“என்னாச்சு நங்கை! வா ஹாஸ்பிட்டல் போகலாம்” என அவன் அவளை அழைக்க,
“உன் கரிசனம் ஒன்னும் எனக்குத் தேவையில்ல” அனைவரின் முன்னிலையிலும் அவள் இன்பாவை நோக்கி உரைக்க, அவளின் பேச்சில் அனைவரும் கலைந்து சென்றனர்.
“ம்ப்ச் வா போகலாம்! என்னை எவ்ளோ வேணாலும் திட்டிக்கோ! டாக்டரை பார்த்துட்டு மட்டும் வந்துடலாம்” அவளின் கையைப் பிடித்து வேகமாய் நடந்து சென்றான்.
உடன் பணிபுரிவோரிடம், மேனேஜரிடம் தங்களின் நிலைக்கூறி அரை நாள் விடுப்பு எடுப்பதாக உரைக்கச் சொன்னவன், தரிப்பிடத்திற்குச் சென்ற பிறகே அவளின் கையினை விட்டான். வண்டியை இயக்கி விட்டு அவளை ஏறும் படி கூறினான். அவனை முறைத்துக் கொண்டே ஏறி அமர்ந்தாள்.
மருத்துவர் அவளைப் பரிசோதனை செய்து இரத்த அழுத்தம் இருப்பதாகக் கூறியவர், நன்றாக உண்ணுமாறு உரைத்து மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்தார்.
பரிசோதனை முடிந்த பிறகு உணவகத்திற்கு அவளை அழைத்துச் சென்றவன், அவனுக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்தான்.
அவள் இன்னுமே கோபமாய் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, “சாரி நங்கை” என்றான்.
“இன்னிக்கு உங்க அப்பாகிட்ட நான் போன்ல பேசுறேன் சரியா! எங்க வீட்டுல அப்பா அம்மாகிட்ட இந்த வீக்கெண்ட் போய்ப் பேசுறேன்” அவளைச் சமாதானம் செய்தான்.
சரியெனத் தலையசைத்தவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“உன்னோட கலகல நேச்சர் பிடிச்சு தான் லவ் பண்ணேன் நங்கை. ஆனா நீ அப்படியே மாறிட்ட! எப்ப பார்த்தாலும் என்கிட்ட சண்டை போட்டுட்டே இருக்க! அவ்ளோ ஈசியா நான் டைம் பாஸ்ஸூக்கு லவ் பண்ணி கழட்டி விடுற பொறுக்கி மாதிரி கேள்வி கேட்டுட்டு இப்ப என் மேல் தப்பே இல்லங்கிற மாதிரி அமைதியா இருக்க! இப்ப கூட நான் தான் சாரி கேட்டு இறங்கி வந்திருக்கேன்” என்று படபடவென அவன் பேசிக் கொண்டே போக,
“உன்னை லவ் பண்ண பிறகு தான் இப்படி மாறிட்டேன் இன்பா! உன்கிட்ட என்னோட எதிர்பார்ப்பு என்னனு புரியலையா? காலைலருந்து இப்ப வரைக்கும் சாப்பிட்டியானு ஒரு வார்த்தை கேட்டியா? நேத்து எங்கம்மா என்னை அப்படித் திட்டினாங்கனு சொன்னேன் தானே! அதையே டைஜஸ்ட் பண்ண முடியாம மனசுல வேதனையைச் சுமந்துட்டு இருக்கும் போது நீ சமாதானம் செய்யலைனாலும் பரவாயில்லை. மேலும் கடுப்பேத்தினா நான் என்ன தான் செய்யட்டும். எப்பவும் நீ நினைச்சது தான் நடக்கனும். உனக்குப் பிடிச்சது தான் நடக்கனும். இப்ப கூட எனக்கு என்ன வேணும்னு கேட்டு நீ ஆர்டர் செய்யலை. உனக்குத் தேவையானதை தானே ஆர்டர் செஞ்சிருக்க! அதை நானும் அக்சப்ட் செஞ்சிட்டு அப்படியே சாப்பிடனும் அப்படித் தானே” அமைதியான குரலில் அழுத்தமாய்க் கேட்டவளை உற்று நோக்கியவன்,
“சாரிடி! போதும்டி சண்டை போட்டது” கெஞ்சும் பார்வையில் உரைத்தான்.
“எனக்குச் சாப்பாடும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்” என அவன் அவ்விடத்தை விட்டு கோபத்துடன் செல்ல,
அவன் ஆர்டர் செய்திருந்த உணவு வந்த பொழுதும் உண்ண மனமில்லாது அமர்ந்திருந்தவள், பசிக்கு உண்டு விட்டுப் பணத்தைச் செலுத்தியவள் தனதறைக்குச் சென்று விட்டாள்.
மாத்திரையை விழுங்கியவளின் காதல் மனமோ அவன் உண்ணாது சென்றதில் கவலைக்குள்ளாகி அவனையே நினைத்துக் கொண்டிருக்க, ‘நீ சாப்பிடலைனு அவன் நினைச்சானா? நீ மட்டும் ஏன் அவனையே நினைச்சிட்டு இருக்க’ என அவளின் மனசாட்சி குட்டு வைக்க, கட்டிலில் படுத்திருந்தவளின் கைகள் கைபேசியில் அவனின் எண்ணை எடுத்து வைத்துக் கொண்டு அழைக்கலாமா வேண்டாமா எனப் பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்த நேரம் அவனே அவளுக்கு அழைத்திருந்தான்.
“சாப்பிட்டியா நங்கை” எடுத்ததும் அவன் கேட்ட இக்கேள்வியில் அவன் உண்ணாது இவள் உண்ட குற்றயுணர்வு மேலோங்க,
“நீ சாப்பிட்டியா இன்பா” எனக் கேட்டாள்.
இல்லையென என அவன் கூற, சாரியென இவள் கேட்க, இருவரும் காதல் மொழி பேசி சமாதானம் செய்வதில் அடுத்த அரை மணி நேரத்தைச் செலவிட்டிருந்தனர். அவனிடம் பேசிக் கொண்டே உறங்கி இருந்தாள் இவள்.
மாலை ஏழு மணியளவில் நங்கையின் பிஜி அருகே இருக்கும் பூங்காவில் அமர்ந்திருந்தனர் இன்பாவும் நங்கையும்.
“அப்பாகிட்ட சரியா பேசிடுவ தானே இன்பா!” பதட்டமாய்க் கேட்டிருந்தாள் நங்கை.
“அதெல்லாம் பேசிடுவேன்! நீ முதல்ல கால் பண்ணு” என்றான் இன்பா.
ஹெட்செட் அணிந்து தனது காதில் ஒரு இயர் போனையும் அவன் காதில் ஒரு இயர் போனையும் சொருகியவள், தனது தந்தைக்கு அழைத்து ஓரிரு வார்த்தைகள் பேசியவள், இன்பாவிடம் போனை வழங்குவதாய் உரைத்து அவனிடம் பேச கூறினாள்.
அவர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் உரைத்தானே தவிர, இவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை அதிகமாக வெளிவராது இருக்க, அருகில் அமர்ந்திருந்தவனை இடித்த நங்கை, ‘உங்க பொண்ணை நான் நல்லா பார்த்துப்பேன். எனக்குக் கட்டுக் கொடுங்கனு சொல்லு! நீயா ஏதாவது நாலு வார்த்தை பேசுடா’ என அவனின் மறு காதில் ஹஸ்கி வாய்ஸில் உரைத்தாள்.
இவன் ஏதும் பேசாமலேயே இணைப்பைத் துண்டித்திருந்தான்.
“கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு! பொண்ணோட அப்பா பேசனும்னா எதுக்காகப் பேசுவாங்க. நீ எப்படிபட்டவன்? தன்னோட பொண்ண கட்டிக்கொடுக்கிற அளவுக்குத் தகுதியானவனா? நல்லவனா? கெட்டிக்காரனா? டைம் பாஸுக்கு லவ் பண்றியா? அவங்க பொண்ணை ஏமாத்த லவ் பண்றியா? இந்தக் காதல்ல உறுதியாக இருக்கியா? இதெல்லாம் தெரிஞ்சிக்கத் தானே பொண்ணு வீட்டுல இருந்து பேசுவாங்க! நீ என்னமோ கடனேனு அவர் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு இருக்க! உங்க பொண்ணை எனக்குக் கட்டி வைங்கனு ஒரு வார்த்தை கேட்குறதுல குறைஞ்சா போய்டுவ” என அவள் கடுங்கோபத்துடன் பொரிந்து கொண்டிருக்க, ஏதும் கூறாது எழுந்து சென்று விட்டான்.
‘இவனாலேயே நான் ரத்த அழுத்தம் வந்து சாகப் போறேன்’ வாய்க்குள் முணங்கியவளாய் தலையில் கை வைத்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள் நங்கை.
சில நிமிடங்கள் கழித்து அழைத்த அவளின் தந்தை அவள் இணைப்பை ஏற்ற மறுநொடி, “என்னம்மா இந்தப் பையன் அவன் லவ்ல அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்க மாதிரி தெரியலையே! நீ தான் அவனை உயிரா காதலிக்கிற மாதிரி இருக்கு” என்று கவலையுடன் வினவினார்.
இன்பாவிற்கு நங்கையை நிரம்பவே பிடித்திருந்தது. அவளின் அழகும், துறுதுறு பேச்சும் அவனை வெகுவாய் ஈர்த்தன. அவன் காதலித்த முதல் பெண் இவள் தான். அவளை இவன் காதலிக்கிறான் என அவனின் மனது தெளிவாய் எடுத்துரைத்த போது, தனது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் வாங்குவது கடினமென அறிந்திருந்த போதும், அவளை விட முடியாத மனதின் உந்துதலால் காதலை மொழிந்திருந்தான் இன்பா.
காதலித்தாலும் இன்பாவுடன் தனியாக நெடும்பயணத்திற்கு எல்லாம் நங்கை சம்மதித்ததில்லை. சினிமாவுக்குக் கூட அவனுடன் அவள் சென்றதில்லை
‘ஃப்ரண்ட்ஸ்ஸா வெளில போய்ட்டு வரது தப்பில்லை. ஆனா லவ்வர்ஸ்ஸா அதுவும் இரண்டு வீட்டுக்கும் சொல்லாம ஊர் சுத்தப் போறது ஒரு மாதிரி கில்டி ஃபீல் ஆகுது இன்பா. கல்யாணத்துக்குப் பிறகு லாங் டிரைவ் சினிமானு எங்கனாலும் போகலாம். இப்ப வேண்டாமே’ என்றிடுவாள்.
ஏற்கனவே வாரத்தில் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள் என வாரயிறுதி நாட்களில் வெளியில் சந்திப்பதை வெகுவாய் தவிர்த்திடுவாள் நங்கை
மார்டன் மங்கையாய் இருந்தாலும் அவளின் இந்தக் கொள்கைகளும் அதன் மீதான பிடிப்பும் அவள் மீதான காதலை அதிகரித்திருந்தது அவனுக்கு.
நங்கையும் இனி தனது வாழ்க்கை பயணம் இவனுடன் தான் எனப் பல கனவுகள் கண்டவாறு இன்பமுடன் உலா வந்து கொண்டிருந்தாள். இன்பாவின் இந்தச் சற்று சுயநலமான குணநலன் கூட அவளுக்குப் பெரிய குறையாய் தோன்றவில்லை. பரஸ்பரம் இருவருக்கும் ஆழ்ந்த காதல் இருந்தால் போதும், டாம் அண்ட் ஜெர்ரி போல் சண்டையிட்டுக் கொண்டே கூட அந்தக் காதலுடன் வாழ்ந்து விடலாம் என அவன் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தாள் நங்கை.
அவளின் வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எனத் துளியும் நினைக்கவில்லை அவள். தோழர்களுடன் பேசுவதைப் பழகுவதை இயல்பாய் எடுத்துக் கொண்டவர்கள் காதலிப்பதையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நினைத்திருந்தாள்.
முற்றிலும் எதிர்பாராத அவளது தாயின் அவதூறான பேச்சு அவளை நிலைக்குலைய வைத்திருந்தது.
****
“கண்டவனையும் லவ் பண்ணிட்டுத் திரியத்தான் பெங்களூர்லயே பிராஜக்ட் வாங்கிட்டு இருந்தியா?”
“இத்தனை நாளா எங்களை ஏமாத்திட்டு இருந்திருக்கல நீ! லவ் பண்றேன்னு அவன் கூட ஊர் ஊரா சுத்திட்டு இருக்கத் தானே! எந்த நல்ல குடும்பத்து பொண்ணு இப்படிச் செய்வா?”
“அப்படி என்ன அவசரம்! நாங்க பார்க்கிறதுக்கு முன்னாடி நீயே உனக்கு ஒருத்தனை பிடிச்சிட்டு வந்து நிக்கிற”
ஆழ்ந்த உறக்கத்தில் காதில் ரீங்காரமிட்ட இவ்வார்த்தைகளில் படக்கென எழுந்து அமர்ந்தாள் நங்கை. முகமெல்லாம் வியர்வையில் குளித்திருந்தது.
மணி இரவு பத்தாகி இருந்தது. பூங்காவில் தந்தையிடம் ஏதேதோ பேசி சமாதானம் செய்துவிட்டு அறைக்கு வந்தவள் அன்றைய நாளின் அதீத மன உளைச்சலில் உறங்கிப் போனாள்.
படுக்கையில் படுத்தவாறு கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த பிரியா, திடீரென எழும்பிய நங்கையிடம் தண்ணீரை கொடுத்துப் பருகச் செய்தவள், “என்னாச்சு? எதுவும் கெட்ட கனவு கண்டீங்களா?” எனக் கேட்டாள்.
“அம்மா! அம்மா” எனத் தடுமாறியவள், “அம்மா நேத்து திட்டினது என் காதுக்குள்ள கேட்ட மாதிரி இருந்துச்சு” எனத் தட்டு தடுமாறி கூறினாள்.
அவளைப் பார்த்து பாவமாகி போனது பிரியாவுக்கு. ‘எதுக்குக் காதலிப்பானேன் இப்படி அவஸ்தைப்படுவானேன்’ எனத் தோன்றியது அவளுக்கு.
“நீங்க சாப்பிடாம வேற தூங்கிட்டீங்க! எழுப்பலாம்னு நினைச்சேன்! நல்லா தூங்கிட்டு இருந்தீங்க! டிஸ்டர்ப் செய்ய மனசு வரலை. காலைல டிராவல் செஞ்சி வந்த டயர்ட்ல தூங்குறீங்க போலன்னு விட்டுட்டேன்” பிரியா அவளிடம் பேசி கொண்டே, கையில் உணவுத் தட்டுடன் வந்தாள்.
“உங்களுக்காகச் சோறும் ரசமும் மட்டும் கொஞ்சமா எடுத்து வச்சேன்” அவள் கையில் திணித்தாள்.
“தேங்க்ஸ்” என்றவாறு அதனை வாங்கி உண்ட நங்கையிடம்,
“பார்க்ல இன்பா அண்ணனை பார்த்தேன்! உங்களைப் பார்க்க வந்திருந்தாங்களா?” எனக் கேட்டாள் பிரியா.
ஆமெனத் தலையசைத்து நடந்ததை அவள் கூற, “ஏன் இந்த அண்ணா இப்படிச் செய்றாங்க! உங்கப்பாகிட்ட ஒழுங்கா பேசி நம்பிக்கை கொடுத்திருந்தா உங்க அம்மாகிட்ட அவர் பேசியிருப்பாரு தானே. இப்ப அப்பா அம்மா இரண்டு பேரையுமே நீங்க சமாளிக்கனுமே” ஆதங்கத்துடன் கேட்டாள் பிரியா.
“அதே கோபம் தான் எனக்கும் பிரியா! ஏன் அவன் அப்படிப் பேசாம இருந்தான்னே புரியலை! அப்பா பேச்சை கேட்டு பயந்துட்டானோ என்னவோ! இன்னும் எவ்ளோ சமாளிக்க வேண்டியது இருக்கு! இப்பவே இப்படி இருக்கானேனு கவலையா இருக்கு” மனக்கவலையை அவளுடன் பகிர்ந்து கொண்டாள்.
“கவலைப்படாதீங்க! எல்லாம் சரியாகிடும்” ஆறுதல் அளித்தவள் தனது படுக்கையில் படுத்துக் கொண்டாள்.