நங்கைக்குப் பிடித்தமான மாலிற்குச் சென்றவர்கள், அங்கிருந்த ஃபுட் கோர்ட்டில் அவளுக்குப் பிடித்த பீட்சா, ஐஸ்கிரீம், டோநட்டினை இரண்டு மூன்று கடைகளில் ஆர்டர் செய்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்தனர்.
“பிரேம்க்கு என்னாச்சு? ஏன் கண்ணுலாம் வீங்கி இவ்வளோ சோர்வா தெரியுறான். ஹாஸ்பிட்டல்லயே கேட்டதுக்கு அப்புறம் சொல்றேன்னு சொல்லிட்ட!” எனக் கேட்டாள்.
“ஹ்ம்ம் அவன் சூசைட் அடெம்ப்ட் செய்ய டிரை பண்ணான் நங்கை” என்றான் வருத்தம் நிறைந்த குரலில்.
“அய்யோ” அதிர்ச்சிக்குள்ளானவளாய் இவள் பதற, “ஏன் பரீட்சைல எதுவும் ஃபெயில் ஆகிட்டானா?” எனக் கேட்டாள்.
பிரேம் இளங்கலை மூன்றாம் ஆண்டுப் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் காண்பதற்கும் ஒல்லியாகப் பதின் பருவ வயதினர் போன்று இருப்பதால் அவனைப் பெரியவனாக இருவருமே எண்ணியதில்லை. சுந்தரராஜன் ஜெர்மனி வந்ததில் இருந்தே அவனுடன் பிரேம் தான் தனது அறையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறான்.
இவள் சுந்தரை காணச் செல்லும் சமயங்களில் பிரேமுடன் தம்பி போன்ற உரிமையுடன் தான் உரையாடுவாள்.
“என்னது லவ் ஃபெயிலியரா?” மீண்டுமாய் அதிர்ந்து போனாள் நங்கை.
“ஆமா நான் இங்க வந்தப்பவே நந்தா இவனைப் பத்தி சொல்லிட்டு இவன் கிட்ட பேச்சு வச்சிக்காத! நல்ல பழக்கம் எதுவும் கிடையாது இவன்கிட்டனு என்கிட்ட சொல்லிட்டு தான் போனாரு. நாள் ஆக ஆகத் தான் இவன் ரொம்ப வெள்ளந்தியான மனசார உண்மையான பையன்னு புரிஞ்சிது. எனக்குத் தெரிஞ்சி இவன்கிட்ட இருந்த ஒரே கெட்ட பழக்கம் சோசியல் டிரிங்கிங்னு அப்பப்ப ஏதாவது பார்ட்டி போய் மைல்ட்டா டிரிங்க் பண்றது தான். அப்புறம் இவன் இங்க வந்த நாள்லருந்தே ஒரு பொண்ணை லவ் பண்றான்னு தெரிஞ்சிது. எப்பவும் அந்தப் பொண்ணு கூடத் தான் போவான் வருவான். கிட்டதட்ட மூனு வருஷம் லவ்!” என்று இவன் கூறும் போதே,
“அந்தப் பொண்ணும் தெலுங்கா?” என இடையிட்டாள் இவள்.
“ஹ்ம்ம் ஆமா! அந்தப் பொண்ணு மேல உயிரா இருந்தான். அவங்க காதலை பத்தி நிறையச் சொல்லுவான். அந்தப் பொண்ணு இவங்க காலேஜ் இல்லை. அது வேற கோர்ஸ் வேற இடத்துல படிக்குது. இப்ப அந்தப் பொண்ணுக்கு இந்தியால வேலை கிடைச்சதும் இவன்கிட்ட இனி என்னைத் தொந்தரவு செய்யாத, அங்க என் அம்மா அப்பாகிட்டலாம் உன்னை லவ் செய்றேன்னு கூட்டிட்டுப் போய்க் காண்பிக்க முடியாது. இதோட நம்ம பிரேக்கப் பண்ணிக்கலாம்னு சொல்லிடுச்சாம்”
“ஓ மை கடவுளே! பிரேம்மை இங்க இவளோட பாதுகாப்புக்காகவும் தேவைக்காகவும் யூஸ் செஞ்சிருக்கா! அவளுக்கு இந்தியால வேலை கிடைச்சதும் இவனைக் கழட்டி விட்டுடாளா?” ஆதங்கத்துடன் கேட்டாள் நங்கை.
“ஆமா அதே தான்! அது வரை சோஷியல் டிரிங்கிங்னு அப்பப்ப குடிச்சிட்டு இருந்தவன் இரண்டு நாளாக மொட குடிகாரன் மாதிரி தண்ணியே கெதினு இருந்தான். இன்னிக்கு போதை தெளிஞ்சதும் சூசைட் செய்யப் போறேன்னு எனக்குப் போன் செய்தான். எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? உயிரே போய்டுச்சு நங்கை! லீவ் சொல்லிட்டு பதறியடிச்சிட்டு ரூம்க்கு ஓடி போனேன். அங்க போனா கையில் தூக்க மாத்திரையை வச்சிட்டு உட்கார்ந்திருக்கான். வந்த ஆத்திரத்துக்கு அறைஞ்சிருப்பேன். பாவமா போச்சு. இவன் சூசைட் செய்யப் போறதா என்கிட்ட சொல்லவும் நான் அந்தப் பொண்ணுக்கிட்ட சொல்லி இவனுக்காகப் பேசுவேன்னு நினைச்சான் போல! எனக்குனு வந்து வாய்க்கிறீங்களேடானு இருந்துச்சு. நான் அவனோட அம்மா அப்பாகிட்ட பேசிட்டேன். நாளைக்கு வந்து அவனைக் கையோட இந்தியாவுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டேன். சீக்கிரம் கிளம்புறேன்னு சொல்லிருக்காங்க” என்று பெருமூச்செறிந்தான் சுந்தரராஜன்.
“ஹ்ம்ம் இதுக்குத் தான் சோசியல் டிரிங்கிங்னு கூடத் தண்ணி அடிக்கக் கூடாதுனு சொல்றது. என்னிக்காவது வாழ்க்கைல கஷ்டமான சூழ்நிலையை ஹேண்டில் செய்ய முடியாம போகும் போது அந்தப் போதையைத் தான் மனசு கேட்கும். அப்படிக் குடிக்காரன் ஆனவங்களைலாம் நான் பார்த்திருக்கேன் நங்கை” தன் மனப்பொருமலை ராஜன் கூறிக் கொண்டிருக்க,
“எனக்கு ராம் சொன்ன மாதிரியே ஒரு இன்சிடென்ட் கண்ணெதிரே நடந்துடுச்சேனு அவர் சொன்னது தான் மைண்ட்ல ஓடுது” என்றாள் நங்கை.
“ஆமா பனமரத்துக்குக் கீழே நின்னு இளநீரை குடிச்சாலும் கள்ளுனு நினைப்பாங்கல. அதே மாதிரி தான் நீயும் நானும் இந்தக் காலச் சூழல்ல பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்ஸா தான் பழகுறோம்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க” என்றான் ராஜன்.
இவர்கள் ஆர்டர் செய்த உணவுகள் தயாராகி இருக்க, இவர்கள் சென்று அதனை எடுத்து வந்து தங்களது இடத்தில் உண்ண தொடங்கினர்.
“இந்தக் காதல் எப்படி எவ்ளோ தைரியமானவங்களையும் கோழையான முடிவை எடுக்க வச்சிடுது பாரேன். பிரேம் எவ்ளோ ஸ்ட்ராங் பெர்சன். எப்பவும் சிரிச்சிட்டே கிண்டல் கேலி செய்துட்டு எவ்ளோ ஜாலியா சுத்திட்டு வருவான். அவனுக்கு எவ்ளோ லட்சியங்கள் இருக்கு. அவனா இப்படித் தற்கொலை முடிவை எடுத்தான்னு நம்பவே முடியல சுந்தர்” நம்ப முடியாத பாவனையில் மனதின் ஆதங்கத்தினைக் கூறி கொண்டிருந்தாள் நங்கை.
“அதைக் காதலிச்சவங்க கிட்ட தான் கேட்கனும்” எனச் சிரித்த சுந்தர், “உனக்கு என்ன ஆசை நங்கை? லவ் மேரேஜ் ஆர் அரேஜ் மேரேஜ்?” எனக் கேட்டான்.
“எதுவா இருந்தாலும் ஒருத்தரையே காதலிச்சுக் கல்யாணம் செஞ்சிக்கனும். ஒருவனுக்கு ஒருத்தியை போல ஒருத்திக்கு ஒருவனாக இருப்பவனா இருக்கனும். அது லவ்வா இருந்தாலும் சரி அரேஜ்ட்டா இருந்தாலும் சரி எதுனாலும் ஓகே” என்றாள்.
“உனக்கு?” எனக் கேட்டாள் நங்கை.
“எனக்கு என் அண்ணா தங்கை பார்த்து வைக்கிற பொண்ணைத் தான் கட்டிக்கனும்னு காலேஜ் முடிக்கிற வரைக்கும் நினைச்சிட்டு இருந்தேன். இப்ப அவங்களே என் குடும்பம் இல்லனு ஆனப்பிறகு நானே எனக்குப் பிடிச்ச பொண்ணைப் பார்த்து கட்டிக்க வேண்டியது தான்” என்றான்.
“குடும்பமே இல்லாம அவனவன் கஷ்டப்பட்டுட்டு இருக்கும் போது, உனக்குனு ஒரு குடும்பம் அதுவும் எவ்ளோ பாசமா உன்னை வளர்த்திருந்தா இப்ப வரைக்கும் அவங்களை நினைச்சிக்கிட்டு கவலைப்பட்டுட்டு இருப்ப! அப்படியான குடும்பத்தை இப்படி முரட்டடியா ஒதுக்கி வைக்கிறது சரியில்லைன்னு தான் நான் சொல்வேன். அதனால் தான் நீயே சமாதானமாகி பேசிடுனு தினமும் உன்னைப் பேச சொல்லி வற்புறுத்திட்டு இருக்கேன். சரி தெரியாம தான் கேட்குறேன், அப்படி என்ன தான் உனக்கும் உங்க அண்ணனுக்கும் பிரச்சனை?” எனக் கேட்டாள்.
ஆழ்ந்த மூச்சை வெளியே விட்டவனாய் குடும்பத்துடனான தனது விலகலுக்கான காரணத்தைக் கூறலானான்.
எதற்காக நங்கை இவனின் குடும்பத்துடன் இவனைச் சேர்த்து வைக்க முனைகிறாள் எனத் தெரிய வந்த போது கோபமடைந்தான் சுந்தரராஜன்.
“அண்ணா ஒன்னும் செய்யலை. எனக்கே தெரியாம என்னை வச்சி என் அண்ணணை ஏமாத்தி சொத்தெல்லாம் வாங்கிட்டாங்க என் அம்மா அப்பா! மதுரைல புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாத்திர கடை வியாபாரம் செஞ்சிட்டு இருக்கக் குடும்பம் எங்களுடையது. எங்க அம்மா அப்பாக்கு நான் ஒரே பையன் தான் நங்கை. என் பெரியப்பாவோட பிள்ளைங்க தான் சுந்தரேஸ்வரனும் கல்யாணியும். அவங்களைத் தான் நான் என் அண்ணா தங்கச்சினு சொல்றது. நாங்க கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்துட்டு இருந்தோம். கல்யாணி பிறந்து இரண்டு மூனு வருஷத்துல ஆக்சிடெண்ட்ல பெரியப்பா இறந்துட்டாங்க. பெரியம்மா தான் வீட்டு வேலைலாம் செய்வாங்க. அம்மா, அப்பா கூடச் சேர்ந்து கடை வேலைலாம் பார்த்துப்பாங்க. அதனால பெரியம்மா கையால சாப்பிட்டது தான் அதிகம். சின்ன வயசுலருந்தே டிவின்ஸ் போல ஒரே ஸ்கூல் ஒரே காலேஜ்னு ஒன்னாவே வாழ்ந்துட்டு இருந்த எங்களைப் பிரிச்சது எங்க அம்மா தான். அவங்களோட பேராசை தான். காலேஜ் படிக்கும் போது அண்ணா பேர்ல சொத்து வாங்க போறதா சொல்லி என்கிட்ட சில பத்திரங்களைக் கொடுத்து அண்ணாகிட்ட சைன் வாங்க சொன்னாங்க. நானும் அம்மா அப்பா மேல உள்ள நம்பிக்கைல அதைப் படிக்கலை. அண்ணாவும் என் மேல் இருந்த நம்பிக்கைல அதைப் படிக்காம கையெழுத்து போட்டான். எனக்கு ஐடி ஜாப் தான் கனவா இருந்தனால நான் கேம்பஸ்ல செலக்ட் ஆகி வேலைக்குச் சேர்ந்துட்டேன். அண்ணாக்குப் பிசினஸ் செய்ய ஆசை இருந்தனால அதுக்காகப் பணம் வேணனும்னு சில சொத்துக்களை விற்கலாம்னு அம்மா அப்பாகிட்ட கேட்கும் போது தான் அண்ணா பேருல எந்தச் சொத்துமே இல்லைனு எங்க எல்லாருக்குமே தெரிஞ்சிது” இத்தனை நேரமாய் இறுகிய முகத்துடன் வருத்தமான குரலில் தனது குடும்பக் கதையைச் சுந்தரராஜன் கூறிக் கொண்டிருக்க,
“ஓ மை காட்! எவ்ளோ பெரிய துரோகம்! உங்க அண்ணனுக்கு மட்டுமில்ல உனக்குமே இது எவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகம்! உன் அண்ணன் நீ தான் வேணும்னே எழுதி வாங்கிட்டனு சொல்லி திட்டிட்டாரா?” அசையாது எங்கோ வெறித்தப்படி அமர்ந்திருந்த ராஜனை கலைத்தாள்.
“ஹ்ம்ம்” துக்கம் தொண்டையை அடைக்க அன்றைய நாளின் நினைவுகள் நெஞ்சை அழுத்த ஆமெனத் தலையசைத்தவன்,
“அண்ணா பெரியம்மாவையும் தங்கச்சியையும் கூட்டிட்டு வீட்டை விட்டு வெளிய போய்ட்டாங்க. இந்தப் பிரச்சனை நடந்தப்ப நான் சென்னைல இருந்தேன். அப்ப தான் வேலைக்குச் சேர்ந்து கொஞ்ச மாசம் ஆகியிருந்துச்சு. என் ஃப்ரண்ட் தீரன் மூலமாகத் தான் இதைத் தெரிஞ்சிக்கிட்டேன்” என்று நிறுத்தியவன்,
“அப்ப என் மனசு எவ்ளோ கஷ்டப்பட்டுச்சு தெரியுமா! என் அம்மா அப்பாவே எனக்குத் துரோகம் பண்ணிட்டாங்களேனு நான் அழுது கரைஞ்சது எனக்குத் தான் தெரியும் நங்கை. திடீர்னு நடுரோட்டுக்கு போன மாதிரி வீட்டை விட்டு எங்கே போகன்னே தெரியாம குடும்பத்தோட அண்ணன் வெளிய போனதை கேட்டதும், ‘உனக்கு நான் இருக்கேன் அண்ணே! எனக்கு அந்த அம்மா அப்பா வேண்டாம். அந்தச் சொத்து வேண்டாம். உங்களுக்கு உறுதுணையா பக்கபலமா நான் இருக்கேன் அண்ணேனு சொல்ல தான் உடனே மதுரைக்குக் கிளம்பினேன். எனக்கான ஆறுதல் என் அண்ணன்கிட்ட கிடைக்கும்னு நம்பி கிளம்பினேன். ஆனா அவன் என்னைப் பார்த்ததும் இன்னும் என்னத்தைப் பறிக்கிறதுக்கு உங்க அம்மா உன்னை அனுப்பி வச்சிருக்காங்கனு கேட்டான். என்னை அவன் நம்பலை நங்கை” தொண்டை குழி ஏறி இறங்க அழுகையை அவன் அடக்குவது அப்பட்டமாய்த் தெரிந்தது நங்கைக்கு.
“காம் டவுன் சுந்தர்! ரிலாக்ஸ்” என அவன் கை மீது கை வைத்து தட்டியவாறு ஆற்றுபடுத்தினாள். நீர் அளித்து அருந்த வைத்தாள். சற்று இடைவெளி விட்டு தன்னிலை அடைந்தவன், “அவன் அப்படிப் பேசின கோபத்துல ஏமாற்றதுல நானும், என்னை நம்பாம போய்ட்டல! உன் தம்பியை நம்பாம போய்ட்டல! என்னை நம்பாத என் அண்ணன் எனக்கும் தேவையில்லை! இனி நீ யாரோ நான் யாரோ! உன் வாழ்க்கைல ராஜானு ஒருத்தன் இல்லவே இல்லைனு சொல்லிட்டு வந்துட்டேன். சரியா அந்தச் சமயம் இந்த ஆன்சைட் வாய்ப்பு வரவும், அவங்களை விட்டு தள்ளி வரதுக்கு இதைப் பயன்படுத்திக்கிட்டேன்” என்று கூறி அமைதியானான்.