நான் சென்னை அண்ணா யுனிவெர்சிட்டியில் இன்ஜினியரிங் சேர்ந்து ஒரு வாரம் கடந்து இருந்த நிலையில் வெள்ளி அன்று இரவு 7.50 மணி அளவில் தான் என்னவளை முதல் முதலாகச் சந்தித்தேன்.
நண்பன் வீட்டில் இருந்து என் வீட்டிற்கு பைக்கில் திரும்பிக் கொண்டு இருந்தேன். என் வீட்டிற்கு இரண்டு தெருக்கள் முன்னே இருந்த தெருவில் வந்து கொண்டிருந்த போது தான் மணற்குவியலின் மீது அமர்ந்திருந்த அவளைப் பார்த்தேன்.
என் வண்டியின் வேகத்திற்கு முதலில் அவளைக் கடந்து சில அடி தூரங்கள் சென்றுவிட்டேன். ஆனால் அந்தக் குழந்தை முகமும், அதில் இருந்த இலக்கற்ற பார்வையும் என் வண்டியின் வேகத்தைக் குறைத்து நிற்கச் செய்ததோடு, என்னை அவள் அருகே சென்று பேசவும் உந்தியது.
அவள் தலைமுடியை ரிப்பன் வைத்துப் பின்னலிட்டு கட்டி இருந்த முறை, அவள் பள்ளி செல்பவள் என்பதை எடுத்துக்காட்டியது. நைன்த் இல்ல டென்த் படிக்கிற பொண்ணு மாதிரி தெரிந்தாலும் ஏனோ அவளது குழந்தை முகம் அவளை சிறுமியாகத் தான் நினைக்கத் தோன்றியது.
“பாப்பா.. பாப்பா” என்று அழைத்தேன். அவளிடம் சிறிதும் மாற்றம் இல்லை.
வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அவளை நெருங்கி, “பாப்பா” என்று அழைத்தபடி அவள் கையைத் தொட்டதும் திடுக்கிட்டு என்னைப் பார்த்தவள் பயத்துடன் வேகமாக நகர்ந்ததில் தரையில் விழுந்தாள்.
மணற்குவியல் அருகே அவளது சைக்கிள் கீழே விழுந்து கிடந்த விதமும், அவளது சுயமிழந்த இலக்கற்ற தன்மையும், எனது தொடுகையில் அவளது பயம் கலந்த விலகலும் என் மனதில் சிறு படபடப்பைக் கொடுக்கவும், அவளை ஆராய்ந்தேன்.
தலை முடி கலைந்து ஆடை கசங்கி இருந்தாலும் என் மனதில் தோன்றிய அசம்பாவிதம் நடந்தது போல் தெரியவில்லை. ஆனால் அவளது நிலை, அதற்கு முயற்சி நடந்து இருக்குமோ என்ற சந்தேகத்தைத் தான் கொடுத்தது.
நான் சற்றே விலகி நின்றபடி, “ஹே! ரிலாக்ஸ்.. பயப்படாத.. எதுவும் ஹெல்ப் வேணுமானு கேட்கத் தான் கூப்பிட்டேன்.. டூ த்ரீ டைம்ஸ் கூப்பிட்டும் நீ ரெஸ்பாண்டு செய்யலைனு தான் தொட்டேன்.. சாரி” என்றேன்.
அவள் என்னைப் பார்த்த அந்த உயிரற்ற பார்வையில் என் நெஞ்சம் பிசைந்தது. நான் பேசியது அவளுக்குப் புரிந்ததா என்ற சந்தேகத்தில், “பாப்பா நான் பேசுறது புரியுதா?” என்று கேட்டேன்.
அவளிடம் அதே பார்வை.
“பாப்பா” என்று இருமுறை சற்று சத்தமாக அழைத்தேன்.
விழிகளில் மிகச் சிறு மாற்றம்.
“நான் பேசுறது புரியுதா? நீ தமிழ் தானே?” என்று கேட்டதும் ‘ஆம்’ என்றது போல் மிகச் சிறு தலை அசைப்பு கிடைத்தது.
“உன் வீடு எங்க இருக்குது?” என்றதிற்கு பதில் இல்லை.
“எதுவும் ஹெல்ப் வேணுமா?” என்று கேட்டதும் என்னைப் பார்க்காமல் மறுப்பாகத் தலை அசைத்தாள்.
“உன் கிட்ட மொபைல் இருக்கா?
வீட்டுக்கு வழி மறந்துட்டியா?
உன்னை உன் வீட்டில் விடவா?” என்றதிற்கு எல்லாம் மறுப்பான தலை அசைப்பு தான் கிடைத்தது. அதுவும் அவளது பார்வை தரையில் இருந்து சிறிதும் உயரவில்லை.
“எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு உண்டு பாப்பா.. இப்படி கலங்கக் கூடாது” என்று நான் கனிவு கலந்த திடமான குரலில் கூறியதும் சட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் சிறு ஒளியை கண்டேன். ஒருவேளை இதே வார்த்தைகளை அவளுக்கு நெருக்கமானவங்க அவளிடம் இதற்கு முன் சொல்லி இருப்பார்களோ! என்று நினைத்துக் கொண்டேன்.
“உன் பெயர் என்ன?” என்றதும் மிக மெல்லிய குரலில் “ராதா” என்றாள்.
“எங்க இருந்து வர?” என்றதிற்கு பதில் இல்லை.
“பிரெண்ட் வீட்டுக்கு போயிட்டு வரியா?
கடைக்குப் போயிட்டு வரியா?
அப்பா இல்ல அம்மா போன் நம்பர் சொல்றியா? நான் காள் செய்து வரச் சொல்றேன்” என்றதிற்கு எல்லாம் மீண்டும் மறுப்பான தலையசைப்பு தான் கிடைத்தது. ஆனால் இம்முறை அவளது பார்வையைத் தாழ்த்தவில்லை. அதில் இருந்து அவளுக்கு என் மீது ஏதோ ஒரு வகையில் சிறு நம்பிக்கை வந்ததை உணர்ந்தேன்.
சிறிது யோசித்து, “டுயூஷன் போயிட்டு வரியா?” என்றதும் சட்டென்று அவளது விழிகளில் அலைப்புறுதல்.
“என்னாச்சு? யாரும் எதுவும் தப்பா நடந்துக்க முயற்சி செய்தாங்களா?” என்றதும் அவளிடம் தோன்றிய சிறு நடுக்கமே எனக்கு பதிலைத் தந்துவிட்டது.
“அதான் நீ ‘பிரேவ்’ஆ தப்பிச்சு வந்துட்டியே! அப்புறம் என்ன?”
கண்கள் லேசாகக் கலங்கிய நிலையில் மீண்டும் மறுப்பான தலையசைப்பு, ஆனால் இம்முறை அதற்கு ஒன்னுமில்லை என்ற அர்த்தம் என்று புரிந்து கொண்டேன்.
“இங்கே தனியே இப்படி உட்காராம இப்போ வீட்டுக்குப் போ.. போனதும் அம்மா கிட்ட நடந்ததைப் பத்தி சொல்லு” என்றதிற்கு மீண்டும் பார்வையை தாழ்த்தியபடி மறுப்பாகத் தலை அசைத்தாள்.
“என்னாச்சு? இங்கே இப்படி தனியே இருப்பது சரி இல்லை.. வீட்டுக்குக் கிளம்பு.. வா எந்திரி” என்றபடி அவளது சைக்கிளை தூக்கி நிறுத்தினேன்.
அவள் அப்படியே இருக்கவும், “அனேக பேர் இதெல்லாம் கடந்து தான் வராங்க.. நீயும் கடந்து வா.. சொல்லப்போனா நீ கிட்டதிட்ட கடந்த நிலை தான்.. ரொம்ப தைரியமா செயல்பட்டு தப்பிச்சு வந்துட்ட, ஸோ இப்போ இருக்கது ஜஸ்ட் அதிர்ச்சி மட்டும் தான்.. இதுவும் இன்னும் கொஞ்ச நேரத்தில் சரி ஆகிடும்” என்று ஊக்கம் கொடுத்து, “என்னைப் பார்” என்றேன்.
அவள் பார்த்ததும், “நிஜமாவே இதெல்லாம் ஒன்னும் இல்லை அண்ட் நீ பிரேவ் கேர்ள்.. பிரச்சனையைக் கண்டு என்றைக்கும் ஓடக் கூடாது.. எதிர்த்து நில்.. உன்னை கண்டு பிரச்சனை விலகி ஓடும்.. என்ன சரியா?” என்றதும் “சரி” என்பது போல் தலையை அசைத்தாள்.
“இனி எப்படி டுயூஷன் போறதுனு யோசிக்காத.. வீட்டுக்குப் போனதும் அம்மா கிட்ட சொல்லு.. அவங்க” என்று நான் பேசிக் கொண்டு இருக்கும் போதே மறுப்பாக தலை அசைத்தபடி, “அம்மா இல்லை” என்றாள்.
சட்டென்று என் மனம் பிசைய நெஞ்சில் சிறு வலி. அதை காட்டிக் கொள்ளாமல், “அப்போ அப்பா கிட்ட சொல்லு.. கண்டிப்பா உன் அப்பா புரிஞ்சுப்பாங்க.. நாளைக்கு உன் கூட டுயூஷன் வந்து அந்த பையனை கண்டிப்பாங்க.. அப்புறம் நீ ப்ரீயா எப்போதும் போல் டுயூஷன் போய் வரலாம்” என்றேன்.
அவள் தயங்கியபடி “சார்” என்றதும்,
“என்ன? அப்பா கிட்ட சொல்ல தயக்கமா இருக்கா? நான் வேணா உன் கூட வந்து உன் அப்பா கிட்ட விஷயத்தை சொல்லவா?” என்று கேட்டேன்.
மறுப்பாக தலை அசைத்தபடி, “பையன் இல்ல சார்” என்றதும் நான் அதிர்ந்து தான் போனேன். அந்த முகம் தெரியாத பன்னாடை பரதேசியோட மண்டையைப் பிளக்கும் அளவுக்கு கடும் கோபம் வந்தது.
“அப்போ கண்டிப்பா வீட்டுக்கு போனதும் அப்பா கிட்ட விஷயத்தை சொல்லிடு” என்றதும் ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
“சரி நீ கிளம்பு” என்றேன்.
அவளுக்கு கை கொடுத்து தூக்கி விட மனம் விழைந்தாலும் அவளது மனநிலையைக் கருதி அவள் மெல்ல எழக் காத்திருந்து சைக்கிளை அவளிடம் கொடுத்தேன்.
மெல்ல அதில் ஏறிக் கிளம்பியவள் நான்கடி சென்றதும் நின்று திரும்பிப் பார்த்தாள்.
நான் மென்னகையுடன் கட்டைவிரலை தூக்கிக் காட்டினேன். அவள் கிளம்பியதும் எனது வண்டியை இயக்கி அவள் பின்னால் சென்றேன்.
அவள் மீண்டும் திரும்பிப் பார்க்கவும், “என் வீட்டுக்குப் போறதுக்கும் இதே வழி தான்” என்றேன்.
அமைதியாக திரும்பிக் கொண்டாள். மெதுவாக அவள் பின்னாலேயே சென்று அவள் வீட்டிற்குள் சென்ற பிறகே நிம்மதியுடன் எதிர்திசையில் இருந்த என் வீட்டிற்குச் சென்றேன்.
வீட்டின் அழைப்பு மணிச் சத்தத்தில்,
“டாடி” என்ற உற்சாக அழைப்புடன் துள்ளிக் குதித்து ஓடி வந்த ஆறு வயது ஆதினி கதவின் அருகே இருந்த முக்காலியின் மீது ஏறி கதவில் இருந்த சிறு வில்லையின் வழியே தந்தையின் வரவை உறுதி செய்த பிறகே கதவைத் திறந்தாள்.
மீண்டும், “டாடி” என்ற உற்சாக அழைப்புடன் அவ்யுதகண்ணனை வரவேற்றாள்.
குழந்தைக்கு ஏற்ப விரிந்த புன்னகையுடன் உற்சாக குரலில், “ஹே டாலி!” என்றவன், “பைவ் மினிட்ஸ்” என்றபடி உள்ளே வந்தான்.
“ஓகே டாடி” என்றபடி தந்தைக்கு வழி விட்டாள்.
கூடத்தில் இருக்கும் கை கழுவும் இடத்திற்குச் சென்று ‘டெட்டால்’ கையலம்பியைக் கொண்டு கையை சுத்தம் செய்தபடி, “டாலி டோரை எப்படி திறந்தீங்க? பெல் சத்தம் கேட்டதும் திறந்துட்டீங்களா?” என்று கேட்டான்.
“நோ டாடி.. டாடி சொன்னபடி, டாலி லென்ஸ் பாத்து தான் திறந்தா”
“சமத்து பாப்பு” என்றவன் இதழ் அசைத்து முத்தம் கொடுக்க, மகளும் மகிழ்ச்சி பொங்கியபடி இதழ் அசைத்து மூன்று முத்தங்கள் கொடுத்தாள்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.