அவர்கள் கிளம்பியதும் வீடே வெறுமையாக தெரிந்தது அவளுக்கு. நினைவு தெரிந்த நாளில் இருந்து அப்பத்தா முந்தானை பிடித்தே வீட்டை சுற்றி வந்தவளுக்கு அந்த கணம் தனிமை பிடிக்காமல் கண்ணீர் வந்தது.
அவளது மனநிலை அறிந்தது போல அலைபேசி அழைக்க, எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தாள்.
“மேன்மை பொருந்திய மேலாளர்” முணுமுணுத்து கொண்டே வெற்றியின் அழைப்பை ஏற்றாள்.
மிகப் பணிவாக, “சொல்லுங்க சார்” என்றாள்.
“நாளைக்கு நாயகி மேடம் லீவ். நீங்க கொஞ்சம் சீக்கிரம் வர வேண்டியிருக்கும். முடியுமா?” நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“ஏ.. எஸ் எஸ் சார்” என்றாள். ஏன், எதற்கு என்று தோன்றிய கேள்விகளை கேட்காமல் பதில் கொடுத்தாள் வேதா.
‘இந்த நாயகி மேடம் என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாங்களா?’
“அவங்களுக்கு இப்பத்தான் விஷயம் தெரியுமாம். வீட்ல சொல்ல மறந்துட்டாங்களாம்.” அவன் பேச்சில் திடுக்கிட்டு, ‘இந்த மேனேஜருக்கு மைண்ட் ரீடிங் பவர் இருக்குமோ?’ என்ற அவளின் எண்ணவோட்டம் புரியாமல், “சீக்கிரம் வந்துடுங்க தேவதர்ஷினி. நாளைக்கு பார்க்கலாம்.” என்று அழைப்பை துண்டித்திருந்தான் வெற்றி வேந்தன்.
“வேதவர்ஷினி.. என் பேர்” காற்றை பார்த்து பல்லைக் கடிக்க மட்டுமே அவளால் முடிந்தது.
அடுத்து வந்த ஒரு வாரமும் வங்கியின் அனைத்து பணிகளையும் கற்று தேர்வதற்கே அவளுக்கு வேலை நேரம் சரியாக இருந்தது.
மூன்றாவது வாரத்தில் இருந்து அவளை தனியாக பணிகளை பார்க்கச் சொன்னான் வெற்றி வேந்தன்.
அவளுக்கு முதல் நாளே முதுகு ஒடிந்து விட்டது. அவளுக்கு பாவம் பார்த்து உதவ யாருக்கும் அங்கே நேரமிருக்கவில்லை. அவளின் பதவியும் அதற்கு அனுமதிக்கவில்லை.
மறுநாள் செவ்வாய்கிழமை அம்மா சொல் பேச்சு கேட்டு கோவிலுக்கு சென்று விட்டு பக்தி மயமாக வங்கிக்கு வந்திருந்தாள் வேதா.
வெற்றி வேந்தன் தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கீழிறங்க, ஆட்டோவில் இருந்து இறங்கி ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்தவளை கூர்ந்தது அவன் கண்கள்.
மங்கலகரமாக மஞ்சள் புடவையில் இருந்தாள். ஒரு கை சேலையை சரி செய்ய, மறு கை இடுப்பை மறைக்க, நழுவிய கைப் பையை பிடிக்க என தடுமாறிக் கொண்டு நடந்தவளை பார்த்தவனுக்கு அவனையும் மீறி சிரிப்பு வந்தது.
வேதவர்ஷினி அவனைப் பார்த்து, காலை வாழ்த்து சொல்ல, அவன் சிரிப்பு தான் அவள் விழிகளில் விழுந்தது.
எப்போதும் போல மிடுக்கான அலுவல் உடையில் கச்சிதமாக நின்றவனை கண்ணெடுக்காமல் பார்த்து, பட்டென பார்வையை திருப்பினாள்.
“மேலாளரை சைட்டடிக்க வங்கி சட்டத்தில் இடமிருக்கா தெரியலயே. அது தெரியாம.. ச்சே. எனக்கு இவனைப் பிடிக்காது வேற..” மனதில் சொல்லிக் கொண்டே அவனை நோக்கி நடந்தாள்.
மிக இயல்பாக அவளோடு இணைந்து வங்கியை திறந்தான் வெற்றி வேந்தன்.
மாத இறுதியை நெருங்கியும் அவர்களுக்கு வேலை குறையவில்லை. வங்கி சேவைகள் மக்களுக்கு அனுதினமும் தேவைப்படும் ஒன்றல்லவா? அதனால் இயந்திர கதியில் உழைத்து கொண்டிருந்தார்கள்.
அன்று வெற்றிக்கு வேலை அதிகம் தான். ஒவ்வொரு கோப்பாக அவன் மேஜைக்கு வந்துக் கொண்டிருக்க, ஒவ்வொன்றாக சரிப் பார்த்து, கையெழுத்திட்டு ஓரமாக வைத்துக் கொண்டிருந்தான்.
வங்கியின் தொலைபேசி ஒலியெழுப்பவும் பாதியில் வேலையை நிறுத்தி வங்கியை நோட்டம் விட்டான்.
எப்போதும் போல கூட்டமிருந்தது. மற்றவர்கள் இறுக்கமான முகங்களுடன் வேலையில் ஈடுபட்டிருக்க, வேதவர்ஷினி வாடிக்கையாளரிடம் பொறுமையை இழுத்துப் பிடித்து பேசுவது அவனுக்கு இங்கிருந்து பார்க்கும் போதே தெரிந்தது.
கையில் இருந்த காகிதங்களை ஓரமாக வைத்து விட்டு வெளியே சென்றான் அவன்.
“ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ண நாலு நாளா? என்ன மேடம் சொல்றீங்க? என்னை அரை மணி நேரம் வெயிட் பண்ண வச்சு, இப்ப தான் ஃபார்ம் வாங்கினீங்க. அதை புராசஸ் பண்ண நாலு நாளா?” அவளிடம் வாடிக்கையாளர் கோபமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
அரசு வங்கிகளின் மேல் மக்களுக்கு இருக்கும் அதிருப்தியின் காரணம் இப்போது தான் வேதாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது. அனைத்திலும் வேகத்தை எதிர்பார்த்தார்கள் மக்கள். ஆனால், அரசு வங்கிகளில் அது சாத்தியமில்லையே. அவர்களுக்கு பணிச் சுமை அதிகமிருந்தது. அதைச் சொன்னாலும் யாருக்கும் புரியாது என்று உணர்ந்து இப்போதைக்கு தேவையான பதிலை கொடுக்கத் தொடங்கினாள் அவள்.
“இல்லயில்ல. உங்க அக்கவுண்ட் இன்னைக்கு ஓபன் ஆகிடும். ஆனா, ஆக்டிவேட்டாக மூனு நாள் ஆகலாம்.. அதுக்கு அப்புறம் தான்…” வேதா சொல்லும் போதே வாடிக்கையாளர் இடையிட்டு, “ஏன் மூனு நாள் ஆகும்? அந்த பேங்க் எல்லாம் ஒரே நாள்ல ஆக்டிவேட் பண்ணித் தராங்க. நீங்க மட்டும்…” தனியார் வங்கியை குறிப்பிட்டு அந்தப் பெண் கேட்க, வேதவர்ஷினி கடுப்பில் என்ன பதில் சொல்லி இருப்பாளோ, சட்டென அவளை முந்திக் கொண்டு உள்ளே வந்தான் வெற்றி.
“இந்த பேங்க்ல இதான் ரூல்ஸ். உங்க ஃபார்ம் இப்படி கொடுங்க” என்று கை நீட்டி வாங்கி, அவன் சரி பார்க்கத் தொடங்கினான்.
“கோ ஃபார் அ ப்ரேக் தேவதர்ஷினி” படிவத்தை படித்து பார்த்தபடி மென்குரலில் அவன் சொல்ல, “ஆங், சார்? என்னது?” என்று புரியாமல் கேள்வி கேட்டாள் வேதா.
“லஞ்ச் போய்ட்டு வாங்க” என்றவன், அவளது இருக்கைக்காக கை நீட்ட, அவனை அதிர்ந்து பார்த்து எழுந்து கொண்டாள்.
அவளது இருக்கையை ஆக்கிரமித்து அவன் வேலைப் பார்க்கத் தொடங்க, கைப் பையுடன் ஓய்வறையை நோக்கி நடந்தாள். அதற்குள் மதிய உணவு இடைவேளை வந்து விட்டதா? அவளுக்கு இடையில் தேநீர் அருந்திய நினைவிருந்தது. மற்றபடி முழு நேரமும் வேலை பார்த்திருக்கிறாள். இப்போது அலைபேசியில் நேரம் பார்க்க இரண்டு என்று காண்பிக்க, அதிர்ச்சியில் வாய் பிளந்து கொண்டது அவளுக்கு.
அப்பொழுது தான் பசியையே உணர்ந்தாள் அவள். யாருமில்லா அறையில் தனியாக அமர்ந்து நிதானமாக உணவை அவள் உண்ண, “மேடம் லஞ்ச்சுக்கு இவ்வளவு நேரமா எடுப்பீங்க? சார், உங்களைத் தேடுறார்” கிளார்க் கோபால் வந்துச் சொல்ல, உணவை பாதியோடு மூடி வைத்து விட்டு, எழுந்து போனாள் அவள்.
“சர்..” வேதா அழைத்ததும் கண்களை உயர்த்திய வெற்றி, “அக்கவுண்ட் ஓபனிங் எல்லாம் நான் முடிச்சிட்டேன். நீங்க மற்ற வேலைகளை முடிங்க. ஓகே?” அவளின் இருக்கையில் இருந்து எழுந்து, வாயிலை நோக்கி நடந்திருந்தான் அவன்.
“மேலாளர் மிச்ச வேலையும் முடிச்சு கொடுத்தா என்னவாம்?” புலம்பிக் கொண்டே அவள் வேலை பார்க்கத் தொடங்க, “பார்த்துக்கோங்க. நான் லஞ்ச் போய்ட்டு வர்றேன்” அவளுக்கு அடுத்த பதவியில் இருந்த ஶ்ரீனிவாஸிடம் அவன் சொல்வது கேட்டது.
நேரம் அப்போதே மதியம் மூன்றை தொட்டுக் கொண்டிருந்தது.
“அச்சோ. இன்னும் சாப்பிடலையா இவர்? போய் சாப்பிட்டு வரட்டும். நாம வேலையை பார்ப்போம்” அவன் வருவதற்குள் வேலையை முடித்து விட நினைத்தாள்.
அவள் விரல்களும், விழிகளும் ஒரு லாவகத்திற்கு வந்திருந்தது. விழிகள் விரலை தட்டச்சு செய்ய வைத்தது.
“பேங்க் டைம் முடிஞ்சது சார். நாளைக்கு வாங்க” காவலாளியின் குரலை கேட்டதும் அதிர்ச்சியுடன் கணினியில் நேரம் பார்த்தாள். நான்கு மணி. அவள் முன்பு நான்கு மடங்கு வேலைகள் இன்னும் முடிக்கப்படாமல் இருந்தது. யாரையும் உதவிக்கு அழைக்க முடியாதபடி அனைவரும் வேலையில் மூழ்கி இருந்தார்கள்.
அவளுக்கு வேலையில் சேர்ந்த முதல் நாள் வெற்றி சொன்னது நினைவில் வந்தது.
“பேங்க் ஒர்கிங் அவர்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் நம்ம வேலையே தொடங்கும்” என்றிருந்தானே. அது தான் அவர்களின் அன்றாட நடைமுறையாக இருந்தது. அந்த நாளின் மொத்த பணிகளையும், பண பரிவர்த்தனைகளையும் கணக்கிட்டு, சரி பார்த்து, கணினியில் ஏற்றி, கோப்புகளில் பதிந்து அதில் முறையாக கையெழுத்து பெற்று ஒப்படைக்க வேண்டியிருந்தது.
நேரமாகி விட்டது உணர்ந்து வேகமாக வேலை செய்தாள். விளைவாக, ஒரு கட்டத்தில் அவளுக்கு கழுத்து வலிக்கத் தொடங்கியது. நாள் முழுக்க அமர்ந்தே வேலை செய்ததில் உடலில் ஒருவித சோர்வு சொல்லாமலே வந்து ஒட்டிக் கொண்டது.
இடக்கரத்தால் கழுத்தை நீவி விட்டுக் கொண்டே வேலையை முடிக்க முயன்றாள்.
“தேவதர்ஷினி, ஹெல்ப் வேணுமா?” கேட்டபடி வந்து நின்றான் வெற்றி வேந்தன்.
“வேதவர்ஷினி” என்று அவனை திருத்த கூட அவளுக்கு தெம்பிருக்கவில்லை.
அந்த வங்கியின் மேலாளராக அவனுக்குத் தான் அங்கு பெருமளவு வேலையும் பொறுப்பும் இருந்தது. தன் வேலைகளை கிட்டத்தட்ட முடித்து விட்டு தான் அவளிடம் வந்தான் அவன்.
“இல்ல. நான் பார்க்கிறேன் சார்” அவள் தயங்க, “இட்ஸ் ஓகே. நகருங்க. நான் ஹெல்ப் பண்றேன்” உதவ முன் வந்தவனை அதற்கு மேல் மறுக்க அவளுக்கும் மனம் வரவில்லை.
ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அவளுக்கு பக்கத்தில் அமர்ந்து அவளின் பாதி வேலையை அவன் பார்க்கத் தொடங்கியிருந்தான்.
அதன் பின் அவளின் வேலை வேகமாக முடிய, இறுதிப் பணிகளை அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவளின் அலைபேசி அடித்தது.
“கௌசல்யா கா, சொல்லுங்க” அவள் கேட்க, “என்னாச்சு? இன்னும் வீட்டுக்கு வரல நீ? டின்னருக்கு சப்பாத்தி சன்னா மசாலா பண்றேன். உனக்கும் சேர்த்து செய்யவா?” என்று கேட்கவும், “என்னக்கா ஈவ்னிங் தானே ஆகுது. அதுக்குள்ள டின்னர்…” பேசியபடி கண்களை உயர்த்தியவளின் பேச்சு அப்படியே அந்தரத்தில் நின்றது.
“நீங்க எனக்கும் சேர்த்து செய்யுங்க கா. நான் இப்போ வந்துடுவேன்” அவர் மேலே பேச இடம் கொடுக்காமல் அழைப்பை துண்டித்து, அலைபேசியை ஓரமாக வைத்தாள்.
“என்ன லைட் எல்லாம் போட்டுட்டாங்க. நைட் ஆகிடுச்சா? அது கூட தெரியாமயா வேலைப் பார்த்துட்டு இருக்கேன் நான்” அவளின் புலம்பலில் வெடித்து சிரித்தான் வெற்றி வேந்தன். மொத்த பணியாளர்களும் அவர்களைத் தான் திரும்பிப் பார்த்தார்கள்.
“டைம் ஆச்சு இல்ல சார். நான் கவனிக்கல. அதான்” உளறியதை, விளக்கம் கொடுத்து சமாளித்தாள்.
“பத்து நிமிஷம் தான் ஆகும். முடிச்சுட்டு கிளம்புங்க.”
“ஓகே சார்” என்றவள், அவனை பார்வையால் அளந்தாள். காலையில் வந்தது போலவே கலையாமல் களையாக, மேலாளருக்கே உரிய கம்பீரத்துடன் இருந்தான் வெற்றி வேந்தன். உடையும், அவனும் படு கச்சிதம். அவன் முகத்தில் இருந்த சோர்வு கூட அவனது கம்பீரத்தை குறைக்கவில்லை.
“தேவதர்ஷினி” அவன் அழைக்கவும் நாக்கை கடித்து அவனைப் பார்த்தாள்.
இருவரின் கண்களும் சந்திக்க, “என்ன?” என்று புருவங்களை உயர்த்தி கேள்வி கேட்டான் வெற்றி.
அன்று அவள் வேலை முடித்து வங்கியை விட்டு கிளம்பும் போது கடிகாரம் இரவு எட்டு மணி என்றது.
ஒரு பெருமூச்சுடன் வீடு சென்றாள் வேதா.
மூன்று மாதங்கள் வேலையில் வந்த சிறு சிறு சலசலப்புகளை சமாளித்து முன்னேறியிருந்தாள்.
நான்காம் மாதம் வந்த வார இறுதி சனிக்கிழமையில் ஊருக்கு செல்ல விரும்பினாள். ஆனால், அவள் உடல் ஓய்வுக்கு கெஞ்சியது. இரண்டு நாட்களுக்காக, இரண்டு இரவுகள் பயணம் செய்ய வேண்டும் என்பதை நினைத்த மாத்திரத்தில் மலைப்பு தோன்ற வீட்டினரை மறந்து வீட்டிலேயே இருந்து விட்டாள் அவள்.
ஒரு வார வீட்டு வேலைகள் அவள் முன் வரிசைக் கட்டி நின்றது. ஆனால், அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் புறக்கணித்து விட்டு, வெளியில் கிளம்பி விட்டாள் வேதா.
அவளின் அண்ணா நகர் பெரியப்பா பிள்ளைகள், அம்பத்தூர் அத்தை மகள் அவளுக்குத் துணையாக ஊர் சுற்ற, ஊரை சுற்றி காண்பிக்க உடன் வந்தனர்.
அவள் குளித்து கிளம்பிக் கொண்டிருக்கும் போதே அலைபேசியில் அழைத்து விட்டான் வெற்றி வேந்தன்.
“குட் மார்னிங் சர்” அவள் சொல்ல, “மார்னிங் தேவதர்ஷினி. சாட்டர்டே டிஸ்டர்ப் பண்றதுக்கு சாரி.” என்று தொடங்கினான்.
“இட்ஸ் ஓகே சார். என்ன விஷயம் சார், சொல்லுங்க”
“நான் நேத்து சொன்னது தான். ஜஸ்ட் திரும்பவும் கன்பார்ம் பண்ணிக்கிறேன். நீங்க எங்கேயும் போகல இல்ல?”
“இல்ல சார். சென்னையில் தான் இருக்கேன். நான் ஊருக்கு போகல” பொறுப்பாக பதில் சொன்னாள்.
“ஓகே தென். என்ஜாய் யுவர் ஹாலிடே. ஹேப்பி வீக்கெண்ட்” குரலில் புன்னகையுடன் அவன் சொல்ல, “தேங்க்யூ சார்” உற்சாகமாக சொன்னாள்.
ஆனால், மூன்று மணி நேரங்கள் கழித்து வெற்றி வேந்தன் அழைக்கும் போது அவள் அண்ணா நகரில் இருந்தாள்.
“ஹலோ தேவதர்ஷினி, உடனே பேங்க் போங்க. எமர்ஜென்ஸி. செக்யூரிட்டி உங்களுக்கு கால் பண்ண எடுக்க மாட்டீங்களா? என்னங்க நீங்க?”
“சார்?”
“பத்து நிமிசத்தில நம்ம பேங்க் முன்ன இருக்க ஏடிஎம் போய்டுவீங்க தானே?” பரபரத்தது படபடத்தது அவன் குரல்.
எப்போதும் வழுவாத நிதானத்துடன் பார்த்தவனின் இந்த குரலை கேட்கும் போதே அவள் மனதில் அலாரம் அடித்தது.
“பதில் சொல்லுங்க மேடம். எங்க இருக்கீங்க?”
“வெளில…”
“என்னது? நீங்க ஸ்டேஷனில் இருக்கும் நம்பிக்கையில் தானே நான்.. ப்ச்..”
“சார்.. சென்னையில் தான் இருக்கேன்.” திக்கியபடி அவள் சொல்ல,
“சென்னை ரொம்ப சின்ன ஊர் பாருங்க. ஆவடியில் இருந்து கோயம்பேடு வரவே ஒன்றரை மணி நேரமாகும். இதுல..” எரிந்து விழுந்தான்.
“என்ன சார். லீவ் நாள்ல கூட..” அவளை பேச விடாமல் இடையிட்டு கத்தினான்.
“லீவ் தான். இல்லைனு சொல்லல. ஆனா, நமக்கு கொடுத்த பொறுப்பை சரியா செய்யணும். நானோ, இல்ல நீங்களோ, ரெண்டு பேரில் ஒருத்தர் உடனே ரீச்சபிளா இருக்கணும். ஏன்னா, நம்ம ரெண்டு பேர்கிட்ட தான் பேங்க் கீஸ் இருக்கு. இப்போ ஏடிஎம்ல ஏதோ பிரச்சனை போல செக்யூரிட்டி அலாரம் அடிக்குதாம். நாம சாவி போட்டா தான் ஆஃப் ஆகும். உங்களுக்கு இதை ஏற்கனவே எக்ஸ்பிளைன் பண்ணியிருக்கேன். ஆமா, தானே?” என்று கேட்டவன்,
“உங்களுக்கு நான் சொல்றது ஏதாவது புரியுதா?” அவன் கத்த, அவனது குரலோடு சேர்ந்து, வாகனங்களின் இரைச்சலும் அவள் காதில் அறைந்தது.
“சாரி.. சார்” வேதவர்ஷினி அதை வெற்று அலைபேசியிடம் தான் சொல்ல வேண்டியிருந்தது. அழைப்பை துண்டித்திருந்தான் வெற்றி வேந்தன்.