அவன் குழந்தையின் காதில், “டாலி அம்மாவை பார்க்கலைனு அம்மா அழுறாங்க” என்றதும், குழந்தை சட்டென்று திரும்பி அம்ரிதாவைப் பார்த்தாள்.
குழந்தையின் கலங்கிய விழிகளை கண்ட நொடியில் அம்ரிதாவின் கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. அதை கண்ட குழந்தையின் கன்னங்களிலும் கண்ணீர் இறங்க, உதட்டை பிதுக்கியபடி தந்தையை நோக்கினாள்.
மறுப்பாக தலை அசைத்து, மகளின் கண்ணீரை துடைத்தவன் மண்டியிட்டு அமர்ந்தபடி குழந்தையை நிற்க வைத்து, ‘போ’ என்பது போல் தலை அசைத்தான்.
“அம்மா அழுவுறாங்க” என்று கரகரத்த குரலில் குழந்தை கூற,
அவனோ பிசையும் நெஞ்சை அடக்கியபடி மகளுக்காக மென்னகைத்து வரவழைத்த இயல்பு குரலில், “டாலி அம்மாக்கு கிஸ் கொடுத்தா, அம்மா ஸ்மைல் பண்ணுவாங்க” என்றான்.
‘நிஜமாவா?’ என்பது போல் குழந்தை பார்க்க,
அதே மென்னகையுடன் தலையை ஆட்டியபடி, “நிஜமா தான்” என்றான்.
முதலில் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்ட பிறகே குழந்தை அம்ரிதாவை நோக்கி திரும்பினாள்.
முட்டி போட்டு அமர்ந்த அம்ரிதா இதழில் மென்னகையுடனும், விழிகளில் கண்ணீருடனும், கைகளை நேராக நீட்டி ‘வா’ என்பது போல் அழைத்து, பின் கைகளை விரித்தாள்.
தந்தையை திரும்பி பார்த்த குழந்தை அவனது புன்னகையில் தைரியம் பெற்றவளாக அம்ரிதாவை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தாள்.
முதல் முறையாக நடை பழகும் குழந்தையைப் போல் அடி மேல் அடி எடுத்து வைத்தபடி ஆதினி மெல்ல நகர்ந்தாள்.
ஆதினியை வாரி அணைத்து முத்தமிட அம்ரிதாவின் மனம் துடித்தாலும், குழந்தை பயந்திடக் கூடாது என்ற காரணத்திற்காக அதிகரித்த எதிர்பார்ப்பு கலந்த தவிப்புடன் அப்படியே அசையாமல் அமர்ந்து இருந்தாள்.
ஆதினி கைக்கு எட்டும் தூரம் வந்ததும் தன்னை மீறி வாரி அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டவளின் கன்னத்தில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது.
அந்த நொடியில் அன்னைக்கு அன்னையாக மாறிய குழந்தை அம்ரிதாவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு கண்ணீரை துடைத்தபடி, “அழாதீங்க ம்மா” என்றாள்.
குழந்தையின் ‘அம்மா’ என்ற அழைப்பில் அவளுள் அப்படி ஒரு பரவசம்!
“அம்மா அழலைடா” என்றபடி குழந்தையை இறுக்கமாக கட்டிக் கொண்டவளின் கன்னங்களில் இன்னமும் கண்ணீர் நிற்காமல் வடிந்தது. ஆனால் இது ஆனந்த கண்ணீர்.
சில நொடிகள் கழிந்தும் அம்ரிதாவின் அழுகை நிற்கவில்லை என்றதில் தந்தை பக்கம் திரும்பிய ஆதினி, “டாடி அம்மா இன்னும் அழுவுறாங்க.. நீங்களும் கிஸ் கொடுங்க.. அழுகைய ஸ்டாப் பண்ணிடுவாங்க” என்றாள்.
மகளில் கூற்றில் அதிர்ந்தவன், பெரும் அதிர்வுடன் அழுகையை நிறுத்தி இருந்த அம்ரிதாவை கண்டு வாய்விட்டு சிரித்தான்.
தந்தையின் சிரிப்பில் குழந்தையும் சிரிக்க, சுயம் பெற்ற அம்ரிதாவோ அவனை முறைத்தாள்.
“அம்மா டாடியை முறைக்கிறா” என்று மகளிடம் அம்ரிதாவை அவன் போட்டுக் கொடுக்க, அம்ரிதா சட்டென்று முகபாவத்தை மாற்றினாள்.
இருப்பினும் அவள் பக்கம் திரும்பிய ஆதினி, “ஏன் ம்மா முறைக்கிறீங்க?” என்று கேட்டாள்.
“இல்லையே!” என்று அம்ரிதா கூற,
குழந்தை இப்பொழுது முறைப்புடன், “பொய் சொல்லக் கூடாது” என்றாள்.
“நான் பொய் சொல்லலை டாலி.. டாடி..” என்று ஆரம்பிக்க,
குழந்தை அவளது அணைப்பில் இருந்து சற்றே விலகி நின்று இரு கரங்களையும் இடுப்பில் வைத்தபடி முறைப்புடன், “டாடி பொய் சொல்ல மாட்டாங்க” என்றாள்.
அவனை முறைக்க முடியாமலும் மகளை சமாளிக்க முடியாமலும் அவள் பாவமாக பார்க்க,
ஆதினியோ புருவத்தை சுருக்கியபடி, “உங்களுக்கு வுல்ஃப் ஷெப்பர்ட் பாய் ஸ்டோரி தெரியுமா?” என்று கேட்டாள்.
தெரிந்தாலும் தெரியாது என்றே தலையை ஆட்டினாள்.
“ஒரு ஷெப்பர்ட் பாய் டெய்லி ஷீப்ஸ்க்கு ஃபுட் கொடுக்க ஃபாரெஸ்ட் பக்கம் கூட்டிட்டு போவான்.. அப்போ ஒன் டே விளையாட்டா ‘வுல்ஃப்.. வுல்ஃப்.. ஹெல்ப்.. ஹெல்ப்’னு கத்தினான்.. நிறைய பீப்பிள் அவனுக்கு ஹெல்ப் செய்ய வந்தாங்க.. இவன் சிரிச்சுட்டே ‘சும்மா.. ஃபன்-காக சொன்னேன்’னு சொன்னதும் பீப்பிள் அவனை திட்டிட்டு கிளம்பிட்டாங்க..
இதே மாதிரி அவன் அடிக்கடி ப்ளே செய்தான்.. பீப்பிளும் ஹெல்ப்க்கு வந்துட்டு திட்டிட்டு போய்டே இருந்தாங்க.. பட் ஒன் டே நிஜமாவே வுல்ஃப் வந்துருச்சு.. ஆனா அவன் ஹெல்ப்னு கத்தினப்ப, அவன் சும்மா சொல்றான்னு நினைச்சு பீப்பிள் யாரும் வரலை.. அவன் ரொம்ப கத்தியும், அழுதும் யாரும் வரல.. வுல்ஃப் அவனோட ஷீப்ஸ் நிறைய சாப்டுட்டு போய்டுச்சு.. இந்த ஸ்டோரி மாரல் என்ன?” என்று கேட்டாள்.
குழந்தையின் கதையை ரசித்து கேட்ட அம்ரிதா மென்னகையுடன், “என்ன?” என்று கேட்டாள்.
“இவ்ளோ பிக்கா(big) இருக்கீங்க! தெரியலையா?” என்று தலை சரித்து கேட்டாள்.
அதன் அழகை அவள் ரசித்து சிரிக்க, குழந்தையோ, “சிரிக்காதீங்க” என்று மிரட்டினாள்.
சிரிப்பை அடக்கிய அம்ரிதா, “நீங்களே மாரலை சொல்லுங்க” என்றாள்.
“சும்மா சும்மாவோ, சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் நாம பொய் சொன்னா, அப்புறம் நாம ட்ரூத் சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க.. ஸோ எப்பவும் பொய் சொல்லக் கூடாது.. அதுவும் டாடி கிட்ட கண்டிப்பா சொல்லவே கூடாது” என்று பாடம் எடுத்தாள்.
புன்னகையுடன் மகளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள், “அப்போ அம்மா கிட்ட பொய் சொல்லலாமா?” என்று கேட்டாள்.
கண்களை சுருக்கி பார்த்த குழந்தை, “அம்மா கிட்டயும் நோ பொய்.. பட் அம்மா தான் பொய் சொன்னீங்க” என்றாள்.
கைகளை காதில் வைத்து, கண்களை சுருக்கியபடி, “சாரி.. டாலி மாதிரி இனி அம்மாவும் பொய்யே சொல்ல மாட்டேன்” என்றாள்.
“குட்” என்ற குழந்தை, “ஏன் முறைச்சீங்க?” என்று அதே கேள்வியில் வந்து நிற்க, அம்ரிதா பதில் சொல்வதறியாது திருதிருவென்று விழித்தாள்.
அவ்யுதகண்ணனோ, “ஒருவேளை டாடி கிஸ் கொடுக்கலைனு தான் அம்மா முறைச்சாளோ?” என்றான்.
பெரிதாக கண்களை விரித்த அம்ரிதா மீண்டும் முறைக்க,
அவனோ, “பாப்பு பாரு.. அம்மா திரும்ப முறைக்கிறா” என்று மீண்டும் போட்டு கொடுத்தான்.
குழந்தை அந்த பக்கம் திரும்பியதும் அம்ரிதாவைப் பார்த்து விஷமமாக சிரித்தான்.
குழந்தை, “வொய் ம்மா வொய்?” என்று வினவ, அம்ரிதாவை காப்பாற்றுவது போல், “அவ்யுத்” என்று தேவகி அழைத்தார்.
“டாலி வா.. ஹாலுக்கு போகலாம்” என்றான்.
தந்தையிடம் வந்த குழந்தை, “அம்மா!” என்று கேள்வியாய் கேட்டாள்.
“அம்மா வருவாங்க.. இப்போ நாம போகலாம்” என்றபடி நகர்ந்தவன் வெளியேறும் முன் அம்ரிதாவைப் பார்த்து அதே விஷம புன்னகையுடன் கண்ணடித்துவிட்டே சென்றான்.
முதலில் அதிர்ந்தாலும் அவனது கலாட்டாவில் அவளது முகத்தில் புன்னகையே அரும்பியது.
அதன் பிறகு தெய்வநாயகத்தின் மகள் அம்ரிதாவை சபைக்கு அழைத்து வர, வெற்றிலையை கை மாற்றி திருமணத்தை உறுதி செய்து உணவை முடித்துக் கொண்டு கிளம்பினர்.
கிளம்பும் முன் அம்ரிதாவிடம் சென்ற தேவகி புன்னகையுடன், “இந்த அப்பா மகள் கூட்டணிக்கு டஃப் கொடுக்கிற அளவுக்கு நாம அம்மா மகள் கூட்டணி போடுவோம் ஓகே!” என்றார்.
‘மகளுக்கு எதிராவா!’ என்று மனதினுள் கலங்கிய அம்ரிதா ஒரு தினுசாக தலையை சரி என்பது போல் உருட்ட,
“என்ன மகளுக்கு எதிரா கூட்டணியானு முடியாதுனு நினைக்கிறியா?” என்று கேட்டார்.
அவள் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் தலையை ஆட்ட,
சத்தமாக சிரித்தபடி அவளது தலையை பிடித்து நிறுத்தியவர், “முதல்ல நம்ம கூட்டணியை ஸ்ட்ரோங் செய்துட்டு குட்டிமாவை நம்ம பக்கம் இழுத்துப்போம்” என்றதும் அவளது முகம் ஆயிரம் வாட்ஸ் குமிழ்விளக்காக(bulb) ஒளிர்ந்தது.
அதை கேட்டபடி மகளுடன் அங்கே வந்த அவ்யுதகண்ணனோ, “வாய்ப்பில்லை ராணி.. வாய்ப்பில்லை” என்றான்.
அலட்சியமாக உதட்டை பிதுக்கிய தேவகி, “இவன் கிடக்கிறான்.. நீ சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வா.. இவனை டேமேஜ் செய்ய நான் நிறைய சொல்லி தரேன்” என்றார்.
அவ்யுதகண்ணனும் ஆதினியும் தேவகியை முறைக்க, தேவகியோ அவர்களுக்கு நாக்கை துருத்தி பலிப்பு காட்டினார்.
இவர்களின் சம்பாஷணையில் அம்ரிதா பல வருடங்கள் கழித்து மனம்விட்டு சத்தமாக சிரிக்க, அதை கண்ட குருநாதன் மனம் குளிர நெகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.
குறிப்பு: சைட்டில் உங்களின் கமெண்ட்ஸ் பார்த்தேன் தோழமைகளே! ஆனால் சொன்னது போல் ரிப்ளை போட முடியலை.. சாரி.. இப்போ ரிப்பளை போட்டுடுவேன்.