காரணம் நீதானே? இதுல மட்டும் நீயும் ராஜீவனும் ஒன்னு! எங்கிருந்து வருதோ இந்த லவ்வு உங்க குடும்பத்துக்குனு?” என்றார் கடுப்பாக. பின்னே, மதியம் முதல் ஜெய் சொன்னதே மனதில் ஓடியது. வினய் அப்பாவை சமாதானம் செய்து வைத்திருக்க, விஜயனை பார்க்கவும் கோபம். வினய் அவனிடம் எல்லாம் சொல்லி வர சொன்னான்.
“ஜெயேட்டா! நாந்தான் எல்லா கன்ஃப்யூஷனுக்கும் காரணம். சாரி” என்று விஜயன் கேட்க
“நீ ஏன் எங்கிட்ட சாரி கேட்கிற? நீ, உன் மாமா எல்லாம் அச்சச்சங்கிட்ட கேட்கணும்” என்றான். பாலச்சந்திரன் மகனை முறைத்தார், ஜெய் அதனை கண்டுகொள்ளவில்லை.
“ஜெயேட்டா! ராஜீவன் மாமாவுக்கு மகளுண்டுனு எனிக்கு அறியல்லா!(மாமாவுக்கு மக உண்டுனு எனக்கு தெரியாது!) அதானு எல்லா கன்ஃப்யூஷணுக்கும் காரணம்!(எல்லா குழப்பத்துக்கும் அதான் காரணம்)” என்றான். விஜயனுக்கும் இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை, ராஜீவன் மாமா மகள் தேவிகுளம் வந்து சென்றாள் என தெரிந்துவிட, உண்மை தெரிந்தால் அவன் அம்மச்சன் என்ன செய்வாரோ என்ற கலக்கம் சூழ உட்கார்ந்திருந்தான்.
“நீ என்னடா பண்ணுவ? எல்லாம் அந்த ராஜீவன் பண்ணினது! கள்ளன்!” என்று பாலச்சந்திரன் கடுப்பாக சொல்ல, ஜெய்க்கு இவர்களை பார்த்து சிரிப்போடு கோபமும் வந்தது. அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
“விடுடா விஜயா! நான் பார்த்துக்கிறேன்” என்று சமாதானம் செய்தான். அதில் பாலச்சந்திரனுக்கு கொஞ்சம் நிம்மதி தோன்றினாலும் அடுத்த கணமே இவன் குண்டு போடுவான் என்று நினைத்தார். அப்படியே விஜயன் சென்றதும்,
“விஜயன் பிந்து கல்யாணம் என் பொறுப்பு பா!” என்ற ஜெய் ஊஞ்சலில் உட்கார்ந்தவன் ஏதோ யோசித்தபடி,
“காலையில அச்சச்சன் என்னை அவர் பேத்திக்குக் கேட்டதா சொன்னீங்க தானே?” என்றதும்
பாலா, “எண்ட குருவாயூரப்பா! என்னை ரக்ஷிக்கணும்” என்று மேலே கையெடுத்துக் கும்பிட, வினயன் உடனே அண்ணனிடம்,
“டேய்! மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத! இப்போ உண்மையை சொன்னா அச்சச்சன் பிந்து விஜயன் கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டார், உனக்காக ஊர்மிளாவை பேசணும்னா அப்பா யார்கிட்ட பேசுவார்?” என்று வாக்குவாதம் செய்தான்.
ஜெய்யோ தம்பியை ஒரு பார்வை பார்த்தவன், ஊஞ்சலில் ஆடியபடி, “அப்பா! நீங்க சொல்லுங்க!” என்றான் மீண்டும்.
“சொன்னாருடா! ஆனா அந்த பேத்தி ஊர்மிளா இல்லை” என்று பாலச்சந்திரன் அழுத்தி சொல்ல,
“பாருங்க அச்சச்சன் என்னமோ பொல்லாதவர் போல பேசினீங்க? அவர் பேத்திக்கு என்னை பேச நினைச்சவர், விஜயன் விரும்பினான் சொன்னா மறுக்கவா போறார்?” என்று கேட்டான். இவர்கள் வேறு மொழி, இனம், அதை பாராது அச்சுதன் பேசினார்தானே? என்ற மகனின் கூற்றைக் கேட்ட பாலச்சந்திரன்
“ஏன்னா உன்னை அவர் சின்ன வயசுல இருந்து பார்க்கிறார். பிந்து அப்படியில்லை, அந்த பொண்ணுக்கு அப்பா, அம்மா இல்லை! ஏற்கனவே வேற மதம்னு ராஜீவனை ஏத்துக்கல அவர்! நீ அவருக்கு ஸ்பெஷல்! அதுக்காக அவர் தன்னோட கௌரவம், மதம் எல்லாம் தூக்கிப்போட்டு காதலை ஏத்துப்பார் அர்த்தமில்லை ஜெய்” என்றார்.
“ராஜீவன் வந்து பேசினா அவர் புரிஞ்சிப்பார்! அதில்லை இப்போ பிரச்சனை! ஊர்மி ஊர்மினு சொல்றியே, அதை நிறுத்து! உன்னை பிடிச்ச பொண்ணுக்கு நான் என்ன பதில் சொல்றது? ஊர்மிளா கிட்ட பேசினதை கேட்டியே, அவ ராஜீவனை அப்பானு எங்கிட்ட சொல்லல! அவளை வளர்த்த பிரபாகரனை சொல்றா! அங்க அந்த பொண்ணுக்கு என்ன மாதிரி சூழ் நிலையோ? ராஜீவனுக்கே பொண்ணு இல்லைனு சொல்றா, அவன் ப்ரண்ட்னு சொல்லி நான் உனக்காக போய் எப்படி பொண்ணு கேட்க முடியும்? இந்த பேச்சை விட்டுடுடா ஜெய்!” என்றார் அவனை மாற்றிவிடும் நோக்கில்.
அப்பா பேச்சில் ஜெயச்சந்திரனுக்கும் கொஞ்சம் குழப்பம்! ஊர்மிளாவின் சூழல் தெரியவில்லையே!
அவன் யோசனையில் அமைதியாக, பாலச்சந்திரன் அவன் யோசிக்கட்டும். புரிந்து கொள்வான் என்று நம்பி உறங்க போனார்.
அடுத்த நாள் காலையில் வானம் மேகம் போர்த்தியிருந்தது. தேவிகுளம் குளுமையாக இருந்தது, ஜெய் எழுந்து குளித்தவன் கட்டஞ்சாயாவோடு அவர்கள் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருக்க, லேசான தூறல்.
அண்ணனுக்கு அருகே வினயனும் சாயாவோடு உட்கார, ஜெய்யின் அலைபேசி சத்தம் போட பார்த்தாள் அவன் ஓமண பெண்! ஊர்மிளா!
ஜெய் நேற்றிலிருந்து குழப்பத்தில் இருக்க, அவள் அழைப்பில் ஆவல் கூட ஏற்றான். ஊர்மிளா காலையில் எழுந்தவள் போனை பார்க்க, நேற்று ஜெய் பேசியது நினைவில் வந்தது. உடனே அவனுக்கு அழைத்தாள்.
“ஹலோ! நான் ஊர்மி” என்றதும் ஜெய்யின் புன்னகை விரிந்தது. வினயன் எட்டி பார்க்க, ” சொல்லு ஊர்மி!” என்றான். அதில் வினயன் அதிர்ந்து
“டாடீ!” என்று வாசலில் நின்ற பாலச்சந்திரனை அழைக்க போனான்.
இங்கு ஊர்மிளா பேச ஜெய் உடனே “எஸ்” என்றான்.
“தேங்க்ஸ் அண்ட் சாரி, நேத்து டென்ஷன்ல எனக்கு ஞாபகமே இல்லை ” என்றாள். அந்த மென் குரல் காலை வேளை தூறலில் கேட்க பிடித்தது.
“உங்க தாத்தா எப்படி இருக்கார்? நீ ஓகேவா ஊர்மி?” என்று அக்கறையாகக் கேட்டான்.
“நல்லா இருக்காங்க! அங்க அங்கிள் கிட்ட சொல்லிடுங்க. பை” என்று ஊர்மிளா சொல்ல
ஜெய்க்கு அவளாக அழைத்து பேசியதே போதுமானதாக இருந்தது. எங்கேயோ இருந்தவளை அவன் கண்ணில் காட்டியதே இந்த காலம்! அதனை நம்பினான் அவன்!
“ஓகே ஊர்மி! டேக் கேர்!” என்று பேசி வைக்க, ஊர்மிளாவை பொருத்தவரையில் சாதாரண உரையாடல். முடித்துவிட்டு வேலையைப் பார்க்க, இங்கு பாலச்சந்திரன் மகன் முன் கோபமாக வந்து நின்றார்.
“உங்க மருமக உங்களை விசாரிச்சா!” என்று முகம் முழுக்க புன்னகையோடு ஜெய் சொல்ல, அந்த குளிர் காலையிலும் உஷ்ணமானார் பாலச்சந்திரன்.
“டேய்! நீ இன்னும் திருந்தலையா?” என்று ஜெய்யைக் கேட்க, அவனோ
“நான் நல்ல மூட்ல இருக்கேன்! அப்புறம் பேசுறேன்” என்று உற்சாகமாக மாடிப்படியில் ஏறினான்.
“டேய்! இவன், அந்த ராஜீவன், அச்சன் எல்லார்கிட்டயும் சிக்குறதுப் பதில் நான் கங்கை, காசினு போயிடுறேன் டா.” என்றவர் சோர்வோடு உட்கார்ந்துவிட்டார். மகனின் ஆசை முகம் பார்க்க, மகிழ்வாக இருந்தாலும், எப்படி இதெல்லாம் சாத்தியம் என்ற கவலை.
வினயனோ, “அப்பா, அப்பர் பெர்த்தா லோயர் அஹ்?” என்று கேட்க, அவர் விழித்தார்.
“காசி போக டிரெயின் டிக்கெட் போடுறேன்” என்றவன் அவரின் பார்வையில் “ஓஹ், அப்போ போகலையா?” என்றதும்
“உன்னை” என்று பக்கத்தில் இருந்த சொம்பை அவன் மீது விட்டெறிந்தார். இப்படி இங்கே இவர்கள் கலாட்டா செய்ய, அறைக்கு சென்ற ஜெய் சூர்ய நெல்லி கிளம்ப ஆயத்தமானான். படபடவென்று சத்தம் கேட்க, வெளியே பார்த்தால் மழை!