பார்த்திபனை கண்கள் சிவக்க முறைத்த விஷ்ணுவின் அமைதியில் நண்பனை விட்டு விலகி நின்ற பார்த்திபன், “அமைதியா மட்டும் உள்ள நில்லு. கோவத்தை எக்காரணம் கொண்டும் காட்டிடாத.” உள்ளே வேகமாக சென்ற விஷ்ணுவைத் தொடர்ந்து உள்ளே வந்தான் பார்த்திபன்.
சில நிமிடங்களில் அனைத்து ஆட்களும் வந்துவிட, “பாருங்க சார், உங்க பையன் மேல தப்பிருக்காதுனு அடிச்சு சொன்னிங்க, அந்த பொண்ணு எப்படி அழுதுட்டு நிக்கிது…” அந்த பெண்ணை காட்டினார் இன்ஸ்பெக்டர்.
பார்த்திபன், “சார் அவன் மேல தப்பிருக்குன்னு ப்ரூவ் பண்ணிட்டு, அதுக்கப்பறம் அவனுக்கு பொறுக்கி பட்டம் கட்டுங்க.” என்றவன் அந்த பெண்ணை நோக்கி திரும்பினான்.
“நீ எதுக்குமா இன்னைக்கு இங்க வந்த?”
சபிதா, “சயத் தான் சார் வர சொன்னான்.”
சயத், “என்னது நானா? ண்ணா, இந்த பொண்ணுகிட்ட நான் பேசுனதே இல்ல.”
சபிதா, “அவன் சொல்றது சரி தான், இதுவரை பேசுனது இல்ல. இன்னைக்கு காலைல அவனே மெசேஜ் பண்ணி அவசரமா ஒரு டான்ஸ் ரிகர்சல் பண்ணணும் வானு சொன்னான். இங்க வந்தா அசிங்கமா பேசுறான், அசிங்கமா தொடுறான் சார்.” தேம்பினாள் அவள்.
சயத், “ண்ணா நடிக்கிறா. வீட்டுல சண்டைனு சொல்லிட்டு ரிலாக்ஸ் பண்ண இங்க வந்தேன். எனக்கு சில ஸ்டெப்ஸ் வரல, சொல்லி குடுனு அவதான் ண்ணா வந்தா. டான்ஸ் முடிச்சிட்டு சாதாரணமா தான் வீட்டுக்கும் போனா.”
இன்ஸ்பெக்டர், “வந்தா நீ மேல கை வப்பியாடா?”
சயத் அருகே கோவமாக வந்த இன்ஸ்பெக்டர் முன்பு வந்து நின்றான் விஷ்ணு, “பேசிட்டு இருக்கோம்ல, அதுக்குள்ள என்ன எகிறிட்டு வரீங்க?” சளைக்காமல் நேருக்கு நேர் நின்றான்.
“யார் சார் இவன்? நானும் வந்ததுல இருந்து பாக்குறேன், ரொம்ப துள்ளுறான்.” என்றான் அந்த இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம்.
“அவன் இவன்னு நீங்க பேசுறது எனக்கு புடிக்கல. எனக்கு சரி சமமா இவனுக்கும் இங்க ஷேர் இருக்கு. அவன் வந்து நிக்கதான் செய்வான்.” என்றான் பார்த்திபன் அழுத்தமாக.
“சரி.” சாந்தமானான் அந்த இன்ஸ்பெக்டர், “இப்ப அந்த பொண்ணுக்கு என்ன பதில் சொல்றிங்க?”
பார்த்திபன், “அதை நீங்க தான் சொல்லணும். கேஸ் போட கூடாது. ஆனா அவனுக்கு தண்டனை வாங்கி குடுக்கணும், ரோட்டுல நின்னு சத்தம் போடணும், இதெல்லாம் எதுக்கு?”
“எதுக்குன்னா… மனசுல வஞ்சம் வச்சிட்டு பண்றோம்னு சொல்றியா? ஏன்யா ஒரு பொண்ணு தனக்கு நடந்த அசிங்கத்தை வாய் விட்டு கேட்டு அழுகுது, நீங்க லா பேசிட்டு இருக்கீங்க.”
“உண்மைல அழுதா நியாயம் குடுக்கலாம், கண்ல கிளிஸரின் வச்சிட்டு அழகுற மாதிரி நடிச்சா?” புருவம் உயர்த்தி அந்த பெண்ணை பார்த்திபன் பார்க்க விக்கித்து நின்றாள் அவள்.
பார்த்திபன் தன்னுடைய கைப்பேசியை எடுத்து அங்கு பொதுவாக காட்ட, அவ்வளவு தான் அடங்கியது கூட்டம்.
கடையின் வாசலில் ஆட்டோவிலிருந்து இறங்கும் பொழுதே சுற்றம் பார்த்து, அவசரமாக கண்ணில் ஏதோ திரவத்தை அந்த பெண் சற்று ஊற்றி வர, அதை தெளிவாக அங்கிருந்த கேமரா படமாக்கியிருந்தது.
“என்ன ம்மா இது?” அந்த இன்ஸ்பெக்டர் வேகமாக அந்த பெண்ணிடம் குரலை உயர்த்தினான்.
“சார்…” அந்த பெண்ணின் தந்தை பம்ம துவங்கினார்.
“யோவ் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? உங்க நேரம் வேஸ்ட் ஆனதும் இல்லாம, எங்க நேரத்தையும் கெடுத்துட்டு பொய்யா ஒரு பையன் மேல பலியை போடுறிங்களா? ஒழுங்கா ஓடிடு…” அனைவரையும் முந்தி அவர்களை விரட்ட முயன்றான் இன்ஸ்பெக்டர்.
“என்ன சார் பத்திரமா அனுப்புறிங்களா?” விஷ்ணு கோவமாக முன்னே ஓரடி எடுத்து வைக்க, நண்பனைத் தடுத்துவிட்டான் பார்த்திபன்.
“நீங்க அவங்க மேல கம்ப்ளெயின்ட் எதுவும் குடுக்குறதா இருந்தா குடுங்க சார், உள்ள தூக்கி வச்சு தோலை உரிச்சிடுறேன்.”
“வேணாம் கிளம்புங்க.” இத்தனை நேரம் அவர்களை இங்கு வைத்திருப்பதே பார்த்திபனுக்கு பிடிக்கவில்லை.
“ஏன்டா அனுப்புன? அவனுங்கள அடிச்சு கொல்லணும்னு தோனுச்சு.” என்றான் விஷ்ணு தனியாக யோசனையிலிருந்த பார்த்திபனிடம்.
பார்த்திபன், “கண்டிப்பா, முதல்ல அந்த இன்ஸ்பெக்டர விசாரி.”
தலை அசைத்த விஷ்ணு, “அந்த பொண்ண பத்தி நீ சொல்றத பாத்தா இன்ஸ்பெக்டர் கூட ஸ்ட்ராங் கனெக்சன் இருக்குமோனு தோனுது.”
பார்த்திபனும் ஆமோதிப்பாக ஆம் என தலையை ஆட்டினான்.
“லேண்ட் ஓனர் அப்போவே எனக்கு கால் பண்ணிட்டார். என்ன பண்ணலாம்?” பார்த்திபனுக்கு அப்பொழுது தான் அந்த நினைவே வந்தது.
நெற்றியை நீவி, “மறந்துட்டேன், பணம் குடுத்துட்டு வந்துடலாமா?” விஷ்ணு சரி என்க, உடனே இருவரும் முன்தொகையாக இரண்டு கோடியை ஒப்படைத்துவிட்டு வெளியே வர ஆரபி அழைத்திருந்தாள்.
“இப்பதான் ஆரா பணம் குடுத்துட்டு வர்றேன்.”
“இப்போ தான் குடுக்குறேளா?” அவள் அதிர்ச்சியில் மணியைப் பார்த்தாள் மதியம் ஒன்றைத் தாண்டியிருந்தது.
“ஆமாடி, கடைல ஒரு பிரச்சனை.”
“ஏன் அட்வான்ஸ் குடுத்துட்டு வந்து பாத்துருக்க கூடாதா?” மனைவிக்கு மனதே சரியில்லை.
நல்ல காரியம் துவங்க நல்ல நேரத்தில் முதல் வேலையை துவங்கியிருக்கலாமே என்ற கவலை.
வாடிய அவள் முகத்தைப் பார்த்தவன் இதழ் கடையோர சிரிப்போடு, அவள் நாற்காலியை இழுத்து தனக்கு அருகில் அமர்த்திக்கொண்டான்.
ஆரபி பயந்து, “யாராவது வந்துட போறா ன்னா…” அச்சத்தில் திரும்பி வீட்டை ஒருமுறை பார்த்துக்கொண்டாள்.
“அதெல்லாம் யாரும் வர மாட்டா… நீ வாய திறடி மாமி.” அவள் முகத்திற்கு நேரே ஒரு கவளம் உணவை ஏந்தி காத்திருந்தான் பார்த்திபன்.
கணவன் கண்களைப் பார்த்தவாறே வாயைத் திறக்க அவளுக்கு ஊட்டிவிட்டு தானும் உண்டான்.
“டான்ஸ் ஆடுற பசங்க இருப்பாங்கள்ல, அதுல ஒரு பொண்ணு இன்னொரு பையன் தப்பா நடந்துக்கிட்டதா பிரச்சனை பண்ணிட்டா.”
“அச்சச்சோ…”
தலையை ஆட்டினான், “அதான் பிரச்சனைய முடிச்சு வர நேரமாச்சு.”
“அந்த பொண்ணுக்கு…”
“அந்த பொண்ணு மேல தான் தப்பு, பேசி முடிச்சாச்சு. பயம் இல்லை இனி…”
“இந்த மாதிரி முன்ன வந்தது இல்லயே… எதுக்காக அந்த பொண்ணு அப்டி பண்ணுத்து?” தோளைக் குலுக்கி அவளுக்கு ஊட்டுவதிலே குறியாய் இருந்தான்.
அவளுக்கும் பசியும் பயமும் ஒருங்கே வர, கணவன் உண்ணாதது கூட மறந்து போய் கதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ம்மா…” சிணுங்கலோடு கண்ணை கசக்கியபடி இறங்கி வந்த பூர்வி அன்னை கைகளில் அடைக்கலமாக, மகள் கைகளைப் பற்றி முத்தம் ஒன்று வைத்த பார்த்திபன் மனைவிக்கு ஊட்ட துவங்கினான்.
மகளோ அன்னை தோளில் சுகமாய் உறங்கிவிட, தகப்பன் அன்னைக்கு மீண்டும் ஊட்டினான்.
“பயமா இருக்கே ன்னா. போலீஸ் கம்ப்ளெயின்ட் எதுவும் பண்ணலாமோனோ?” அவளிடம் அந்த காவலதிகாரி தான் முக்கிய பங்குதாரர் என்று கூறினால்… அவ்வளவு தான் என்று யோசித்தவன் அதனை மறைத்தான்.
“ஏதோ பணம் எதிர்பாத்துட்டாங்க போல ஆரா ம்மா, விடு அந்த பேச்சை… பாரு உன் முகமே சரியில்ல…” இடது கையால் அவளது கன்னத்தை மென்மையாக வருடினான்.
மனம் அழுத்திக்கொண்டிருந்த பாரத்தை அவன் கைகள் சற்று தணிக்க, அவன் கையைத் தன்னுடைய தோளோடு அணைத்து முகத்தை சாய்த்தாள்.
மனைவியின் வருத்தத்தைப் பார்த்திபனால் பார்க்க முடியவில்லை, அவளிடம் இதனைப் பற்றி கூறாமலே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம். அதே சமயம் அவளிடம் மறைக்கவும் முடியாது, முகத்தை வைத்தே அவன் நிலையை யூகித்துவிடுவாள்.
“நீங்க சாப்பிடுங்கோ நேக்கு போதும்.” தானும் உண்டவன் குழந்தையை மனைவியிடமிருந்து வாங்கி தங்கள் அறைக்கு சென்றான்.
குழந்தையை கட்டிலில் கிடத்தி பாதுகாப்பிற்காக இரண்டு பக்கம் தலையணை வைத்து போர்த்திவிட்டு எழ, ஆரபி கையில் ஒரு வாட்டர் கேன் கொண்டு வந்தாள்.
“செத்த நேரம் கழிச்சு குளிச்சுக்கோங்கோ, சக்கரை கம்மியா தான் போட்ருக்கேன்.”
“ம்ம்ம்… அண்ணா ஏதாவது சொன்னானா அடுத்து?”
“இல்ல, ஆனா அவா முகம் தெளிச்சியா இல்லாம ஏதோ யோசனைல இருந்தா…”
“ம்… இரு.” கீழே சென்று ஒரு பையோடு வந்தான்.
“விஷ்ணு எழுவது லட்சம் குடுத்தான்.” பையை மனைவியின் கையில் வைத்தான்.
“எப்படி அவர்கிட்ட பணம் இருந்திருக்காதுல?”
பார்த்திபன், “கிறுக்கன்… எங்கையாவது கை மாத்துக்கு வாங்கிருப்பான், சொல்ல மாட்றான்.”
“ம்ம்ம்… நோக்கு இருக்க பிடிவாதம் விஷ்ணு அண்ணாக்கு இல்லனா தான் சந்தேகப்படணும். நீர் ரெண்டு பேரும் தான் ஒட்டி பொறந்த மாதிரி எல்லா குணமும் ஒன்னா வச்சிருக்கேள். ஆனா நான் குடுத்தா மட்டும் தோப்பனார் போட்டது, விசேஷம் அது இதுனு காரணம் சொல்லிடுறேள்…”
நொடிப்போடு பணத்தை அலமாரியில் வைக்க, மனைவியை பின்னிருந்து அணைத்துக்கொண்டு அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, இதழ்களால் ஒத்தடம் கொடுத்தான் பார்த்திபன்.
“என் மாமி கோவப்படுறாளா?”
“நான் ஏன் கோவப்படணும்…?”
தோள்களில் உரசிய அவன் இதழ்கள் நாடியினை உரச, வயிற்றில் அமிலம் சுரந்தது மனைவிக்கு, “ம்ம்… கோவம் வந்தாலும் எனக்கு ஒன்னுமில்ல. என் மாமிய எப்படி சமாதானம் பண்றதுன்னு எனக்கு தெரியும்.” ஆரபியை தன்னை பார்த்து திருப்பி அலமாரியை பூட்டி, அவளை அதன் மேல் வசமாக சாய்த்து நிறுத்தினான்.
“ரொம்ப தேங்க்ஸ்டி, சாரீ கட்டுனதுக்கு.”
ஆரபி புடவையை சரி செய்யும் முன்பே பார்த்திபன் கைகள் தாராளமாக அவளது வெற்றிடையில் விளையாட, கண்களை மூடி தன் முகத்தில் முத்த ஊர்வலம் நிகழ்த்தும் கணவன் மார்பினில் தன் கைகளைப் பதித்தாள்.
“இது என்ன ன்னா பாப்பா இருக்கப்போ…?” பார்த்திபன் கைப்பேசியும் இசைக்க அதை பொருட்படுத்தாமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தான்.
“முத்தம் குடுக்குறதுக்கும் இதெல்லாம் சொல்லாதடி. பாப்பா தூங்க தானே செய்றா…” தன்னுடைய முகத்தைப் பிடித்து சில இன்ச் இடைவேளை விட்டு நிறுத்தியிருந்த மனைவியைப் பார்த்து முறைத்தான்.
“சமாதானம் படுத்த குடுக்குறேள்ன்னா வேணாம்… ஆசையா குடுக்குறதா இருந்தா கிட்ட வாங்க.” கையை கணவன் மார்பிலிருந்து எடுத்து அவனைப் பார்த்து விஷமமாக சிரித்தாள்.
“மாமி… அசத்துறடி…”
கர்வர்ந்திழுக்கும் சிரிப்பு, வெட்கம் பூசிய கன்னம் என ஆரபியை நாடி ஓடியது பார்த்திபன் உள்ளம். சொல்லில் மாளாத பார்வை காதலை அள்ளி அவன் மேல் தெளிக்க, இருவரின் இதழ்களிலும் குறுஞ்சிரிப்பின் சாயல்.
“பொறுப்பே இல்லாம இருந்த என்னை, உனக்கு எப்படி மாமி விட கூடாதுனு தோனுச்சு?”
என்னை உன் ஆசை தீர அள்ளிக்கொள் என்று வழிவிட்டு நிற்கும் மனைவியை நாடாமல், அவள் பேச்சைக் கேட்டு அதில் சில நொடிகள் லயித்திருக்க ஆசைக்கொண்டான்.
***
தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் ஒரு புகழ்பெற்ற ஆடிட்டர் அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்க துவங்கிய பார்த்திபன், சில நேரம் உணவுண்ண செல்லும் இடம்தான் நாராயணா மெஸ்.
பல தலைமுறைகளாக பார்த்துவரும் அந்த உணவகத்தை தன்னுடைய பொறுப்பில் ஏற்றிருந்தார் ராஜ் கோபால், ஆரபி தந்தை. கல்லூரிக்கு சென்று வந்த ஆரபி மாலை வேளையில் தந்தைக்கு உதவ, கல்லாவில் வந்து அமர்ந்துகொள்வாள்.
மாலை வேலை முடித்து அங்கு வந்து டீ, வடை வாங்கி உண்பவன், ஒரு நாள் மீதமிருந்த பணத்தை வாங்காமல் ஏதோ ஞாபகத்தில் சென்றுவிட, அடுத்த நாள் நினைவில் வைத்து அவன் கையில் கொடுத்துவிட்டாள்.
தன்னிடம் பணத்தைக் கொடுத்தவள் முகத்தில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லை. மருந்திற்கு கூட சிரிப்பில்லை. அத்தனை நாள் அங்கே வருபவன் அன்றுதான் அவளை முதல் முதலில் கவனிக்க துவங்கியது.
தன்னிடம் மட்டுமல்லாது வேறு எந்த ஆண்களிடமும் தேவைக்கு அதிகமான வார்த்தையோ, நீண்ட நேர பார்வை கூட இல்லாது போனது.
மூக்குத்தி அணிந்து அழகு விக்ரகம் போல் நிற்பவள் கவனத்தை ஈர்க்கவே சிலர் பேசுவதும், சில ஆண்கள் பார்வை அவளை அளவிற்கு அதிகமாக வருடுவதையும் அன்று தான் உணர்ந்தான்.
இருந்தும் எவருக்கும் அசையவில்லை, எந்த பார்வையும் பெண்ணை சலனப்படுத்தவில்லை. அவளது அந்த உறுதி பார்த்திபனை அசைத்தது. அவனையும் மீறிதான் பெண்ணை கவனிக்க துவங்கினான்.
வேண்டும் என்றே அதிகமான பணத்தை கொடுத்து மீதம் வாங்காமல் சென்றுவிடுவான். முதலில் சாதாரணமாக இருந்த ஆரபிக்கு அவன் நடவடிக்கை சந்தேகத்தைக் கொடுக்க, அவனை முறைத்துப் பார்ப்பாள், அசரவில்லை பார்த்திபன்.
அவளை விட அதிகமான இறுக்கத்தை முகத்தில் வைத்திருப்பான், தன்னுடைய ஆர்வத்தைக் காட்டாமல்.
தினமும் இல்லம் திரும்பும் பொழுது பார்த்திபன் அலுவலகத்திற்கு, நேர் எதிரில் இருந்த கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வரும் பொழுதெல்லாம், அவளை நெருங்காமல் தூரத்தில் நின்றே பெண்ணை தன்னை முறைப்போடு கவனிக்க வைத்தான்.
அப்படி தான் அன்றொரு நாள் ஆரபியின் செருப்பு அந்துவிட, தத்தி தத்தி கோவிலுக்கு சென்றவள் வெளியே வரும் பொழுது, புதிதாக செருப்போடு நின்ற பார்த்திபனைப் புறக்கணித்து தன்னுடைய செருப்பை தேட அது அங்கில்லை.
காரணமானவன் எதிரே இருக்க அவனிடம் கேட்கவும் பிடிக்கவில்லை. கோவம் வந்தது அவன் மேல்.
விலகி நடந்தவள் அவனைக் கடக்க, “இப்ப நீ இதை போடல, தூக்கிட்டு போய் உன் கடை முன்னாடி நிறுத்துவேன்.”
விக்கித்து அவனைத் திரும்பி பார்க்க, பார்த்திபன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அதே சமயம் அவன் கண்கள் தீர்க்கமாக அவளைப் பார்த்தது. கையில் இருந்த அந்த செருப்பை முன்னே நீட்ட ஆரபிக்கு அழுகை வந்தது.
அங்கு நிற்கவும் பயம், எவரேனும் பார்த்துவிட்டால் என்று. அவன் அடமும் அதை விட பயமாக இருந்தது. அவசரமாக வாங்கி செருப்பை வாங்கி அணிந்தவள் ஓடிவிட்டாள்.
அடுத்த நாள் பார்த்திபன் மாலை அவர்கள் கடைக்கு சென்று, தான் குடித்த தேநீருக்கு பணம் கொடுக்க, மீதி பணம் கொடுக்கையில் அதிகமாக இருநூறு ரூபாய் தாளை வைத்தாள்.
பார்த்திபன் அவளிடம் நீட்ட, “இல்ல, நான் சில்லறை சரியா தான் குடுத்தேன்.” என்று அடுத்த வேலையைப் பார்க்க பார்த்திபனுக்கு கோவம்.
தான் வாங்கி கொடுத்த காலணிக்கான பணம் என்று அறிந்து, மறுநாள் அவள் கோவிலுக்கு வர பார்த்திபன் காத்திருக்க, ஆரபி கோவிலுக்கு அடுத்த இரண்டு மாதங்கள் வரவே இல்லை.
கடைக்கும் அவள் வராமல் போக, அவள் மேல் கோவமும் காதலும் போட்டி போட்டு பெருகி நின்றது ஆணின் மனதில்.