“காதலுக்கு அற்ப காரணங்கள் போதும். ஆனா, கல்யாணத்துக்கு? சரியான காரணங்கள் வேணும் இல்லையா, வெற்றி சார்?” அவள் கேட்க, மௌனமாய் நின்றான் வெற்றி.
“நாளைக்கு எனக்கோ, இல்ல உங்களுக்கோ வேற பிராஞ்ச், இல்லனா வேற ஊருக்கு டிரான்ஸ்பர் வந்தா என்ன பண்றது?” திடீரென்று அவள் கேட்ட கேள்வியில் திகைத்தான் வெற்றி.
“நம்ம ரெண்டு பேருக்கும் எப்படியும் அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை டிரான்ஸ்ஃபர் போடுவாங்க இல்ல? அப்போ என்னப் பண்ண போறோம்?” அவள் கேட்க, மீண்டும் திகைப்பு மாறாமல் அவளைப் பார்த்தான் வெற்றி.
“அதை அப்போ பார்த்துக்கலாம் வேதா” என்றான்.
“ம்ம். நாளைக்கு நமக்கு குடும்பம், குட்டி, பசங்க ஸ்கூல் எல்லாம் வரும் போது..” இப்போது அவள் பேச்சில் அவனது திகைப்பு தித்திப்பாய் மாறியிருந்தது.
“எவ்வளவு யோசிக்கிற நீ?” சாரலில் நனைந்தபடி நின்ற மழைப் பெண்ணை மனதுக்குள் இறக்கியபடி அவன் கேட்க,
“எனக்கு எங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்காங்க வெற்றி சார். இன்னைக்கு நேத்து இல்ல. எனக்கு 21 வயசு தொடங்க முன்னமே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நிறைய வரன் வந்தது. அதுல ஒருத்தருக்கு என்னை கல்யாணமும் பண்ணி வச்சுச்சுருப்பாங்க. ஆனா, நான் ஒவ்வொரு தடவையும், கல்யாணம் வேணாம், முடியாதுன்னு அப்பா கிட்ட எதிர்த்து நின்னு சண்டை போட்டேன். எனக்கு, எங்க அப்பத்தா, அப்புச்சி ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. அதுனால தப்பிச்சேன்.”
“இந்த வேலைக்காக, இந்த வேலையில் சேர நான் வீட்ல ரொம்ப ரொம்ப போராடினேன், தெரியுமா?. அப்பா மனசு மாறி, சரி வேலைக்கு போன்னு பெர்மிஷன் கொடுக்கும் போதே, கண்டிசன் போட்டுத் தான் கொடுத்தார். வேலையில் சேர்ந்ததும் கல்யாணம் பண்ணிக்கணும்னு..” அவனுக்கு நிலைமையின் தீவிரம் புரிய,
“ஓ..” என்றான் வெற்றி.
“அப்பவும், உடனே கல்யாணம் வேணாம்னு சண்டைப் போட்டேன். அதுனால என் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனா, இப்போ நான் தப்பிக்கவே முடியாது. இதெல்லாம் ஏன் உங்ககிட்ட சொல்றேன்னா..” அவள் விளக்கம் சொல்லும் முன்பே புரிந்துக் கொண்டான் வெற்றி.
“நாம எந்த காரணத்துக்காகவும் நம்ம கல்யாணத்தை தள்ளி போட முடியாது. காதல், புரிதல், இப்படி யோசிக்க முடியாது. நான் உடனே என் வீட்ல பேசி, உன் வீட்ல நாம பேசணும். இல்லையா?” அவன் கேட்க, ஆமென்று தலையசைத்த வேதா,
“எங்க வீட்ல எனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்ப்பாங்க தெரியல. எனக்கு மாப்பிள்ளையை பிடிக்குமா? எல்லாம் நான் கடைசியா யோசிக்க வேண்டிய விஷயம். என்னைப் பொறுத்தவரை முதலும், முக்கியமான விஷயம் என்னன்னா.. எனக்கு இந்த வேலை முக்கியம். நாளைக்கு என் லைஃப்ல ஏதாவது, அவசியம் வந்தா நானே முடிவெடுத்து என் வேலையை விடணும். அப்படின்னா எனக்கு ஓகே. ஆனா, கல்யாணம் பண்ணிட்டு யாரும் என்னை வேலையை விடச் சொல்லி தொல்லை பண்ணக் கூடாது. அது உங்களுக்கும் பொருந்தும் வெற்றி சார். அப்படி சொல்ல மாட்டீங்க தானே?”
“கண்டிப்பா சொல்ல மாட்டேன்” உறுதியாக உத்திரவாதம் தந்தான்.
“ம்ம். உங்களுக்கு நான் ஓகே சொல்ல இதுவும் ஒரு காரணம். என் காரணங்கள் அற்பமா இல்லை தானே?”
அவன் இப்படியெல்லாம் எதையும் சிந்திக்கவில்லை. அவளை பிடித்தது, அதனால் பிரியம் வந்தது. பிரியம் காதலாகி நின்ற போது கல்யாணம் குறித்து யோசித்தான். ஆனால், அவளோ கல்யாணத்திற்கும் காதலுக்கும் கூட சரியான காரணங்கள் வைத்திருக்க, அவளின் தெளிவு அவனுக்கு மிகவும் பிடித்தது.
அவளோ தொடர்ந்து பேசினாள்.
“என் அப்பா பார்க்கிற மாப்பிள்ளைக்கு நான் வேலைக்கு போறது பிரச்சனை இல்லைன்னா கூட, நாளைக்கு எனக்கு பிரமோஷன் ட்ரான்ஸ்பர், இதெல்லாம் வந்தா.. வேற ஊருக்கான்னு தயங்கி யோசிக்கலாம். ஏத்துக்க முடியாம பிரச்சனை ஆகலாம். பிராக்டிகல் டிபிகல்ட்டீஸ் நிறைய இருக்குல்ல?”
“எம்மாடி, எவ்வளவு யோசிக்கிற நீ வேதா?”
“அப்படியே பழகிட்டேன் வெற்றி சார்” தோள் குலுக்கி சொன்ன பெண்ணை தோளோடு சேர்த்தணைத்துக் கொள்ள பரபரத்தது அவன் கைகள்.
அவன் கண்களைப் பார்த்து உஷாராகி இரண்டடி பின்னே வைத்து அவள் சுவரில் சாய்ந்து நிற்க, “கேடி” என்று கேலி செய்து சிரித்தான் வெற்றி.
“எங்கப்பாக்கு காதல் எல்லாம் ரொம்ப கசப்பான விஷயம். நான் காதலிக்க மாட்டேன்னு, என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கார்” அவள் கவலையுடன் பகிர்ந்து கொள்ள, “ஹலோ வேதா மேடம். உண்மையை சொல்லுங்க. நீங்க எப்போ காதலிச்சீங்க?” என்று அவன் புருவங்களை உயர்த்தி, கிண்டலாக கேட்க, சிரித்து சமாளித்தாள் வேதா.
“இந்த வெற்றிக்கு காதல் வந்தது. வேதா அதை ஏற்றுக் கொண்டாங்க. அவ்வளவு தான்” என்று அவன் முடிக்க, அவன் முகத்திலும், குரலிலும் ஒலித்த ஏமாற்றத்தில் அவளுக்கு சிரிப்பு வந்தது. அதை மறைத்து, “கல்யாணத்துக்கு அப்புறம் காதலிக்க கூடாதா வெற்றி சார்?” ராகம் இழுத்து கேள்வி கேட்டாள்.
“இல்லையே. நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” அவள் படபடத்து கேட்க, “வெற்றி, உனக்கு விழுந்தது பாரு டா லாட்டரி” என்ற வெற்றி, சிரிப்புடன் அவளை நெருங்கினான்.
“டிஸ்டன்ஸ்…” என்றவளுக்கு குரலுக்கு பதில் காற்று தான் வந்தது.
மழைத் துளிகளும், அவன் பார்வையும் அவளைச் சிலிர்க்க வைக்க, வெற்றி சுற்றி முற்றி பார்த்தான். அவர்கள் நின்ற பகுதியை சந்தனமுல்லை கொடி மறைத்திருக்க மெல்ல வேதாவை நோக்கி முன்னேறினான்.
“உங்கப்பா கிட்ட நம்ம காதலை.. சாரி என் காதலை சொல்லக் கூடாதா?” நெருங்கி வந்து அவன் கேட்க, “அது.. என்னது..” திக்கினாள் வேதா.
அவனது நெருக்கம் அவளைப் பாதிப்பது, அவனை அத்தனை பாதித்தது.
“எம்மாடி வேதா. லவ் இல்ல மா லவ்? அதைச் சொல்லலாமா?” அவன் கிசுகிசுக்க, “யாராவது வரப் போறாங்க?” மிரண்டு முணுமுணுத்தாள்.
“மழை பெய்யுதே. யாரும் வர மாட்டாங்க. யாரும் பார்க்க கூடாத எதையும் நான் பண்ணப் போறதும் இல்ல. உன் அகராதி படி நல்ல காதல் செய்வோம். என்ன?” அவன் கண் சிமிட்டி கேட்க, சிரிப்புடன் முறைத்தாள்.
“அப்போ வேணாமா? முறைக்கிற? பெர்மிஷன் க்ராண்டட்டா?” குறுநகையுடன் கேட்டு அவளை நோக்கி நகர்ந்தவன், அவளைத் தொட்டு விடும் தூரத்தில் நின்றான்.
அவளின் ஒற்றை விரல் நீள, அதைப் பிடித்து மொத்தமாய் அவளின் கரம் பிடித்து, “இன்னைக்கு நைட் என் வீட்ல பேசுறேன் வேதா. நாளைக்கு என் ஃபேமிலியை பார்க்க உன்னை கூட்டிட்டு போறேன். இல்ல, அவங்க இங்க வர்றாங்கன்னா கூட்டிட்டு வர்றேன். ஓகே?” அவள் கண்களை ஆழப் பார்த்து அவன் கேட்க, “ம்ம்” என்று எல்லா பக்கமும் தலையை அசைத்தாள் வேதா.
“எங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு எந்த எதிர்ப்பும் இருக்காது. பொண்ணை, அதாவது உன்னை.. எனக்கு பிடிச்சா போதும் அவங்களுக்கு. ஆனா, உன் வீட்ல என்ன சொல்றதுன்னு நீ தான் முடிவு பண்ணனும். உன் வீட்ல நீ என்ன சொன்னாலும் எனக்கு ஓகே. ஆனா, என்னை, என் லவ்வை உன் வீட்ல மறைக்க சொல்லாத. நான் பண்ண மாட்டேன்” அதுவரை இருந்த குரல் மாறி, கடைசி வாக்கியத்தை அழுத்தமாக சொன்னான் வெற்றி. அந்த வார்த்தைகளில், அவன் குரலில் அப்படியொரு உறுதி.
“நான் வேதாவை பிடிச்சு, காதலில் விழுந்து தான் அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். எனக்கு மட்டுமில்ல. உலகத்துக்கும் என் கல்யாணம், காதல் கல்யாணமா தான் தெரியணும். அதுல பொய் சொல்ல நான் விரும்பல வேதா. உனக்கு புரியுது தானே?” என்ற அவனது கேள்விக்கு,
“நான் வீட்ல பொய் சொன்னது கிடையாது வெற்றி. சின்ன சின்ன சில்லறை விஷயத்துக்கு சொல்லி இருப்பேன். ஆனா, முக்கியமான விஷயங்களை மறைச்சு நான் பொய் சொன்னது கிடையாது. இனியும் சொல்ல மாட்டேன். ஒரு பொய் சொல்லி.. அதை மறைக்க.. இன்னொரு பொய் சொல்ல என்னால முடியாது” என்றவளின் தோள் பற்றி, “எம்மாடி, தப்பிச்சேன்” என்றான் வெற்றி.
“சோ, சீக்கிரம் மாமனாரை மீட் பண்றேன்” என்று கண் சிமிட்டியவன், “அதுக்கு முதல்ல பரிசம் போடுவோமா?” என்று புருவங்களை உயர்த்த, அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் வேதா.
வெற்றி மெல்ல அவர்களுக்கு நடுவே இடைவெளி குறைத்து அவளை நெருங்கினான். அவனை தள்ளி விட நினைத்தாள். தவிர்க்க நினைத்தாள் வேதா. ஆனால், மழையும், மனதுக்கு பிடித்தவனும் தந்த மயக்கம் அவளை வீழ்த்த, அவள் இமைகள் தானாக மூடியது.
அவளின் நாடியில் ஒற்றை விரல் பதித்து, அவளின் முகத்தை கையில் வாகாக உயர்த்தியவன், அவளின் நெற்றியில் செல்லமாக முட்டி, “பை வேதா” என்றான்.
அவள் இமை பிரித்து அவனை இமைக்காமல் பார்க்க, “வர்றேன் தேவதர்ஷினி” குறுஞ்சிரிப்புடன் ஒற்றைக் கண்ணடித்தான். மறுநொடியே அவளை விட்டு விலகி, கையசைத்து, கீழிறங்கி போனான்.
இரு சக்கர வாகனத்தில் ஏறிய வெற்றியை, புன்னகையுடன் பார்த்து நின்றிருந்தாள் வேதா.