அன்று மாலை அலுவலகப் பூங்காவில் அமர்ந்திருந்தனர் இருவரும்.
தனது தந்தையிடம் பேசுமாறு இன்பாவிடம் அவள் உரைக்க, அவன் தனது பெற்றோரிடம் பேசாமல் அவளது தந்தையிடம் பேச முடியாது என மறுத்து விட்டான்.
“என்ன தான்டா பிரச்சனை உனக்கு? என்கிட்ட சொன்ன மாதிரி அப்பாகிட்ட ஒரு மாசம் கழிச்சி என் அப்பா அம்மாகிட்ட பேசுறேன் அங்கிள்னு சொல்றதுல உனக்கு என்ன பிரச்சனை?” எனக் கோபமாய்க் கேட்டிருந்தாள் நங்கை.
“ம்ப்ச் என் நிலைமையைப் புரிஞ்சிக்கோடி! இது ஒரு மாதிரி உங்கப்பா கிட்ட நான் ஃபால்ஸ் (false) ஹோப் கொடுக்கிற மாதிரி ஆகிடும். முதல்ல இருந்தே இந்தப் பையன் உண்மைய பேசலைனு பின்னால மாப்பிள்ளையா போனாலும் என்னை மதிக்காம பேசுவாங்க. உன் மூலமா ஒரு விஷயத்தைச் சொல்றதுக்கும் நான் நேரடியாகப் பேசுறதுக்கும் வித்தியாசம் இருக்கு தானே” என்றான்.
‘என்னடா இவன் கலர் கலரா ரீல் விடுறான்’ என்பது தான் அவள் மனசாட்சியின் குரலாய் இருந்தது.
“அதே தான் நானும் சொல்றேன்! நீயே நேரடியாகப் பேசுறதுக்கும் நான் சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு தானே! ஏன் அதை ஃபால்ஸ் ஹோப்னு சொல்ற? எப்படினாலும் என்னைக் கல்யாணம் செஞ்சிக்கத் தானே போற? இல்ல கழட்டி விடுற பிளான்ல இருக்கியா?” எனக் கேட்டாள்.
“ஏய்” என அவளை அறைய கை ஓங்கி இருந்தான் இன்பா.
அவனின் ஓங்கிய கையைப் பார்த்து பதறியவளுக்குக் கண்களில் இருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது.
“போடி போ! என் மேல நம்பிக்கை இல்லாம நீ ஒன்னும் என்னைக் கட்டிக்கத் தேவையில்ல! உங்கப்பா அம்மா சொல்றவனையே கட்டிக்கோ போ” என்று கோபமாய் உரைத்திருந்தான்.
அவனிடம் ஏதும் பேசாது அங்கிருந்து சென்றிருந்தாள் நங்கை.
தனது அறைக்குள் நுழைந்த நொடி படுக்கையில் விழுந்து கதறி அழுதாள்.
இத்தனை நாட்களாய் எந்த வார்த்தையை அவன் வாயில் இருந்து கேட்டுவிடக் கூடாது என நினைத்திருந்தாளோ அதையே அவன் கூறியிருக்க, மனம் நொந்து போனாள்.
நிஜமாவே அவன் காதல் மீது பெருத்த சந்தேகம் வந்திருந்தது.
‘உண்மையா காதலிக்கிறவனுக்கு என்ன ஆனாலும் இவளை கை விட்டுடக் கூடாதுனு தானே தோணும். அவனோட குடும்பத்துக்காக யோசிக்கிறவன் என் குடும்பத்துக்காக ஏன் யோசிக்கவே மாட்டேங்கிறான்’ மனம் பொருமி தள்ளியது. அப்படியே உறங்கிப் போனாள் நங்கை.
சிறிது நேரம் கழித்து அலுவலகத்தில் இருந்து வந்த பிரியா, நங்கையை எழுப்பினாள்.
நங்கையின் அழுத விழிகளைக் கண்டு இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனை எனப் புரிந்து கொண்டவளாய், “இன்பா அண்ணா கீழே வெயிட் செய்றாங்க. அவங்க போன் செஞ்சாலும் நீங்க எடுக்கலையாமே! உங்களைக் கீழே வர சொன்னாங்க நங்கை” என்றாள்.
அப்பொழுது தான் பையிலிருந்த கைபேசியை எடுத்துப் பார்த்தாள். பத்துக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் அவனது எண்ணில் இருந்து வந்திருந்தன.
நேரம் மாலை ஆறு மணி ஆகியிருக்க, ஓய்வறை சென்று முகம் கழுவி விட்டு அவனைக் காணச் சென்றாள்.
அவளிடம் கைபேசியை அவன் வழங்க, “சொல்லுங்க அப்பா” என்றவளிடம், “நீ ரூம்க்கு போய்ட்டு போன் பண்ணுமா” என்று வைத்து விட்டார்.
“சாரி நங்கை” அவன் முன்பு பேசியவதற்காக மன்னிப்பை வேண்ட, இவள் ஏதும் கூறவில்லை.
சில நிமிடங்கள் இருவருமே அமைதியாக அமர்ந்திருந்தனர். இவர்களின் வாழ்க்கை அடுத்தக் கட்டத்தை நோக்கி செல்லுமா என்கின்ற கேள்விக்குறியுடன் இருவருமே மனம் நிறைந்த காதல் விளைவித்த வலியுடன் அமர்ந்திருந்தனர்.
“கிளம்பலாமா?” என்றவன் கேட்கவும், சரியெனத் தலையசைத்து விட்டு அவனுடன் சென்றாள்.
அறைக்கு வந்ததும் தந்தைக்கு அவள் அழைக்க, “அந்தப் பையன் ரொம்பக் குழப்பமான மனநிலைல இருக்க மாதிரி தெரியுதுமா! இப்ப கூட என்ன நடந்தாலும் எங்க கல்யாணம் நடக்கும்னு ஏதாவது சொல்றானா? வீட்டுல ஒத்துக்கலைனா என்ன செய்றதுனு கூட அவனுக்கு ஒரு ஐடியாவோ திட்டமோ இல்லை! உன்னையும் விட முடியாம வீட்டையும் சமாளிக்க முடியாம அவன் திண்டாடிட்டு இருக்க மாதிரி இருக்கு! இதுல இன்னும் உங்க காதலை அவன் வீட்டுல சொல்லவே இல்லை” பெருமூச்சு விட்டவாறு உரைத்து முடித்தவர்,
“உன் நிலைமையை நினைச்சா தான் கவலையா இருக்குமா! காதல் எந்தளவுக்குச் சுகத்தைக் கொடுக்குமோ அந்தளவுக்கு வலியையும் தரும்” என்றவர்,
“ஒரு மாசம் பொறுத்திருந்து பார்ப்போம். எது நடந்தாலும் அப்பா உனக்குத் துணையா இருப்பேன்றதை மட்டும் எப்பவும் மனசுல வச்சிக்கோமா” என்று இணைப்பைத் துண்டித்தார்.
தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள் நங்கை. ‘இவன் பேசாமலே இருந்திருக்கலாம் போலயே! என் தலைல நானே மண்ணள்ளி போட்டுக்கிட்ட மாதிரி ஆகிப் போச்சே’ என மனதோடு புலம்பினாள்.
அப்பாவிற்கு அவன் மீதான நம்பிக்கை முற்றிலுமாக முறிந்திருப்பதை அவளால் உணர முடிந்தது.
இன்பா அவனது வீட்டில் பேசி திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட பிறகே வீட்டிற்குச் செல்ல வேண்டுமென நினைத்திருந்தாள் நங்கை. ஆனால் அவள் தந்தையின் வற்புறுத்தலால் ஒரு வாரயிறுதி நாளில் சென்னைக்குச் சென்றாள்.
எப்பொழுதும் வீட்டிற்கு வந்ததும் ஆவலாய் வரவேற்கும் அன்னை அவளைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதைக் கண்டதும் மனம் வெகுவாய் வருந்தியது அவளுக்கு. ஏன் தான் வந்தோம் எனத் தோன்றியது.
சனிக்கிழமை முழுவதும் அவள் முன் கூட வராது, அவள் உண்டாளா உறங்குகிறாளா என எதையும் கேளாது கண்டு கொள்ளாது இருந்தார் அவளின் தாய் சரோஜா.
அன்றிரவு தந்தையின் மடியில் படுத்திருந்த நங்கை, “ஏன்ப்பா அம்மா இப்படி ரியாக்ட் பண்றாங்க. எனக்குச் சத்தியமா புரியலை. என்னை இன்டிபெண்டென்ட்டா தானே வளர்த்தீங்க. என்னோட முடிவை நானே எடுக்குற மாதிரி எனக்குப் பிடிச்ச வாழ்வை வாழுற மாதிரி தானே வளர்த்தீங்க. என்னோட படிப்புலருந்து வேலை, பழகுற ஃப்ரண்ட்ஸ்னு எதுலையுமே நீங்க உங்க முடிவை திணிச்சதே இல்லையே. என் விருப்பம்னு விட்டீங்க தானே! அதுல ஏதாவது தவறு இருந்தா மட்டும் தான் சுட்டிக் காட்டி வேண்டாம்னு சொல்லுவீங்க. ஆனா இப்ப என்னாச்சு? காதலிக்கிறது என்ன அவ்ளோ பெரிய தப்பா? ஒரு பொண்ணோட ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்குற அளவுக்குத் தப்பா அப்பா?” எனக் கேட்டு அவரின் மடியிலேயே கண்ணீர் வடித்து முகத்தைப் புதைத்துக் கொள்ள, இவருக்கும் மனம் ரணமாய் வலித்தது.
“இல்லடா மதும்மா! அவளுக்குக் கௌரவப்பித்துப் பிடிச்சி போயிருக்கு! ஊரு என்ன சொல்லும்? என்ன பேசும்? எப்படிப் பிள்ளைய வளர்த்து வச்சிருக்கானு கேட்கும்னு சொந்த பந்தங்களைப் பத்தி தான் யோசிக்கிறாளே தவிர உன்னைப் பத்தி அவ நினைக்கலை! நாங்க பார்க்கிற மாப்பிள்ளையைத் தான் நீ கட்டிப்பனு ரொம்ப நம்பிக்கையா இருந்தா. அந்த நம்பிக்கை உடைஞ்சதுல வந்த வார்த்தைகள் அது! உங்கம்மாக்குக் கோபம் வந்தா இப்படித் தான் கண்ணு மண்ணு தெரியாம பேசுவா! நாங்க எங்க சண்டையை எங்க அறையோட வச்சிருந்தனால உனக்கு அது தெரியாமலே போச்சு” ஆறுதல் உரைத்தார்.
“முடியலையேப்பா! என்னால பேச்சை தாங்கிக்க முடியாதுனு உங்களுக்குத் தெரியும் தானே” என்றவள், “இந்த இன்பா கூட என்னைப் புரிஞ்சிக்காம காயப்படுத்திடுறான்! உங்களையும் விட முடியாம அவனையும் விட முடியாம தத்தளிச்சிட்டு இருக்கேன்ப்பா” அழுதவாறு எழுந்து அமர்ந்தாள்.
மகளின் கவலையைக் காண சகிக்காதவராய், “நான் வேணா அந்தப் பையனோட அப்பா அம்மாகிட்ட பேசவா மதும்மா” எனக் கேட்டார்.
“அப்பா!” என ஆச்சரிய அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தவள், அவர் இடையைக் கட்டிக் கொண்டு தோளில் சாய்ந்து கொண்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல! அவங்க உங்களை ஏதாவது பேசிட்டா என் மனசு தாங்காது! எனக்காக உங்க மரியாதையை விட்டு கொடுத்து அவன்கிட்டயோ அவன் குடும்பத்துக்கிட்டயோ போய் ஒன்னும் பேச வேண்டாம்ப்பா” முடிவாக உரைத்து விட்டாள்.
அன்றிரவு மகளை வருடி தட்டிக் கொடுத்து உறங்க வைத்தார் சுரேந்தர்.
மறுநாள் அவள் பெங்களூர் கிளம்பும் நேரம் அவள் முன் வந்து நின்றார் அவளின் தாய் சரோஜா.
அந்நேரம் உள்ளே வந்த அவளின் தந்தை சுரேந்தரிடம், “இங்க பாருங்க! சும்மா அவளுக்குச் சப்போர்ட் செஞ்சிட்டு இருக்காதீங்க! அதான் கேட்டேனே அன்னிக்கு அந்தப் பையன் போன்ல பேசியதை! ஏதோ கடனேனுல நீங்க கேட்குறதுக்குப் பதில் சொல்லிட்டு இருந்தான். இப்ப வரைக்கும், என்னிக்குனாலும் உங்க பொண்ணு தான் என் பொண்டாட்டி! கொஞ்ச நாள் பொறுத்திருங்க! எங்க வீட்டுல பேசி சமாதானம் செஞ்சிட்டு பேசுறேன்னு தைரியமா வந்து பேசியிருக்கானா?
எனக்கென்னமோ இவ தான் அவன் பின்னாடி சுத்தி காதலுனு அலைஞ்சிருப்பானு தோணுது. இல்லனா அவன் இவ்வளோ கண்டுக்காம இருந்தும் மானங்கெட்டு போய் என்னைக் கல்யாணம் செஞ்சிக்கோனு அவன் பின்னாடியே அலைவாளா?” எனக் கேட்டார்.
“அம்மாஆஆ” என அவளும்,
“சரோ” எனச் சுரேந்தரும் ஒரே நேரத்தில் அதட்டி கத்த,
“போதும் சரோ! ரொம்பப் பேசுற நீ! அவ உன் பொண்ணு! நீ இப்படிலாம் பேசுறனால அவ அவனை விட்டுட்டு வந்துடுவானு நினைச்சீனா அது பெரிய தப்பு! உன் பொண்ணு உன்னை விடப் பெரிய பிடிவாதக்காரி அதை மனசுல வச்சிக்கோ! இனி ஒரு நேரம் என் பொண்ணை இப்படிப் பேசின அவ்ளோ தான் என்ன செய்வேன்னே தெரியாது” கர்ஜனையாய் உரைத்தவர்,
“நீ வாம்மா” கண்ணில் நீர் வழிய உடல் பதற நின்றவளின் பையை எடுத்துக் கொண்டு அவளைக் கையோடு அழைத்துச் சென்றார்.
“அம்மா பேசியதை மனசுல வச்சிக்காதடா மதும்மா” பேருந்தில் அழுதவாறு அமர்ந்திருந்த மகளின் அருகில் அமர்ந்து தோளோடு அனைத்து ஆறுதல் உரைத்து தேற்றியப்பின்னே அங்கிருந்து சென்றார்.
மறுநாள் தாயின் பேச்சை இன்பாவிடம் அவள் உரைக்க, “இதை விட மோசமா எங்க அம்மா என் அண்ணியைப் பேசினாங்க” என்றான் இன்பா.