“எல்லா ஐடி கம்பெனிலயுமே செக்ஸ்யுவல் ஹாராஸ்மென்ட் பத்தின கம்ப்ளைண்ட்ஸ்க்குனு தனி ஹெச் ஆர் டீம் இருப்பாங்கல! அது மாதிரி அவன் கம்பெனில இருக்க ஹெச் ஆர்க்கு அவனைப் பத்தி ஒரு பிரைவேட் ஐடி கிரியேட் செஞ்சி அதுலருந்து ஒரு மொட்டை கடுதாசி போட்டேன். இதை நம்பலைனா அவன் கூட வேலை செய்ற பொண்ணுங்ககிட்ட அவனைப் பத்தி விசாரிக்கச் சொன்னேன். இப்படி இருக்க டீம்மோட முதல் ரூல்ஸ்ஸே வர்ற கம்ப்ளைண்ட்ஸ் அண்ட் ஸ்டாப் (staff) பத்தின டீடெய்ஸ்லாம் சீக்கிரட்டா மெயின்டெய்ன் செய்யனும்ன்றது தான்! நான் கொடுத்த கம்ப்ளைண்ட் உண்மைனு மத்த பொண்ணுங்களை விசாரிக்கும் போது தெரிய வந்தா கண்டிப்பாக ஆக்ஷன் எடுப்பாங்க. அப்படி உண்மை இல்லைனு விட்டுட்டாலும் நான் தான் கம்ப்ளைண்ட் கொடுத்தேன்னு அவங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாத மாதிரி தான் மெயில் போட்டிருந்தேன். சோ இதனால எனக்கு எந்த வகையிலும் பாதகம் இல்லனு தெரிஞ்ச பிறகு, எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சி தான் போட்டேன். ஆனா அவன் மேல் ஏற்கனவே நல்ல அபிப்பிராயம் இல்ல போலயே! அதான் உடனே ஆக்ஷன் எடுத்திருக்காங்க போல” என்று கூறிக் கொண்டவனோ,
“ஆமா உனக்கு எப்படி இது தெரிஞ்சிது?” எனக் கேட்டான்.
“இந்தியால எங்க கம்பெனில இப்ப இது தான் பரபரப்பான செய்தியா பரவிட்டு இருக்காம். அவன்கிட்ட வேலை செஞ்ச எல்லாப் பொண்ணுங்களையும் ஹெச் ஆர் தனியா கூப்பிட்டு வச்சு விசாரிச்சிருக்காங்க. நல்ல வேளை நான் பிளாக் பண்ணிட்டேன். சில பொண்ணுங்ககிட்ட இன்னும் அசிங்கமாலாம் பேசியிருப்பான் போல! அது ஹெச் ஆர் காதுக்குப் போய், கிளையண்ட்க்கு இவனைப் பத்தி தெரியுறதுக்கு முன்னாடி வர வச்சிடுவோம்னு உடனே வர சொல்லிட்டாங்களாம். என் டீம் மெட் தான் இன்னிக்கு காலைல சொன்னா! அதான் உன் வேலையா இருக்குமோனு கேட்க உடனே ஓடோடி வந்தேன்” என்றவளோ, மனம் நெகிழ, “தேங்க்ஸ் சுந்தர்” என்றாள்.
“உன்னைக் கட்டிக்கப் போற பொண்ணு கொடுத்து வச்சவ தான்!” என மனதார உரைத்தாள்.
புன்னகையுடன் அதனைக் கேட்டுக் கொண்டவனோ, “சரி! இன்னிக்கு என்ன பிளான்?” எனக் கேட்டான்.
“ஹ்ம்ம் என்ன பிளான்?” எனத் தாடையில் விரல் வைத்து யோசித்தவள், “இப்ப வரைக்கும் ஒரு பிளானும் இல்லை” என்றாள்.
“அப்ப இங்க இருக்கக் காமாட்சி அம்மன் கோவிலுக்குப் போலாமா?” எனக் கேட்டான்.
“ஜெர்மனியில காமாட்சி அம்மன் கோவிலா?” என ஆச்சரியமாய் அவள் வினவ,
“உனக்குப் பப்ளிமாஸ்னு பேரு வச்சதுல தப்பில்லைனு நொடிக்கொரு முறை நிரூபிக்கிற தெரியுமா நீ” எனக் கூறி வாய் விட்டுச் சிரித்தான் சுந்தர்.
அவனின் பப்ளிமாஸ் விளிப்பில் கோபமுற்றவளாய் அவன் மண்டையில் நங்கென்றுக் கொட்டினாள்.
“பிசாசு! இங்க எந்தக் கடையில என்ன சாப்பாடு நல்லா இருக்கும்னு பட்டியல் போட்டுக் கடை கடையா என்னைக் கூட்டிட்டு போனவ, இப்படிக் கோவில் இருக்கிறது பத்தி தெரியாம ஆச்சரியமா கேட்டா பப்ளிமாஸ்னு சொல்லாம வேற எப்படிச் சொல்ல” எனக் கொட்டிய இடத்தைத் தேய்த்தவாறு மேலும் அவளை அவன் வம்பிழுக்க,
“சோறு முக்கியம் பாஸ்! நான் அப்படிப் பார்த்து வச்சனால தான் வக்கனையா தின்னுட்டு இப்ப என்னை இப்படி வம்பிழுத்துட்டு இருக்க” என உதட்டை சுழித்து ஒழுங்கு காட்டினாள்.
“சரி நேரம் இல்ல நமக்கு! அந்தக் கோவிலுக்குப் போகவே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகும். சீக்கிரம் ரூம்க்குப் போய்க் கிளம்பு! நானும் கிளம்பிட்டு உன்னை வந்து பிக்கப் செஞ்சிக்கிறேன்”
“என்னது இரண்டு மணி நேரமா? இன்னிக்கே போகனுமா?” என அவள் சோம்பலாய் சுணங்க,
“உனக்கு நம்மூரு புளி சாதமும் பொங்கலும் வேணுமா வேண்டாமா?” என அவன் கேட்ட நொடி,
“ஹே அந்தக் கோவில்ல இதெல்லாம் தருவாங்களாடா” எனக் கண்கள் மின்ன கேட்டிருந்தாள் இவள்.
அவளின் கேள்வியில் அட்டகாசமாய்ச் சிரித்தவன், “தாங்கள் பப்ளிமாஸ் என்பதை நொடிக்கொரு முறை நிரூபிக்கிறீர்கள் மன்னா” எனக் கேலி செய்தான்.
“போடா எருமை! சரி நான் கிளம்புறேன்! நீ கிளம்பி என் ரூம்க்கு வா அங்கிருந்து ஒன்னா போய் டிரைன் ஏறிக்கலாம்” எனத் திட்டம் தீட்டியவளாய் தனது அறையை நோக்கிச் சென்றாள்.
சுந்தரராஜன் மதுர நங்கை இருவருமே பான் என்னும் நகரத்தில் வசித்திருந்தனர். அங்கிருந்து இரண்டு மணி நேர ரயில் பயணத்திற்குப் பின்பு தான் ஹாம் எனும் நகரத்தில் இருக்கும் அந்தக் காமாட்சி அம்மன் கோவிலை அடைய முடியும்.
இருவரும் இணைந்து அவரவர் பிராஜக்ட் பற்றிய உரையாடலுடன் ரயில் பயணத்தை முடித்து ஹாம் நகரை அடைந்து இரயில் நிலையத்தில் இருந்து அந்தக் கோவிலுக்கு நடந்து சென்றனர்.
“என்னடா திடீர்னு கோவிலுக்குப் போகனும்னு ஆசை? எதுவும் விசேஷமா?” எனக் கேட்டாள்.
ஆமெனத் தலையசைத்தவன், “இன்னிக்கு என் தங்கச்சி கல்யாணிக்கு பிறந்தநாள்” என்றான்.
“அடடா என்னவொரு பெயர் பொருத்தம்!” என்றவள்,
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
என டி ஆர் போலவே பாடியபடி நடக்க,
“ஹே இது என் தங்கை கல்யாணி படத்தோட பாட்டு இல்ல தங்கைக்கோர் கீதம் படத்துல வர பாட்டு” என்றான் சுந்தர்.
“அடேய் நீ 90ஸ் கிட்டா 80ஸ் கிட்டா! இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்க!” எனக் கேலி செய்தவளை பார்த்து முறைத்தான்.
இருவரும் கோவிலை அடைந்திருக்க, அடுத்து சாமியை வழிபடுவதில் கவனம் செலுத்தினர்.
பெரிய கோபுரத்துடன் தமிழ்நாட்டில் இருக்கும் கோவில் போன்றே இருந்த ஆலயத்தினுள் சென்றதும் ஒரு வித மன அமைதியை உணர்ந்தான் சுந்தர்.
உள்ளே நுழைந்ததும் விநாயகர் சன்னதி இருக்க, விநாயகரை வழிபட்டு விட்டு அம்பாளை வணங்கி தனது தங்கைக்காக அர்ச்சனை செய்தான். சுற்றியுள்ள மற்ற சந்நிதிகளையும் வணங்கியவர்கள், வெளியே பூங்கா அமைப்பில் அதன் நடுவில் பெரிய சிலையாய் அமைக்கப்பெற்ற வரதராஜ பெருமாள் சிலையினருகே சென்று கொண்டிருந்த போது,
“ஆமா உன் தங்கச்சிக்கு ஃபோன் செஞ்சி விஷ் பண்ணியா?” எனக் கேட்டாள் நங்கை.
“அதான் நான் என் ஃபேமிலில யார்கிட்டேயும் பேசுறது இல்லைனு சொன்னேனே” என்று இவன் கூறிக் கொண்டிருக்கும் போதே நங்கையின் அலைபேசியில் தவறிய அழைப்புகளாய் (missed call) வர, அதை எடுத்து பார்த்தவள்,
“அம்மா கால் செய்றாங்க சுந்தர்! இரு பேசிட்டுப் போகலாம்” என்றாள்.
சரி என அவர்கள் நடந்து கொண்டிருந்த வழியினிலேயே இருந்த பூங்கா மேஜை ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டனர்.
அவர்களுக்கு ஸ்கைப் மூலம் வீடியோ கால் செய்தவள், சுந்தரராஜனையும் தனது பெற்றோருடன் பேச வைத்தாள்.
ஏற்கனவே தாய் தந்தையரிடம் சுந்தரராஜனைப் பற்றி உரைத்திருந்தவள், இப்பொழுது வீடியோ கால் மூலம் அவனை அறிமுகம் செய்து வைத்து பேசியிருந்தாள்.
அவள் வீடியோ காலில் பேசி முடித்ததும், “உனக்குச் சென்ட்டிமென்ட்டா ஃபீல் ஆகாதா நங்கை” எனக் கேட்டான்.
“ஏன் சென்ட்டிமென்ட் ஃபீல்?” எனப் புரியாமல் அவள் கேட்க,
“இல்ல அப்பா அம்மாவை விட்டு இவ்ளோ தூரம் தள்ளி வேற எங்கேயோ இருக்க! அவங்க முகத்தை வீடியோ கால்ல பார்க்கும் போது எனக்கே மனசு கலங்குது! உனக்கு அவங்களை நேர்ல பார்க்கனும்ங்கிற மாதிரிலாம் ஃபீல் ஆகாதா! அவங்களும் உன்னை மிஸ் செய்றதா வேற சொன்னாங்களே” என வினவினான்.
“ஹ்ம்ம்ம்” எனப் பெருமூச்செறிந்தவளாய்,
“இது பழகி போச்சு சுந்தர்! அப்பா அம்மா இரண்டு பேருக்குமே சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை அதனால் நான் ஒரே ஸ்கூல்லயே படிக்கலை. எனக்குனு ஃப்ரண்ட்ஸ் இல்லை. தனியா இருந்து பழகி போய்டுச்சுனு சொல்லலாம். நான் ஒரே பொண்ணுங்கிறனால அண்ணன் தம்பி தங்கச்சினும் யாரும் இல்லாதனால இந்தத் தனிமை தான் எனக்குத் துணைனு இதை எனக்குப் பிடிச்ச மாதிரி மாத்திக்கிட்டேன். பிடிச்சதை தேடி தேடி சாப்பிடுறது, பிடிச்ச இடங்களுக்குப் போறது, பெயிண்ட் செய்றதுனு எனக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் செய்ய ஆரம்பிச்சி அப்படியே தான் என்னோட ஸ்கூல் லைஃப் முடிஞ்சிது. காலேஜ் லைஃப் மொத்தமா அவங்களை விட்டு வேற ஊருக்கு போய் அதுலயும் நல்ல அனுபவம். ஆனா அங்கே ரூம்ல எனக்கு நல்ல ஃப்ரண்ட்ஸ் கிடைச்சாங்க. இப்பவும் என் கூட டச்ல இருக்க ஃப்ரண்ட்ஸ் அவங்க தான். மே பி உன்னை மாதிரி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருந்தா உன்னைப் போல் எல்லாமே எனக்குச் செண்டிமெண்ட்டா ஃபீல் ஆகிருக்கும் போல” என மென்கையுடன் உரைத்தாள்.
“ஆனா உன்னோட செண்டிமெண்ட் உணர்வுக்குக் காரணம், மன பாரத்துக்குக் காரணம் நீ அவங்ககிட்ட சுத்தமா பேசாம இருக்கிறது தான் சுந்தர். நீ உன் குடும்பத்தை ரொம்ப மிஸ் செய்ற! இப்படி என்னை மாதிரி தினமும் அவங்ககிட்ட பேசிட்டு இருந்தா கூட உன் மனசு இவ்ளோ ஏங்காது! உனக்கு உங்க ஃபேமிலி கூட என்ன பிரச்சனைனுலாம் எனக்குத் தெரியாது. ஆனாலும் இப்படி நீ வீம்பு பிடிக்கிறது சரியில்லைன்னு தான் நான் சொல்வேன். விட்டு கொடுத்து போறவங்க கெட்டு போறதில்ல சுந்தர்” என்று அவனுக்கு அறிவுரை உரைக்க,
“என்னமோ போ! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்! அப்புறம் உன் இஷ்டம்” என்று மேஜையில் இருந்து எழுந்தவளுடன் தானும் எழுந்தவனாய் சற்று உயரமான அந்த வரதராஜ பெருமாள் சிலையினருகே சென்றான்.
“என் தங்கச்சி எப்பவும் சந்தோஷமா இருக்கனும். அவளுக்கானது எல்லாமும் அவளுக்குக் கிடைக்கனும்” எனத் தங்கைக்காக மனமுருக அவன் பெருமாளிடம் வேண்டிக் கொண்டிருக்க,
“இந்த சுந்தரை அவனோட குடும்பத்தோட சேர்த்துடுங்க பெருமாளே! வீணா வீம்பு பிடிச்சிட்டுத் திரியுறான்” என அவனுக்காக வேண்டி கொண்டிருந்தாள் இவள்.
இருவருமாய் வேண்டுதலை முடித்துச் சிறிது நேரம் அங்கே அமர்ந்து தியானித்து முடித்ததும், “வா சுந்தர்! எனக்குப் பொங்கல் புளியோதரை வாங்கித் தா” என அவனைப் பிரசாதம் விற்கும் இடம் எங்கே எனத் தேடியவாறு அழைத்துச் சென்றாள்.
“ஹே பப்ளிமாஸ்! நான் ஒன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டியே” என அடிக்குரலில் கேட்க,
“என்ன?” என நடையை நிறுத்தி இடையில் கை வைத்தவாறு அவனை முறைத்தப்படி கேட்டாள்.
“இங்க பிரசாத ஸ்டால்லாம் கிடையாது. பொங்கல் புளியோதரைலாம் விசேஷ நாட்கள்ல தான் தருவாங்க” என அவளை விட்டு சற்று தள்ளி நின்றவாறு மெதுவாய் உரைத்தான்.
“அடப்பாவி பொய் சொல்லி கூட்டிட்டு வந்தியா நீ” என அவனை அவள் அடிக்கத் துரத்த, இவனோ அவளிடம் இருந்து தப்பிக்கக் கோவிலை சுற்றியே ஓடிக் கொண்டிருந்தான்.
அவர்களின் வாழ்வில் அடுத்து நிகழப்போவதை அறிந்தவராய் இவர்களைப் புன்னகையுடன் பார்த்தவாறு நின்றிருந்தார் வரதராஜ பெருமாள்.