அந்த புத்தகக் கண்காட்சி திடலின் பரபரப்பு அவனிடமும் தொற்றிக் கொண்டது. வெற்றி வேந்தன் அவசரமாக வெளியில் வந்தான்.
“என்னாச்சு ப்பா?” அவனின் அப்பா வேலுச்சாமி கேட்க, “எமர்ஜென்ஸி ப்பா. இவெனிங் வீட்டுக்கு வந்து பேசுறேன். நீங்க வேலை முடிச்சுட்டு பொறுமையா வீட்டுக்கு வாங்க. எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்” அப்பாவிடம் சொன்னவனின் பார்வை அம்மா, தங்கை மேல் படிய, இருவரும் தலையசைத்தார்கள்.
அம்மா வேகமாக வீட்டு சாவிக் கொத்தை எடுத்து நீட்ட, வாங்கிக் கொண்டு அவன் தன் இரு சக்கர வாகனத்தில் ஏறியமரும் போதே அவனது அலைபேசி அடிக்கத் தொடங்கியது.
“இப்போ வந்துடுவேன் சார். பத்து, பதினைந்து நிமிசம் ஆகும். அவ்ளோ தான். அதுக்குள்ள வந்துடுவேன்” அவசர நிதானத்துடன் சொல்லி, அதே அவசர நிதானத்துடன் வண்டியை இயக்கினான்.
பயண தூரம் முழுவதும் அவனது அலைபேசி அடித்துக் கொண்டேயிருந்தது. முக்கியமான அழைப்பாக இருக்கும். அதை தவிர்க்க விரும்பாமல், சாலையோரம் வண்டியை நிறுத்தி அலைபேசியை கையில் எடுக்க, வேதவர்ஷினி தான் அவனை அழைத்துக் கொண்டிருந்தாள்.
“வேதவர்ஷினி, எனக்கு இப்போ பேச டைமில்லை மேடம். கொஞ்ச நேரம் கொடுங்க. நானே உங்களைத் திருப்பிக் கூப்பிடுறேன்” நிச்சயமாக அந்த பதிலிலும், குரலிலும் நக்கல் இருந்தது.
முன்தினம் எத்தனை முறை அவளிடம் எடுத்துச் சொல்லியிருந்தான்.
“நாளைக்கு நான் ஃபேமிலியோட வெளில போறேன். நீங்க எங்கயேயும் வெளில போகல தானே?”
“நான் இந்த வாரம் ஊருக்கு போகல சார்” பவ்யமாக அவள் பதில் சொன்னதை நினைக்கையில் கோபமாக வந்தது அவனுக்கு.
அவளின் பொறுப்பற்ற தனத்தின் மேல் வந்த கோபம். நாளை தேவையற்ற கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற கோபம். அத்தனைக்கும் காரணமான அவள் மட்டும் இப்போது எதிரில் இருந்தால், கோபத்தில் வார்த்தைகளை சிதறி இருப்பான்.
அவளைப் போலவே முன்னர் தான் சொதப்பிய நாட்களை நினைவு கூர்ந்து அமைதிக் காத்தான் அவன்.
அவனுக்கு குடும்பத்தை தனியாக விட்டு வந்தது வேறு மனதில் குடைச்சலை தந்தது.
“அண்ணா.. பிளீஸ் சீக்கிரமா போ. கொஞ்சம் வேகமா போயேன்” பெரியப்பா மகனுடன் வண்டியில் ஆவடி நோக்கி வந்துக் கொண்டிருந்த வேதா, அண்ணனை தன் வார்த்தைகளால் வண்டியோட்ட வைத்துக் கொண்டிருந்தாள்.
“பேசாம வா வேதா. இதுக்கு மேல வேகமா இந்த சென்னை டிராஃபிக்ல போக முடியாது. இதென்ன உங்கப்பா வானமாமலை உனக்காக ரோடு போட்டு வச்சிருக்க விருதுநகர்னு நினைச்சியா?”
“ரொம்ப பேசாத ண்ணா. விருதுநகருக்கு என்ன குறைச்சல்? இந்த சென்னைக்கு எங்க ஊர் எவ்வளவோ மேல் தெரியுமா?” எரிச்சலுடன் சொன்னாள் வேதா.
சூரியன் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் அனலை பொழிந்துக் கொண்டிருந்தான். அவள் வெயிலிலும், வியர்வையிலும் நனைந்து வழிந்து கொண்டிருந்தாள்.
மழை குளுமையை மனதிற்கு தந்தால், வெய்யில் ஒருவித எரிச்சலை மனதிற்கு தந்தது.
அவள் மனம் வேறு ஏற்கனவே சென்னையின் போக்குவரத்தை போலவே தாறுமாறாக பயணித்துக் கொண்டிருந்தது.
அவளுக்கு வங்கி காவலாளியிடம் இருந்து கிட்டத்தட்ட ஐந்து தவறிய அழைப்புகள் வந்திருந்தது. அதை பார்த்ததுமே பயந்து விட்டாள் அவள். போதாதற்கு அவளின் அலைபேசியில் குறுஞ்செய்தி வேறு வந்ததிருந்தே. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல அவர்கள் வங்கிக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு வேறு இந்நேரம் தகவல் தானாக சென்றிருக்கும் என்பது நினைவில் வர, நெற்றியில் ஓங்கி அறைந்துக் கொண்டாள் அவள்.
ஏடிஎம் அலாரம் தொடர்பான குறுஞ்செய்தி அவளது அலைபேசிக்கும் முறையாக வந்திருந்தது. அதையும் பார்க்கத் தவறியிருந்தாள் அவள். அலைபேசியை கைப் பையில் வைத்திருந்ததினால் சத்தமே கேட்கவில்லை அவளுக்கு. இப்போது பதட்டத்தில் அவளது இதயத் துடிப்பின் ஓசையே அவளுக்குத் துல்லியமாக கேட்டது.
வெற்றி வேந்தன், அவளின் மாண்புமிகு மேலாளரை நினைக்கையிலேயே தொண்டை வறண்டு போனது. அவளது அலைபேசி அழைப்பை வேறு ஒற்றை வார்த்தையில் அவன் துண்டித்திருக்க, நிலைமையை எப்படி சரியாக கையாளப் போகிறோம் என்று பயந்து கொண்டே வங்கிக்கு போனாள் அவள்.
அண்ணன் வண்டியை நிறுத்தியதும் குதித்து இறங்கி உள்ளே ஓடினாள். அங்கு ஏற்கனவே ஆட்கள் நடமாட்டம் இருந்தது.
“வேதா.. “
“அப்புறமா போன் பண்றேன் ண்ணா. நீ கிளம்பு” பெரியப்பா மகனை திரும்பிப் பார்க்காமல் கத்தி விட்டு அவள் ஏடிஎமை பார்த்துக் கொண்டே திறந்திருந்த வங்கியை நோக்கி ஓடினாள்.
அதே நேரம் உள்ளிருந்து இருவருடன் பேசிக் கொண்டே வெளியில் வந்தான் வெற்றி வேந்தன். மடித்துக் கட்டிய வேட்டி, சட்டையில் இருந்தவனை பார்த்து, “சார்” என்றாள் வேதவர்ஷினி நடுக்கத்துடன்.
அவள் பயந்ததற்கு மாறாக அவளைப் பார்த்து புன்னகைத்தான் வெற்றி.
“வாங்க தேவதர்ஷினி” என்றவன், திரும்பி அங்கிருந்தவர்களிடம், “இவங்க வேதவர்ஷினி. புதுசா ஜாயின் பண்ணியிருக்க அசிஸ்டன்ட் மேனேஜர்” என்று அவளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.
“வணக்கம் சார்” என்று பொதுவாக புன்னகைத்து சொன்னவள், நேராக வெற்றியை பார்த்து, “என்னாச்சு சார்?” என்று கேட்டாள்.
“பயப்படுற அளவுக்கு ஒன்னுமில்ல. ஜஸ்ட் ஃபால்ஸ் அலாரம் தான். என்ன ரீசன்னு இவங்க பார்க்கறாங்க.”
“ஓ, ஓகே சார்.”
“இங்க நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க” அவன் சொல்ல, “இல்ல, சார். நானும் இருக்கேன்” குற்ற உணர்ச்சியுடன் சொன்னாள்.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பெரும் பொறுப்பை தட்டிக் கழித்த குற்ற குறுகுறுப்பு அவளை அங்கிருந்து நகர விடவில்லை. அதிலும் வெற்றி வேந்தன் வேட்டி சட்டையில் இருக்க, அவனது விடுமுறை தினத்தை கெடுத்து விட்டோம் என்று கவலைக் கொண்டாள் அவள்.
“நான் இப்படி ஆகும்னு எதிர்ப்பார்க்கல சார். இல்லனா வீட்லயே இருந்திருப்பேன்” அவன் கண்களை நேராக பார்த்து திடமாக சொன்னவளைப் பார்த்து புன்னகைத்தான் வெற்றி.
அவனுக்கு அருகில் நின்று பழுதை சரி பார்த்துக் கொண்டிருந்தவர்களை கண் காட்டி, “இட்ஸ் ஓகே” என்றான். அதில் இப்போது இதைப் பற்றி பேச வேண்டாம் என்ற மறைமுக தகவல் இருக்க அமைதியானாள் வேதவர்ஷினி.
அவனது புன்னகையை பார்த்து அவளும் புன்னகைக்க, அதை கண்டுக் கொள்ளாமல் எழுந்து போனான் அவன்.
அவன் கண்களில் கோபத்தின் லேசான சாயல் இருக்கவே செய்தது.
அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அங்கு நடப்பதை கைக் கட்டி நின்று வேடிக்கைப் பார்த்தாள். முழுதாக அரை மணி நேரம் செலவழித்து ஏடிஎம் வயரில் பழுது. அதனால், தவறுதலாக அலாரம் அடித்திருக்கிறது என்று அவர்களிடம் தெரிவித்தார்கள்.
விசாரணை முடித்து அதை மேலிடத்திற்கு தெரிவித்து மேலும் வங்கியின் சட்டத் திட்டங்களை எல்லாம் பின்பற்றி நடந்ததை ஆவணப்படுத்தி அவர்கள் நிமிரும் போது இரண்டு மணி நேரங்கள் கடந்திருந்தது.
அவளுக்கு உடலில் அதுவரை இருந்த பதட்டம் மொத்தமும் வடிய, “அப்பாடா.. ” என்று சத்தமாக சொல்லி, ஆழ்ந்த மூச்சினை உள்ளிழுத்து வெளியிட்டாள்.
“இதெல்லாம் நாளைக்கு பார்த்திருக்கலாம், இல்ல சார்?” அவள் கேட்க, வெற்றி வேந்தன் ஒரு நொடியில் ருத்ர வேந்தனாக மாறியிருந்தான்.
“நாளைக்கு சன்டே. அதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நேத்து நான் சொன்னதை தான் மறந்திருப்பீங்க. நாளைக்கு என்ன நாள்னு கூடவா உங்களுக்கு ஞாபகம் இருக்காது?”
“சர்..”
“என்ன பதவில இருக்கோம்ங்கறது பெரிய விஷயமில்ல. அந்த பதவிக்கு உரிய பொறுப்பும், நேர்மையும் இருக்கணும். நம்ம வேலைக்கான மரியாதையை நாம முதல்ல கொடுக்கணும்.” மேலும் என்ன பேசியிருப்பானோ அவளின் வாடிய முகத்தைப் பார்த்து, “திங்கள் கிழமை வந்து ரிப்போர்ட் பண்ணலாம்னு வெயிட் பண்ண கூடாது. நம்மை யாரும் கேள்விக் கேட்கும் முன்ன, நாம விளக்கம் சொல்லியிருக்கணும். நம்மளை குற்றம் சாட்டி கேள்விக் கேட்கும் வாய்ப்பை நாம யாருக்கும் கொடுக்கக் கூடாது” அறிவுரையை தீர்க்கமாக சொன்னான் வெற்றி.
அவள் தலை தானாக ஆடியது. அவன் பேச்சு மனதில் மெல்ல நங்கூரம் பாய்ச்சியது. அவளை கடிந்து கொண்டவனை அந்த நொடி ஏனோ கொஞ்சமே கொஞ்சம் அவளுக்குப் பிடித்தது. அதுவும் வேலையில் அவன் காட்டிய அந்த நேர்மை அதிகம் பிடித்தது.
“நான் காலையில் போன் பண்ணி கேட்டப்போ வெளில போறேன்னு ஏன் சொல்லல நீங்க?” அவன் கேட்க,
“இல்ல சார். ஊருக்கு போகல. ஆனா, சென்னைக்குள்ள தானேனு நினைச்சு.. அது பெரிய விஷயமா எனக்குப் படல. அதான் உங்ககிட்ட சொல்லல” அந்த அலட்சிய பதிலில் சட்டென அவன் கண்கள் கோபமாகியது.
“என்ன சொன்னீங்க?”
“இல்ல சார். வந்து..” அவனின் கோபப் பார்வையில் சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தியிருந்தாள் வேதா.
வெற்றி அமைதியாக வங்கியை காவலாளி உதவியுடன் மூட, அவனோடு அவளும் வெளியில் வந்தாள்.
வங்கி சாவியை பத்திரப்படுத்தி விட்டு, காவலாளியிடம் பேசி விட்டு தனது வண்டியை நோக்கி நடந்தான் அவன்.
“அப்போ, நான் கிளம்பறேன் சார்” தயக்கத்துடன் அவள் சொல்ல, “எப்படி போவீங்க?” என்று கேட்டான் அவன்.
“ஆட்டோ இல்லனா பஸ். இப்போதைக்கு வீடு வரை நடக்க தெம்பில்ல சார்” அதைச் சொன்ன பிறகு நாக்கை கடித்தாள். அவனோ அதை கவனிக்காதது போல மௌனமாய் வண்டியை தள்ளிக் கொண்டு அவளோடு நடந்தான்.
அந்தச் சாலையின் இருபுறமும் வரிசையாக மரங்கள் காவல்காரர்களைப் போல நின்றிருக்க, வெயிலின் தாக்கம் அவ்வளவாக இருக்கவில்லை.
காற்றில் லேசாக மரங்கள் அசைய, சற்று குளுமையாக தான் இருந்தது.
இருவருக்கும் இடையே ஒருவித அமைதி வந்திருக்க, அவளுக்குத் துணையாக நடந்தான் வெற்றி வேந்தன்.
அவ்வளவு நேரம் இல்லாமல், அப்போது தான் அவளை நன்றாக பார்த்தான். ப்ளூ ஜீன் கேப்ரி பேண்ட் அதற்கு பொறுத்தமாக கருநீல சட்டை அணிந்திருந்தவளை கண்கள் ஆச்சரியத்தில் விரிய பார்த்தான் அவன். அவனுக்கு இருந்த பதட்டத்தில் அவளின் தோற்றத்தை அதுவரை கவனிக்கவே இல்லை அவன்.
இப்பொழுது பார்க்கவும், அட என்றது அவன் மனது. வங்கிக்கு தினமும் விதவிதமான சேலையில், தலை முடியை பின்னலில் அடக்கி, வங்கி பணிக்கு என்று வரையறுத்த தோற்றத்தில் இருப்பவள், இன்று வித்தியாசமாக இருந்தாள்.
அவனது வேலை, பதவி, பணியிடம் என அனைத்தும் மறந்து அவளைப் பார்த்தான் வெற்றி.
அவனது வயதிற்கே உரிய ரசனையான பார்வை.
ஏதோ யோசனையாக மௌனமாக நடந்தவளை அவன் கண்கள் அளக்க, திடீரென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள் வேதவர்ஷினி.
அந்த நேர்பார்வையில் தடுமாறினான் வெற்றி வேந்தன்.
“சாரி சார். எனக்கு ஒரு மாதிரி தப்பு பண்ண ஃபீல். கில்ட்டியா ஃபீல் ஆகுது. இனிமே இப்படி ஆகாம பார்த்துக்கறேன் சார். இந்த ஒரு முறை..”
“வங்கி வேலையில் எப்பவும் நெக்ஸ்ட் டைம் கிடையாது வேதவர்ஷினி. நீங்களே நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க. ஒரே ஒரு பேங்க் ட்ரான்ஷாக்ஷன்ல நாம தப்பு பண்ணா என்ன ஆகும்? திருத்த முடியுமா?”
“நீங்க நினைச்சா முடியுமே சார். ரிவர்ஸ் பண்ண முடியும் தானே?” அவனது முறைப்பில், அவள் பேச்சு அப்படியே நின்று போனது.
வண்டியை உருட்டிக் கொண்டே அவளோடு நடந்தவன், நடையின் வேகத்தை குறைத்தான்.
மீண்டும் மீண்டும் மன்னிப்பை கேட்க அவளுக்கு சங்கடமாக இருக்க, தன் பேச்சை நினைத்து தலை குனிந்தாள்.
“இன்னைக்கு நடந்ததை நீங்க ரொம்ப லேசா எடுத்துக்கறீங்கன்னு நினைக்கிறேன். நான் சென்னையில், அதுவும் இங்கேயே பேங்க் பக்கத்தில் இருக்கவும் உடனே வர முடிஞ்சுது. இல்லனா என்னாகி இருக்கும்னு யோசிச்சு பார்த்தீங்களா?” அவன் கேட்க, பதிலின்றி எச்சில் கூட்டி விழுங்கினாள்.