வேதா இதழ்களில் புன்னகை நெளிய நிமிர்ந்து அத்தை வீட்டைப் பார்த்தாள். பால்கனியில் நின்றிருந்த அவளின் அண்ணியும் அந்நேரம் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரின் பார்வையும் சந்திக்க, சட்டென முகத்தை திருப்பிக் கொண்டு வீட்டினுள் சென்று மறைந்தாள் அண்ணி.
“எல்லாம் இந்த விஜய் அண்ணாவால இந்த வீட்டுக்கு வர வேண்டியதா இருக்கு. இல்லனா நான் எல்லாம் இவங்க வீடு இருக்க திசை பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்” முணுமுணுத்து கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.
“யாரு வேதாவா? வாம்மா.” மாமா அழைக்க, அந்தச் சத்தத்தில் அத்தை அறையினுள் இருந்து வெளியில் வந்தார்.
அவர் பேசும் முன் வேதாவே முந்திக் கொண்டு, “நல்லா இருக்கீங்களா மாமா, நீங்க எப்படி இருக்கீங்க அத்த?” என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்து நலம் விசாரித்தாள்.
“ம்ம், இருக்கோம்” என்ற அத்தையின் பதிலில் அப்படியே திரும்பி வீட்டுக்கு ஓடி விடும் உத்வேகம் அவளுக்கு எழ, அதை மறைத்து சிரித்து வைத்தாள் வேதா.
“வர்ஷி, இங்க வா” என்ற அண்ணனின் குரலில் திரும்பிப் பார்த்து புன்னகைத்து, கையில் இருந்த பழங்கள் அடங்கிய பையை அத்தையிடம் நீட்டினாள்.
“என்கிட்ட ஏன் குடுக்கிற? உங்க அண்ணிக்கு தானே வாங்கிட்டு வந்த? அவக்கிட்ட நீயே குடு” அவள் நீட்டிய பையை வாங்காமல் நகர்ந்து விட்டார் அவர்.
வேதா வேறு வழியின்றி சமையல் அறை வாசலில் நின்றிருந்த அண்ணியிடம் சென்று பையை கொடுத்தாள்.
“எப்படி இருக்… இருக்கீங்க அண்ணி ஹெல்த் எப்படி இருக்கு?” அத்தை மகளாக பெயரிட்டு, ஒருமையில் அழைத்தே பழகியிருந்தாள். இப்போது மரியாதை விளிப்பு அத்தனை எளிதாய் வரவில்லை. பல மாதங்களாக முயல்கிறாள். ஆனாலும், முடியவில்லை.
“ம்ம்.” என்ற அண்ணியின் பதிலுக்கு மேலே என்ன பேச என்று தெரியாமல் வேதா முழிக்க, “வர்ஷி” என்று அழைத்தான் விஜய். அவளுக்கு இந்த சோக கீதம் வாசித்த அத்தை வீட்டினரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்றிருக்க, அண்ணனிடம் சென்றாள்.
“என்னாச்சு ண்ணா? ஏன் எல்லோரும் ஒரு மாதிரி சோகமா இருக்காங்க?” அவள் கேட்க, அவனிடம் பதிலில்லை.
“சாப்பிட்டியா?” என்று தங்கையை விசாரித்தான் அவன்.
“ம்ம். சாப்பிட்டு தான் வந்தேன் ண்ணா” அவள் வேகமாக பதில் கொடுக்கவும், “என்ன சாப்பிட்ட?” என்று குறுக்கு விசாரணை செய்தான் விஜய்.
வேதா மதிய உணவு உண்டிருக்கவில்லை. வெற்றியின் வீட்டில் காஃபி, சிற்றுண்டி சாப்பிட்டிருந்தாள். ஆனால், அதை அண்ணனிடம் சொல்ல முடியாதே. ஆக, “நான் தான் சாப்பிட்டேன்னு சொல்றேன் இல்ல ண்ணா. நீயென்ன நம்ப மாட்டியா?” என்று சமாளித்தாள் அவள்.
மெலிதான சிரிப்புடன் தங்கையின் முகம் பார்த்தான் விஜய்.
“சரி, என்ன சாப்பிட்ட சொல்லு. கேட்போம்”
“மறந்துப் போச்சு” என்று சிரித்தபடி கையை விரித்து சொன்ன வேதாவிற்கு, வெற்றியின் வீட்டில் உண்ட வடை, கேசரி, கேக் என அனைத்தும் வரிசையாக ஒன்று விடாமல் நினைவில் வந்தது.
கூடவே வெற்றியும் வந்தான். அவனது அறையை சுற்றிக் காட்டினான். “உன்கிட்ட முக்கியமான நிறைய விஷயங்கள் சொல்லணும் வேதா” என்று அவளின் கைப் பிடித்து அவனைப் பற்றி நிறைய, நிறைய பகிர்ந்து கொண்டான். ஒற்றை நொடியில் ஆவடி சென்று அவள் வெற்றியுடன் நடந்துக் கொண்டிருக்க, “வர்ஷி, வெளில சாப்பிட போவோமா?” என்று கேட்டான் விஜய்.
அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு நிகழ்விற்கு வந்து அண்ணனை திரும்பிப் பார்த்தாள் வேதா.
“என்னாச்சு ண்ணா? வீட்ல ஏதாவது பிரச்சனையா?” அவள் கேட்க, மறுப்பாக தலையசைத்தான் விஜய். அவன் பால்கனியை நோக்கி நடக்க அவளும் பின் தொடர்ந்தாள். அங்கிருந்து பார்க்க, வெற்றி அவளை இறக்கி விட்ட இடம் தெளிவாக தெரிந்தது.
ஒரு நொடி இதயம் எகிறித் துடிக்க, எச்சில் கூட்டி விழுங்கினாள் வேதா. அண்ணி அவர்களை பார்த்திருப்பாளோ என்ற சந்தேகம் வர, பார்த்தால் என்ன? எப்படியும் வீட்டில் சொல்லத் தானே போகிறோம் என்று தன்னைத் தானே திடப்படுத்தி சமாதானப்படுத்திக் கொண்டாள் அவள்.
வேதா என்றைக்குமே அத்தை வீட்டில் சாப்பிட விரும்ப மாட்டாள். அப்படியே சாப்பிடும் நிலை வந்தாலும், ஒன்று எப்படியாவது தவிர்க்க பார்ப்பாள். இல்லையேல் ஒரு அளவோடு உண்டு எழுந்து விடுவாள் என்பதை நன்றாக அறிவான் விஜய். அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவளுக்கு சரியாக உண்ண கொடுக்கவில்லை என்று தான் முதன்முதலில் அத்தையிடம் வாயாடினாள் தங்கை.
அதே நேரம் அவனுக்கு தனிக் கவனிப்பு கொடுத்த அத்தையை அவளுக்கு அதிகமாக பிடிக்காமல் போனதில் அவனுக்கு ஆச்சரியம் ஏதுமில்லை.
“வேதா.. இந்தா.. ஜூஸ் குடி” ஒரு தட்டில் மூன்று பழச்சாறு நிரம்பிய குவளைகளுடன் அங்கே வந்தாள் அண்ணி.
“தேங்க்ஸ் அண்ணி” என்று வேதா ஒன்றை எடுத்துக் கொள்ள, விஜய் மௌனமாய் மனைவி கையில் இருந்து வாங்கி அருந்த தொடங்கினான்.
அண்ணா, அண்ணிக்கு நடுவில் அதிக சத்தமாக இருந்த மௌனம் அவள் காதில் அறைந்து தொந்தரவு செய்தது.
அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கூட முடியாத நிலையில், இதென்ன மௌன விரதம்? என்று கோபமாக வந்தது. ஆனால், அவரவர் பிரச்சனை அவரவருக்கு பெரியது. அதில் தான் தலையிட முடியாது என அமைதியாய் இருவரையும் பார்த்திருந்தாள் வேதா.
அண்ணி அங்கு நிற்கும் போதே, “எனக்கு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ண்ணா” மெல்லிய தயக்கத்துடன் சொன்னாள். அங்கு நிலவிய ஒருவித சோக சூழல், அவளின் காதலை பற்றி பேச சரியான நேரமில்லை என்று அவளுக்கு உணர்த்தவே செய்தது. ஆனாலும், அண்ணனிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை வேதா.
அதிலும், அண்ணி அவர்கள் ஒன்றாக வந்து இறங்கியதை பார்த்திருக்கும் வாய்ப்புகள் இருக்கும் போது, அண்ணனிடம் இப்போதே சொல்லி விடுவது உத்தமம் என்று நினைத்தாள் அவள்.
அவள் அண்ணனின் முகம் பார்க்க, “நானும் உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும் வர்ஷி” என்றான் விஜய்.
“ம்ம். சொல்லு ண்ணா” என்றாள் வேதா. மற்ற நேரமாக இருந்திருந்தால், “நான் தான் முதலில் சொல்வேன்” என்று குதித்திருப்பாள். இப்போது நிதானமாக கேட்க, விஜய் தங்கையை நேராகப் பார்த்து, “காலைல அப்பா பேசினார். உனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை ஃபோட்டோ எல்லாம் எனக்கு அனுப்பி இருக்கார். வீட்ல ஒரு மூனு பேரை ஓகே பண்ணியிருக்காங்க. என்னோட ஒப்பினியன் கேட்டாங்க.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அறை வாசலில் வந்து நின்று, “சாப்பிட வாங்க மாப்பிள்ளை. நீயும் வா வேதா” என்று சத்தமாக அழைத்தார் அத்தை. விஜய்யின் பேச்சு அப்படியே தடைப்பட்டுப் போனது.
வேதாவிற்கு மனம் படபடவென அடித்துக் கொண்டது. அப்பா மாப்பிள்ளை பார்த்து விட்டாரா? என்று அவள் தவித்துக் கொண்டிருக்க, “வா வேதா. சாப்பிட போகலாம்” என்று அழைத்தாள் அண்ணி.
“இப்போ தானே ஜுஸ் குடிச்சோம். எனக்கு லஞ்ச் வேண்டாம் அண்ணி. கொஞ்ச நேரம் போகட்டுமே” காரணத்தோடு மறுத்தாள் வேதா.
உணவு மேஜையில் தயாராக உணவு பாத்திரங்கள் நிறைந்திருந்தாலும், இரட்டை சோபாக்களை நிறைத்திருந்தவர்களின் கண்கள் தொலைக்காட்சியின் மேலேயே பதிந்திருந்தது.
“அப்புறம் வேதா, பேங்க் வேலை எல்லாம் எப்படி போகுது?” மாமா பார்க்கும் போதெல்லாம் கேட்பதை போன்று இன்றும் விசாரிக்க, “நல்லா போகுது மாமா” புன்னகையுடன் பதில் சொன்னாள் வேதா.
“அசிஸ்டன்ட் மேனேஜர். சொல்லவே பெருமையா தான் இருக்கு. அப்புறம், எப்போ உன் வேலை பெர்மனன்ட் ஆகும்?” பத்தாவது முறையாக பாராட்டி கேட்கிறார் மாமா.
“ரெண்டு வருஷம் ஆகணும் மாமா. எனக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கு” கணக்குடன் பதில் சொன்னாள்.
“ம்ம். என்ன பெரிய பேங்க் வேலை? உனக்கு பார்க்கிற வரன் எல்லாம் பேங்க் வேலை பார்க்கிற பொண்ணான்னு கேட்டு வேணாம்னு சொல்றானுங்களாம். உங்கம்மா புலம்பிட்டு இருந்தா” திடீரென்று அத்தை சொல்ல, வெடுக்கென்று அலைபேசியில் இருந்து நிமிர்ந்து அவரைப் பார்த்தான் விஜய்.
“சின்ன பிள்ளை கிட்ட போய் என்ன பேசிட்டு இருக்க நீ? பொண்ணுக்கு வரன் பார்க்கும் போது ஆயிரம் நொள்ளை நொட்டை வரும் தான். அதையெல்லாம் பசங்க கிட்ட சொல்லலாமா?” அத்தையை கடிந்து கொண்டார் மாமா.
‘நீங்க இந்த வீட்ல வாக்கப்பட வேண்டிய ஆளே கிடையாது மாமா’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் வேதா.
அத்தை கணவரை முறைத்து முகத்தை கோபமாக திருப்பி தொலைக்காட்சியை பார்த்தார்.
அடுத்த கணமே திரும்பி அவளைப் பார்த்து, “இந்த வாரம் வீட்டுக்கு போகலையா நீ?” என்று கேட்டார்.
“போகல அத்த. அம்மா என்னை வீணா அலைய வேண்டாம்னு சொன்னாங்க. அடுத்த வாரம் இல்லனா அதுக்கு அடுத்த வாரம் லீவ் இருக்கும். அப்போ வீட்டுக்கு போகணும்” வேதா சொல்ல,
“ஓஹோ?” என்று நக்கலாக சொல்லி, “இந்தா இருக்க விருதுநகருக்கு போறது ரொம்ப தூரமா? உனக்கு அது அலைச்சலா?” அவர் கோபம் போல கேட்க,
“இல்லத்த..” என்று தொடங்கினாள் வேதா. அவர் எங்கே அவளை பேச விட்டார்.
“உங்க அண்ணியை.. உடம்பு சரியில்லாத உங்க வீட்டு மருமகளை எப்படியும் போன்னு என் கூட இங்க அனுப்பிட்டு, அவங்க ஊருக்கு கிளம்பியாச்சு. அவ்ளோ தான் உங்கம்மாக்கு மருமக மேல அக்கறை. இதுவே உனக்கு ஒன்னுன்னா இப்படி அம்போன்னு விட்டுட்டு போவாங்களா? இவ ஊருக்கு போறது அலைச்சலாம்.. அலைச்சல். இங்க ஒருத்தி இரண்டு மாச பிள்ளை கலைஞ்சு அழுதுட்டு இருக்கா. அது பெருசா தெரியல. நாளைக்கு உனக்கு இப்படி ஆனா…” அத்தை ஆவேசமாக பேசிக் கொண்டே போக , “அத்த.. என்ன பேசுறீங்க?” என்று அவரை அதட்டி அடக்கினான் விஜய்.
“அதானே. இந்த மகாராணியை பேசிட கூடாதே. இவளுக்கு மட்டும் எப்பவும் தனி ரூல்ஸ் உங்க வீட்ல” முகத்தை திருப்பி மகளைப் பார்த்து புலம்பினார் அவர்.
அத்தை சொல்வது போல அவள் வீட்டில் அவளுக்கென்று தனி விதிகள் உண்டு தான். அவளை வீட்டிலேயே விலங்கு பூட்டி, கட்டிப் போட்ட விதிகள் அவை. ஒவ்வொரு முறையும் அதை உடைக்க எத்தனை போராடி இருக்கிறாள் அவள் என்பது அவளுக்கும் தெரியும். அவருக்கும் தெரியும். அதனால் அவர் பேசுவது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை.
அசௌகரியமான அமைதியுடன் அமர்ந்திருந்தாள் வேதா. அண்ணனை பார்த்தாள். அவன் கோபமாக அமர்ந்திருப்பது தெரிந்தது.
அந்த வீட்டில் நிலவிய சோகத்தின் காரணம் புரிய, அவளால் எந்த ஆறுதலும் சொல்ல முடியவில்லை. அவளை விட அனைத்தும் அறிந்தவர்கள் அவர்கள். அதனால் அமைதியாய் திரும்பி அண்ணியை பார்த்தாள். அவளோ, வேதாவின் முகத்தையும், அவளின் அலைபேசியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன்னை விட்டா தேவையில்லாத பேச்சு தான் பேசிட்டு இருப்ப. முதல்ல வந்து சாப்பாட்டை போடு.” என்று மனைவியிடம் சொல்லி, “மாப்பிள்ளை, வேதா, சாப்பிட வாங்க”. மாமா அழைக்க, அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.
அரை மணி நேர தண்டனைக்கு பின் அண்ணனின் அறைக்கு வந்தாள் வேதா.
அவளுக்கு அண்ணன், அண்ணியை பார்க்க பார்க்க வருத்தமாக இருந்தது.
அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவர்களுக்கு இடையில் அதீத பிரியம் இருந்திருக்கிறது. அது நேசம், காதல் என்று பலக் கட்டங்களை கடந்து தான் கல்யாணத்திற்கு வந்தது. ஆனால், கல்யாணம் ஆனதும் இத்தனை வருடங்களாக அவர்களுக்குள் இருந்த அந்த காதல் எங்கே காணாமல் போனது? எப்படித் தொலைத்தார்கள் அதை?
அவர்களுக்கு நடுவில் காதலின் தடம் மட்டுமே இருக்க, வேலை, அவளின் எதிர்காலம் என பல காரணங்களுக்காக வெற்றிக்கு சம்மதம் சொல்லி இருக்கிறாள் வேதா. நாளை, எங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று இப்போதே சிந்திக்க ஆரம்பித்தாள் அவள்.
“வர்ஷி, அத்தை பேசினதை மனசுல வச்சுக்காத” பால்கனியில் சாய்ந்து நின்றிந்த தங்கையின் தோளில் கைப் போட்டு சொன்னான் விஜய். அவளுக்கு அத்தையின் இந்தப் பேச்சு ஒன்றும் புதிதில்லையே.
“அத்தை பேசுறது எல்லாம் பெருசா எடுத்தா..” என்று ஆரம்பித்து, நாக்கை கடித்து பேச்சை நிறுத்தினாள் வேதா. விஜய் சிரித்து தங்கையின் தலையில் செல்லமாக கொட்டினான்.
“அவங்க இப்போ தான் என் மாமியார். ஆனா, எப்பவும் நமக்கு அத்தை தான். உனக்கு அவங்களை பேச எல்லா உரிமையும் இருக்கு” அவன் சொல்ல, மறுப்பாக தலையை அசைத்தாள் வேதா.
“எனக்கு நைட் ஹைதராபாத் ப்ளைட். நான் ஏர்போர்ட் போகணும் வர்ஷி. எனக்கு பத்து நிமிஷம் குடு. நான் கிளம்பி வர்றேன். உன் வீட்டுக்கு போய்ட்டு அப்படியே அங்கருந்து நான் போய்க்கிறேன்” விஜய் சொல்ல, “இல்ல ண்ணா. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருப்போம். நீ அண்ணி கிட்ட பேசு முதல்ல” என்றாள் வேதா.
“அவளை பார்க்க தான் நான் சென்னை வந்தேன். அவ இப்படி மூஞ்சியை காட்டிட்டு இருந்தா, என்ன பேசுறதாம்?” கோபத்துடன் சொன்னவன், தங்கையின் முகம் பார்த்து சங்கடமாக புன்னகைத்தான்.
“அண்ணிக்கு எதுவும் பெரிய பிரச்சனையா ண்ணா?” அவர்களின் நடவடிக்கை அவளை அப்படி கேள்வி கேட்க வைத்தது.
“ச்சே ச்சே இல்லடா” என்று சிரித்த விஜய், “அவளுக்கு இங்க பிரச்சனை” என்று வேதாவின் நெற்றியை சுட்டிக் காட்டினான் விஜய்.
“நான் தனியா இருக்கேன். நீங்க ஜாலியா வேலைக்கு போறீங்கன்னு ஆரம்பிச்சு.. என் கூட படிச்ச அவ வேலைக்கு போறா, இவ வேலைக்கு போறான்னு புலம்பி.. இப்போ உங்க தங்கச்சி கவர்மெண்ட் வேலைக்கு போறா. ஆனா, என்னைப் பாருங்க வெட்டியா வீட்ல இருக்கேன்னு ஒரே புலம்பல். சரின்னு, நீயும் வேலைக்கு போன்னு சொன்னா.. அம்மா வேணாம் சொல்றாங்க. ஆட்டுக்குட்டி வேணாம் சொல்றாங்கன்னு.. ஷப்பா முடியல” வயதில் இளையவள் என்பதால் பொதுவாக இதையெல்லாம் பற்றி பகிராதவன், இன்று ஏதோ ஒரு மனநிலையில் மொத்தத்தையும் அவளிடம் கொட்டினான்.
“இந்த அத்தை பண்ற தொல்லையால இப்போ அழுதுட்டு இருக்கா. இவளை.. ” என்று அவன் பல்லைக் கடிக்க, அண்ணனை கரிசனத்துடன் பார்த்தாள் அவள்.
“அதான் காலைல அப்பா பேசும் போது முடிவா சொல்லிட்டேன். உனக்கு இப்போ கல்யாணம் வேணாம்னு…”
“விஜய் ண்ணா” பளிச்சென முகம் மகிழ்ச்சியில் மலர, கிட்டத்தட்ட கத்தியிருந்தாள் அவள்.
“ம்ம். ஆமா, வர்ஷி. என்ன அவசரம் இப்போ? உன் கல்யாணத்தை பொறுமையா பண்ணலாம்னு அப்பா கிட்ட சொல்லிட்டேன். அப்பா அவரோட விருப்பப்படி மாப்பிள்ளை பார்க்கட்டும். ஆனா, உனக்கு பிடிச்சு, உனக்கு சம்மதம்னா மட்டும் தான் அடுத்த கட்டத்துக்கு போறோம். அதுக்கு மாசம் என்ன, வருஷமானா கூட சரி தான். நீயென்ன சொல்ற?”
“எப்போல இருந்து நீ இவ்வளவு நல்ல அண்ணனா மாறின விஜய் ண்ணா?” சிரிப்புடன் அவள் கேட்க, அவள் காதை பிடித்து திருகினான் விஜய். வலிப்பது போல நடித்துக் கத்தினாள் வேதா. அவர்களையே இமைக்காமல் பார்த்தபடி அவர்களை நோக்கி நடந்து வந்தாள் அண்ணி. சட்டென அண்ணியை நிமிர்ந்து பார்த்தாள் வேதா.
“ஏதோ முக்கியமான விஷயம் உங்கண்ணா கிட்ட சொல்லணும்னு சொன்னியே வேதா, சொல்லிட்டியா?” அவள் கேட்க,
“ஆமால்ல. சொல்லு வர்ஷி” என்று விஜயும் கேட்டான். அண்ணியை பார்த்துக் கொண்டே, “அது.. இன்னொரு நாள் சொல்லவா ண்ணா.” கண்களை சுருக்கி கெஞ்சலாக கேட்டாள் வேதா.
கண்களில் தொக்கி நின்ற கேள்வியுடன் அவளையே பார்த்திருந்தான் விஜய்.