ராதாவிற்கு அவள் அப்பா வாங்கி கொடுத்த பேனா எதன் மீதும் தனிப்பட்ட முறையில் சென்டிமென்ட் இல்லைனு தெரிந்து கொண்டு, டுயுஷன் கடைசி நாள் எழுதிய கடிதத்தில் அவளுக்கு பேனா ஒன்றை பரிசளிக்க போவதையும், அதை வைத்து அவள் எக்ஸாம்ஸ் எழுத வேண்டும் என்றும் கூறி இருந்தேன்.
அதன்படி அடுத்த நாள் மதிய வேளையில் அவள் வீட்டு போஸ்ட் பாக்ஸ்ஸில் கிஃப்ட் வரப் செய்த பேனா ஒன்றை போட்டுவிட்டு வந்துவிட்டேன்.
அதை அவள் பயன் படுத்தினாளா இல்லையானு தெரிந்துக்க நான் கிட்டத் திட்ட மூன்று மாதங்கள் காத்திருந்தேன். நான் கொடுத்த பேனாவை வைத்து தான் எக்ஸாம்ஸ் எழுதி இருந்தாள் 🙂 😉
என்ன தான் தினமும் அவளை நான் தரிசித்தாலும் அவளை தொடர்பு கொள்ளாமல் இருந்த அந்த மூன்று மாதங்களும் கொடுமை தான். அதிலும் நடுவில் தேனியில் இருக்கும் அவளது பெரியம்மா வீட்டுக்கு இரண்டு வாரங்கள் அவள் சென்று வந்த நாட்கள் எனக்கு ரொம்பவே கொடுமையான நாட்களே. அவளை பார்க்க முடியாமல் ரொம்பவே தவிச்சு போனேன்.
சில நேரம் நேரில் போய் பேசிவிடலாமானு கூட நினைத்து இருக்கிறேன் தான். ஆனால் படிப்பை அவள் முடிக்கும் வரை அவளை நேரில் சென்று பார்க்க கூடாது என்று எனக்கு நானே சொல்லி கஷ்டப்பட்டு மனதை மாற்றிக் கொள்வேன்.
ஒருவாறு அந்த கொடுமையான மூன்று மாதங்களும் ஆமை வேகத்தில் கடந்து ராதா கிட்ட இருந்து எனக்கு முதல் மெயில் வந்தது. அதில் பெருசா எதுவுமில்லை. நலம் விசாரித்து, அவளோட லீவ் நாட்களைப் பற்றியும், அவள் சேர்ந்த காலேஜ் பற்றியும் எழுதி இருந்தாள்.
அவளோட முதல் மெயில் வந்த அன்னைக்கு தினுக்கு ட்ரீட் கொடுத்து கொண்டாடினேன். ‘இதயம் முரளி போய் சேது சியானா மாறிடாதடா’னு தினு சொன்னதை நான் கண்டு கொள்ளவே இல்லை.
அதன் பிறகு மெயில் மூலம் அவள் நட்புடனும், நான் காதலுடனும் கடிதங்களை பரிமாறி கொண்டோம்.
அப்படியே பல மாதங்கள் கழிந்து இருக்க, படிப்பை முடித்து நானும் தினுவும் ‘WIPRO’வில் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்து இருக்க, ராதா இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைத்து இருந்தாள்.
என் அம்மாவின் பிறந்தநாளுக்காக கோவிலுக்கு போனப்ப, இன்ப அதிர்ச்சியாக ராதாவையும் மீசைகாரரையும் பார்த்தேன். ஆனால் அன்று மீசைகார் அவர் பக்கத்தில் இருந்தவரிடம், ‘என் பொண்ணோட கனவு பெருசு.. அவ படிப்பை முடிக்கவே குறைந்தது அஞ்சாறு வருஷங்கள் ஆகும்.. ஸோ காத்திருக்காம அவங்களை வேற சம்பந்தம் பார்க்க சொல்லிடுங்க.. அதுமட்டுமில்ல, நான் என் பொண்ணை ஒரு ராணுவ வீரனுக்கோ போலீஸ்கோ தான் கட்டி கொடுப்பேன்’னு சொன்னதை கேட்டு நான் ஆடி போயிட்டேன்.
ஏன்னா, என் அம்மாவுக்காக என்னோட போலீஸ் ஆசைக்கு மூடுவிழா நடத்தி தான் நான் இன்ஜினியரிங் சேர்ந்தேன். நான் போலீஸ் ஆகக் கூடாதுனு அம்மா என் கிட்ட நேரிடையா சொன்னது இல்லை ஆனா எனக்கு என் அம்மாவை தெரியாதா!
ஒரு கட்சி மீட்டிங்கு பந்தோபஸ்த்துக்கு போன என்னோட அப்பா, அன்னைக்கு நடந்த கலவரத்தில் தான் உயிர் துறந்தார். அதுக்கு அப்புறம் தான் என் அம்மாவுக்கு இந்த எண்ணமும் பயமும்.
என்னோட 12வது வயதில் என் அப்பாவை நான் இழந்தேன். ஆனாலும் பசுமரத்தாணி போல் இன்னமும் நியாபகம் இருக்கிறது…
‘நீ ஏசிபி ஆனதும் நான் தான் உனக்கு முதல் சல்யூட் அடிப்பேன்’னு அப்பா சொன்னப்ப, ‘நான் தான் உங்களுக்கு சல்யூட் அடிப்பேன்.. ஏட்டுனு உங்களை அவமரியாதை செய்றவங்க முன்னாடி சல்யூட் அடித்து உங்களை கௌரவப் படுத்துவேன் ப்பா’னு நான் சொன்னேன். (இந்த இடத்தில் காகிதத்தில் கண்ணீர் தடங்கள் இருந்தது. ஆம்! இதை எழுதிய பொழுது, தந்தையின் நினைவில் அவனையும் மீறி கண்ணீர் துளிகள் சிதறி இருந்தது)
எங்களோட அந்த பேச்சை ரசித்தவர் தான் என் அம்மா ஆனா அப்பா இறந்த பிறகு எல்லாமே மாறிடுச்சு. ஆனாலும் என் கனவை அழிக்க மனம் இல்லாம அவங்களோட மன மாற்றத்தையோ, பயத்தையோ வெளிப்படுத்தலை.
நான் இன்ஜினியரிங் படிக்கப் போறதா சொன்னப்ப கூட, ‘என்னாச்சுடா! பி.எஸ்சி தானே படிக்க போறதா சொன்ன!’னு தான் கேட்டாங்க.
‘அப்பாவே இல்ல!’ என்ற வார்த்தைகளோட நான் முடித்துவிட, அம்மா அதுக்கு மேல எதுவும் கேட்கலை. அவரது எண்ணப் போக்கை நான் புரிந்து கொண்டதை உணர்ந்து இருக்கலாம்!
இதனால் தான் மீசைகார் பேசியதை கேட்டு நான் ஷாக் ஆனேன்.
நான் எப்படி போலீஸ்! அப்படியே போலீஸ் ஆகுற முடிவை எடுத்தாலுமே, இப்போ போய் அம்மா கிட்ட எப்படி சொல்றது!னு ரொம்பவே தவிச்சு குழம்பினேன்.
ஒரு வாரம் ரொம்ப யோசித்தேன். மீசைகார் சும்மா சொன்னது போலவும் தெரியலை, என்னாலும் என் ராதையை இழக்க முடியாது என்றதோடு என்னுள் புதைந்து இருந்த போலீஸ் ஆசையும் புத்துயிர் பெற்றதோ!
ஆம்! நான் போலீஸ் ஆகும் முடிவை எடுத்தேன். ஆனால் உடனே ஏசிபி ஆகாமல் முதலில் எஸ்.ஐ-க்கு தான் எக்ஸாம் எழுத நினைத்தேன். அதுக்கு சில காரணங்கள் இருந்தன.
கஷ்டப்பட்டு தனி ஆளா போராடி என்னை வளர்த்த என் அம்மாக்கு ஓய்வு கொடுக்க நினைத்தேன். நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகும், ரெண்டு மாசமா போராடி தான் அம்மாவை வேலையை விட வைத்தேன். என்ன தான் மெரிட்டில் நான் படிச்சாலும் அம்மாவோட சம்பளம் பத்தாமல் எடுத்து இருந்த பெர்சனல் லோன், அப்பா எடுத்த வீட்டு லோன்லாம் அடைக்கணும், நான் ஒன் இயர் ட்ரெயினிங் போறப்ப வீட்டு செலவுக்கு பணம் சேர்க்கணும், அண்ட் மெடிக்கல் எமர்ஜென்சிக்குனு தனியா பணம் சேர்க்கணும். இதுக்கு எல்லாம் பணம் சேர்க்க, குறைந்தது மூணு வருஷம் நான் வேலைக்கு போகணும்.
யுபிஎஸ்சி எக்ஸாம்க்கு அதிக எப்ஃபோர்ட் வேணும்.. அது ஐடி(IT) வேலையில் இருந்துட்டே செயல் படுத்த கஷ்டம்னு எஸ்.ஐ எக்ஸாம் எழுத முடிவு செய்தேன். அதுக்கு அப்புறம் பின்னாடி மெதுவா எஸ்.ஐ-ஆ இருந்துட்டே யுபிஎஸ்சி எழுதி ஏசிபி ஆகிக்கலாம்னும் நினைத்தேன்.
எடுத்த உடனே ஏசிபினு போய் அம்மாவை கலவரப்படுத்த வேண்டாம்னும் நினைத்தேன். அதுவும் ஒரு காரணம்.
இந்த முடிவை எடுத்த அப்புறம் தான் என்னால் நிம்மதியா தூங்க முடிந்தது.
என் திட்டபடி எல்லாமே சரியா தான் போச்சு.. ஆனா நான் போலீஸ் ட்ரெயினிங் போன அந்த வருஷத்தில் தான் என் ராதையை தொலைச்சுட்டேன். (இந்த இடத்திலும் கண்ணீர் கரைகள் இருந்தது)
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.